கோவிற்பூசைக்குத் தேவைப்படுகிற வாழைப்பழங்கள் மற்றும் வெற்றிலைகளை அய்யர் வீட்டுக்கு இராசதுரைதான் கொண்டு சென்று கொடுப்பான். பொருட்களை அவர்களின் வீட்டின் வாசலோடிருந்த வெளித்திண்ணையில் வைத்து விட்டு அய்யா எனக் குரல் கொடுப்பான் கணபதி அய்யர் வந்து அவற்றை எடுத்துக்கொள்வார். இராசதுரை வேலை செய்த கமக்காரன் இவைகளை அய்யருக்கு இலவசமாகவே கொடுத்து வந்தார். இராசதுரைக்கு 21 வயதாகிறது பாடசாலைக் கல்வியை முடித்திருந்தான். அப்பாவுக்கு வயதாகி விட்டது. பொருளாதாரச் சுமை அவன் தோளில் ஏறியது. அப்பா வேலை செய்த கமக்காரனிடமே இராசதுரைவேலைக்குச் சேர்ந்தான். அவன் கடின உழைப்பாளி. வெய்யிலிற் கறுத்து வேலையினாற் திரண்டு வலிந்த உடல் கொண்டவன். அவனுக்கு சுருள் முடியான தலை, புன்முறுவல் தவழும் சமச்சீரான முகம், கூரான முக்கு. அவன் வீதியிற் போகும்போது எவரும் ஒரு முறை திரும்பிப்பார்க்கும் படி இருப்பான்.
நாளைக்குப் பூசைக்குப் பொருட்கள் தேவையென அய்யர் சொல்லியிருந்தார்.
வாழைப்பழக்குலையையும் வெற்றிலைக்கட்டையும் எடுத்துச் சென்று அய்யர் வீட்டுத் திண்ணையில் வைத்து விட்டுக் குரல் கொடுத்தான். யாரும் வரவில்லை. மறுபடியும் குரல் கொடுத்தான். வழமைபோல் அய்யர் வரவில்லை. கதவு மிகச்சிறிதாகத் திறந்தது. குரல் மட்டும் கேட்டது.
“யாரது ?”
“நான் இராசதுரை. வாழைக்குலையும் வெற்றிலையும் கொண்டு வந்திருக்கிறேன்”
கதவு முழுவதுமாகத்திறந்தது. கமலம்- அய்யரின் மகள் வெளியே வந்தாள். வந்தவளால் இராசதுரையைப் பார்க்காமல் வாழைக்குலையைப்பார்க்க முடியவில்லை. கமலம் நாணிக் கோணும் பண்பு கொண்டவள் அல்ல. ஆனாலும் சிவந்த முகத்துடன்தான் வாழைக்குலையை எடுத்துச் சென்று உள்ளே வைத்தாள். பின்னர் அதே முகத்துடன் வந்தது வெற்றிலையை எடுத்துக்கொண்டு உள்ளே போனாள். பின்னும் கதவை மூடாமல் வெளியே வந்து “அப்பாவுக்கு ஏதாவது சொல்ல வேண்டுமா” என்று முறுவலுடன் கேட்டாள். வழமையாக அய்யர் வெளியே வந்தவுடன் இவன் போய்விடுவான் ஆனால் இன்றைக்கு அங்கேயே சிலையாகி நின்றான். அவள் ஏதாவது சொல்ல வேண்டுமா என்று கேட்ட பொழுதுதான் அவன் தன் நிலையை அடைந்தான்.
“இல்லை. நான் வாறன்” என்றபடி நகர்ந்தான் அவளும் திரும்பி உட்சென்றாலும் கதவு உடன் மூடப்படவில்லை.
அடுத்து வந்த நாட்களில் இராசதுரைக்குத் தான் தானாக இல்லை என்பதை உணரக்கடினமாக இருக்கவில்லை. மறுமுறை கோவிற்சாமான்களைக் கொண்டு சென்றபோது கூப்பிட முன்னமே கதவு திறந்தது. வீட்டின் முன் சாளரம் அதற்கும் முன்னரே திறந்து கிடந்தது.
கமலத்துக்கும் அவனுக்கும் இடையில் இருந்த நெருப்பாற்றைக் கடக்கக் கமலம் கண்களால் உதவி செய்தாள். அதன் பின்வந்த இரண்டு திருவிழாக்காலங்கள் அவர்களுக்கான வார்த்தைகளின் உலகத்தை அமைக்க உதவி செய்தன. கமலம் துணிந்த பெண். கணபதி அய்யர் தயிர்ச் சோற்று மயக்கத்தில் உறங்கிய ஒர் இரவிற் கமலம் இராசதுரையுடன் ஓடிப்போனாள்.
இராசதுரை கமலத்துடன் வீட்டுக்கு வந்த இரவிற் இராசதுரையின் அப்பா சற்றுத்திடுக்கிட்டுத்தான் போனார்.
“என்ன பிள்ளையள் இப்படிச் செய்து போட்டியள்”
கமலம் இராசதுரையின் கைகளை இறுக்கிப் பிடித்திருப்பதைக் கண்டார். “பிள்ளையள் உள்ளுக்கு வாங்கோ.” அச் சிறுகுடிலுக்குள் கமலம் குனிந்து உள் நுழைந்தாள். இராசதுரையின் அம்மா கமலத்தை அணைத்துக்கொண்டாள். இராசதுரை தன் அப்பாவைப்பார்த்தான். அவர் அவனின் தோளிற் தட்டிச் “சாப்பிட்டிட்டுப் படுங்கோ நாளைக்கு விடியும்போது பார்ப்போம்.”
மறுநாள் கமலம் இராசதுரையுடன் ஓடிய கதைதான் ஊருக்குள் ஓடித்திரிந்தது. இருவாரங்கள் கழித்துக் கமக்காரன் ஒரு பையுடன் வந்தார், வந்தவர் படலையடியில் நின்று இராசதுரையின் அப்பாவைக் கூப்பிட்டு ஏதோ உரையாடியபின் அப்பையைக் கொடுத்தார். அப்பா பையைக் கமலத்தைக் கூப்பிட்டுக் கொடுத்தார் கமலம் பையை இராசதுரையிடம் கொடுத்தான். இராசதுரை அதை மீண்டும் அவளிடம் கொடுத்து, “நீங்களே திறவுங்கோ ” என்றான். கமலத்தை அவன் நீங்கள் என்றுதான் விளிப்பான். அவள் கை நடுங்க அதனைத் திறந்தாள். உள்ளே ஒரு கடிதமும் இரண்டு காணி உறுதிகளும் இருந்தன. கணபதி அய்யர் அவர்களின் ஊரிலிருந்து பல மைல்கள் தள்ளியிருந்த ஒரு ஊரில் இருந்த, காணியுடன் கூடிய ஒரு சிறுவீட்டையும் அவ்வீட்டிலிருந்து ஒரு மைல்தொலைவில் இருந்த சிறு விவசாயக்காணியையும் அவள் பெயருக்கு எழுதி அனுப்பி இருந்தார். கடிதத்தின் சாரம் வருமாறு. எங்களுக்கு இருந்தவள் நீ ஒருத்திதான். நீ போய்விட்டாய். நீங்கள் நொடிந்து போய் நிற்பதை நாங்கள் விரும்பவில்லை. எங்கள் கடமையைச் செய்து விட்டோம். ஆனால் நாங்கள் இனி ஒரு போதும் சந்தித்துக் கொள்ள மாட்டோம்.
கமலம் அழத் தொடங்கி விட்டாள். அவளுக்குத் தான் தன் காதலுக்கு அளித்த விலை புரிந்தது. இராசதுரை அவளை அணைத்துக் கொண்டான். இராசதுரையினதும் மாமா மாமியினதும் அன்பு அவளுக்கு ஓத்தடமானது.
சில நாட்களின் பின் அவர்கள் கமலத்தின் அப்பா தந்த வீட்டில் வாழ்க்கையை ஆரம்பித்தனர். அச்சுற்று வட்டாரத்துக்கே பிரபலமாக இருந்த பிள்ளையார் கோவிலின் வெளி வீதியை ஒட்டிச் சென்ற சிறு பொதுப்போக்குவரத்து வீதியில் அவர்களது வீடு இருந்தது. கோவிலின் பிரதான வாசல் கிழக்கு நோக்கியிருந்தது அவர்களின் வீடு கோவிலுக்குக் தெற்காக இருந்தது. அவர்களின்வீட்டின் வலது பக்கத்தில் இருந்தவர் கோவிற் தர்மகத்தா அரியகுட்டி. கடுகடுப்பானவர். எல்லா வகையான திமிர்களும் பிடித்தவர். யாரையும் அண்டாதவர். இடது பக்கத்தில் முத்தையாவும் பாரிசவாதம் வந்து படுத்த படுக்கையாகவே இருக்கும் அவரின் அம்மா தங்கம்மாவும் இருந்தனர். முத்தையாவுக்கு நாற்பது வயதாகிறது. திருமணமாகாதவர். இவர்களின் வளவுகளுக்குப் பின்புறம் விளாத்தி, புளி, மா மற்றும் பனை மரங்கள் நிறைந்த பெரும் காணி ஒன்று இருந்தது. அது கோவிற்காணி. கமலத்தின் வீட்டின் முன்புறம் கோவிலை நோக்கியிருந்தது. காணியின் முன் மற்றும் பக்க வேலிகளைக் கிழுவை, முள்முருக்கு, பூவரசு போன்ற மரங்கள் ஆக்கியிருந்தன. முன் படலையின் இரு மருங்கும் இரண்டு கொய்யா மரங்கள் வளர்ந்து நின்றன. கமலம் வீட்டின் முன்புறத்தைப் பூந்தோட்டமாக்கினாள். திருவாத்தி, மல்லிகை, செவ்வரத்தை, நந்தியாவட்டையெனக் காணி பூக்களின் வனமானது. இராசதுரை பின்புறத்தை வீட்டுத்தோட்டமாக மாற்றினான். வாழைமரங்கள், தென்னைமரங்கள், இரண்டு எலுமிச்சைகள், கமுகமரங்கள் இவற்றுடன் இராசவள்ளி வற்றாளை மற்றும் கருணைக்கிழங்கு போன்ற பயிர்களும் வீட்டின் பின்புறம் செழித்து நின்றன.
வீட்டின் பின்புற வலது கோடியிற் கோவிற்காணிக்கு அருகாகக் கிணறு இருந்தது. கிணற்றைச் சுற்றி அரளிச் செடிகள் புதராக வளர்ந்திருந்தன. அவற்றில் அரளிப்பூக்கள் கொத்தாகப்பூத்திருந்தன. இராசதுரை அவற்றை வெட்ட விரும்பினான்.
“துரை வெட்டாதையுங்கோ பச்சையும் மஞ்சளும் என்ன அழகு !”.
’அரளி விதை நஞ்சம்மா ! ’
”நான் எக் காரணம் கொண்டும் அரைச்சுக் குடிக்க மாட்டன் துரை ”
கமலம் அவனைத் தனியே இருக்கும்போது இராசா என்பாள். பிறகொரு நேரம் துரை என்பாள். அவள் துரை என்றும் இராசா என்றும் கூப்பிடும் வேறுபட்ட தொனிகளால் அவ்வீடு கனிந்தது; உருகியது; முயங்கியது; உறங்கியது; விழித்தது. காலம் நகர்ந்தது.
கமலத்தின் அப்பா கடும் நோயுற்றிருப்பதாகத் தகவல் வந்தது. கமலம் போனாள். “ஏனடி வந்தனி வழியனுப்பவோ?” அம்மா குமுறினாள். கணபதி அய்யர் கண்மூடுமுன் ஒன்றே ஒன்றுதான் கேட்டார் “ஏன் எனக்குச் சொல்லாமற் போனாய் மகளே.” அதன் பிறகு அங்கு அழுகுரலைத்தவிர வேறு எதுவும் கேட்கவில்லை.
அடுத்து வந்த வருடங்களிற் கமலத்தின் அம்மாவும் இராசதுரையின் பெற்றோரும் இறந்து போனார்கள். “ ஏனப்பா நாங்கள் தனிச்சுப் போனம் ” என்று கமலம் துரையைக் கேட்டாள். “எனக்கு நீங்கள் உங்களுக்கு நான்” என்றான் இராசதுரை. வாழ்க்கை துயரங்களை மட்டும் தருவதில்லையே. கமலம் கருவுற்றாள். அவர்களுக்கு ஒரு மகள் பிறந்தாள். கமலம் அவளை அரளியென்றாள். துரை, எங்கள் வீட்டுக்குள் இரண்டு பூக்கள் என்றான்.
அரளி வளர்கிறாள். அவளுக்கு மூன்று வயது ஆகிறது. மஞ்சள் முகமும் ஒளிரும் ஆழமான கரு விழிகளும் கொண்ட அரும் குழந்தை அவள். அமைதியாக விளையாடக்கூடிய குணம். பசித்தால் மட்டும் அம்மாவைத் தேடுவாள். அப்பா வாங்கிக் கொடுத்த மரக்குதிரையில் ஆடுவது அவளுக்கு மிகவும் பிடித்தமானது. பகலில் அம்மாவின் முத்தங்களாள் திக்கு முக்காடிப்போகிறாள். முற்றத்து வேம்பின் நிழலில் மண் விளையாடுவதில் அதிக விருப்பம். இரவில் அப்பாவின் மடியில் ஆடி மார்பிற் தூங்கிப்போவது வழக்கம். அவ்வாறுதான் அவள் வளர்கிறாள். கமலம் அவளை இடுப்பிற் தூக்கிக் கொண்டு போகும்போது பக்கத்து வீட்டு முத்தையா அரளியைப் ப்பார்த்து “என்ரை அம்மாளாச்சி” என்று சொல்லி அரளியின் கன்னத்தை மெல்லமாகக் கிள்ளுவார். கமலம் அவரை முத்தையாண்ணை என்று கூப்பிடுவாள். அரளியோ அவரைத் தன் மழலைக்குரலால் முத்து என்பாள். பெரியாக்களை அப்படிக் கூப்பிடக் கூடாது என்பாள் கமலம். எப்பொழுதாவது இருந்துவிட்டு அவர்கள் வீட்டுக்கு வரும் முத்தையா அரளிக்குத் தோடம்பழ இனிப்புக் கொடுப்பார். பின்னர் இராசதுரையுடன் சிறிது நேரம் உரையாடிச் செல்வார். அவரைத்தவிர அவ்வயலில் அவர்களுக்கு வேறு எவருடனும் உறவு இல்லை; பகையும் இல்லை.
ஒரு நாள் தோட்டத்துக்கு அதிகாலையிலே நீர் பாய்ச்சச் சென்ற துரை நீண்ட நேரமாகியும் வீடு திரும்பவில்லை. கலவரமுற்ற கமலம் அரளியையும் தூக்கிக்கொண்டு தோட்டத்துக்குப் போனாள் அங்கே துரை வாயில் நுரை தள்ளிக்கிடந்தான் அவனை விசமுள்ள பாம்பு தீண்டியிருந்தது. கமலத்தின் அய்யோவென்ற அழுகுரல் வழியாற் சென்றவர்களை உதவிக்கழைத்தது.
துரையின் உயிரற்ற உடலின் மேல் இரண்டு மலர்கள் வாடி விழுந்தன. அரளிக்கு விளங்குகிற வயசில்லை. அழுவதைப்பார்த்து அழும் வயது. முத்தையாவும் சில தூரத்து உறவினர்களும் வந்து மரணச்சடங்கை நடாத்தி முடித்தனர்.
தான் தனித்துப் போகக்கூடும் என்பதை ஒருபோதுமே நினைத்துப்பார்த்திராத கமலத்திற்கு துரை இல்லாத வீடு சூனியமாக இருந்தது. ஒரு கணம் அவளுக்குக் கிணற்றடியில் நின்ற அரளிச்செடி விதைகள் நினைவுக்கு வந்தன. அதேகணம் தன் மடியிற் பூத்த அரளியும் முன்னிற்கிறாளே! வாழத்தானே வேண்டும். கமலம் வாழ்க்கையின் சரட்டை மீண்டும் பற்றிக்கொள்ளத்துணிந்தாள். மெல்ல மெல்ல வாழ்க்கை எழுந்து நடக்க ஆரம்பித்தது. தோட்ட வேலைகளையும் நாளாந்த வீட்டு வேலைகளையும் கமலம் தானே செய்ய வேண்டும். கமக்காரி வாழ்க்கைக்கு கமலம் முழுமையாக முகம் கொடுக்கிறாள். அரளியுடன் செல்லம் கொஞ்சும் பொழுதுகள் குறைகின்றன என்பதை அவள் உணர்கிறாள்.
ஒரு நாள் கமலம் நகரத்துக்குச் செல்ல வேண்டும் அரளியைக் கொண்டு செல்வது இயலாத காரியம். என்ன செய்வது அவள் தயங்கித் தயங்கி முத்தைய்யாவைக் கேட்டாள். “அண்னை ஒரு அரை நாள் வேலை. நகரத்துக்குப் போக வேண்டும் அரளியை ஒருக்காப்பாத்துக் கொள்ளுவியளோ?”
“இதென்ன கேள்வி பிள்ளை நானும், சும்மாதானே இருக்கிறேன். அவள் என்ரை அம்மாளாச்சி எல்லோ.”
பாற்போத்தலிற் காய்ச்சி ஆறிய பசும்பாலையும் எவர்சில்வர்ப் பாத்திரத்தில் சக்கரைப்பொங்கலையும் இட்டு மூடி அவரிடம் கொடுத்து, அவளுக்குப் பசி எடுத்தால் கேட்பாள். கொடுங்கள், என்று கூறி அவரிடம் அரளியைக்கொடுத்தாள். அரளிக்குத் தோடம்பழ இனிப்புத்தரும் முத்துவைத்தெரியாதா என்ன? அவள் அழவில்லை. அம்மா அழுத்தமான முத்தத்தைக் கொடுத்து விட்டுப்போனாள்.
முத்தையாவும் “வாடி என்ரை அம்மாளாச்சி” என்று அவளை வாங்கிக் கொண்டார். முத்து அவளுக்குப் பூவரசமிலையில் ஊதுகுழல் செய்து ஊதிக்காட்டினார். அரளி சிரித்தாள். குரும்பட்டியிற் தேர் செய்து காட்டினார். பின்னர் கமுகம் பாளையில் வைத்து முற்றத்தில் சிறிது நேரம் சுற்றி இழுத்தார். நேரம் போனது தெரியவில்லை. அரளி களைத்துப்போனாள். பசிக்குது என்றாள். முத்தையா அவளைத் தன் மடியில் வைத்துப் பாலைக் கொடுத்தார். அவள் பாலைத்தானே குடித்தாள். பின் சிறிதளவு பொங்கலும் ஊட்டி விட்டார். அரளிக்குத் தூக்கம் வருவது போல இருந்தது. அவளைத்தன் மடியில் வளர்த்தி மடியை ஆட்டத்தொடங்கினார். அரளிக்கு அப்பாவின் மடியிற் கிடப்பது போல இருந்தது. பிறகு அவளுக்குக் குதிரையில் ஆடுவது போலவும் இருந்தது. மரக்குதிரையின் முதுகு கடினமாகத்தானே இருக்கும். ஆனால் அது ஒரு போதும் இவ்வளவு வெப்பமாக இருந்ததில்லையே! அரளி களைப்பில் தூங்கிப்போனாள். மதியம் முடியும் தறுவாயில் கமலம் வந்து அரளியை அழைத்துக் கொண்டாள். போகும் போதும் அரளிக்குத் தோடம்பழ இனிப்பைக்கொடுத்தார் முத்தையா.
வேறு வழி இல்லாமற் போகும்போது கமலம் சில வேளைகளில் முத்தையாவிடம் அரளியை விட்டுச் செல்வாள். ஒரு நாள் அவ்வாறுதான் அவளை விட்டுச் சென்று பின் அழைத்துச் செல்ல வந்தாள் கமலம். அரளி முத்தரின் வீட்டின் முன்புறமுள்ள திறந்த கூடத்தில் விளையாடிக்கொண்டிருந்தாள். அவளைத் தூக்கும் போதுதான் கவனித்தாள் அரளி உள்ளாடை அணிந்திருக்கவில்லை. “என்கையம்மா யங்கி?” அவள் முத்து என்று ஏதோ சொல்ல முனைவதற்குள் முத்தையா வந்து விட்டார். ”கமலம் பிள்ளையை ஏசாதே பிள்ளை ஏதோ அவசரத்தில சூப்பெய்து போட்டாள். நான் தான் கழற்றிக் கழுவிபோட்டனான்.”
கமலம் வெட்கத்திற் குறுகிப்போனாள். “அய்யோ குறை நினைக்காதையுங்கோ”
“இல்லை. அடுத்த முறை மேலதிகமாக ஒரு உள்ளாடையைத்தந்து விடும்.”
“சூ வந்தாச் சொல்லுறது தானே” என்று அரளியைக் கடிந்தபடி அவளை அழைத்துச் சென்றாள் கமலம். வீடடுக்குச் சென்றதும் வீட்டு வேலைகளில் முழ்கியும் விட்டாள்.
அரளி இயல்பிற் அதிக கவனத்தைக்கோரும் பிள்ளை இல்லை. அம்மா மும்முரமாக இருக்கும் போது அல்லது களைத்துத் தூங்கும்போது அவளுக்கு அம்மாவிடம் அன்றைய நாளைச் சொல்ல முடியுமா என்ன? இரவில் அம்மாவின் மார்புக்குள் குடங்கிக் கொள்ளலாம் அவ்வளவுதான். இனம்புரியாத உணர்வுகள் படிமமாக மாறி அவளின் மூளைக்குள் படிந்து கொண்டன. மௌனம் அவளைச் சூழ அவள் வளர்ந்து கொண்டிருந்தாள்.
இப்பொழுது அவள் பெரிய பிள்ளையாகி விட்டாள். பெரியபாடசாலைக்குப்போகவும் தொடங்கி விட்டாள். அம்மாவும் அவளைத் தனியே வீட்டில் விட்டுச் செல்லத்துணிந்தும் விட்டாள். பின் கிணற்றைச் சுற்றி உயரமான கட்டு இருந்தது. வீட்டுக்கதவுகளை மூடி விட்டால் அரளியின் பாதுகாப்புக்கு அச்சமில்லை.
ஒரு நாள் முத்து வந்து கதவைத்தட்டினார். அரளி திறந்தாள்.
“என்ன பிள்ளை அம்மா எங்கை”
‘அம்மா தோட்டத்துக்குப் போட்டா’
“ஓ அப்பிடியே ! பிள்ளை எனக்கு நாரி எல்லாம் ஒரே வலி. நாரிலை ஒருக்கா ஏறி நிக்கிறியே. அம்மாளாச்சி நிண்டா வலி போயிடும்.”
அவர் குப்புறப்படுத்தார். அவள் ஏறி நின்றாள். கால்களால் மாறி மாறி அழுத்தச் சொன்னார். பின்னர் இறங்கச்சொல்லி விட்டு நிமிர்ந்து படுத்து அரளியைத் தனது மேற் காற் பகுதியையும் உழக்கி விடும்படி கேட்டார். மேற் காலில் ஏறப்போன பிள்ளையைத் தடுமாறச்செய்து தன்மேல் விழும்படி செய்தார். விழுந்த பிள்ளையைத் தம் மீது அணைத்துக்கொண்டார். அரளிக்கு அப்பாவின் மேல் விழுவது போல இருந்தது. ஆனால் அப்பாவின் அணைப்பல்லவே இது! புதிதே!! அவளுக்கு உடலெங்கும் வெப்பம் பரவியது. ஒரு கணம்தான் அவளுக்குள்ளிருந்து வந்த பெரும் திமிறல் அவளை முத்தையாவின் அணைப்பிலிருந்து விடுபட வைத்தது. முன்னறையிலிருந்து பின் வாசலை நோக்கிச் சென்ற நடை ஓடையால் ஓடிப் பின்வளவூடாகக் கோவிற் காணிக்குள் போய்விட்டாள். நல்ல காலம் அங்கே அவள் பள்ளித்தோழிகள் மஞ்சரியும் நிலாவும் புளியமரத்தில் கட்டப்பட்டிருந்த இருந்த ஊஞ்சலில் ஆடிக்கொண்டிருந்தார்கள். மஞ்சரி அவளின் உயிர்த்தோழி. ஆனால் நிலாவும் இருந்தபடியால் அவளுக்கு எதனையும் பேச முடியவில்லை. பயம், பதட்டம், கோபம் இன்னும் உடலிற் பரவியிருந்த இனம் புரியாத வெப்பம் எல்லாமும் பிள்ளையைச் சூழந்திருந்தன. சோர்ந்து போய்ப் புளியமரமடியில் அமர்ந்தாள். மஞ்சரி அவளை உஞ்சலாடும்படி அழைத்தாள். ஓங்கி ஆட ஆட அவளுக்குச் சற்று நிம்மதியாகவிருந்தது.
மாலையானபொழுது கமலம் வீடு வந்தாள். கதவுகள் திறந்திருந்தன. பின் வளவுக்கு வந்து குரல் கொடுத்தாள்.
“அரளீளீ…என்னம்மா கதவெல்லாம் திறந்து கிடக்கு ?”
தோழிகளை விட்டு விட்டு வந்த அரளி உடனே அம்மாவுக்குச் சொன்னாள்: “முத்துவை என்ரை வீட்ட வர வேண்டாம் எண்டு சொல்லு!”
கமலத்திற்குக் கடும்கோபம் வந்துவிட்டது.
“என்னடி சின்னப்பிள்ளை எண்டும் பாராமல் உன்னட்டையுமிந்த அயலடைச் சனங்கள் இல்லாததையும் பொல்லாததையும் சொல்லத் தொடங்கீற்றுதோ. அவர் போனபிறகு ஒரு ஈ காக்கா கூட உதவி செய்யிறது இல்லை. அந்தாள் மட்டும் தான் அந்தரமாபத்துக்கு உதவி செய்யுது. அதையும் உதுகள் கெடுக்கப்பாக்குதுகள். ”
அரளி வாயடைத்துப் போனாள்.
அரளி அன்றிலிருந்து யாருக்கும் கதவு திறப்பதில்லை. அவள் மனக்கதவும் மூடுண்டு போனது. மஞ்சரியுடனான நட்பு மட்டும் ஆழமானது. மஞ்சரி மிக மென்மையான சிறுமி. அவள் இவளைக் கண்டவுடன் தன்னைத் திறந்து கொட்டுவாள். இவள் தான்தான் அவளது அம்மாபோலக் கேட்டுக்கொண்டிருப்பாள். அரளி கேட்டாள் “அப்பா இப்பவும் உன்னை இறுக்கிக் கட்டிப்பிடிச்சுக் கொஞ்சுறவரோ”
மஞ்சரி கண்கள் விரிய, “ஓ ஒவ்வொரு நாளும் அவர் எனக்கு ஒரு முத்தம் தந்தால்தான் நித்திரைக்கே போவன்.” பிறகு அரளியின் கையைப்பிடித்து “உனக்குத்தான் அப்பா இல்லையே! கவலைப்படாதை நான் இருக்கிறன்”. அரளிக்கு அப்பா பற்றிய நினைவுகள் அருந்தலானவைதான் ஆனாற் பதிந்தவை பசுமரத்தாணிகள். அரளியின் கண்களுக்குள் நீர் திரண்டது.
வெளி உலகத்தில் அரசியற் சூழ்நிலைகள் மாறத்தொடங்கியிருந்தன. விடுதலைப்போராட்டம் முனைப்படையத்தொடங்கியிருந்தது. இலங்கை இராணுவம் முகாம்களுக்குள் முடக்கப்பட்டது. இலங்கை அரசின் வான் வழித் தாக்குதல்கள் ஆரம்பித்திருந்தன. கமலத்தின் வாழ்வு இன்னும் போராட்டமாகிப் போனது. கமம் செய்வது இன்னும் கடினமாகிப்போனது.
அரளி உயர்தரம் படித்துக்கொண்டிருக்கிறாள். பாடசாலை வீட்டிலிருந்து அதிக தூரமில்லை. மஞ்சரியும் நிலாவும் கூடவே படித்தார்கள். அரளி பாடசாலை முடிந்ததும் அதனருகே இருந்த நூலகத்தில் வாசிப்பதற்குப் புத்தகங்களை எடுத்து வருவாள். நேரமிருக்கும்போது அவற்றை எடுத்து வாசிப்பாள். அவளுக்குப் பிடித்தமான எழுத்தாளர்களுள் சாண்டில்யன் அகிலன் பாலமனோகரன் மற்றும் செங்கைஆழியான் முக்கியமானவர்கள். பாடசாலை இல்லாத நாட்களில் மதியம் கடந்த பின் புளியமரத்தடிக்குப் போவாள். மஞ்சரியும் வருவாள் புளியம்பழக்காலங்களில் தங்களுக்குள் உரையாடியபடி அவற்றை உண்பதில் தான் எத்தனை இன்பம். விழுந்து கிடக்கும் விளாம்பழங்கள். தொங்கிக் கொண்டிருக்கும் மல்கோவா மாங்காய்கள். ஒவ்வொன்றுக்கும் ஒவ்வொரு காலம். கோவிற்காணி என்பதால் உரிமையாளர்கள் தொல்லை இல்லை. பாடசலைக்குப் போய்வரும் சிறுவர் சிறுமிகள் விடலைகள் என யாவருக்கும் தோப்பானது அக்காணி.
மஞ்சரியோ நிலாவோ வராத பொழுதுகளில், அரளி வீட்டு வாசலில் இருந்த கொய்யாவின் தாழ்ந்த கொப்பில் ஏறியிருந்து மெல்ல ஆடியபடி கோவில் வீதியைப் பார்த்துக்கொண்டிருப்பாள். அரளி குழந்தைமையைக் கடந்து இப்போ பருவத்தின் கொள்ளை அழகுடனிருந்தாள். ஆழமான அவளின் கரு விழிகள் ஏக்கமும் வாழ்வின் பகிரப்படாத துயரும் நிரம்பி முதிர்ந்திருந்தன. பேசப்படாத வார்த்தைகளும் ஏக்கங்களும் முட்டி மோதிக்கொண்டிருந்த அவளின் முகத்தை அவளின் அடர்ந்து தொங்கும் கூந்தல் அரைவாசி மறைத்து விடக் கொய்யாக்கொப்பில் மெல்ல ஆடிக்கொண்டிருப்பாள். மஞ்சள் பூக்கள் அவளுக்கு உயிரானவை. அடர்ந்த கூந்தலிற் சூடிய அரளியும் திருவாத்திப்பூவும் அவளது ஏக்கமும் நிறந்த முகத்தில் இறங்கித்தவழ அவள் புளிய மர ஊஞ்சலில் ஆடும்போது, மஞ்சரி எப்பொழுதும் சொல்லுவாள்
“அரளி நீ சரியான வடிவடி.”
ஒருநாள் அவ்வீதியால் ஒருவன் துவிச்சக்கர வண்டியிற் போனான். அவன் அயலூர் விதானையின் மகன். முறுக்கேறித் திமிறும் மனமும் உடலும் கொண்டவன். அரும்பு மீசை கொண்ட புறஅழகன். அரளியைக்கண்டவன் கோவில் விதியை ஒரு முறைசுற்றி வந்து அரளியை நன்கு பார்த்தான். பிறகு அடிக்கடி அவ்வீதியை வலம் வரத்தொடங்கினான். அரளிக்கும் அவன் வரவு பிடிப்பது போலத்தோன்றியது. மஞ்சரியிடம் சொன்னாள். மஞ்சரி சொன்னாள் வேண்டாமடி அவன் பெரிய இடத்து ஆள்.
ஒர் நாள் அவர்களின் படலைக்கருகில் வந்தவன் “உன்ரை பேரென்ன” என்றான். அரளி முகம் சிவக்க ஏன் உனக்கு என்ரை பேர் தெரிய வேணும். நீ ஆர்?
“நான் தீரன் உன்னோடை கதைக்க வேணுமே ! ” என்றான் அப்பொழுது பக்கத்து வளவிலிருந்து உரத்து ஒரு குரல் கேட்டது. “டேய் குமர்ப் பிள்ளையோட என்னடா கதை”
அவன் திடுக்கிட்டுப்போனான். அரளிக்கு அது முத்துவின் குரல் என்று விளங்கிவிட்டது. தீரனும் துவிச்சக்கர வண்டியை உழகிக்கொண்டு போய் விட்டான். அரளிக்கு மனம் குறுகுறுத்தபடியிருந்தது. இரண்டொரு நாள்கள் கழித்து மீண்டும் அவன் படலையடிக்கு வந்தான் அரளியைப் பார்த்து “வாசிகசாலைக்கு வாறியா” என்று கேட்டுக்கொண்டிருக்கும் போதே முத்தையா, வீட்டுப்படலையைத் திறந்து கொண்டு வெளியே வந்து விட்டார். “பேந்தும் பாரடா இங்கை உனக்கு என்னடா வேலை?”
தீரனுக்கு இப்பொழுது கோபம் பொத்துக்கொண்டு வந்தது. திரும்பி முத்தையாவைப்பார்த்து “போடா நசுவல் கிழவா” என்று கத்தி விட்டுப் போய்விட்டான்.
கதை கமலத்திடம் போகக் கொய்யாக்கொப்பும் தனித்துப்போனது.
அரளியின் உலகம் மட்டுமல்ல போராட்டச் சூழ்நிலைகளால் குடாநாடும் சுருங்கியது. விடுதலைப்போராட்டக்குழுக்கள் இலங்கை இராணுவத்துடன் மட்டுமல்ல தங்களுக்குள்ளும் தங்களுக்கிடையிலும் மோதிக்கொண்டன. ஒருவரை ஒருவர் பலி எடுத்தன. விடுதலைப்போரென்னும் உழல்வுக்குள் மனிதர்களின் அகமும் புறமும் ஆழத்தொடங்கியிருந்தன. குறிப்பாக இளைஞர்கள் அதனுள் ஈர்க்கப்பட்டுக்கொண்டிருந்தாலும் அதனுள் ஆழாத மனித இதயங்களுக்குள் அரளியென்னும் இச்சிறுமியும் இருந்தாள். அவளின் இதயத்துக்குள் என்ன இருந்தது என்று கமலத்துக்குத் தெரியாமற் போனது அதிசயமல்ல. கமலம் அன்றாட வாழ்வின் இருப்புக்காக அல்லாடிக்கொண்டிருந்தாள்.
இலங்கை இராணுவம் 1987 இல் பெரும் எடுப்புடன் பலாலியிலிருந்து குடா நாட்டின் உட்பகுதிக்குள் நுழைய முயற்சி செய்தபோது இந்தியா தலையீடு செய்தது. அதனைத் தொடர்ந்து இலங்கை இந்திய ஒப்பந்தம் ஏற்பட்டு இந்திய இராணுவம் அமைதி காக்கும் படை என்ற பெயரில் உள் நுழைந்தது. எல்லாம் அமைதியடைந்தது போலிருந்தது. ஆனால் யுத்தம் மீண்டும் தொடங்கியது. விடுதலைப்புலிகளும் இந்தியராணுவமும் மோதிக்கொள்ளத் தொடங்கினார்கள்.
இந்திய இராணுவம் ஊருக்குள் நுழைந்தது. போர் ஒவ்வொரு வாசற்கதவாகத்தட்டிக்கொண்டு வந்தது. குடா நாடு இரணகளமானது. மக்கள் தம் வீடுகளை விட்டு இடம் பெயர்ந்தார்கள். கோயில்களிலும் பாடசாலைகளிலும் தஞ்சம் புகுந்தார்கள். கோயில்களை அல்லது பாடசாலைகளை அண்டிய பகுதிகள் பாதுகாப்பு வலையங்களாயின. இரவுகளில் ஊரடங்கியது. இராணுவம் நிலையெடுத்து முகாமிட இடங்களும் அதனை அண்டிய பகுதிகளும் அபாயமான சூனிய வலையங்களாகின. அவ்விடங்களைத் தவிரப் பகலில் கிராமத்துள் ஓரளவு நடமாட்டம் இருக்கும். இருள் கவியும்போது மக்கள் பாதுகாப்பு வலையத்தில் உள்ள தங்குமிடங்களுக்கு வந்து விடுவார்கள்.
அரளியின் வீடு இருந்த கோயிற் பகுதியும் அதனை அண்டி, வடக்கு வீதியில் இருந்த பாடசாலையும் பாதுகாப்பு வலையங்களாகின. சுற்று வட்டாரத்தில் இருந்த மக்கள் அப்பிள்ளையார் கோவிலிலும் பாடசாலையிலும் தஞ்சமடைந்தார்கள்.
அரளியின் வீடு இருந்த வரிசையின் பின்பகுதி பாதுகாப்பு வலையத்தின் எல்லையாக இருந்தது. அரளியும் ஏனைய சிறுவர்களும் விளையாடிய கோவிற்காணியிற் இந்திய இராணுவம் ஒரு காவல் அரணை அமைத்தது. இரவில் மட்டும் இராணுவம் சில வேளைகளில் அங்குக் காவலுக்கு வரும். கோவில் மற்றும் பாடசாலையில் இரவிற் தங்கும் மக்கள், பகலில் வீடுகளுக்குச் சென்று வாழ்வுக்கடமைகளைச் செய்து சமைத்து உண்டபின் இருள்வதற்கு முன் கோவிற் பகுதிக்குத் திரும்பி விடுவார்கள்.
கோவிலின் உள் மண்டபங்களில் செல்வாக்கானவர்களும் வசதியானவர்களும் இடம் பிடித்துக் கொண்டார்கள். என்னையவர்களுக்குப் பாடசாலை வகுப்பறைகளும் பாடசாலைக் கட்டங்களின் தாழ்வாரங்களும் கோவிலுக்கு வெளியில் இருந்த மண்டபங்களும் தங்குமிடங்களாயின. கமலத்துக்கும் மற்றும் சில வயோதிபர்களுக்கும் கோவிலின் மஞ்சக் கொட்டகையை அடுத்து இருந்த அன்னதானமண்டபம் அடைக்கலம் தந்தது.
மஞ்சம் நின்ற கொட்டகை சீமெந்தால் ஆனது. அது மஞ்சத்தின் பீடத்தை இலகுவாக அடையக்கூடியவாறு படிக்கட்டுக்களையும் கொண்டிருந்தது. அரளி ஒரு போதும் அம்மஞ்சத்தினை மிக அருகிற் சென்று பார்த்ததில்லை.
அரளியும் கமலமும் அன்னதான மண்டபத்தை நோக்கிப் போனபோது மஞ்சப்படிக்கட்டில் எவரும் இல்லை. இன்னும் இருளவும் இல்லை. அம்மாவிடம் சொல்லி விட்டு அரளி கொட்டகைப்படிக்கட்டிற் போய் இருந்துகொண்டாள். பின் கீழிறங்கி கொட்டகைக்குள் சென்றாள் அங்கு மஞ்சத்தில் செதுக்கியிருந்த சிற்பங்களைப்பார்த்தாள். முகம் சிவந்தது. மீண்டும் வந்து படிகளில் அமர்ந்து மஞ்சத்தின் பீடத்துக்கு நாற்புறமும் இருந்த யாழிகளைப்பார்த்தாள். அவை அவளைப்ப்பார்த்து இளித்தன. மஞ்சரி வந்தாள். அவளிடம் “மஞ்சத்தில கீழ இருக்கிற சிற்பங்களைப் பாத்திருக்கிறியே ” என்கிறாள். `அடி அதையெல்லாம் நீ பாத்தனியே கள்ளி. அம்மா அங்கையெலாம் போகக்கூடாதெண்டவ.’
அரளி தலையைக் குனிந்து கொண்டாள்.
“சரி விடு எனக்கு எங்கடை புளிய மரத்தடி இல்லாதது தான் சரியான கவலை. அப்பா சொன்னவர் சண்டை இப்போதைக்குத் தீராதெண்டு.”
அரளி பெருமூச்செறிந்தாள்.
கமலம் சில நாள்கள் தோட்டத்தில் இருந்த பிடுங்கக்கூடிய கிழங்குகளைப் பிடுங்கிச் சமைத்தாள். விரைவில் அவை தீர்ந்து போயின. பிறகு உதவி நிறுவனங்கள் கொடுக்கும் உணவுப்பொருட்களை எப்படியோ பெற்று உணவு சமைத்தாள். ஒன்றுமில்லாதபோது திருவாத்திப்பூக்களைப்பறித்து வறுப்பாள் அல்லது பப்பாக்காயை வெட்டிக்கறி வைப்பாள். ஊரெங்கும் விளைந்து கிடந்த அதுவரை கவனிக்கப்படாத கீரை வகைகளும் கிழங்கு வகைகளும் மக்களுக்கு உணவாகின. கமலம் உணவை இயற்கையிடம் பெறும் கலையை இராசதுரையின் அப்பா அம்மாவிடம் கற்றுக் கொண்டிருந்தாள்.
நாளாந்த அலுவல்களுக்கிடையில் கமலத்துக்கும் அரளிக்குமிடையில் நிகழும் உரையாடல்களுக்கும் அன்புப் பரிமாற்றத்துக்கும் உள்ளேயே பெரும் மௌனம் ஒன்றும் கவிந்திருந்தது. இளம் வயதில் கணவனை இழந்து ஆணின் பாத்திரத்தையுமேற்று அல்லாடிக்கொண்டிருந்த கமலத்துக்குள்ளும் பேசப்படாத வார்த்தைகளும் தீர்க்கப்படாத தாகங்களும் துயரங்களும் குவிந்து போய்க்கிடக்கின்றன. அரளி பருவமடைந்ததிலிருந்து அம்மாவுடன் ஒரு போதும் முரண்டு பண்ணியதில்லை. சமையலுக்கு உதவி செய்தாள். என்ன உணவென்றாலும் முகம் சுழிக்காமல் உண்டாள். பனம் பழச் சாற்றில் ஊற வைத்து உடுப்புகளைத் தோய்த்துப்போட்டாள். எஞ்சிய நேரங்களில் புத்தகங்கள் வாசித்தாள். பல வேளைகளில் வீட்டில் இருந்த பூமரங்களும் தோட்டமும் அவளின் உலகமாக இருந்தன. இப்பொழுதும் கூட இரவில் அம்மாவின் மார்புள் ஒடுங்கித் தூங்குவது அவளுக்கு ஆதுரம் தந்தது.
இரவு கவிந்தபோது அவர்கள் கோவிலடிக்குப்போனார்கள். அம்மா நேரடியாகப்படுக்குமிடத்துக்குப்போனாள் அரளிக்குத் தூக்கம் வரவில்லை. கொட்டகைப்படிக்கட்டிற் போயிருந்தாள். சில வேளை மஞ்சரி வருவாள். படிக்கட்டடியில் அவளும் இல்லை. படிக்கட்டின் பக்கவாட்டிலிருந்து ஒரு குரல் கேட்கிறது.
அரளிளி…
திரும்பினாள். தீரன். பல மாதங்களாக அவனை அவள் காணவில்லை. நெஞ்சுள் விழுந்து உறைந்து கிடந்த முகமது. நெஞ்சுள் மலர்ச்சி. “பாடசாலைத்தோட்டத்துக்கு வாறியா உன்னோடு கதைக்க வேணும்.” பாடசாலைக்கும் அதன் விளையாட்டு மைதானத்துக்கும் இடையில் இருந்த பாடசாலைத்தோட்டம் கவனிக்கப்படாத பகுதி. அங்கு இள வாழைமரங்களும் இள நிலை மரவள்ளிக்கன்றுகளும் சிறு பூமரங்களும் அடர்ந்து வளர்ந்திருந்தன. வேலியோரத்தில் புதர்களும் மண்டிக்கிடந்தன.
அவளுக்குத் தடுமாற்றமாக இருந்தது. “நான் ஏன் அங்கை வரவேணும்”.
அந்தக்கிழவன் கண்டாத் தொல்லை. வாவன்
. கெஞ்சும் தொனி. அவள் எழுந்தாள். அவன் முன்னதாகச் சென்றான். அரளி அம்மா இருந்த மண்டபத்தைப் பார்த்தாள். அம்மா தன்னருகில் இருந்த ஆச்சியுடன் பேசிக்கொண்டிருப்பது அரிக்கன் லாம்பு ஒளியிற் தெரிந்தது. வேறு எவரும் அக்கணம் அங்கு இல்லை. நிலவு எழுத் தொடங்கியிருந்தது.
தோட்டத்தில் தீரன் உரையாடுகிறான். என்னாமாய்க் கதைக்கிறான். மஞ்சரி உஞ்சலாடும்போது சொன்னதைத்தான் எத்தனை விதமாகச் சொல்லுகிறான். அரளிக்குத் தீரனின் முகம் நிலவாகத் தெரிந்தது. புதர் மண்டிய தோட்டத்துள் வளர் நிலவு ஒரு மாய உலகத்தைச் செய்தது. இடையிடையே பின்னணியிற் துப்பாக்கியாற் சுடும் சத்தங்களும் கேட்டன. அவை ஒவ்வொரு நாளும் கேட்பவைதானே. அவளின் மாய உலகத்திற்கு அச்சத்தங்கள் கேட்கவில்லை. அவளுக்கு அம்மாவின் நினைவு திடீரென வந்தது.
“நான் போக வேண்டுமே அம்மா தேடுவா”
நீ ஒன்றும் பேசவில்லையே நாளைக்கும் வருகிறாயா
அவள் ஒன்றும் சொல்லவில்லை. ஆனால் அவனைக் கனிவு நிறையப்பார்த்தாள். அதில் முதன்முறையாக உயிரின் மகிழ்ச்சி ஒளி இருந்தது.
அவள் திரும்பி வந்தபோது அம்மா படிக்கட்டிற் பரிதவிப்போடு இருந்தாள். “எங்கையடி போனனி உங்கை ஆமி முகாம் பக்கமாச் சூட்டுச் சத்தங்கள் கேட்குது.”
பள்ளிக்கூடத்துக்குள்ள இருந்து நிலாவோடை கதைச்சுக் கொண்டிருந்தனான்.
முதன் முதலாக அம்மாவுக்குப் பொய் சொல்கிறாள்.
“வா வந்து படு”
மறுநாள் இராணுவ முகாமின் முன்னரங்கக் காவலில் இருந்த காந்தனை (இந்திய இராணுவத்துடன் சேர்ந்து இயங்கிய தமிழ்க்குழுவொன்றில் இருந்தவன்) புலிகளின் சினைப்பர் குழு சுட்டுக்கொன்று விட்டதாகக் கோவிலடியிற் பேசிக்கொண்டார்கள்.
இன்று அரளி தோட்டத்துக்குப்போனபோது நேற்று எட்ட நின்று கதைத்த தீரன் இப்போது மிக அருகில் வந்து விட்டான். அவளது சுடிதாரைத் தொட்டுத்தொட்டுக் கதைத்தான். அரளியை வார்த்தைகளின் பல்லக்காலேயே தன்னுள் தூக்கிக்கொண்டு போய்விட்டான். தாழ இருந்த வாழை இலையைச் சிறு சிறு கீறலாகப் பிரித்தபடி அவனைப்பார்த்து அரளி அன்றிரவு சொன்னாள்: “நீ என்ரை அப்பாவைப் போல.”
பிறகு இரண்டு நாட்களாக அவனைக்காணவில்லை. மஞ்சரியுடன் கதைக்கும் போதும் கோவிலுக்குள் போவோரையும் வருவோரையும் சுற்று வீதிகளையும் துளாவிக்கொண்டிருந்தாள். மஞ்சரி கேட்டாள்: “என்னடி ஏமலாந்திக்கொண்டிருக்கிறாய்”.
மஞ்சரியிடம் சொல்லுவோமா? இல்லை இல்லை இன்னும் சில நாட்கள் போகட்டும்.
மறுநாளும் அவன் வந்தான். தோட்டத்திற்கு வரும்படி கண்சாடை காட்டினான். இவள் போனாள். இன்றைக்கு அவனில் வாசனைத்திரவியம் மணத்தது. அவளது கைகளைப் பற்றினான் அவனது கை தணலைப் போல இருந்தது. அது அவளுக்குள்ளும் ஊடுருவியது. “வா உனக்கு இன்னும் ஒரு அருமையான இடம் இருக்கு காட்ட வேணும்.” அவன் தோட்டத்து வேலியில் இருந்த பொட்டினூடாக மைதானத்துக்குள் சென்றான். அவளையும் அழைத்தான். அவள் கையைப் பற்றி வேலியோரமாகவே நகர்ந்து மைதானத்தின் மறு கோடியில் இருந்த விளையாட்டுச் சாமான்கள் வைக்கும் சிறு களஞ்சிய அறையை நோக்கி அவளை அழைத்துச் சென்றான். அவளுக்குச் சாண்டில்யன் கதையில் வரும் இராசகுமாரன் அவளைத் தூக்கிச் செல்வது போலவிருந்தது.
அவ்வறையை எப்படித் திறந்தான்? ஏற்கனவே திறந்துதான் வைத்திருந்தானா?
அச்சிறு அறையுள் இருந்த அகலமான வாங்கில் அவளையும் அமர்த்திக் கதவை மூடிவிட்டுத் தானும் அமர்ந்தான். இங்கு ஒருவரும் வரமாட்டார்கள் என்றான். அவ்வறையுள் ஓராளுயரத்திற்கு மேற் சிறு சாளரம் இருந்தது. அதனூடாக நிலவு தெரிந்தது. அது அறையின் இருளைப்போக்கியது. அப்பாவைப் போன்ற அவனிடம் அஞ்ச என்னவிருக்கிறது? இன்றைக்கு அவன் அதிகம் பேசவில்லை. அவளை மெல்ல இழுத்து அணைத்தான். அரளிக்கு தன்னைச் சூழ பெரும் வெப்பம் திரள்வது போல இருந்தது. அறியா வயதில் அவளுள் விழுந்த படிமங்கள் உயிர் கொண்டு எழுந்தன. மஞ்சத்தின் சிற்பங்கள் இறங்கி வந்தன. அவன் கண்கள் வேட்டை நாயின் கண்களைப்போல மாறியிருந்ததை அவள் அறியவில்லை. அவள் முகம் சாளரத்தினூடு வந்த நிலவை நோக்கியிருந்தது. அவள் நிலவிலிருந்தாள். அன்று முத்துவிடமிருந்து விடுபட்டுப்பறந்த குருவி இவ்விரவில் உயிரில் தீப்பற்றி உருகும் மெழுகாக ஆகியிருந்தது. மென் மயக்கமும் கிறக்கமும் நோக்களை மேவின.
அவன் தன் வேலை முடிந்ததும் எழுந்து அவளைத் தூக்கி அறை வாசலுக்கு அவளை முதுகிட்டு அணைத்தான். ஒருகணம்தான் இன்னும் இரண்டு கைகள் அவள் வாயைப் பின்புறமிருந்து இறுகப்பொத்தின. அரளியால் அவ்விரண்டு காளைகளுக்கும் இடையிற் திணறவும் குளறவும் முடியவில்லை.
மயக்கம் தெளிந்தபோது உடலெங்கும் பெரும் நோ. நிலவிலிருந்து நேரே பூமியில் விழுந்த நோ. கால்கள் பலமிழந்திருந்தன. உடலும் உயிரும் அனலாக எரிந்தன. . எழுந்து அவளாகிப் படிக்கட்டுக்கு எப்படிப்போனாள் என்பதை அவ்விருளுள் யாரால் தான் பார்த்திருக்க முடியும்?. படிக்கட்டில் இரண்டு வயோதிபர்கள் உரையாடிக்கொண்டிருந்தனர். அருகில் இருந்த இந்திய இராணுவ முகாமிலிருந்து சித்திரவதைகளைத்தாங்க முடியாத இளைஞர்களின் ஓலக்குரல்கள் இடையிடை கேட்டுக்கொண்டிருந்தன. அக்குரல்கள் எல்லோருடைய இதயத்தையும் ஊடுருவிச் சென்று கொண்டிருந்தன. அனேகமாக எல்லா இரவுகளிலும் இக்குரல்களை முகாமை அண்டிய பகுதிகளில் இருந்தவர்கள் கேட்டுக் கொண்டிருந்தனர்.
அய்யோ நாங்கள் பெத்த பிள்ளைகளெல்லோ?
படிகளில் சோர்ந்து போய் அமர்ந்திருந்த அரளிக்கு அவளுக்குள் எழுந்திருந்த ஓலம் புறத்திலிருந்த ஓலத்தை மிஞ்சியிருந்தது. நிலவு மட்டுமே ஒளியூட்டிய இரவென்பதால் அரளியின் கோலம் யாரையும் கலவரப்படுத்தவில்லை. அம்மா இருந்த மண்டபத்தைப் பார்த்தாள். அம்மா படுத்திருப்பது தெரிந்தது. உறங்கி விட்டாளா என்பதை ஊகிக்க முடியவில்லை.
அரளிக்குப் படிகளில் இருக்க முடியவில்லை. அவளுக்குத் தானே தணலானது போலவிருந்தது. எழுந்து நேரே தனது வீட்டுக்குப்போனாள் அவளிடமும் கமலத்திடமும் எப்போழுதும் முன் மற்றும் பின்வாசலுக்கான திறப்புகள் இருந்தன. அரளி அவற்றைச் சட்டையின் உட் பையில் விழாதவாறு பத்திரப்படுத்தியிருப்பாள். திறப்பை எடுத்துப் பின் கதவைத் திறந்து துவாயை எடுத்துக்கொண்டு அரளி நேரே கிணற்றடிக்குப்போனாள். அது துலாக்கிணறு. வாளியைக் கிணற்றுக்குள் விட்டுத் தண்ணீரை அள்ளினாள். அதனைத் தன் தலையில் ஊற்றினாள். தண்ணீரோ அவளின் கலைந்த அடர்ந்த முடியை முழுவதும் நனைக்கமுடியாமற் முகத்தில் வழிந்தது. அவள் கேசத்தையே நனைக்க முடியாத நீருக்கு அவள் உள்ளத்தை நனைக்க முடியுமா? இவ்வெரிவுக்கு ஓரிரு வாளிகள் போதுமா? இன்னும் அள்ளித் தலையில் ஊற்றினாள். அவள் தன் வேதனையையும் கோபத்தையும் தண்ணீரினாற் கழுவிவிட விரும்பினாள். அவள் ஐந்தாவது வாளித் தண்ணீரை கிணற்றுக்குள்ளிருந்து அள்ளிக்கொண்டிருந்தபோது கிணற்றின் மறுகரையிற் கோவிற்காணி ஓரமாகவிருந்த அரளிச் செடிகள் கலவரமுற்றன. அவற்றினூடே துப்பாக்கிக்குழல் ஒன்று நீண்டு வந்தது.
“ஏ யார் நீ” அதட்டும் குரல் ஒன்று கேட்டது. அவளுக்கு முதலில் அக்குரல் கேட்கவும் இல்லை. துப்பாக்கிக்குழல் தெரியவுமில்லை. அவளின் மூளைக்குள் தான் ஏமாற்றப்பட்டுப் பலியாக்கப்பட்ட அக்கணம் மட்டும்தான் நிறைந்திருந்தது.
அவள் மீண்டும் கிணற்றுக்குள் வாளியை விட்டு நீர் அள்ளத்தொடங்கினாள். இப்பொழுது துவக்கை நீட்டிச் சுடத்தயாரானபடிக்கு இந்திய இராணுவத்தினன் ஒருவன் முழுவதுமாக அரளிப்பற்றைக்குள் இருந்து வெளியே வந்தான். அவளோ அள்ளிய வாளித்தண்ணீரைத் தலையில் மீண்டும் ஊற்றினாள்.
அவன் தன் சுடும் நிலையை மாற்றாமற் கிணற்றுக்கு மிக அருகில் வந்து மீண்டும் “ யார் நீ இங்கு ஏன் வந்தே” என்று அதட்டும் தொனியிற் கேட்டான். அவள் அப்பொழுதுதான் அவனை நிமிர்ந்து பார்த்தாள். வெறுமையான சூனியத்தைப்பார்க்கும் பார்வையது. அவனும் அவளை நன்கு பார்த்தான். அவளுக்கு நிலைமை மூளைக்குள் உறைத்தது. வீட்டை நோக்கி ஓடி உள் நுழைந்து வீட்டுக் கதவைத் தாளிட்டாள். அவன் சற்று நிதானித்துப் பின் அவளைப் பின்தொடர்ந்து வந்து கதவருகில் நின்று மறுபடியும் “இரவில இங்கே வராதே புரியுதா” என்று கடும் எச்சரிக்கும் தொனியிற் கூறி விட்டுப் போய்விட்டான். அவள் வேகமாக உடை மாற்றிக்கொண்டு கோவிலுக்குப் போய் அம்மாவுக்கருகிற் படுத்துக்கொண்டாள். அது ஒரு கொடும் இரவு.
மறுநாள் பகல் வீட்டுக்குப் போன பொழுதான் நேற்றிரவு தான் செய்த மடத்தனம் அவளுக்கு முழுவதுமாகப்புரிந்தது. தமிழிற் பேசிய இராணுவத்தினனை நினைவுக்குக் கொண்டு வர முயற்சித்தாள். அவன் அவளைச் சுடவுமில்லை. இந்திய இராணுவம் போனவிடமெல்லாம் நிகழ்ந்தது போல அவளை அவன் தன் காமத்துக்கு இரையாக்க முயற்சிக்கவும் இல்லை. அவன் அவளைச் சுட்டிருந்தால் அது அவளது விடுதலையாகத்தானிருந்திருக்கும் என்றும் நினைத்தாள்
அம்மா : என்னம்மா ஒருமாதிரி இருக்கிறாய்
அரளி: ஒன்றுமில்லை தலையிடிக்குது.
இதை யாரிடம் சொல்வேனடி தோழி.
அடுத்து வந்த நாள்களும் கொடுமையானவை. யாரையும் முகம் கொடுத்துப்பார்க்கப் பிடிக்கவில்லை. இரவில் கோவிற் படிக்கட்டில் இருக்கப்பிடிக்கவில்லை. அம்மாவுடனேயே இருந்து கொண்டாள். இரண்டு நாள்களாக இரவுகளில் தூங்க முடியவில்லை. இனியும் இங்கிருக்க முடியாது. மஞ்சரியுடன் கதைத்து விட்டு வருகிறேன் என்று சொல்லிவிட்டு மறுபடியும் தன் வீட்டுக்குப் போனாள். கிணற்றடியையும் கோவிற்காணியையும் நன்கு கூர்ந்து பார்த்து விட்டு வீட்டின் முன் கதவைத் திறந்து உட் சென்று தாளிட்டாள்.
வீட்டின் முன்னறையிற் சுவரில் அப்பாவின் படம் ஒன்று மாட்டியிருந்தது. அதனைக்கழற்றித்தன் நெஞ்சொடு சேர்த்து வைத்துக்கொண்டு அழத்தொடங்கினாள். அவள் கேவுகிற சத்தம் மட்டும் பல்லிக்குக் கேட்டது. கண்ணீர் கன்னத்தில் வழிந்து தரையை நனைத்தது.
முகாமை அண்டிய பகுதிகளில் கடந்த சில நாட்களாகச் சூட்டுச் சத்தங்கள் கேட்டன. இரவுகளில் புளிய மரத்தடிக் காவலரணில் இராணுவ நடமாட்டம் தென்பட்டது.
அவளும் வீட்டுக்குப்போகவில்லை.
இன்று புளிய மரத்தடிக் காவலரண் பகுதி அமைதியாக இருந்தது. அரளி உயிர் உடற் பயங்களின் எல்லைகளைக் கடந்திருந்தாள். அவளுக்குத் தேவைப்பட்டது நிம்மதி. அது அவளுக்கு அவளது வீட்டில் அப்பாவுக்கருகில் கிடைத்தது; போனாள். முன்னறையில் அவள் சிறு வயதில் ஆடிய மரக்குதிரை இன்னும் இருந்தது. அது அப்பாவின் மடி. அதில் ஏறி இருந்தாள். கிறீச்சிட்டது உடைந்து விட்டால்? உடனே இறங்கி விட்டாள்.
அதனைத்தன்னருகில் வைத்துக் கொண்டு கண்களை மூடிக்கொண்டாள். அப்பா அவளத்தன் தோளோடு சாய்த்துத் தலையைக் கோதிவிட்டார்.
இப்பொழுது முன் கதவடியில் அரவம் கேட்டது.
அவள் மெதுவாக எழுந்து பின்கதவாற் சென்றுவிட எண்ணிப் பின்பக்கம் தவழந்து சென்று மெதுவாகக் கதவைத் திறந்தாள். திடுக்கிட்டுப்போனாள் அங்கே அன்று அவளை இங்கே வராதே என்று சொன்ன இராணுவத்தினன் நின்று கொண்டிருந்தான். அவனது தாக்குதற் தயார்நிலையில் மாற்றமில்லை. அவன் அவளைச் சத்தமிட வேண்டாமெனச் சைகை செய்தான். அவளை அவன் நெருங்கவில்லை. மாறாக அவளை உள்ளே அமரச்சொன்னான்.
அவன் : உன்னை இங்கே வர வேண்டாம் என்று சொன்னேனே ஏன் வந்தே?
அரளி : என்ரை வீடு நான் வருவன் போவன்.
அவன்: இந்த ஊரே எங்களுடைய கட்டுப்பாட்டில் இருக்கு. நீ சின்னப்பொண்ணு. உனக்கு எதுவும் விளங்காது. வேறு யாராவது காவலரணில் இருந்திருந்தால் உன்னைக் கோழியைப்பிடிக்கிற மாதிரித் தூக்கிக் கொண்டு போயி என்னென்னமோ செய்திருப்பாங்கள்.”
அவள் தன் கணுக்கால் வரை நீண்டிருந்த சட்டையின் பைக்குள் வைத்திருந்த சமையலறைக்கத்தியை எடுத்து அவனுக்குக்காட்டினாள். பின் தாழ்வரத்தில் வாழையிலைகளினூடு கசிந்த நிலவு அவளுக்காக அவன் முகத்தில் விழுந்தது. நிலவில் அவனின் முகத்திற் சிரிப்புப் படர்ந்ததைக் கண்டாள். அவனது முகம் இராணுவத்தினனின் முகம் போல அவளுக்கு இருக்கவில்லை. அவன் இவளைவிட ஓரிரு வயது மூத்தவனாக இருக்கலாம்.
அவன் : “நான் காவலுக்கு வந்தால் முன் கதவில் அரளிப்பூவொன்றைச் சொருகி விடுகிறேன். அப்பொழுது மட்டும் இங்கே வா மற்றப்படி தயவு செய்து இங்கே வராதே.”
அவள் வீட்டுக்கதவில் அரளி பூக்கும் இரவுகளில் அவள் இதயம் அமைதியடைந்தது. ஒரு நாள் அவன் இவள் வீட்டில் இருந்தபொழுது பின் கதவை மெதுவாகத் தட்டினான். இவள் மெதுவாக என்ன வென்றாள். சன்னலைத்திற வென்றான். அவள் சற்று நேர யோசனையின் பின் சன்னலைத் திறந்தாள்.
அவன் பூக்கள் நிறைந்த கொத்தொன்றை அவளிடம் நீட்டினான். அவை வாடியிருந்தன. பகலிற் பறித்திருப்பான் போலும். கொத்தைக்கொடுக்கும்போது அவனது விரல்கள் இயல்பாக அவளின் விரல்களில் பட்டன. அவன் கை குளிர்ந்திருந்தது. அவள் கொத்தில் இருந்த செவ்வரத்தம் பூவை மட்டும் எடுத்து அப்பாவின் படத்தின் முன் வைத்தாள். மிகுதியை கோவிலுக்குப் போகும்போது வேலியிற் சொருகி விட்டுச் சென்றாள்.
மறுநாள் அதிகாலையில் இந்திய இராணுவம் கோவிலைச் சுற்றி வளைத்துத் தேடுதல் நடாத்தியது. அரளி இருந்த மண்டபத்தின் வாசலில் வந்து நின்றவனை அரளி அடையாளம் கண்டு கொண்டாள். அரளியை அவனும் அவனை அரளியும் பகல் ஒளியிற் காண்கிறார்கள்.
அரளியைத் தெரிந்தவன் போல் அவனும் காட்டிக்கொள்ளவில்லை. ஆனால் தேடுதலில் தனித்தெடுக்கப்பட்டுத் தலையாட்டியின் முன் நிறுத்தப்பட்ட இளையவர்களுள் அரளி இருக்க வில்லை.
இப்பொழுது அரளியும் அவனும் அவள் உள்ளேயும் இவன் வெளியேயும் சன்னலோரமாகச் சன்னமான குரலில் உரையாடிக்கொள்ளும் அளவுக்கு வந்திருந்தார்கள்.
அவன்: பொண்ணே அப்படி என்ன பிரச்சனை இரவுகளில் இங்கு வந்து தனியே இருக்கிறாயே?
பொண்ணு கிண்ணு எண்டு கூப்பிடாதே. அரளி எண்டு கூப்பிடு.
ஒ உன் பேரு அரளியா? நீ அரளிப்பூப்போலத்தான் இருக்கிறே.
அவள் முறுவலோடு உன்ரை பேரென்ன
என் பேரு பாண்டித்துரை
நான் உன்னைத் துரை எண்டு கூப்பிடுறன். என்ரை அப்பாவின்ரை பெயர் இராசதுரை.
நான் கேட்டதுக்குப் பதில் சொல்லவில்லையே!
நான் என்ரை அப்பாவோட இருக்க வாறன்
உன்னோட அப்பாதான் இங்கில்லையே!
அவள் அப்பாவின் படத்தை எடுத்துக் கொண்டு வந்து காட்டினாள்.
அவனுக்குப்புரிந்தது. மென்பெரு மூச்சோடு சொன்னான்
என்னோட அப்பாவும் இறந்திட்டார்.
அவர்களுக்கிடையிலான உரையாடல் அவனது இராணுவத் தொழிலுக்குள்ளும் சாத்தியமான இரவுகளில் தொடர்ந்தது. இரவும் இருளும் தானே கரந்து போர் செய்பவர்களுக்கும் கரந்து காதல் செய்பவர்களுக்கும் ஓளியாகிறது.
ஒரு நாள் சற்று கோபமும் வேதனையும் கலந்த குரலில் அரளி அவனைக் கேட்கிறாள்: “உங்கடை முகாமில இருந்து பொம்பிளைப்பிள்ளைகளும் ஆம்பிளைப்பிள்ளைகளும் போடுற ஓலம் இரவுகளில் கேக்குதே. நீங்கள் அதுகளை என்ன செய்யிறனீங்கள் ? நீயும் அதுகளுக்கு ஏதாவது செய்யிறனியா?
தான் சின்னப்பெண் என்று நினைத்த அவளிடம் அவன் இக்கேள்வியை எதிர்பார்க்கவில்லை. அவன் முகம் சுருங்கித்தலை குனிந்து சொன்னான்: “ என்னைப்பார்க்க அப்படித் தெரியுதா?”
நீ என்னை ஒண்டும் செய்யேல்லை. ஆனா நீயும் அவங்களிலை ஒருத்தன் தானே!
என்னுடைய அம்மா அப்பா என்னை அப்படி வளர்க்கவில்லை. எனக்கு உன்னோடை வயசில ஒரு தங்கச்சி இருக்கா. நான் அவளை அதிகாரம் பண்ணிச் சீண்டினா என்னோடை அப்பா எப்பவும் சொல்லுவாரு டே! பொண்ணுண்ணா இளப்பம் இல்லைடா அவளும் நீயும் ஒண்ணுதாண்டா. அவர் இருந்திருந்தா நான் ஆமிக்கு வந்திருக்க மாட்டன். அவரு செத்துபோனதும் குடும்ப வருமானம் நின்னு போச்சு.
அரளி இன்னும் கேட்கிறாள்: “ நீ எங்கடை ஆக்களைச் சுட்டிருக்கிறியா”
அவன் அதிர்ந்துதான் போனான். கோபம் கூட வந்தது. இவள் என்னைக் குற்றவாளிக் கூண்டில் ஏத்துகிறாள்.
“ஏ பொண்ணு என்ன கேட்கிறே துவக்கு வைச்சிருந்தா சுடத்தானே வேணும் ”
அவன் கோபம் அவளை என்ன செய்யும். அவள் அவனை மீண்டும் ஒரு முறை கேள்விக்குறியோடு ஆழமாகப் பார்த்தாள். அவன் அவள் பார்வைக்குப்பதில் சொல்ல வேண்டும் என்று உணர்ந்தான்.
“அரளி நான் முன்னேறித்தாக்கும் பிரிவைச் சேர்ந்தவன் இல்லை. நான் தொழில் நுட்பப்பிரிவில் தான் வேலை செய்கிறேன். இங்கு வரும்போது சண்டை செய்யப் போகிறோம் என்று எங்களிடம் மேலதிகாரிகள் சொல்லவில்லை. ஆனா நிலைமை எல்லாம் மாறிப்போச்சு. நாங்கள் பிடிச்ச இடங்களில் முகாமமைக்கும்போது, சுற்றுக் காவல் செய்யும்போது தாக்குதல்கள் நடந்தால் சுடத்தானே வேண்டும். நான் சுட்டிருக்கிறேன். எந்தப்பிரிவில் இருந்தாலும் அடிப்படை இராணுவப்பயிற்சியைப் பெற்றிருக்க வேண்டும்.”
“அண்டைக்கு உன்னோடை இன்னொருவன் வந்திருந்தா அவன் என்னைச் சுடச் சொல்லியிருந்தா சுட்டிருப்பியா ? அல்லது அவன் என்னை ஏதாவது செய்ய முயற்சி செய்திருந்தா பாத்துக்கொண்டிருந்திருப்பியா? இல்லை …”
அவன் திக்கு முக்காடிப்போனான். பிறகு சற்றுக் குற்றவுணர் தொனிக்கும் குரலில் “இது அவ்வப்போது வந்து போகிற காவற் கொட்டில் அதனால இங்கை ஒண்ணு அல்லது இரண்டு ஆமிதான் வருவோம். உன்னோடை அதிஸ்டம் அன்னிக்கு நான் மட்டுதான் இருந்தேன். வேறையாராவதா இருந்தா சத்தம் கேட்டதுமே சுட்டிருப்பாங்கள். உன் வீட்டுப்பக்கம் கோவிலிலை மக்கள் இருப்பாங்க அவங்களிலை எல்லாம் படுமே என்னுதான் வெளியே வந்து அரளிப்பற்றைக்குள் படுத்துப் பார்த்துக்கொண்டிருந்தேன். சின்ன உருவம் ஒண்ணு வருது என்று தெரிந்தது. அதுவும் நீ கையில் துண்டோடதான் வந்தே. கிட்ட வந்தவந்தாப் பொண்ணு. ஆனாலும் உங்க ஊரில சின்னபொண்ணுங்க கூட ஆபத்தானவங்கதான். அதனாலதான் முதலிலை உனக்குத் துப்பாக்கியை நீட்டீட்டு இருந்தேன்.”
அரளிக்கு அவனை அதிகம் புண்படுத்தியது போலத்தோன்றியது.
வழமை போல, வீட்டில் அப்பாவின் படத்துக்கு ஏற்றும் சிறு திரிவிளக்கு இடம் பெயர்ந்து வந்து அவர்களுடைய முகங்களில் படர்ந்த உணர்வுகளுக்கு ஏற்றபடி மிக மென்மையாக ஒளிதந்தபடியிருந்தது.
“நான் அதிக காலம் இராணுவத்தில இருக்கமாட்டன். அம்மாவும் கலியாணம் பண்ணிக்கோன்னு சொல்லாறங்க.” அக்கணம் அரளியின் கண்களைத் துளாவினான். பிறகு சொன்னான்: “முதன் முதலாக உன்னைக் கிணற்றடியிற் பார்த்தபோது என் கிராமத்துப் பேச்சி அம்மன் போல இருந்தே!”
அப்படியா எனக்குப் பேச்சி அம்மனைத் தெரியாது. ஆனால் இங்கை இருக்கிற அம்மனைத் தெரியும் கும்பிட்டுக்கொள் என்றபடி அவள் அம்மனைப் போல அபிநயித்தாள்.
அவன் பக்தன் ஆகியிருந்தான்.
பிறகு வந்த சில நாள்களுக்கு அரளிக்கு இரவில் வீட்டுக்குப் போக முடியவில்லை. விடுதலைப்புலிகள் இயக்கத்தில் இருந்த சீராளனின் தம்பியை இந்திய ராணுவத்துடன் சேர்ந்து இயங்கிய இயக்கம் சுற்றி வளைப்பின்போது பிடித்துச் சென்று சுட்டு உடலைக் கோவிலுக்கு அண்மித்த பகுதியிற் போட்டிருந்தது.
மீண்டும் முன்கதவில் அரளி பூத்திருந்தது.
அவள் போனாள்.
அவன் கைகளில் மீண்டும் பூங்கொத்து மலர்ந்திருந்தது. பின் கதவை மெல்லத்திறக்கக் கோரினான். பூங்கொத்தை அவளின் இரண்டு கைகளையும் பற்றிக் கொடுத்து நடுங்கும் விரலோடும் குரலோடும் கேட்கிறான்: “அரளி இன்றைக்கு திங்கட்கிழமை. வருகிற வியாழக்கிழமைதான் இந்த முகாமில் எனது கடைசிக் கடமை நாள். என்னை இந்தியாவுக்கு மாற்றுகிறார்கள். இன்னும் சில நாள்களில் இங்கே புதுத் தாக்குதல் அணிகள் வரப்போகின்றன, தாக்குதல் அனுபவம் குறைந்தவர்களை இந்தியாவுக்கு மாற்றுகிறார்கள். நீ என்னோடு வருகிறாயா? என்னுடைய பிரிவுக் கொமாண்டர் நல்லவர். அவருடன் நான் கதைத்து விட்டேன். அவர் பலாலியில் இருக்கிற பெரிய கமாண்டருடன் கதைத்திருக்கிறார்.. அவர் எல்லா ஒழுங்குகளும் செய்வதாகச் சொல்லியிருக்கிறார். நிலமைகள் ஒழுங்கானதும் உன் அம்மாவையும் கூப்பிடலாம்.”
அரளி அவனுடனான ஒவ்வொரு உரையாடலின் பின்பும் அவனை உணர்ந்திருந்தாள். அன்றிரவு அவள் மீண்டும் அவன் கைகள் குளமாகும் வரை அவற்றைப் பற்றியபடி அழுதாள். அம்மாவுடனும் மஞ்சரியுடனும் பகிர முடியாது போன, இரவுகளில் அப்பாவுடன் மட்டும் உரையாடியவற்றை எல்லாம் அன்று அவள் அவனுக்குச் சொன்னாள்.
அன்றிரவு அவள் அவனைப்பிரியும்போது அவன் நினைத்தான் அவள் தன் அம்மாவையும் அப்பாவின் ஞாபகங்களையும் அவளின் உயிரின் வேர்கள் ஓடிய இவ்வீட்டையும் விட்டு விட்டு அவனுடன் வருவாளா? அவளின் இதயத்தைச் சூழ்ந்து கொண்டிருக்கும் கொடுங்கனவுகளை அழித்து அவனது காதலை அவள் ஏற்கத் தன்னால் என்ன செய்ய முடியும்?
அன்றைக்கு அவன் ஒரு ராணுவத்தினனின் உசார் நிலையைத் தன்னையும் அறியாமலே கைவிட்டு முழுவதுமாகத் தளர்ந்திருந்தான். வழமைக்கு மாறாக அவளின் நெற்றியில் முத்தமிட்டான். அவனது முத்தம் அவளுக்குச் சுடவில்லை.
அவன் சொன்னான்: “ வியாழக்கிழமை இரவு கிணற்றடியில் உனக்காகக் காத்திருப்பேன்.” என்றபடி அவளுடன் கூடவே முன் வேலியை நோக்கி நடக்க முனைந்தான். அவள் பதட்டமடைந்து ஐயோ யாராவது பார்த்தாலும், நீ போ.
வெள்ளிக்கிழமை அதிகாலை கமலத்தை அவள் அருகிற்படுத்திருந்த மூதாட்டி உலுக்கி எழுப்பினாள். “பிள்ளை கமலம் எழும்பு உங்கை பள்ளிக்கூடப்பக்கமா ஆரையோ சுட்டுப்போட்டிருக்காம்.” கமலம் எழும்பினாள். திடுக்கிட்டுப் போனாள். அரளியை அருகிற் காணவில்லை. “ஐயோ என்ரை பிள்ளை! ”
கமலம் பள்ளிக்கூடத்தை நோக்கி ஓடுகிறாள்.
பள்ளிக்கூடத்தின் விளையாட்டுப்பொருட்களஞ்சியத்தின் முன் இரண்டு இளம் ஆணுடல்கள் கிடந்தன.
தேவ அபிரா-நெதர்லாந்து
2 comments
அரளி அழகிய படைப்பு. வாழ்த்துக்கள் எழுதியவருக்கு
வாசித்துக் கருத்திட்டமைக்கு மிகவும் நன்றி!
தேவ அபிரா