சுதந்திர தின ஊடக அறிக்கை
இனச்சமூக முரண்பாட்டின் விளைவாக தோற்றம் கண்டிருந்த கோர யுத்தம் மௌனிக்கப்பட்டு பதினொரு ஆண்டுகள் கடந்து விட்டுள்ள நிலையில், ஒரு புறம் நாட்டின் 73 ஆவது சுதந்திர தினத்தை நாட்டு மக்களாகிய நாம் சந்திக்க இருக்கின்றோம். இன்னெருபுறம் யுத்தத்தின் பெயரால் பாதிக்கப்பட்டுள்ள தமிழ் மக்கள் நீதி நிவாரணத்திற்கான கோரிக்கைகளுடன் அலைந்து கொண்டிருக்கிறார்கள்.
பல்லினமக்கள் சமூகத்தை கொண்டிருக்கின்ற நாட்டில் அனைத்து சமூகங்களும் அவரவர் தத்தம் இன, மத, மொழி, கலாசார, பண்பாட்டு விழுமியங்களை பின்பற்றி அவ் அடையாளங்களை பேணிப் பாதுகாத்துக்கொள்ளக்கூடிய சுதந்திரமும் சமத்துவஉரிமையும் மிக முக்கியமானது. இதனை உறுதிப்படுத்த வேண்டியது அரசின் ஜனநாயக கடமையாகும்.
மக்களாட்சியின் இரட்கைக்குழல் துப்பாக்கியான ஊடகங்கள், மக்கள் விரும்புகின்ற மக்களின் உணர்வுக் குரலாக ஒலிப்பதே தர்மம். அவ்வாறன்றி மாறி மாறி வருகின்ற ஆட்சியாளர்களின் விருப்பு வெறுப்புக்களுக்கேற்ப செயற்பட வேண்டும் என கருத முடியாது. கருத்து மற்றும் ஊடக சுதந்திரத்திலேயே நாட்டு மக்களின் உண்மையான சுதந்திரம் தங்கியுள்ளது.
காணமல் ஆக்கப்பட்டவர்களுடைய உறவுகள் தமது உறவுகளுக்கு என்ன நடந்தது என தெரியாமல் உறவுகளை தேடி இன்றுவரை போராடிக்கொண்டு இருக்கிறார்கள். அவர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து உரிய பதிலை வழங்குவது அரசின் கடமைகளில் ஒன்றாகும்.
இஸ்லாமிய சமூகத்தின் ஜனாசா விடயத்தில் அவர்களது மத மார்க்க பற்றின் உணர்வுகள் காயம் காணாத வகையில் அதில் விசேட கவனமீட்டி காரியங்களை நிறைவேற்றும் பட்சத்தில் நாட்டின் ஜனநாயக விழுமியங்களும் சமத்துவ ஆட்சிப் பண்பும் மேம்பட்டு விளங்கும்.
அரசியற்கைதிகளின் மனிதாபிமான விடுதலை விவகாரம் தொடர்பில் இன, மத, மொழி, கட்சி வேறுபாடு மறைந்து பரவலாக வலியுறுத்தப்பட்டு வருகிறது. நீதித்துறையின் தாமதம், கோவிட் 19 தொற்றுப் பரவல், சிறைக்கூடங்களில் நிலவும் இட நெருக்கீடு போன்றவற்றை கருத்தில் எடுத்த அரசாங்கம் சிறைத்தடுப்பில் இருந்த பன்னிரெண்டாயிரத்துக்கும் மேலான கைதிகளை விடுதலை செய்துள்ளது. இது வரவேற்கத்தக்க விடயமே எனினும், இதற்குள் தமிழ் அரசியற் கைதிகள் எவரும் உள்ளடக்கப்படவில்லை என்பதில் பாதிக்கப்பட்டவர்கள் சார்ந்த சமூகம் மனக்குறை கொண்டுள்ளது.
இம்முறை அரசாங்கத்தின் சுதந்திர தின செய்தியானது பாதிக்கப்பட்ட சமூகத்தரப்புக்களின் மனக்காயங்களுக்கான மருந்தாக அமைவது அவசியம் அத்துடன், சிறைகளில் சிக்கித் தவித்துக்கொண்டிருக்கும் அரசியல் கைதிகளின் விடியலுக்கான வார்த்தைகளை அச்செய்தி கொண்டிருக்க வேண்டும் என ‘குரல் அற்றவர்களின் குரல்” அமைப்பு எதிர்பார்த்திருக்கின்றது.
ஒருங்கிணைப்பாளர்
மு.கோமகன்
திகதி
2021.02.01