Home இலங்கை ‘போலி வாகுறுதிகளை நம்பி சர்வதேச சமூகம் இலங்கையிடம் ஏமாறக் கூடாது’

‘போலி வாகுறுதிகளை நம்பி சர்வதேச சமூகம் இலங்கையிடம் ஏமாறக் கூடாது’

by admin

மனித உரிமை மீறல்கள் தொடர்பில் இலங்கை ஜனாதிபதி அமைத்துள்ள உள்ளக விசாரணைக் குழுவைக் கண்டு பன்னாட்டு அரசுகள் ஏமாறக் கூடாது என ஹ்யூமன் ரைட்ச் வோட்ச் (மனித உரிமைகள் கண்காணிப்பகம்) அமைப்பு எச்சரித்துள்ளது.

மனித உரிமைகள் விஷயத்தில் இலங்கை அரசின் மோசமான நிலைப்பாடு ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் கவுன்சிலின் தீவிர கவனத்தில் உள்ள நிலையில், இந்த உள்நாட்டு விசாரணைக் குழு அமைக்கப்பட்டுள்ளது என்று அந்த அமைப்பின் தெற்காசிய இயக்குநர் மீனாக்ஷி கங்குலி தெரிவித்துள்ளார்.

“பன்னாட்டு விசாரணையை உடனடியாக தவிர்க்கும் நோக்கிலேயே இந்த முயற்சி எடுக்கப்பட்டுள்ளது. சர்வதேச அளவில் மனித உரிமை மீறல்கள் தொடர்பிலான அழுத்தங்கள் ஏற்படும் போதெல்லாம் இப்படியான விசாரணைக் குழுக்களை அமைப்பது இலங்கைக்கு வாடிக்கையாகவுள்ளது.“

அவ்வகையில் நீண்ட காலம் நடைபெற்ற உள்நாட்டு யுத்தத்தின் போது இலங்கையில் குறைந்தது ஒரு 12க்கு மேற்பட்ட உள்ளக விசாரணைக் குழுக்கள் அமைக்கப்பட்டன, ஆனால் ஒன்றின் மூலமும் யாரும் நீதியின் முன்னிறுத்தப்படவில்லை அல்லது காணாமல் போனவர்களைத் தேடிக் கண்டு பிடிக்க அவர்களின் குடும்பங்களுக்கு உதவவில்லை என்று அவரது அறிக்கை கூறுகிறது.

இலங்கை அரசால் அமைக்கப்பட்ட உள்நாட்டு விசாரணைக் குழுக்களின் அறிக்கைகள் பெரும்பாலும் வெளியிடப்படவில்லை, மேலும் அதில் கூறப்பட்டுள்ள பரிந்துரைகள் அமல்படுத்தப்படவுமில்லை என்கிறார் மீனாக்ஷி கங்குலி.

“சர்வதேசப் பார்வையாளர்கள் மற்றும் ஐநா வல்லுநர்களால் இலங்கையின் சட்ட வழிமுறை கட்டமைப்புகளில் ஆழமான பிரச்சனைகள் உள்ளன என்பது தொடர்ச்சியாகச் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது“.

கடந்த 2012ல் ஐ நா மனித உரிமைகள் கவுன்சில் தான் முன்னர் நடத்திய விசாரணையின் அடிப்படையில் இயற்றிய தீர்மானத்தில் கூறப்பட்டிருந்த பரிந்துரைகளை நிறைவேற்றும்படி இலங்கை அரசைக் கோரியது. ஆனால் அது நடைபெறாத நிலையில், போர்க் குற்றங்கள் தொடர்பில் சர்வதேச விசாரணைகள் தேவை என்பது உணரப்பட்டது என்று தனது அறிக்கையில் அவர் கூறுகிறார்.

அதே போல் 2015ல் ஐநா மனித உரிமைகள் கவுன்சிலின் ஏகமனதான தீர்மானமொன்றில் இலங்கை இணைந்து உண்மை, நீதி, இழப்பீடு குறித்து ஆராயவும் மற்றும் அது போன்ற குற்றங்கள் மீண்டும் இடம்பெறாது என்பதையும் உறுதியளித்தது. அதேவேளை பொறுப்புக் கூறல் தொடர்பில் பன்னாட்டு நீதிபதிகள், குற்றஞ்சாட்டும் வழக்கறிஞர்கள், விசாரணையாளர்கள் மற்றும் பாதிக்கப்பட்டவர்களின் சட்டத்தரணி ஆகியோரை உள்வாங்கவும் இலங்கை உடன்பட்டது.

அந்த வழிமுறை மந்தமாக முன்னேறினாலும் அதனால் ஊக்கமடைந்த ஐ நா மனித உரிமைகள் கவுன்சில் அதற்கான காலகட்டத்தை நீட்டித்தது என்றாலும் நவம்பர் 2019ல் ஜனாதிபதியாக பதவியேற்ற கோத்தாபய ராஜபக்ஷ இலங்கையை அந்தத் தீர்மானத்திலிருந்து விலக்கிக் கொண்டு அதனால் ஏற்பட்ட முன்னேற்றத்தையும் ஒழித்துக் கட்டினார் என்று தனது அறிக்கையில் மீனாக்ஷி கங்குலி குறிப்பிட்டுள்ளார்.

தற்போதைய ஜனாதிபதி 2005-2015 காலப் பகுதியில் பாதுகாப்புச் செயலராக இருந்த போது மிகவும் மோசமான மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டதாகக் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளார் என்றும், அவர் அதிபராகப் பொறுப்பேற்றுக் கொண்ட பிறகு மோசமான குற்றங்களில் ஈடுபட்டவர்களை முக்கியமான மூத்த பொறுப்புகளில் நியமித்துள்ளார், பொதுமக்களைக் கொலை செய்த சில இராணுவ வீரர்களுக்கு அவர் மன்னிப்பும் வழங்கியுள்ளார் என்பதையும் கங்குலி  சுட்டிக்காட்டியுள்ளார்.

இலங்கையில் மீண்டும் அச்ச சூழல் திரும்பியுள்ளது என்று கூறும் அவரது அறிக்கை, முன்னர் நடைபெற்ற சம்பவங்களில் பாதிக்கப்பட்ட செயற்பாட்டாளர்கள், செய்தியாளர்கள், சட்டத்தரணிகள் மட்டுமின்றி பொலிஸ் விசாரணைகளை நடத்தியவர்களும் மௌனமாக்கப்பட்டனர் என்று மேலும் தெரிவித்துள்ளது.

பலவீனமாகவுள்ள சிறுபான்மையினரை அச்சுறுத்தி அவர்கள் மீதான தாக்குதலை ராஜபக்ஷகளின் அரசு முன்னெடுத்து வருகிறது என்பதற்கு சமீபத்திய சான்று யாழ்ப்பாணப் பல்கலைக்கழக வளாகத்திலிருந்த முள்ளிவாய்க்கால் நினைவுச் சின்னம் இடிக்கப்பட்டதாகும் என்று சாடுகிறார் கங்குலி.

“இலங்கையில் எச்சரிக்கை மணிகள் தெளிவாக ஒலிக்கின்றன. எனவே ஐ நா மனித உரிமைகள் கவுசில் புதிய தீர்மானம் ஒன்றை நிறைவேற்ற வேண்டியது மிகவும் அவசியம். அதன் மூலம் எதிர்காலத்தில் குற்றஞ்சாட்டி வழக்கு விசாரணைகள் முன்னெடுக்கப்படும் போது அதற்கு தேவைப்படும் ஆதாரங்களைச் சேகரித்து அதைப் பாதுகாப்பது,  அரசைத் தொடர்ந்து கண்காணிப்பது ஆகியவை உறுதி செய்யப்பட வேண்டும்“

எனவே உறுப்பு நாடுகள் இலங்கை அரசு தற்போது அளித்துள்ள போலி வாக்குறுதிகளால் ஏமாறாமல் இருக்க வேண்டும், மற்றும் அண்மையில் அங்கு நடைபெற்றும் வரும் விஷயங்களை கவனத்தில் எடுக்க வேண்டும் என்றும் ஹ்யூமன் ரைட்ஸ் வாட்சின் அறிக்கையில் அதன் தெற்காசியப் பகுதிக்காக இயக்குநர் மீனாக்ஷி கங்குலி வலியுறுத்தியுள்ளார். #போலி_வாகுறுதிகளை #சர்வதேச_சமூகம் #இலங்கை #மனிதஉரிமைகள்கண்காணிப்பகம் #மீனாக்ஷி_கங்குலி

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More