காணொளி தொழில்நுட்பம் மூலம் மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் வழக்கு குறித்த நடவடிக்கைகளை ஆரம்பித்துள்ளதாக அரசாங்கம் அறிவித்துள்ளது.
தமது வழக்கு விசாரணையை துரிதப்படுத்துமாறு வலியுறுத்தி, தமிழ் அரசியல் கைதி ஒருவர் முன்னெடுத்த உண்ணாவிரதம் 10 நாட்களின் பின்னர் இடைநிறுத்தப்பட்டு இரண்டு நாட்களுக்குப் பின்னர் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.
இலங்கையில் கொரோனா தொற்று பரவியதை அடுத்து, மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள தனது வழக்கு விசாரணைகள் நிறுத்தப்பட்டுள்ளதாகத் தெரிவித்து தேசிய திரைப்படக் கூட்டுத்தாபனத்தின் தமிழ் பிரிவின் முன்னாள் பணிப்பாளர் தேவதாசன் கனகாசபை உண்ணாவிரதத்தை ஆரம்பித்திருந்தார்.
மேலும்,தமது வழக்கு விசாரணைகளை துரிதப்படுத்துமாறும் அல்லது தன்னை பிணையில் விடுவிக்குமாறும் அவர் இந்த உண்ணாவிரதத்தின் ஊடான அரசாங்கத்தை வலியுறுத்தினார்.
சிறைச்சாலை அதிகாரிகளின் வாக்குறுதிகளுக்கு அமைய 3 வாரங்களுக்கு தனது எதிர்ப்பு நடவடிக்கையை அவர் இடைநிறுத்திவைத்திருந்தார்.
டிஜிட்டல் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவதற்கு முன்னோடியாகவும், கொரோனா வைரஸ் தொற்று காணப்படுகின்ற போதிலும் நாட்டில் நீதித்துறையின் சரியான செயற்பாட்டைப் பேணுவதற்கான நோக்கமாகவும் காணொளி தொழில்நுட்பத்தின் மூலம் மேன்முறையீட்டு நீதிமன்ற நடவடிக்கைகள் செயற்படுத்தப்படும் என அரச தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இதற்கமைய, இந்த செயன்முறை மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் அறைகள் 205, 110 மற்றும் 107 இல் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
இந்தநோக்கத்திற்காக வெலிகடை மற்றும் அங்குனகொலபெலச சிறைகளில் இருந்து இணையம் மூலம் தேவையான தொடர்பு வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
“இந்த செயன்முறைஏற்கனவே இலங்கை அரச வலையமைப்பின் கீழ் 28 சிறைகளில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இந்த புதிய வசதி அந்த சிறைகளில் உள்ள கைதிகளை டிஜிட்டல் முறையில் மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்த உதவும்.” என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தற்போதையகொரோனா தொற்றுநோயைக் கருத்தில் கொண்டு நாடு முழுவதும் நீதிமன்றங்களுக்கு இந்த வசதியை விரிவுபடுத்துவதற்கான திட்டங்களையும் அரசாங்கம் அறிவித்துள்ளது.
நாட்டில்தற்போது தொற்றுநோயை எதிர்கொண்டுள்ள நிலையில், நீதித்துறையில் வழக்குகளை விரைவாக தீர்ப்பதற்கு மாற்று வழியாக இணையத்தைப் பயன்படுத்தும் நீதிமன்ற முறைமை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாக அரசாங்கம் தெரிவித்துள்ளது.
இத்தகைய நடவடிக்கைகள் நீதிச்சேவைஆணைக்குழுவின் முழுமேற்பார்வையின் கீழ் மேற்கொள்ளப்படுகின்றன.
“இந்த செயன்முறைக்கு ஏற்ப, நாட்டின் அனைத்து நீதிமன்றங்களையும் உள்ளடக்கிய ஒரு விரிவான நீதித்துறை தானியங்கும் திட்டத்தை செயற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
முன்மொழியப்பட்டஅமைப்பில் தானியங்கி வழக்கு தாக்கல் முறை, நீதிமன்ற முகாமைத்துவ அமைப்பு மற்றும் நீதிமன்ற பதிவு முறை ஆகியவை அடங்கும் என்று அரசாங்கம் குறிப்பிட்டுள்ளது.
இந்த திட்டத்திற்கான ஆலோசனைகைளை வழங்குவதற்கு இலங்கையின் தகவல் தொடர்பாடல் தொழில்நுட்ப முகவர் நிறுவனம் இணக்கம் தெரிவித்துள்ளது.
இலங்கை அரசாங்கத்திற்கு எதிரான போர்க் குற்றங்கள் மற்றும் மனித உரிமை மீறல்களுக்கு சாட்சிகளுக்காக வெளிநாடுகளில் சாட்சியமளிக்க காணொளி தொழில்நுட்பத்தைப் பயன்படுத்த சர்வதேச மனித உரிமை அமைப்புகள் நீண்ட காலமாக அழைப்பு விடுத்து வருகின்றன. தூதரகங்களில் இதுபோன்ற வசதிகளை வழங்க முடியும் என முன்னைய அரசாங்கம் பரிந்துரைத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.