குருந்தூர் மலையை சிங்கள மயமாக்கும் முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றது என நாடாளுமன்ற உறுப்பினா் கஜேந்திரன் நேற்று (1) 9-01-2021 நாடாளுமன்றில் ஆற்றிய உரையாற்றிய போது தொிவித்துள்ளாா்.
மேலும் அங்கு உரையாற்றிய அவா் நில அளவை அத்தியட்சகர் S.M.J.S.சமரசிங்கவின் செயற்பாடுகள் இனவாத அடிப்படையிலானது முல்லைத்தீவு மாவட்டத்திலுள்ள மக்கள் மற்றும் விவசாயிகளது வேண்டுகோளின் அடிப்படையில் எமது கட்சியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார்; பொன்னம்பலம் தலைமையில் கூட்டமைப்பின்நாடாளுமன்ற உறுப்பினர்களான செல்வம் அடைக்கலநாதன் மற்றும் நோகராதலிங்கம் ஆகியோருடன் சென்றிருதோம். கடந்த 17-01-2021 திகதியன்று முல்லைத்தீவு மாவட்டத்திலுள்ள குருந்தூர் மலைக்குச் சென்றிருந்தோம்.
அங்கு சென்றடைந்தபோது மலை அடிவாரத்திலிருந்து மேற்பகுதிக்குச் செல்லும் வழியெங்கும் காட்டுமரங்கள் வெட்டப்பட்டு மேலே செல்வதற்கான பாதை துப்பரவு செய்யப்பட்டு செப்பனிடப்பட்டுக் கொண்டிருந்தது. அந்தப் பணிகளில் இராணுவத்தினர் ஈடுபட்டிருந்தார்கள். அங்கு 59வது டிவிசனைச் சேர்ந்த 591ஆவது பிரிகேட் படையினரது கொடிகள் கட்டப்பட்டிருந்தது.
மலையின் மேற்பகுதியில் துப்பரவு செய்யப்பட்டு நூல்களால் சசதுரங்கள் அமைக்கப்பட்டு குறியீட்டு எண்களும் இடப்பட்டிருந்தது. அதுபற்றி வினவியபோது அகழ்வுப் பணிகளை இலகுவாக மேற்கொள்வதற்காக அவ்வாறு சதுரவடிவிலான அடையாளங்கள் இடப்பட்டுள்ளதாக அங்கிருந்த தொல்லியல் திணைக்களத்தினைச் சார்ந்தவர்கள் தெரிவித்திருந்தனர்.
மறுநாள் 18 ஆம் திகதி நாம் ஊடகங்களைப் பார்த்தபோது அந்த மலைக்கு தொல்லியல் துறைக்குப் பொறுப்பான அமைச்சர் விதுர விக்கரமநாயக்க சென்றிருந்தார். அவருடன் ஒரு பத்தர் சிலையும் எடுத்துச் செல்லப்பட்டிருந்தது. அந்த சிலையை மலையின் மேற்பகுதியில் வைத்து பூசை வழிபாடுகள் மேற் கொள்ளப்பட்டுள்ளதுடன் அங்கு கட்டடம் ஒன்றுக்கான அத்திபாரமும் இடப்பட்டுள்ளது.
ஆனால் அந்த மலலப்பகுதி தமிழர்களுக்குச் சொந்தமானதாகும். அங்கு தமிழர்கள் மிக நீண்டகாலமாக வழிபாடுகளில் ஈடுபட்டு வந்துள்ளார்கள். கடந்த 27-09-2018ஆம் திகதியன்று முல்லைத்தீவு நீதவான் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பில் தமிழ் மக்கள் அந்த மலைக்குச் சென்று வழிபாடுகளில் ஈடுபடுவதற்கு எந்தத் தடையும் இல்லை என்று தெரிவித்துள்ளது.
ஆனால் தொல்லியல் திணைக்களம் அங்கு சென்று வழிபடுவதற்கு அனுமதி மறுக்கின்றது. அத்துடன் அந்தப் பகுதியை பௌத்த மயமாக்குவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றது. கரைத்துறைப்பற்று பிரதேச செயலகத்தின் நில அளவை வேண்டுகைக்கு அமைய கடந்த 14 டிசம்பர் 2020 அன்று நில அளவைத் திணைக்களத்தினால் எல்லை மீள் நிர்ணயம் செய்யப்பட்ட வரைபடம் ஒன்று கரைத்துறைப்பற்று பிரதேச செயலகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
கரைத்துறைப்பற்று பிரதேச செயலகத்தின் நில அளவை வேண்டுகைக்கு அமைய மேற்கொள்ளப்பட்ட அந்த நிலஅளவையானது முல்லைத்தீவு மாவட்ட நில அளவை அத்தியட்சகரினால் மேற்கொள்ளப்படவில்லை. மாறாக கொழும்பிலிருந்து வந்த S.M.J.S சமரசிங்க தலைமையிலான நில அளவை குழுவினராலேயே மேற்கொள்ளப்பட்டுள்ளது.
தொல்லியல் இடமெனக் குறிப்பிடப்பட்ட குருந்தூர் மலைப்பகுதியை எல்லை மீள் நிர்ணயம் செய்த பின்னர் புதிய இடவிளக்க வரைபடம் 14-12-2020 திகதியிடப்பட்டு S.M.J.S.சமரசிங்கவின் கையொப்பத்துடன் அனுப்பப்பட்டுள்ளது. அத்துடன் அவரது கடிதம் ஒன்றும் இணைக்கப்பட்டுள்ளது. அக்கடிதத்தில் குருந்தி விகாரைக்குச் சொந்மான இடம் எல்லை மீள் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளார். அதனை நாம் வன்மையாகக் கண்டிக்கின்றோம்.
அதுவொரு இனவாத செயற்பாடு. அந்த மலைப்பகுதியை சிங்கள மயமாக்குவதற்கான செயற்பாடுகள் மேற்கொள்ளப்படுகின்றது. உடனடியாக அந்த வரைபடம் இரத்துச் செய்யப்படல் வேண்டும் என்றும் அதுதொடர்பான விசாரணைகள் மேற்கொள்ளப்படல் வேண்டும் என்றும் கோருகின்றேன்.நேற்றய தினம் (18-01-2021) மண்டைதீவில் கடற்படைக்காக 18 ஏக்கர் காணி சுவீகரிப்பதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
அம் முயற்சியை நாம் எதிர்த்து தடுத்து நிறுத்தியுள்ளோம். எனினும் இந்த வாரம் முழுவதும் காணிகளை சுவீகரிப்பதற்காக நில அளவை மேற்கொள்ளப்படவுள்ளது. எமது தாயகத்தில் மிக மோசமான நில ஆக்கிரமிப்புக்கள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது. தமிழ் மக்கள் மிகவும் கொதித்துப் போயிருக்கின்றார்கள். தமிழ் மக்களின் நிம்மதி கெட்டுப்போயிருக்கின்றது. அந்தப் பிரச்சினைகளுக்கு தீர்வு அவசரமாகக் காணப்படல் வேண்டும் என தொிவித்துள்ளாா். #குருந்தூர்மலை #சிங்கள_மயமாக்க #கஜேந்திரன் #இனவாத #தொல்லியல்