முகப்புத்தகத்தின் ஊடாக இனங்களுக்கு இடையிலான நல்லிணக்கத்தை சிதைக்கும் வகையில் பதிவுகளை பதிவிட்டதற்காக சந்தேகத்தின் அடிப்படையில் கைது செய்யப்பட்ட பசால் மொஹமட் நிசார் எனும் வர்த்தகரை உடனடியாக குற்றப்புலனாய்வு திணைக்களத்திடம் ஒப்படைக்குமாறு கொழும்பு பிரதான நீதவான் மொஹமட் மிஹார் இன்று (18.01.21) சிறைச்சாலை கண்காணிப்பாளருக்கு உத்தரவிட்டுள்ளார்.
குறித்த சந்தேக நபரின் வங்கி கணக்கில் சந்தேகத்திற்கிடமான முறையில் பாரிய அளவிலான கொடுக்கல் வாங்கல்கள் இடம்பெற்றுள்ளமை தொடர்பில் தகவல் கிடைத்துள்ள காரணத்தினால் அவரை 90 நாட்கள் காவற்துறையின் காவலில் வைத்து விசாரணை செய்ய அனுமதி வழங்குமாறு குற்றப்புலனாய்வு திணைக்களத்தினர் நீதிமன்றத்திடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இந்தக் கோரிக்கையை ஏற்ற நீதவான், விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள குறித்த சந்தேக நபரை குற்றப்புலனாய்வு திணைக்களத்தினரிடம் ஒப்படைக்குமாறு சிறைச்சாலை கண்காணிப்பாளருக்கு உத்தரவிட்டுள்ளார்.
சந்தேக நபரின் வங்கி கணக்கை அவதானித்தில் கடந்த காலத்தில் 625 இலட்சம் ரூபாவிற்கு அதிகமான பணக் கொடுக்கல் வாங்கல்கள் இடம்பெற்றுள்ளதாக குற்றப்புலனாய்வு திணைக்களத்தினர் நீதிமன்றத்திடம் தெரிவித்துள்ளனர்.