பாடும் நிலா என அன்புடன் அழைக்கப்படும் எஸ்.பி.பாலசுப்பிரமணியத்திற்கு இந்திய மத்திய அரசு பத்ம விபூஷன் விருதை அறிவித்துள்ளது.
குடியரசு தினத்தை முன்னிட்டு பொதுவாழ்வு, கலை, விளையாட்டு உள்ளிட்ட பல்வேறு துறைகளில் சாதித்தவர்களுக்கு ஆண்டுதோறும் பத்ம விருதுகள் வழங்கப்படும்.
நாளை (26.01.21) நாடு முழுவதும் 72ஆவது குடியரசு தினம் கொண்டாடப்படவுள்ள நிலையில் இன்று பத்ம விருதுகளை மத்தி அரசு அறிவித்துள்ளது.
அதன்படி மறைந்த பின்னணி பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம், ஜப்பான் முன்னாள் பிரதமர் ஷின்சோ அபே உள்ளிட்ட ஏழு பேருக்குப் பத்ம விபூ,ன் விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
பாடும் நிலா என்று ரசிகர்களால் அன்புடன் அழைக்படும் எஸ்பிபி, 1967ஆம் ஆண்டு வெளியான தெலுங்கு திரைப்படமான ஸ்ரீ ஸ்ரீ ஸ்ரீ மரியதா ராமண்ணா என்ற திரைப்படத்தில் முதல்முறைாக அறிமுகமானார். எம்ஜிஆரின் அடிமைப் பெண் திரைப்படம் மூலம் தமிழ் திரைப்பட உலகத்தில் நுழைந்தார். தான் திரையுலகில் நுழைந்தது விபத்து என்றும் ஆனால் அந்த விபத்து தனக்கும் சரி திரையுலகிற்கும் சரி நல்லதாகவே அமைந்துவிட்டதாகப் பின்னாட்களில் எஸ்பிபி தெரிவித்திருந்தார்.
தெலுங்கை தாய் மொழியாகக் கொண்ட இவருக்கு, தமிழ் மொழியைப் படிக்கத் தெரியாது. தமிழ பாடல்களை தெலுங்கில் எழுதி வைத்துக்கொண்டு, அதைச் சரியான உணர்வு மற்றும் உணர்ச்சியுடன் வெளிப்படுத்துவார்.
தமிழ், தெலுங்கு, கண்டனம் என பல மொழிகளிலும் சிறந்த பாடகர்களில் ஒருவராக எஸ்பிபி திகழ்ந்தார். 1990களில் ஒரே நாளில் 20, 21 பாடல்கள் வரை எஸ்பிபி பாடியுள்ளார்.
அந்தக் காலத்தில் வெளிவரும் பெரும்பாலான திரைப்படங்களில் எஸ்பிபியின் பாடல்கள் இடம் பெற்றியிருக்கும். ரஜினி, கமல் கிட்டதட்ட ரஜினியின் அனைத்து திரைப்படங்களிலும் வரும் முதலாவது பாடலை எஸ்பிபி தான் பாடியிருப்பார்.
அதேபோல கமல்ஹாசனின் தெலுங்கு திரைப்படங்களில் அவருக்கு குரல் கொடுத்தவர் எஸ்பிபி! ரஜினிக்கும் சரி, கமலுக்கும் சரி, எஸ்பிபியின் குரல் மிகவும் கச்சிதமாகப் பொருந்தும்.
சினிமா பாடல்கள், பக்தி பாடல்கள் என மொத்தம் 40 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பாடல்களை எஸ்பிபி பாடியுள்ளார். அதே நேரம் அவரது நடிப்பு திறமையையும் நம்மால் புறம் தள்ளிவிட முடியாது. கேளடி கண்மணி தொடங்கி குணா, திருடா திருடா, காதலன் உள்ளிட்ட பல திரைப்படங்களிலும் நடிப்பிலும் அசத்தியிருக்கிறார்.
எஸ்.பி.பாலசுப்பிரமணியம் 6 தேசிய விருதுகள் 25 நந்தி விருதுகள், உள்ளிட்ட எண்ணிலடங்காத பல விருதுகளைப் பெற்றுள்ளார்.
குறிப்பாக, ஏக் தூஜே கே லியே திரைப்படத்திற்காக எஸ்பிபியின் முதல் இந்தி பாடலுக்கும் தேசிய விருது அளிக்கப்பட்டது. மேலும், கடந்த 2001ஆம் ஆண்டு பத்ம ஸ்ரீ விருதும், கடந்த 2011ஆம் ஆண்டு பத்ம பூஷன் விருதும் எஸ்பிபிக்கு வழங்கப்பட்டுள்ளது.
தொடர்ந்து பாடல்கள், தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் என துடிப்பாக இருந்த எஸ்.பி.பாலசுப்பிரமணியத்திற்கு கடந்தாண்டு கொரோனா உறுதி செய்யப்பட்டது. மருத்துவமனையில் பல நாட்களுக்குத் தீவிர சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட அவர், சிகிச்சை பலனின்றி கடந்த செப்டம்பர் மாதம் 25ஆம் தேதி உயிரிழந்தார். அவர் தனது கடைசிப் பாடலை ரஜினிகாந்த்தின் அண்ணாத்த திரைப்படத்திற்கா பாடியுள்ளமை குறிப்பிடத்தக்கது.