ஆப்கானிஸ்தானில் உச்சநீதிமன்ற பெண் நீதிபதிகள் இருவர் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர்.
ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் ஞாயிற்றுக்கிழமையன்று இந்த வன்செயல் நடந்துள்ளது.
அடையாளம் தெரியாத துப்பாக்கிதாரிகளால் அவர்கள் சுட்டுக்கொல்லப்பட்டனர்.
பத்திரிகையாளர்கள், செயற்பாட்டாளர்கள், அரசியல் தலைவர்கள் ஆகியோரை குறிவைத்தும், உயர் பதவிகளில் உள்ள பெண்களைக் குறிவைத்தும் நடத்தப்படும் தாக்குதல்களின் தொடர்ச்சியாகவே இந்த படுகொலை நடந்துள்ளது.
ஆப்கானிஸ்தானில் இருந்த அமெரிக்கத் துருப்புகளின் எண்ணிக்கையை அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் தொடர்ந்து திரும்பி அழைத்துக்கொண்டிருக்கும் நிலையில் அந்த நாட்டில் வன்முறை அதிகரித்து வருகிறது.
திருப்பி அழைக்கப்பட்டவர்கள் போக ஆப்கானிஸ்தானில் தற்போது 2,500 அமெரிக்கத் துருப்புகள் மட்டுமே எஞ்சியிருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.
அதிகாலை நடந்த திடீர் தாக்குதலில் அந்த இரு நீதிபதிகளும் கொல்லப்பட்டனர். அவர்களின் ஓட்டுநரும் காயமடைந்தார்.
காபூலின் காலா-எ-ஃபதுல்லா பகுதியில் இந்த தாக்குதல் நடந்தது. இந்த தாக்குதலை தாங்கள் நடத்தியதாக எந்தக் குழுவும் பொறுப்பேற்கவில்லை.
சமீப கால படுகொலைகளுக்கு தாலிபன் மீது சந்தேகம் எழுந்துள்ளது. ஆனால், இந்த படுகொலைகளை தாங்கள் செய்ததாக அவர்கள் பொறுப்பேற்கவில்லை.
ஆப்கானிஸ்தான் அரசுக்கும், தாலிபன்களுக்கும் இடையே டோஹாவில் அமைதிப் பேச்சுவார்த்தை நடந்துவரும் நிலையில்தான் இந்த குறிவைத்த, திட்டமிட்ட படுகொலைகள் நடந்துவருகின்றன.
BBC