இந்தியாவில் கொரோனா தடுப்பூசி போடும் பணிகள் இன்று சனிக்கிழமை நாடு முழுவதும் ஆரம்பமாகியுள்ளது. நாடு முழுவதும் மொத்தம் 3006 மையங்களில் கொரோனா தடுப்பூசி போடும் பணி நடைபெற்றுவரும் நிலையில் முதல் கட்டமாக முன்கள பணியாளர்களுக்கு மட்டும் தடுப்பூசி போடப்பட்டு வருகிறது.
இந்த பணிக்காக அவசர கால பயன்பாட்டை கருத்தில் கொண்டு கோவிஷீல்டு, கோவேக்சின் ஆகிய இரு தடுப்பூசிகளுக்கு மத்திய அரசு அனுமதி வழங்கி உள்ளது. சுமார் 1.65 கோடி தடுப்பூசிகளை மத்திய அரசு கொள்முதல் செய்து மாநில அரசுகளுக்கு பிரித்து அனுப்பி உள்ளது.
நாடு முழுவதும் தடுப்பூசிகள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. இன்று காலை 10.30 மணிக்கு டெல்லியில் காணொலி காட்சி வாயிலாக ஆரம்பித்து வைத்த பிரதமர் மோடி இதன்பின்னா் டெல்லி மருத்துவமனைகளில் தடுப்பூசி போட்டுக்கொண்டவர்களுடன் உரையாடினார். அதன் பின்னர் மோடி நாட்டு மக்களுக்கு கொரோனா தடுப்பூசி தொடர்பாக உரையாற்றினார்.
உலகின் மிகப்பெரிய தடுப்பூசி திட்டமாக இது கருதப்படுகிறது. இன்று மாலை 5 மணி வரை தடுப்பூசி போடப்படும். முதல் கட்டமாக முன்கள பணியாளர்களுக்கு மட்டும் தடுப்பூசி போடப்பட்டு வருகிறது.
தடுப்பூசி போட்டுக்கொள்வதை சிரமமின்றி மேற்கொள்வதற்காக ஏற்கனவே 2 தடவை நாடு முழுவதும் ஒத்திகை பார்க்கப்பட்டு இருந்தது. நாடு முழுவதும் 700 மாவட்டங்களில் சுமார் 1.5 கோடி பேருக்கு தடுப்பூசி போட பயிற்சி அளிக்கப் பட்டுள்ளது.
நாடு முழுவதும் மருத்துவா்கள் , செவிலியர்கள், சுகாதார பணியாளர்கள் உள்ளிட்ட முன்கள பணியாளர்கள் சுமார் 3 கோடி பேர் உள்ளனர். அந்தவகையில் முதல் நாளான இன்று நாடு முழுவதும் சுமார் 3 லட்சம் சுகாதார பணியாளர்கள் தடுப்பூசி பெறுகிறார்கள்.
தமிழகத்தில் 166 இடங்களில் இன்று கொரோனா தடுப்பூசி போடப்பட்டது. தமிழகத்தில் 4.39 லட்சம் சுகாதார பணியாளர்கள் தடுப்பூசியை போட்டுக்கொள்ள சம்மதம் தெரிவித்து கோ-வின் செயலியில் தங்களது பெயர்களை பதிவு செய்து உள்ளனர். இவர்களில் 2.5 லட்சம் பேருக்கு முதல் கட்டமாக தடுப்பூசி போட்டு முடிக்கப்படும். #இந்தியா #கொரோனா_தடுப்பூசி #ஆரம்பம்