Home உலகம் அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் பிறப்பித்த முதல் உத்தரவுகள!

அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் பிறப்பித்த முதல் உத்தரவுகள!

by admin
படக்குறிப்பு,அதிபராக ஜோ பைடன்.

அமெரிக்க ஜனாதிபதியாக புதிதாகப் பதவியேற்றுள்ள ஜனநாயக கட்சியின் ஜோ பைடன், முதல் நாளிலேயே அதிக ஆணைகளில் கையெழுத்திட்டுள்ளார்.

இதற்குமுன் எந்த அமெரிக்க ஜனாதிபதியும் பதவியேற்ற முதல் நாளில் கையெழுத்திட்ட ஆணைகளின் எண்ணிக்கையைவிட பைடன் கையெழுத்திட்ட ஆணைகளின் எண்ணிக்கை அதிகம் எனத் தெரிவிக்கப்படுகிறது.

பதவியேற்ற முதல் நாளில் பைடன் கையெழுத்திட்ட நிர்வாக ஆணைகள் 15. ஜனாதிபதியின் குறிப்புகள் என்று பொருள்படும் பிரசிடென்ஷியல் மெமோக்கள் -2.

பதவியேற்ற முதல் நாளில் டிரம்ப் 8 உத்தரவுகளில் கையெழுத்திட்டார். ஒபாமா 9 உத்தரவுகளில் கையெழுத்திட்டார். ஜார்ஜ் டபிள்யூ புஷ் 2 உத்தரவுகளிலும், கிளிண்டன் 3 உத்தரவுகளிலும் கையெழுத்திட்டனர்.

பாரிஸ் பருவநிலை ஒப்பந்தம் – முகக் கவசம்

பாரீஸ் பருவ நிலை ஒப்பந்தத்தில் மீண்டும் அமெரிக்காவை சேர்ப்பதற்கான நடைமுறையைத் தொடக்குவதற்கான ஒரு நிர்வாக உத்தரவைப் பைடன் பிறப்பித்தார். பருவநிலை மாற்றம் புதிய அமெரிக்க நிர்வாகத்தின் முன்னுரிமைகளில் ஒன்று என்று கூறப்பட்டுள்ளது.

சர்ச்சைக்குரிய கீஸ்டோன் எக்ஸ் எல் குழாய் அமைப்புத் திட்டத்துக்கு அளிக்கப்பட்ட ஜனாதிபதி ஒப்புதலை பைடன் திரும்பப் பெற்றார். இந்த திட்டத்துக்கு எதிராக சுற்றுச்சூழல் ஆர்வலர்களும், பூர்வகுடி அமெரிக்கர்களும் 10 ஆண்டுகளாகப் போராடி வருகிறார்கள். வெள்ளிக்கிழமை கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவுடன் பைடன் தொலைபேசியில் பேசும்போது இந்த விவகாரத்தை விவாதிப்பார் என்று வெள்ளை மாளிகையின் புதிய ஊடகச் செயலாளர் ஜென் சாகி தெரிவித்தார்.

அமெரிக்க மக்கள் கொரோனா பரவலைத் தடுப்பதற்காக முகக் கவசம் அணிவது அவசியம் என்பது தொடர்பாகவும் அவர் உத்தரவு பிறப்பித்தார்.

முஸ்லிம்கள், மெக்சிகோ, இனப் பாகுபாடு

சில முஸ்லிம் நாடுகள் மீது டிரம்ப் விதித்த பயணத் தடைகளை பைடன் ரத்து செய்து உத்தரவிட்டார்.

மெக்சிகோ – அமெரிக்கா இடையே தடுப்புச் சுவர் கட்டும் பணிக்கு நிதி அளிக்கும் வகையில் டிரம்ப் பிறப்பித்த அவசரகால உத்தரவை பைடன் திரும்பப் பெற்றார்.

இனப்பாகுபாடு, பாலின சமத்துவம் தொடர்பான வேறு சில உத்தரவுகளையும் பைடன் பிறப்பித்தார்.

உலக சுகாதார நிறுவனம்

உலக சுகாதார நிறுவனத்தில் இருந்து அமெரிக்கா வெளியேறும் என்று கூறிய டொனால்டு டிரம்ப் நிர்வாகம் அதற்கான நடைமுறைகளையும் தொடங்கியது. இப்போது அந்த நடைமுறைகள் நிறுத்திவைக்கப்படும். இதனை ஐ.நா. தலைமைச் செயலாளர் அன்டோனியா குட்டரஸ் வரவேற்றுள்ளார்.

கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை ஒருங்கிணைக்க ஒரு அலுவலகம் அமைக்கப்படும்.

டிரம்ப் காலத்தின் கொள்கைகளில் மாற்றங்கள் கொண்டுவரும் விஷயத்தில் தாமதம் காட்டப் போவதில்லை என்பதும், கொரோனா உலகத் தொற்று காரணமாக அமெரிக்கா வரலாற்றுச் சிக்கலில் இருக்கும் நிலையில் வேகமாக முடிவெடுக்கவேண்டியதாக புதிய ஜனாதிபதி பதவி இருக்கும் என்பதும் இந்த அதிவேக உத்தரவுகள் வெளிப்படுத்துவதாக கூறப்பட்டுள்ளது.

அமெரிக்க அரசில் நிர்வாக உத்தரவுகள் எனப்படும் எக்சிகியூட்டிவ் ஓடர்கள் என்பதன் பொருள் என்ன?நிர்வாக உத்தரவுகளை ஒரு ஜனாதிபதி பிறப்பிக்க முடியும். அவற்றுக்கு நாடாளுமன்ற ஒப்புதல் பெறவேண்டியதில்லை.

ஆனால், ஒரு ஜனாதிபதி இப்படி பிறப்பித்த உத்தரவு ஒன்றினை நாடாளுமன்றம் விவாதித்து நிராகரிக்க வழி உண்டு.

நாடாளுமன்ற நிராகரிப்பை தமது வீட்டோ அதிகாரத்தைப் பயன்படுத்தி ஜனாதிபதி ரத்து செய்யவும் முடியும்.

முதல் கபினட் உறுப்பினரை செனட் உறுதி செய்தது!

கபினட் உறுப்பினர்கள் நியமன விஷயத்தில் பைடன் நிர்வாகம் பரிந்துரைத்த பெயர்களில் ஒன்றுக்கு செனட் ஒப்புதல் அளித்துள்ளது.

ஏவ்ரில் ஹெய்ன்ஸ் தேசிய உளவு நிறுவனத்தின் இயக்குநராக நியமிக்கப்பட்டதை செனட் உறுதி செய்துள்ளது.

ஏவ்ரில் ஹெய்ன்ஸ்
படக்குறிப்பு,ஏவ்ரில் ஹெய்ன்ஸ்

51 வயதான இவர்தான் இந்தப் பதவிக்கு வரும் முதல் பெண்.

இவரது நியமனத்துக்கு ஆதரவாக 84 செனட் உறுப்பினர்களும், எதிராக 10 உறுப்பினர்களும் வாக்களித்தனர். “உளவுத் தகவல்கள் எவ்வளவு கடினமானவையாக இருந்தாலும், அசௌகரியமான தகவல்களாக இருந்தாலும் அவற்றைத் தருவதே தமது பதவி என்று பார்ப்பதாக” அவர் நாடாளுமன்றத்தில் குறிப்பிட்டார்.

ஏற்கெனவே ஒபாமா நிர்வாகத்தில் தேசியப் பாதுகாப்புப் பணிகளில் ஈடுபட்டுள்ளார் இவர்.

ஆனால், இவரது அரசுப் பணிகளை விட அதற்கு முந்திய இவரது வாழ்க்கை சுவாரஸ்யமானது.

சட்டக் கல்லூரியில் படிப்பதற்கு முன்பு ஜப்பானில் ஜூடோ கற்று அதில் பிரௌன் பெல்ட் வாங்கியவர் இவர். ஒரு பழைய விமானத்தை மீளக் கட்டமைத்து, அதை மீண்டும் சிதைத்தவர். சிக்காகோ பல்கலைக்கழகத்தில் கோட்பாட்டு இயற்பியல் படித்தவர். மெக்கானிக் ஷாப்பில் கார் எஞ்சின்களை ரிப்பேர் செய்தவர். தனியாக ஒரு காபி கடை நடத்தியவர். பாலுறவு நூல்களை விற்று பிரபலம் அடைந்த ஒரு புத்தக கடையை நடத்தியவர்.

கேபினட்டுக்கு பரிந்துரைக்கப்பட்ட பிறர் பெயர்களுக்கும் செனட் விரைவாக ஒப்புதல் தரவேண்டும் என்று பைடன் நிர்வாகம் விரும்புகிறது. ஆனால், முதல் நாளில் அதற்கான ஒப்புதல் வருவதற்கு வாய்ப்பில்லை எனக் கருதப்படுகிறது.

BBC

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More