இங்கிலாந்து, தென்னாபிரிக்கா போன்ற நாடுகளில் காணப்பட்டவை போன்ற மரபு மாற்றம் அடைந்த புதிய வகை கொரோனா வைரஸ் ஒன்றைத் தாங்கள் ஆய்வு செய்துவருவதாக ஜப்பானின் சுகாதார அமைச்சு அறிவித்திருக்கிறது.
ரோக்கியோவில் விமான நிலையப் பரிசோதனைகளின்போது பிறேசில் நாட்டில் இருந்து வந்த நால்வரிடம் புதிய தொற்று கண்டறியப்பட்டிருக்கிறது. 40 வயதுடைய ஆண் ஒருவர், 30 வயதான பெண், மற்றும் இரண்டு பதின்ம வயதினர் ஆகியோரே புதிய வைரஸை காவி வந்துள்ளனர் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இவர்கள் நால்வரும் பிறேசிலின் அமேசோனா(Amazonas) பகுதியைச் சேர்ந்தவர்கள் என்று தெரிவிக்கப் படுகிறது.
மாறுதல் அடைந்த அந்தப் புதிய வைரஸ் கிருமி குறித்து உலக சுகாதார நிறுவனத் தினதும் ஏனைய நாடுகளினதும் நிபுணர்களோடு தீவிரமாக ஆய்வு செய்து வருவதாக ஜப்பான் தெரிவித்துள்ளது.
ஜப்பானில் இங்கிலாந்து மற்றும் தென்னாபிரிக்க வைரஸ் தொற்றிய இருபது பேர் இதுவரை கண்டுபிடிக்கப் பட்டுள்ளனர். அவை வேகமாகப் பரவக்கூடும் என்ற அச்சத்தால் அந்நாட்டு அரசு தலைநகர் ரோக்கியோவில் சுகாதார அவசரகால நிலையைப் பிரகடனப்படுத்தி உள்ளது.
மரபு மாற்றம் அடைந்த வைரஸ் கிருமி தற்போது புழக்கத்தில் உள்ள தடுப்பூசி களை எதிர்க்கும் தன்மையைக் கொண்டிருக்கலாம் என்ற அச்சம் பொதுவாக நிலவுகிறது.
குமாரதாஸன். பாரிஸ்.
10-01-2021