Home இலங்கை நினைவுச்சின்னத்தை இடித்தழித்த அதிகாரிகளே அதனை மீள அமைப்பது குறித்து கேள்வி

நினைவுச்சின்னத்தை இடித்தழித்த அதிகாரிகளே அதனை மீள அமைப்பது குறித்து கேள்வி

by admin

யுத்தத்தில் இறந்தவர்களை நினைவுகூரும் வகையில் யாழ். பல்கலைக்கழக வளாகத்தில் அமைக்கப்பட்ட நினைவுச்சின்னத்தை இடித்தழிக்க முன்னின்ற பல்கலைக்கழக துணைவேந்தர், மூன்று நாட்களுக்குப் பின்னர் அதனை மீள அமைக்க அடிக்கல் நாட்டியமைத் தொடர்பில் இலங்கையின் முன்னணி ஆசிரியர் சங்கங்களில் ஒன்று கேள்வி எழுப்பியுள்ளது.

முள்ளிவாய்க்கால் நினைவுச் சின்னத்தை இடித்தழித்த துணைவேந்தர், அதனை மீள அமைக்க அடிக்கல் நாட்டியமை, இடிபாடுகளை வழிபட்டு, ஸ்தோத்திர பாடல்களைப் பாடியமை வடக்கின் ஊடகவியலாளர்கள் அறிக்கை இட்டிருந்தனர்.

ஜனவரி 8, வெள்ளிக்கிழமை இரவு யாழ்ப்பாண பல்கலைக்கழக வளாகத்தில் அமைக்கப்பட்ட நினைவுச்சின்னம் இடிக்கப்பட்டமைக்கு எதிராக பல்கலைக்கழ மாணவர்கள் சாகும் வரையிலான உண்ணாவிரதத்தில் ஈடுபட்டிருந்தனர்.

அதன் பின்னர் நினைவுச்சின்னத்தை மீளமைக்க யாழ்ப்பாண பல்கலைக்கழக துணைவேந்தர் எஸ் ஸ்ரீசற்குணராஜா நடவடிக்கை எடுத்ததோடு,  ஜனவரி 11 திங்களன்று அடிக்கல் நாட்டவும் நடவடிக்கை எடுத்திருந்தார்.

அசல் நினைவுச்சின்னம் அகற்றப்படுவதை நியாயப்படுத்திய பல்கலைக்கழக மானியயங்கள் ஆணையக்குழுவின் தலைவர் பேராசிரியர் சம்பத் அமரதுங்க, “சிங்கள மற்றும் தமிழ் மாணவர்களிடையே கருத்து வேறுபாடு ஏற்பட அனுமதிக்காத” வகையில் நடவடிக்கை எடுக்கப்பட்டதாக குறிப்பிட்டதாக  இலங்கை ஆசிரியர் சங்கம் சுட்டிக்காட்டியுள்ளது.

பேராசிரியர் அமரதுங்கவின் கூற்றை பொருட்படுத்தாது கருத்து வெளியிட்ட துணைவேந்தர், நினைவுச்சின்னத்தை அகற்றுமாறு “உயர் அதிகாரிகள்” அவருக்கு அழுத்தம் கொடுத்ததாகக் கூறினார்.

“நிர்வாகப் பொறுப்புகளைக் கொண்ட ஒரு குடிமகனாக, உயர் அதிகாரிகளிடமிருந்து எனக்கு ஆலோசனை கிடைத்தது. அந்த உயர் அதிகாரிகள் இலங்கையின் பாதுகாப்பு, புலனாய்வுப் பிரிவு மற்றும் கல்வி அமைச்சு “என துணைவேந்தர் பேராசிரியர் எஸ். ஸ்ரீற்குணராஜா ஊடகங்களுக்குத் தெரிவித்திருந்தார்.

பேராசிரியர் ஸ்ரீ சற்குணராஜாவின் நிர்வாகத் திறன் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு வெளியிட்ட அறிவிப்பு வெளிப்படுத்தியுள்ளதாக இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டார்லின்,  சுட்டிக்காட்டியுள்ளார்.

“சிறந்த விஞ்ஞானி மற்றும் திறமையான நிர்வாகியான பேராசிரியர் ஸ்ரீ சற்குணராஜா, இன்றைய சூழ்நிலைக்கும் எதிர்காலத்திற்குத் பொருந்தாது என்ற அடிப்படையில் இந்த நினைவுச்சின்னத்தை யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் இருந்து அகற்ற முடிவு செய்துள்ளார் என பேராசிரியர் சம்பத் அமரதுங்க வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது”

அத்தகைய தீர்மானத்தின் அடிப்படையில் நினைவுச்சின்னம் அகற்றப்பட்டால், எந்த அடிப்படையில் துணைவேந்தர் மீள் நிர்மாணத்திற்கு அடிக்கல் நாட்டினார் என்பது குழப்பமான நிலையை தோற்றுவித்துள்ளதாக இலங்கை ஆசிரியர் சங்கம் சுட்டிக்காட்டியுள்ளது.

மாணவர்களின் ஒற்றுமைக்காக இதுபோன்ற நடவடிக்கை எடுக்கப்பட்டிருந்தால், பேராசிரியர் சம்பத் அமரதுங்கா குறிப்பிடுவது போல் ஒரு திறமையான நிர்வாகி, பல்கலைக்கழக மாணவர்கள் மற்றும் பல்கலைக்கழக ஊழியர்களுடன் கலந்தாலோசித்து தீர்மானம் மேற்கொண்டிருக்க வேண்டுமேத் தவிர, இராணுவத்தைப் பயன்படுத்தி, தமிழ் மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்காமல் செயற்பட்டிருக்கக் கூடாது எனவும், இது கவலைக்குரிய விடயம் எனவும் அந்த சங்கம் குறிப்பிட்டுள்ளது.

அதிகாரிகள் நினைவுச்சின்னத்தை இடித்தழிக்க எடுத்த நடவடிக்கைக்கு எதிராக  திங்கட்கிழமை (11) வடக்கு மற்றும் கிழக்கில் தமிழ் மக்கள் ஹர்த்தாலை முன்னெடுத்திருந்தனர்.

தெற்கில் பல பல்கலைக்கழங்களில் பல நினைவுச்சின்னங்கள் அமைக்கபட்டுள்ளதாகவும், குறிப்பாக நினைவுச்சின்னங்கள், இலக்கிய படைப்புகள், சிற்பங்கள், ஓவியங்கள், ஆர்ப்பாட்டங்கள் போன்றவற்றின் ஊடாக ஒருவரின் கருத்துக்களை பல்வேறு வழிகளில் வெளிப்படுத்துவது மனித  உரிமை என ஆசிரியர் சங்கத்தின் தலைவர் ஜோசப் ஸ்டார்லின் குறிப்பிட்டுள்ளார்.

“யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் மாத்திரம் அந்த உரிமையைப் பயன்படுத்துவது  சிக்கலானது அல்ல.”

இந்த காலகட்டத்தில் மாத்திரமன்றி, யுத்த காலத்திலும் சிங்கள மாணவர்களும், சிங்கள பேராசிரியர்களும் யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் பணியாற்றியதை பல்கலைக்கழக மானியங்கள் மறந்துவிட்டமை பாரதூரமான விடயமென சுட்டிக்காட்டியுள்ள ஜோசப் ஸ்டார்லின்  சிங்கள மொழி பேராசிரியர் சுச்சரித்த கம்லத், தர்மசேன பதிராஜ் உள்ளிட்ட பிற கலைஞர்கள் அந்த நேரத்தில் யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் பணியாற்றியதாக சுட்டிக்காட்டியுள்ளார்.

இவ்வளவு நீண்ட வரலாற்றைக் கொண்ட யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் ஒரு போர் நினைவுச்சின்னம் அழிக்கப்பட்டதையும், மனித உரிமைகளை மீறியதையும் இலங்கை ஆசிரியர் சங்கம் கடுமையாக கண்டித்துள்ளது.

“இது போரில் தங்கள் அன்புக்குரியவர்களை இழந்து, இழப்பில் வாழும் தமிழ் மக்களுக்கு மிகுந்த வேதனையை ஏற்படுத்தும் செயலாகும். இது இனங்களுக்கிடையேயான நல்லிணக்கத்திற்கு கடுமையான அச்சுறுத்தலாகும்.” #நினைவுச்சின்னத்தை #இடித்தழித்த #கேள்வி #துணைவேந்தர் #அடிக்கல் #முள்ளிவாய்க்கால் #பல்கலைக்கழக_மானியங்கள்_ஆணைக்குழு

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More