வடக்கு மாகாண வைத்தியசாலைகள் ஊடாக மருத்துவ சேவையாளர்கள் உள்ளிட்ட சுகாதாரத் துறையினருக்கு கொவிட் -19 தடுப்பூசி வழங்கும் நடவடிக்கை இன்று சனிக்கிழமை காலை 8.30 மணிக்கு ஆரம்பித்து வைக்கப்பட்டது.
கொவிட் -19 நோய்த்தொற்று தடுப்பு நடவடிக்கையில் ஈடுபடும் மருத்துவ சேவையாளர்கள் மற்றும் சுகாதாரத் துறையினர்கள் நால்வருக்கு யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் தடுப்பூசி ஏற்றும் பணி ஆரம்பித்து வைக்கப்பட்டது.
வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், மருத்துவர் ஆ.கேதீஸ்வரன், யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை பணிப்பாளர், மருத்துவர் த.சத்தியமூர்த்தி ஆகிய இருவரும் போதனா வைத்தியசாலையில் வைத்து தமக்கான கொவிட் -19 தடுப்பூசி மருந்தை ஏற்றிக்கொண்டனர்.
வடக்கு மாகாணத்தில் உள்ள 5 மாவட்டங்களிலும் உள்ள வைத்தியசாலைகளில் பணியாற்றும் மருத்துவர்கள், தாதியர்கள், மருத்துவ சேவையாளர்கள் மற்றும் ஊழியர்களுக்கும் பொதுச் சுகாதார பரிசோதகர்களுக்கும் கொவிட் -19 தடுப்பூசி மருந்து ஏற்றும் பணி இன்று ஆரம்பித்து வைக்கப்பட்டது.
மூன்று நாள்களுக்கு முன்னெடுக்கப்படும் இந்தப் பணியில் தவறவிடுவோர் தடுப்பூசி ஏற்றும் பட்டியலில் இருந்து நீக்கப்படுவார்கள் என்று தெரிவிக்கப்பட்டது.
யாழ்ப்பாணம் மாவட்டத்தில் மட்டும் 5 ஆயிரத்து 820 மருத்துவ சேவையாளர்கள், சுகாதாரத் துறையினருக்கு கொவிட் -19 தடுப்பூசி மருந்து வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் அத்தியட்சகர் மருத்துவர் கமலநாதனுக்கு கொவிட் -19 தடுப்பூசி மருந்து ஏற்றப்பட்டு பணி ஆரம்பித்து வைக்கப்பட்டது
அதேவேளை மன்னார் மாவட்டத்திலும் இன்றைய தினம் சுகாதார துறையினருக்கு முதல் முதலாக செலுத்தும் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
மன்னார் மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையில் வைத்து இன்றைய தினம் சனிக்கிழமை(30) காலை 8.45 மணியளவில் சுகாதார துறையினருக்கு தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கை இடம் பெற்றது.
முதலாவது கொவிட்-19 தடுப்பூசியை மன்னார் மேற்பார்வை பொது சுகாதார பரிசோதகர் கே.கே.வின்சன்னுக்கு செலுத்தப்பட்டது.
அதனைத் தொடர்ந்து மன்னார் மாவட்ட தொற்று நோய் விஞ்ஞான பிரிவிற்கான வைத்திய அதிகாரி வைத்தியர் கதிர்காமநாதன் சுதாகர், மன்னார் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் ரி.வினோதன் ஆகியோருக்கு செலுத்தப்பட்டது.அதனை தொடர்ந்து சுகாதார துறையிருக்கு கொவிட்-19 தடுப்பூசி செலுத்தப்பட்டது. #யாழ்ப்பாணம் #போதனாவைத்தியசாலை #மன்னாா் #தடுப்பூசி #சுகாதாரத்துறையினா் #சத்தியமூர்த்தி
வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையிலும் கொரோனா தடுப்பூசி ஏற்றும் பணிகள் ஆரம்பம்…
வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையில் இன்று (30) காலை 300 மருத்துவ துறை சார்ந்தவர்களுக்கு கொரோனா தடுப்பூசி ஏற்றி வைக்கப்பட்டது.
இந்திய அரசாங்கத்தால் இலங்கை அரசாங்கத்திற்கு 5 இலட்சம் கொரோனா தடுப்பூசிகள் வழங்கப்பட்டுள்ளன. அவற்றை பல்வேறு மாவட்டங்களிலும் தேவையின் பொருட்டு பயன்படுத்துவதற்கான நடவடிக்கையினை சுகாதார துறையினர் முன்னெடுத்துள்ளனர்.
அதனடிப்படையில் வவுனியா மாவட்டத்திற்கு 1,700 கொரோனா தடுப்பூசிகள் வழங்கப்பட்டுள்ள நிலையில் முதல் கட்டமாக பிராந்திய சுகாதார சேவைகள் திணைக்களத்தினர் , வைத்தியர்கள், பொது சுகாதார பரிசோதகர்கள், சுகாதாரப் துறையினர் , நோயாளர் காவு வண்டி சாரதிகள் என 300 நபர்களுக்கு தடுப்பூசிகள் ஏற்றப்பட்டப்பட்டன.
அந்த வகையில் முதலாவது தடுப்பூசியினை வவுனியா மாவட்ட பிராந்திய பிரதி சுகாதாரப் பணிப்பாளர் மகேந்திரன் ஏற்றியதுடன் இரண்டாவதாக தொற்று நோயியல் நிபுணர் லவன் அவர்களும் மூன்றாவதாக வவுனியா மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் திணைக்கள பிரதி சுகாதார வைத்திய அதிகாரி துஸ்யந்தன் அவர்களும் நான்காவதாக வவுனியா வைத்தியசாலை பணிப்பாளர் த.காண்டிபன் அவர்களும் ஏற்றிதை தொடர்ந்து ஏனைய மருத்துவதுறை சார்ந்தவர்களுக்கு ஏற்றப்பட்டது.
கிளிநொச்சியிலும் தடுப்பூசி ஏற்றும் பணிகள் ஆரம்பம்…
கிளிநொச்சி மாவட்டத்தில், 1200 பேருக்கு தடுப்பூசி போடும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக கிளிநொச்சி மாவட்ட சுகாதார பணிமனையினர் தெரிவிக்கின்றனர்.
இன்று (சனிக்கிழமை) காலை 8.30 மணியளவில் கிளிநொச்சி பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையின் உதவி சுகாதார சேவைகள் பணிப்பாளர் சரவணபவன், முதலாவது தடுப்பூசியை பெற்றுக்கொண்டார்.
அதனைத்தொடர்ந்து கிளிநொச்சி வைததியசாலை வைத்தியர்கள், தாதியர்கள் உள்ளிட்ட சுகாதார துறையினர், பாதுகாப்பு தரப்பினருக்கும் குறித்த தடுப்பூசிகள் வழங்கும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.
கிளிநொச்சி மாவட்டத்தில் 9 இடங்களில் கொவிட்-19 தடுப்பபூசிகள் வழங்கப்படுவதாகவும் 1200 பேருக்கு தடுப்பூசி வழங்கும் பணிகள் முன்னெடுக்கப்படுவதாகவும் பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனை குறிப்பிட்டுள்ளது.
நாடளாவிய ரீதியில் தடுப்பூசி ஏற்றும் பணிகள் இடம்பெற்றுவரும் நிலையில், கிளிநொச்சி மாவட்டத்திலும் இன்று குறித்த வேலைத்திட்டம் முன்னெடுக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
மட்டக்களப்பு மாவட்டத்திலும், கொரோனா தடுப்பூசி ஏற்றும் பணிகள் ஆரம்பம்…
மட்டக்களப்பு மாவட்டத்திற்கான கொரோனா தடுப்பூசி ஏற்றும் பணிகள் இன்று (30) ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது.
மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் மேற்ப்பார்வை தாதியர் ஒருவருக்கு முதலாவது தடுப்பூசி இன்று காலை மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் ஏற்றப்பட்டது.
இந்த நிகழ்வு மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் க.கலாரஞ்சனி தலைமையில் ஆரம்பிக்கப்பட்டது. இந்த நிகழ்வில் பிரதி பணிப்பாளர்,வைத்தியசாலையின் வைத்தியர்கள்,தாதியர்கள் கலந்துகொண்டனர்.
மட்டக்களப்பு போதனா வைத்திய சாலையில் கடமையாற்றும் சுமார் 2 ஆயிரம் ஊழியர்களுக்கு இந்த தடுப்பூசி ஏற்றப்படவுள்ள நிலையில் இன்றைய தினம் 1200 கொரோனா தடுப்பூசிகள் கிடைக்கப்பெற்றுள்ளதாகவும் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை பணிப்பாளர் க.கலாரஞ்சனி தெரிவித்தார்.
முதல் கட்டமாக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் கடமையாற்றுபவர்களுக்கு ஏற்றப்பட்டு பின்னர் ஏனையர்வகளுக்கு ஏற்றுவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படும் எனவும் தெரிவித்தார்.
குறித்த தடுப்பூசி தொடர்பில் அச்சம் கொள்ளத்தேவையில்லையெனவும் அனைவரும் இதனைப்பெற்றுக்கொள்ள வேண்டும் எனவும் இன்றைய தினம் மட்டக்களப்பு மாவட்டத்தின் முதல் கொரோனா தடுப்பூசியைப் பெற்றுக்கொண்ட தாதிய உத்தியோகத்தர் தெரிவித்தார்.