நாட்டில் வாழும் சகல இனங்களைச் சேர்ந்த மக்களும் சம உரிமையுடன் வாழவேண்டும். இன,மத அடிப்படையில் உரிமைகள் பிரிக்கப்படுவது தவறானது என, 73 ஆவது சுதந்திர தின உரையில் தெரிவித்த, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ, நான், சிங்கள-பௌத்த தலைவன் என்பதை தெரிவித்துக்கொள்கின்றேன் என்றார்.
நமது தாய்நாடு காலனித்துவவாதிகளிடமிருந்து சுதந்திரம் பெற்று 73 ஆண்டுகள் ஆகின்றன. சுதந்திரத்தை வென்றெடுக்க பல்வேறு தியாகங்களைச் செய்த சிங்கள, தமிழ், முஸ்லிம் மற்றும் மலாயர், பரங்கியர் போன்ற பல்வேறு சமூகங்களையும் சேர்ந்த அனைத்து தலைவர்களுக்கும் இன்றைய தினம் நாங்கள் மரியாதை செலுத்துகிறோம்.
அதேபோன்று, தேசத்தின் சுதந்திரத்திற்காகவும், இறைமைக்காகவும் தங்கள் உயிர்களை தியாகம் செய்த, பல்வேறு அர்ப்பணிப்புகளைச் செய்த படைவீரர்களையும் நான் நன்றியுடன் நினைவுகூர்கிறேன்.
சுதந்திரம் பெற்ற 73 ஆண்டுகளில், ஒரு தேசமாக நாம் பல்வேறு சவால்களுக்கு முகம் கொடுத்திருக்கின்றோம். மத மற்றும் இன அடிப்படையிலான மோதல்கள், இனவாத மற்றும் பயங்கரவாத நடவடிக்கைகள், தேவையற்ற வெளிநாட்டு அழுத்தங்கள் மற்றும் அரசியலமைப்பு நெருக்கடிகள் போன்ற பல பிரச்சினைகளை அவ்வப்போது எதிர்கொண்டோம். தேசிய பாதுகாப்பை உறுதி செய்தல், எமது நாட்டில் வாழும் பல்வேறு இனத்தவர்களுக்கிடையில் உண்மையான நல்லிணக்கத்தை ஏற்படுத்துதல், வறுமையை முற்றாக ஒழித்து வலுவான பொருளாதாரத்தை கட்டியெழுப்பி நிலையான அபிவிருத்தியை ஏற்படுத்தும் சவால் இன்னும் எமக்கு முன் உள்ளது.
எமது நாட்டின் தேசிய மரபுரிமைகள், பாரம்பரிய பழக்கவழக்கங்கள், தேசியம் மற்றும் தேசப்பற்று ஆகியவை கடுமையான அச்சுறுத்தலுக்கு உள்ளாகியுள்ள நிலையில், பலவீனமுற்றிருந்த தேசிய பாதுகாப்பை மீண்டும் உறுதிப்படுத்தி தாய் நாடு எதிர்கொண்ட சவால்களை வெற்றிகொள்வதற்கான தலைமைத்துவத்தை வழங்க இந்த நாட்டின் 69 லட்சத்திற்கும் அதிகமான மக்கள் என்னை ஜனாதிபதியாக தெரிவுசெய்தனர்.
நான் ஒரு சிங்கள பௌத்த தலைவர். அதை வெளிப்படுத்த நான் ஒருபோதும் தயங்க மாட்டேன். பௌத்த போதனைகளின்படியே நான் இந்த நாட்டை நிர்வகிக்கிறேன். அனைத்து சமயங்களுக்கும் அனைத்து இனங்களுக்கும் உரிய கௌரவத்தை அளிக்கும் அஹிம்சையும் அமைதியும் கொண்ட பௌத்த தத்துவத்தில், எமது நாட்டில் உள்ள அனைத்து மதங்களுக்கும் அனைத்து இனங்களுக்கும் நாட்டில் நடைமுறையில் உள்ள சட்ட கட்டமைப்பிற்குள் சரி சமமாக சுதந்திரத்தை அனுபவிக்கும் உரிமை உண்டு.
தேசியத்தை மதிக்கும், நாட்டின் இறைமையைப் பாதுகாக்கும் ஒரு தேசிய தலைமைக்கு எதிராக தேசத்துரோக சக்திகள் அணி சேர்ந்து, தங்கள் இலக்குகளை அடைய உள்நாட்டு, வெளிநாட்டு சக்திகளின் ஆதரவை நாடுகின்றன. இவர்கள் மிகவும் நுட்பமாக பல்வேறு போலிப் பிரச்சாரங்கள் மூலம் மக்களை தவறாக வழிநடத்த முயற்சிக்கின்றனர். இந்த நாட்டு மக்கள் எப்போதும் விவேகத்துடன் இருக்க வேண்டும் என்று நான் கேட்டுக்கொள்கிறேன். தரவுகளின் அடிப்படையில் விடயங்களை ஆராய்ந்து உண்மைகளை அறிந்து முடிவுகள் எடுக்கப்பட்டால் எவருக்கும் பொதுமக்களை தவறாக வழிநடத்த முடியாது.
நான் முன்வைத்த “சுபீட்சத்தின் நோக்கு” கொள்கைத் திட்டத்தை நடைமுறைப்படுத்தவே மக்கள் தற்போதைய அரசாங்கத்திற்கு வாய்ப்பளித்துள்ளனர்.
எதர்கால சந்ததியினருக்காக நாம் வென்ற சுதந்திரத்தை எப்போதும் பாதுகாப்பதற்கும், எமது நாட்டின் ஒருமைப்பாடு, ஆள்புல எல்லை மற்றும் இறைமையைப் பாதுகாப்பதற்கும் அரச தலைவர் என்ற முறையில் நான் உறுதியளித்திருக்கிறேன். அந்த உறுதிமொழியை நான் எப்போதும் பாதுகாப்பேன்.
இலங்கை ஒரு ஜனநாயக நாடு. இந்த நாட்டில் வாழும் அனைத்து குடிமக்களுக்கும் சம உரிமை உண்டு. இன அல்லது மத அடிப்படையில் குடிமக்களைப் பிரிப்பதற்கான முயற்சிகளை நாங்கள் நிராகரிக்கிறோம். அனைத்து குடிமக்களின் அடிப்படை உரிமைகள் மற்றும் மனித உரிமைகள் பாதுகாக்கப்படுவதுடன், ஒரே சட்டம் என்ற கொள்கையே எமது நாட்டில் நடைமுறைப்படுத்தப்பட வேண்டும் என்பதுவே எப்போதும் எமது நிலைப்பாடு.
நாங்கள் எப்போதும் சட்டத்தின் ஆட்சியை மதிக்கிறோம். கடந்த காலத்தில் சட்டத்தை நடைமுறைப்படுத்தும் நிறுவனங்கள் மற்றும் நீதித்துறை மீது அரசியல்வாதிகள் மேற்கொண்டிருந்த அழுத்தத்தை மக்கள் நிராகரித்தனர். சட்டத்தை நடைமுறைப்படுத்தும் அதிகாரிகளிடமிருந்து நியாயமான, பக்கச்சார்பற்ற மற்றும் திறமையான சேவையை மக்கள் எதிர்பார்க்கிறார்கள். அதன்படி, மக்களின் முக்கிய கவனத்தை ஈர்த்த உயிர்த்த ஞாயிறு பயங்கரவாத தாக்குதல் மற்றும் மத்திய வங்கி மோசடி போன்ற குற்றங்களுக்கு எதிராக உடனடியாக நடவடிக்கை எடுக்க சட்டமா அதிபர் திணைக்களத்திற்கு நான் அறிவுறுத்தியுள்ளேன்
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் குறித்து ஆராய நியமிக்கப்பட்ட ஜனாதிபதி ஆணைக்குழுவின் இறுதி அறிக்கை தற்போது எனக்கு கிடைக்கப்பெற்றுள்ளது. அதன் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்துவதற்கு நான் நடவடிக்கை எடுத்துள்ளேன். மேலும் கடந்த பாராளுமன்றத்தினால் இது பற்றி ஆராய்வதற்காக நியமிக்கப்பட்ட தேசிய பாதுகாப்பு குறித்த கண்காணிப்பு செயற்குழுவின் பரிந்துரைகளும் கவனத்திற் கொள்ளப்பட்டு உயிர்த்த ஞாயிறு தாக்குதலுடன் சம்பந்தப்பட்ட அனைத்து தரப்பினருக்கும் எதிராக நடவடிக்கை எடுக்கப்படும். இந்த கொடூரமான குற்றத்தைத் திட்டமிட்ட உதவி ஒத்தாசைகள் வழங்கிய பொறுப்பானவர்கள் எவரும் சட்டத்திற்கு முகங்கொடுக்காமல் தப்பிக்க நாங்கள் அனுமதிக்க மாட்டோம். அதே போன்று இந்த நாட்டில் தீவிரவாதம் மீண்டும் தலைதூக்கவும் நாம் இடமளிக்க மாட்டோம்.
கொவிட் தொற்றுநோயால் முழு உலகமும் நெருக்கடியில் இருக்கும் இந்த நேரத்தில், எமது நாடும் பல சவால்களை எதிர்கொள்ள வேண்டியிருக்கிறது. ஒரு வருடத்திற்கும் மேலாக இந்த தொற்றுநோய் நாட்டின் பொருளாதார அபிவிருத்தி செயன்முறைக்கும் மக்களின் இயல்பு வாழ்க்கைக்கும் ஒரு தடையாக இருந்து வருகிறது.
தற்போது, உலகெங்கிலும் உள்ள பல நாடுகள் கோவிட் வைரஸிற்கான தடுப்பூசிகளை வெற்றிகரமாக பரீட்சித்துள்ளன. இந்த தடுப்பூசிகளை விரைவாகப் பெறுவதற்கு இலங்கைக்கு உதவுமாறு இந்தியா, சீனா மற்றும் ரஷ்யா ஆகிய நாடுகளின் தலைவர்களிடம் நான் கேட்டுக்கொண்டேன். இந்த விடயம் தொடர்பில் உலக சுகாதார அமைப்புடனும் அரசாங்கம் கலந்துரையாடியது. அதன்படி, ஒரு தடுப்பூசி ஏற்கனவே இலங்கைக்கு இறக்குமதி செய்யப்பட்டு எமது மக்களுக்கு விநியோகிக்கப்பட்டுள்ளது. தடுப்பூசி ஏற்றும் நடவடிக்கைகளை தொடர்ச்சியாக முன்னெடுக்க திட்டமிடப்பட்டுள்ளது.
தற்போதைய உலகளாவிய நெருக்கடியை எதிர்கொண்டு அனைத்து நாடுகளும் கற்றுக்கொண்ட ஒரு முக்கியமான பாடம் வலுவான தேசிய உற்பத்தியாளர்களின் தேவையாகும். உணவுப் பாதுகாப்பு மற்றும் தன்னிறைவு ஆகியவற்றை உறுதி செய்வதற்காக சுதேச விவசாயத்துறையை மீளக் கட்டியெழுப்ப வேண்டும் என்ற எங்கள் கொள்கையானது சரியானதும் காலத்திற்கு ஏற்றதுமாகும் என்பதை இது மேலும் உறுதிப்படுத்துகிறது.
இலவச உர விநியோகம், நெல்லுக்கான உத்தரவாத விலையை ரூ.50 வரை உயர்த்தியமை, விவசாய கடன்களை தள்ளுபடி செய்தல், நாடு முழுவதும் ஆயிரக்கணக்கான குளங்களை புனரமைத்தல், வீட்டுத் தோட்டம் மற்றும் நகர்ப்புற விவசாய மேம்பாடு மற்றும் புதிய தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவதை ஊக்குவிப்பதன் மூலம் விவசாய உற்பத்தித்திறனை அதிகரித்தல் போன்ற ஊக்குவிப்பு நடவடிக்கைகள் மூலம் நாட்டில் விவசாய மறுமலர்ச்சியை ஏற்படுத்த நடவடிக்கை எடுப்போம். நெல், சோளம், தானிய வகைகள், உருளைக்கிழங்கு மற்றும் வெங்காயம் ஆகியவற்றின் உற்பத்தியை ஊக்குவிக்கும் வகையில் இறக்குமதி வரியை முகாமைத்துவம் செய்து, உள்நாட்டில் உற்பத்தி செய்யப்பட முடியுமான மஞ்சள் போன்ற பொருட்களின் இறக்குமதியைக் கட்டுப்படுத்துவதன் மூலமும், மிளகு போன்ற பயிர்களின் மீள் ஏற்றுமதியைக் கட்டுப்படுத்துவதன் மூலமும் விவசாயிகளை வலுப்படுத்த மேற்கொள்ளப்பட்ட தீர்மானங்களின் மூலம் வெற்றிகரமான பெறுபேறுகள் கிடைக்கப் பெற்று வருகின்றன. உள்நாட்டு உற்பத்தி அதிகரித்து ஏற்றுமதி வாய்ப்புகள் விரிவடைந்துள்ளன.
உள்ளூர் விவசாயிகளை பொருளாதார ரீதியாக வலுப்படுத்த விவசாயிகளை தொழில்முயற்சியாளர்களாக மாற்ற வேண்டும் என்று நான் எப்போதும் கூறியுள்ளேன், நாட்டிற்கு பெரும் அந்நிய செலாவணியைக் கொண்டுவரும் ஒரு துறையாக விவசாயத்தை மேலும் மேம்படுத்துவதே எங்கள் நோக்கம்.
பொருளாதார வளர்ச்சியில் தொழில்துறை மற்றும் சேவைத் துறைகளின் முக்கியத்துவத்தை நாம் மறக்கவில்லை. சமீப காலங்களில், இந்தத் துறைகளுக்கு வரிச் சலுகைகளை வழங்குவதன் மூலமும், வட்டி விகிதங்களைக் குறைப்பதன் மூலமும் தொழில்துறை மற்றும் சேவைத் துறைகளை ஊக்குவிக்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது. பத்திக், பிரம்பு, களிமண் மற்றும் ஆபரணங்கள் போன்ற பாரம்பரியத் தொழில்களை மேம்படுத்துவதற்காக நிறுவப்பட்ட இராஜாங்க அமைச்சுக்கள் மூலம் ஏற்கனவே பெரும் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது.
எமது நாட்டின் பொருளாதாரத்தில் முக்கிய பங்கு வகிக்கும் சிறிய மற்றும் நடுத்தர தொழில்முயற்சியாளர்கள் மற்றும் சுயதொழில் செய்பவர்களுக்கு மிகவும் குறைந்த ஒற்றை இலக்க வட்டி விகித கடன் வசதிகளை வழங்குவதிலும், தேவையான ஒப்புதல்களைப் பெறுவதில் ஏற்படும் தாமதங்களைக் குறைக்க நடவடிக்கை எடுப்பதற்கும் அவர்களுக்குத் தேவையான பயிற்சி அளிப்பதற்கும் நாங்கள் கவனம் செலுத்தினோம்.
நிர்மாணத் துறையினருக்கு ஊக்கமளித்தல் செயலிழந்திருக்கும் பொருளாதாரத்தை மீண்டும் செயற்படுத்துவதற்கான வெற்றிகரமான ஒரு மூலோபாயமாகும். அதன்படி, நாங்கள் ஏற்கனவே ஆரம்பித்துள்ள 100,000 கி.மீ வீதி அபிவிருத்தி திட்டம், பத்தாயிரம் பாலங்கள் அமைத்தல், நாடு முழுவதும் குளங்களை புனரமைக்கும் நீர்ப்பாசன அபிவிருத்தித் திட்டம், ‘ஒரு கிராமத்திற்கு ஒரு வீடு’ என்ற கருப்பொருளின் கீழ் 14,000 கிராமப்புற வீடுகளை நிர்மாணித்தல், நகர்ப்புற சேறிப்புரங்களில் வசிப்போர், குறைந்த வருமானம் ஈட்டுபவர்கள் மற்றும் நடுத்தர வருமானம் ஈட்டுபவர்களுக்காக ஒரு லட்சம் வீடுகளை நிர்மாணிக்கும் திட்டம், தோட்ட மக்களுக்கு 4,000 வீடுகளை நிர்மாணித்தல் மற்றும் நாடு முழுவதும் மக்கள் செறிவாக உள்ள பகுதிகளில் நடைபாதைகள் அமைத்தல் போன்ற திட்டங்கள் பொதுமக்களின் நலனுக்கும் பொருளாதாரம் புத்துயிர் பெறுவதற்கும் நேரடியாக பங்களிக்கும்.
விவசாயம், கைத்தொழில் மற்றும் சேவைகள் ஆகிய மூன்று துறைகளின் வளர்ச்சியின் மூலம் தேசிய பொருளாதாரத்தை வலுப்படுத்தவும், இலங்கையில் வெளிநாட்டு முதலீட்டிற்கான தடைகளை அகற்றவும் நாங்கள் நடவடிக்கை எடுப்போம். நாட்டின் பொருளாதார மையப்பகுதியை வெளிநாட்டினருக்கு விற்கக் கூடாது என்ற கொள்கை எவ்வித மாற்றமும் இன்றி பின்பற்றப்படுவதுடன், வெளிநாட்டு முதலீட்டாளர்கள் இலங்கைக்கு கொண்டு வரப்படுவதைத் தடுக்க பல்வேறு திட்டங்கள் குறித்து தவறான வியாக்கியானங்களை முன்வைப்போரின் அரசியல் உள்நோக்கங்களை பெரும்பான்மையான மக்கள் அறிவுபூர்வமாக ஆராய்வார்கள் என்று நாங்கள் நம்புகிறோம்.
எங்கள் நாட்டின் மக்களையும் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு வர்த்தகங்களை பாதிக்கும் காலாவதியான சட்டங்கள் மற்றும் ஒழுங்குமுறைகளை மாற்றவும் புதுப்பிக்கவும் நான் இப்போது ஒரு விசேட ஜனாதிபதி செயலணியை அமைத்துள்ளேன். பல காலமாக விவாதிக்கப்பட்டாலும் செயற்படுத்தப்படாதிருந்த இந்த செயன்முறையை நாங்கள் இப்போது ஆரம்பித்துள்ளோம். இந்த குழுவின் பரிந்துரைகளை அமுல்படுத்துவது நாட்டின் எதிர்கால பொருளாதார மேம்பாட்டு செயன்முறைக்கு பெரும் உதவியாக இருக்கும் என்று நம்புகிறோம்.
21 ஆம் நூற்றாண்டு அறிவு மைய நூற்றாண்டாக கருதப்படுகிறது.
நாட்டின் வளர்ச்சிக்கு மனித வளங்கள் மிக முக்கியமானவை. அறிவு மற்றும் திறன்கள் நிறைந்த எதிர்கால தலைமுறையை உருவாக்க கல்வித்துறையில் சீர்திருத்தத்தின் அவசியம் குறித்து “சுபீட்சத்தின் நோக்கு” கொள்கை திட்டத்தில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. அதன்படி, கல்வித்துறையில் தேவையான சீர்திருத்தங்களை மேற்கொள்ள ஒரு தனியான இராஜாங்க அமைச்சை நாங்கள் நிறுவியுள்ளோம். இந்த சீர்திருத்தங்களைச் செய்வதற்குத் தேவையான நிபுணத்துவ உதவியைப் பெறும் நோக்கில் இரண்டு செயலணிகள் நிறுவப்பட்டன. இவர்களது பரிந்துரைகளை அமுல்படுத்துவது ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
பல்கலைக்கழகங்களில் அனுமதிக்கப்படும் மாணவர்களின் எண்ணிக்கை இவ்வருடம் 10,000 அல்லது 30% ஆக அதிகரித்துள்ளது. அரச தொழில்நுட்பக் கல்லூரிகளில் அனுமதிக்கப்படும் மாணவர்களின் எண்ணிக்கையை 100,000 லிருந்து 200,000 ஆக உயர்த்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. பல்கலைக்கழகங்களின் கொள்ளளவை அதிகரிக்கும் பொருட்டு, அனைத்து மாவட்டங்களையும் உள்ளடக்கும் வகையில் நகர்ப்புற பல்கலைக்கழக அமைப்புக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. கல்வி சீர்திருத்த திட்டங்களை செயல்படுத்துவதை விரைவுபடுத்துவோம். அதன்படி, அடுத்த சில ஆண்டுகளில் கல்வித்துறையில் குறிப்பிடத்தக்க தரமான முன்னேற்றம் கிடைக்கும் என்று நாங்கள் நம்புகிறோம்.
நவீன உலகில் எமது பொருளாதார இலக்குகளை அடைந்துகொள்ள, புதிய தொழில்நுட்பத்துடன் கூடிய ஒரு சமூகத்தை எமது நாட்டில் உருவாக்க வேண்டும்.
போட்டித்தன்மையுடன் வெற்றிபெற, விவசாயம், கைத்தொழில் மற்றும் சேவைகள் போன்ற அனைத்து துறைகளும் எதிர்காலத்தில் தொழில்நுட்பத்தின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட வேண்டியிருக்கும். இதற்கு உதவும் வகையில், மக்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்தும் தொழில்நுட்ப புத்தாக்க கலாச்சாரத்தை உருவாக்க நாம் எதிர்பார்த்துள்ளோம்.
“சுபீட்சத்தின் நோக்கு” கொள்கைகளுக்கு ஏற்ப, பொருளாதார அபிவிருத்திக்கு அரச மற்றும் தனியார் துறைகளில் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவதை ஊக்குவிக்கவும், புத்தாக்கங்களை ஊக்குவிக்கவும் அரசாங்கம் குறிப்பிடத்தக்க உதவிகளை வழங்கும். தொழில்நுட்ப துறைகளுக்கு ஏற்கனவே பல வரிச் சலுகைகள் வழங்கப்பட்டுள்ளன.
அண்மையில் தொழில்நுட்பத்திற்காக ஒரு தனியான அமைச்சு நிறுவப்பட்டு அதை எனது பொறுப்பின் கீழ் கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்பட்டது. இந்த அமைச்சின் மூலம், தொழில்நுட்பத் துறையின் வளர்ச்சிக்குத் தேவையான கொள்கைகள் மற்றும் கட்டமைப்புகளை உருவாக்குவது, அத்துடன் அரச பொறிமுறை மற்றும் சந்தை செயன்முறைகளை எளிமைப்படுத்துதல் மற்றும் தகவல் பரிமாற்றத்திற்கான ஒரு கருவியாக தகவல் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி டிஜிட்டல் நிர்வாகத்தை விரிவுபடுத்துதல் ஆகியவற்றில் கவனம் செலுத்தப்படும். தொழில்நுட்பத் துறையில் தொழில்முயற்சியாளர்களை ஊக்குவிக்கும் பொருட்டு, தெரிவுசெய்யப்பட்ட ஐந்து மாவட்டங்களில் ஐந்து தொழில்நுட்ப பூங்காக்களை அனைத்து வசதிகளுடன் திறக்க விரைவாக நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இத்தகைய ஊக்குவிப்புகள் மூலம் தொழில்நுட்பத் துறையில் ஒரு மறுமலர்ச்சியைக் கொண்டுவருவதற்கான வாய்ப்பு எமக்குக் கிடைக்கிறது.
இதுவரை நான் கூறியவை அனைத்தும் முழு உலகையும் முடக்கிவிட்டிருந்த கோவிட் தொற்றுநோயை எதிர்கொண்ட நிலையில், ஒரு வருட குறுகிய காலாத்திற்குள் செய்யப்பட்டுள்ளன என்பதை மறந்துவிடக் கூடாது என்று இந்த நாட்டின் விவேகமான மக்களிடம் நான் கேட்டுக்கொள்கிறேன்.
ஆண்டுதோறும் சுமார் 4,500 மில்லியன் அமெரிக்க டொலர் அந்நிய செலாவணியை ஈட்டித்தந்த சுற்றுலாத் துறை, இந்த நாட்டில் கிட்டத்தட்ட மூன்று மில்லியன் மக்களுக்கு நேரடி மற்றும் மறைமுக வேலைவாய்ப்பை வழங்கியது. இன்று, இந்த மக்கள் தமது வாழ்வாதார வழிகளை இழந்து கடும் நெருக்கடியில் உள்ளனர். இந்த மக்களுக்கு நாம் விரைவில் தீர்வுகளை வழங்க வேண்டும். எனவே, சுகாதார வழிகாட்டல்களை கண்டிப்பாக பின்பற்றி, முறையான திட்டத்தின் கீழ் சுற்றுலாத்துறையை படிப்படியாக மீள ஆரம்பிக்க நாம் நடவடிக்கை எடுத்துள்ளோம்.
நான் எப்போதும் சூழலை நேசிப்பவன். நான் நகர அபிவிருத்தி அமைச்சின் செயலாளராக இருந்தபோது, நகரங்களை அழகுபடுத்தல், வீடமைப்பு அபிவிருத்தி, நடைப்பாதைகள் மற்றும் நகர்ப்புற பூங்காக்கள் போன்ற அனைத்து திட்டங்களிலும் சூழலைப் பாதுகாத்து அந்த அபிவிருத்தி திட்டங்களை முன்னெடுக்க நடவடிக்கை எடுத்தேன். வருங்கால சந்ததியினருக்காக சூழலைப் பாதுகாக்க இன்றும் எனது அரசு விசேட கவனம் செலுத்தி வருகிறது. நகர்ப்புற வனப் பூங்காக்களை அமைத்தல், பசுமை நகர திட்டமிடல், பசுமை திட்டங்கள், தேசிய மர நடுகை திட்டங்கள், கால்வாய்கள் மற்றும் நீர்த்தேக்கங்களை புனரமைத்தல், தரிசு நெல் வயல்களை மீண்டும் பயிர்ச்செய்கைக்கு உட்படுத்துதல், சேதன உரங்களை பயன்படுத்துவதை ஊக்குவித்தல், பிளாஸ்டிக் பயன்பாட்டை கட்டுப்படுத்துதல் ஆகிய இவை அனைத்தும் இந்த அரசாங்கம் பேண்தகு சுற்றாடல் முகாமைத்துவ கொள்கையை நடைமுறைப்படுத்தி வருவதை தெளிவாக எடுத்துக்காட்டுகிறது.
மக்களை மையமாகக் கொண்ட பொருளாதாரக் கொள்கையின் அடிப்படை என்னவென்றால், பொருளாதார சுதந்திரம் இல்லாமல் பொருளாதாரத்தின் உண்மையான பெறுபேறுகளை அடைய முடியாது என்பதாகும். வறுமையை ஒழித்தல், அனைத்து குடிமக்களின் முன்னேற்றத்திற்கும் சமமான வாய்ப்புகளை வழங்குதல் மற்றும் சுதேச வர்த்தகர்களை ஊக்குவித்தல் போன்ற அரசாங்கத்தின் நோக்கங்களை அடைந்துகொள்ள எங்களுக்கு ஒரு தூய்மையான, வினைத்திறன் வாய்ந்த அரச சேவை அத்தியவசியமானதாகும்.
எமது நாட்டின் அரச சேவை என்பது நாடு முழுவதும் பரவியுள்ள ஒரு வலுவான பொறிமுறையாகும். உலகின் பல நாடுகளுக்கு கிடைக்காத மிகப்பெரிய வாய்ப்பு இது. எனவே, இந்த வலுவான பொறிமுறையானது நாட்டின் தீர்மானம் எடுக்கும் செயன்முறைக்கு குறிப்பிடத்தக்க பங்களிப்பை வழங்கும் என்று நாங்கள் எதிர்பார்க்கிறோம். இருப்பினும், இன்று ஒவ்வொரு மட்டத்திலும் முடிவெடுப்பதில் ஒரு பலவீனத்தைக் காண்கிறோம். மிகவும் எளிமையான நிறுவனம் சார்ந்த விடயங்கள் தொடர்பான முடிவுகளில் கூட, அதிகாரிகள் முடிவுகளை எடுப்பதில்லை, அவற்றை அமைச்சரவையிடம் முன்வைக்கின்றார்கள். ஒவ்வொரு விடயத்திலும் சுற்றறிக்கைகளை எதிர்பார்க்கின்றனர். அவர்கள் தீர்மானங்களை எடுக்கக்கூடிய எல்லைக்குள் கூட தீர்மானங்களை எடுக்க தயங்குகிறார்கள். இந்த நிலைமை மாற்றப்படாவிட்டால் நாட்டை முன்னோக்கி கொண்டு செல்வது மிகவும் கடினம்.
சரியான முடிவுகளை எடுத்து நாட்டிற்காக உழைக்கும் அரச ஊழியர்களை மேலும் பாதுகாக்க தேவையான சட்ட சீர்திருத்தங்கள் தயாரிக்கப்படுகின்றன. எனவே, சேவைகளை வழங்குவதில் பொதுமக்களுக்கு இடையூறு விளைவிக்கும் கட்டுப்பாடுகள் மற்றும் முறைமைகளை தளர்த்தி அரச பொறிமுறையை நடைமுறைப்படுத்துமாறு பொறுப்புள்ள அனைவரையும் நான் கேட்டுக்கொள்கிறேன்.
“கிராமத்துடன் உரையாடல்” திட்டத்தில் நான் தனிப்பட்ட முறையில் செயற்திறமாக பங்கேற்கிறேன், ஏனெனில் கிராமப்புற அபிவிருத்தி அரசாங்கத்தின் முதன்மை முன்னுரிமையாகும். “சுபீட்சத்தின் நோக்கு” கொள்கை திட்டத்தில் கூறப்பட்டுள்ளபடி மக்களை மையமாகக் கொண்ட பொருளாதாரக் கொள்கைகளை கிராமிய மட்டத்தில் செயல்படுத்துவதில் மாவட்ட மற்றும் பிரதேச மட்ட அரசாங்க பொறிமுறைகள் மிக முக்கியமானவை. இந்த அபிவிருத்தி செயன்முறையில், ஆளுநர்கள், மாவட்ட செயலாளர்கள், பிரதேச செயலாளர்கள், சுகாதார மருத்துவ அதிகாரிகள் முதல் கிராமிய மட்டத்தில் சேவைகளை வழங்கும் கிராம சேவகர்கள், சமுர்தி அதிகாரிகள், விவசாய ஆராய்ச்சி மற்றும் உற்பத்தி உதவியாளர்கள், குடும்ப சுகாதார சேவை அதிகாரிகள், அபிவிருத்தி அலுவலர்கள் என ஒவ்வொரு அரச ஊழியருக்கும் தெளிவான பொறுப்பு உள்ளது. கொரோனா தொற்றுநோய் நிலைமைகளின் போது நோயைக் கட்டுப்படுத்துவதற்கும் பிற சேவைகளை வழங்குவதற்கும் அவர்கள் அனைவரும் எங்களுக்கு ஒரு பெரிய பலமாக இருந்தனர். நாட்டின் பொருளாதார அபிவிருத்தி சவால்களை வெற்றிகொள்வதில் அரச ஊழியர்களின் அதிகபட்ச பங்களிப்பை நாங்கள் எதிர்பார்க்கிறோம்.
தேசிய விவகாரங்களிலும் கிராமப்புற அபிவிருத்தியிலும் அரசியல் தலைமைக்கு பெரும் பொறுப்பு உள்ளது. எமது அரசாங்கத்தில் அனைத்து அமைச்சரவை மற்றும் இராஜாங்க அமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள், நகர சபை மற்றும் பிரதேச சபைகளின் அரசியல் பிரதிநிதிகள் ஆகியோர் மாவட்ட மற்றும் பிரதேச அபிவிருத்தி நடவடிக்கைகளில் தீவிரமாக பங்கேற்கும் ஒரு பொறிமுறையை நாங்கள் நடைமுறைப்படுத்தியுள்ளோம்.
ஊழல் மற்றும் வீண்விரயம் ஒரு நாட்டின் வளர்ச்சிக்கு பெரும் தடைகள். அரச நிர்வாகத்தில் ஊழல் மற்றும் விரயங்களை ஒழிக்க நாம் முன்மாதிரியாக செயற்பட்டு வருகிறோம். ஊழல் மற்றும் வீண் விரயங்களில் குற்றவாளியான எவர் தொடர்பிலும் அரசாங்கம் என்ற வகையில் நாங்கள் நெகிழ்வுப் போக்கை கடைபிடிக்க மாட்டோம். இருப்பினும், இன்று அரச துறையில் ஊழலைத் தடுப்பதற்கு மிகப்பெரிய தடையாக இருப்பது விருப்பத்துடனோ அல்லது விருப்பமின்றியோ மக்கள் இவற்றுக்கு வழங்கும் மறைமுக ஆதரவாகும். எனவே, ஊழலுக்கு நேரடியாகவோ மறைமுகமாகவோ துணைபோக வேண்டாம் என்று மக்களை நான் கேட்டுக்கொள்கிறேன். எவரேனும் ஒருவர் ஊழலில் ஈடுபட்டு உங்களை அவ்வாறு செய்ய தூண்டினால், சம்பந்தப்பட்ட நிறுவனத்திற்கு அதனை தெரியப்படுத்துங்கள். ஊழல் மற்றும் வீண்விரயங்களை ஒழிக்க நாடு முழுவதும் ஒரு சமூக கருத்தை உருவாக்குவதில் என்னுடன் இணையுமாறு உங்களை அழைக்கிறேன். எமது எதிர்கால சந்ததியினருக்கு இது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். இதற்கு ஊடகங்கள் வழங்கும் ஆதரவையும் நாங்கள் பாராட்டுகிறோம்.
என்னை ஜனாதிபதியாக தேர்ந்தெடுப்பதற்கு கடுமையாக உழைத்ததாக பல்வேறு தரப்பினர் கூறுகின்றனர். அது உண்மையாக இருக்கலாம். சமூகத்தின் அனைத்து தரப்பு மக்களும் எனக்கு ஆதரவு அளித்தனர். பெரும்பான்மையான மக்கள் அவர்களது தனிப்பட்ட இலாபத்திற்காக அன்றி, என்னிடமிருந்து நாட்டிற்கான சேவையை எதிர்பார்த்தே அவ்வாறு செய்தார்கள் என்று நான் நம்புகிறேன். இத்தகைய நேர்மையான நோக்கங்களுடன் என்னை ஆதரித்த மக்களின் பொதுவான அபிலாஷைகளை நிறைவேற்ற நான் எப்போதும் செயற்படுவேன். ஆனால் தனிப்பட்ட அல்லது வர்த்தக நலன்களை நிறைவேற்றுவதற்கான குறுகிய நோக்கத்துடன் என்னை ஆதரித்தவர்களை மகிழ்விப்பதற்காக நாட்டிற்கு தீங்கு விளைவிக்கும் முடிவுகளை எடுக்க நான் ஒருபோதும் தயாராக இல்லை.
வரலாறு முழுவதும், வலுவான நாகரிகங்கள் கட்டியெழுப்பப்பட்டதும், நாடுகள் அபிவிருத்தி செய்யப்பட்டதும் எதிர்காலத்தை சாதகமாகப் பார்த்து, இலக்குகளை நோக்கி பயணித்த மனிதர்களினாலேயாகும். இந்த நேரத்தில் எமது நாட்டின் வளர்ச்சிக்கும் இத்தகைய சிந்தனை தேவை.
மற்றவர்கள் செய்யும் அனைத்திலும் தவறுகளை மட்டுமே பார்க்கும், சமூகத்திற்காக எதுவும் செய்யாத அவநம்பிக்கையாளர்களிடமிருந்து நாட்டின் முன்னேற்றத்திற்கு எந்தவொரு பங்களிப்பும் கிடைக்காது.
இன்று எமக்குத் தேவைப்படுவது நாட்டை நேசிக்கும், சமூகத்திற்கு பயனுள்ள, விமர்சனங்களை ஒதுக்கி வைத்து, பிரச்சினைகளுக்கு நடைமுறை தீர்வுகளை வழங்கும் நேர்மறையான குடிமக்களின் ஆசீர்வாதமும் ஆதரவுமே ஆகும்.
உற்பத்தி திறன்வாய்ந்த குடிமகன், மகிழ்ச்சியான குடும்பம், ஒழுக்கப்பண்பாடான சமூகம் மற்றும் சுபீட்சமான தேசம் என்ற அடிப்படை நோக்கங்களை அடைய நாங்கள் அர்ப்பணிப்புடன் உள்ளோம். எமது நாட்டின் பெரும்பான்மையான மக்கள் சரியான பங்களிப்பைச் செய்தால் அந்த நோக்கங்களை அடைய முடியும். எனவே ஒரு நேர்மறையான அணுகுமுறையுடன், உங்களுடையவும் என்னுடையவும் பிள்ளைகளின் எதிர்காலத்தை கட்டியெழுப்ப எங்களுடன் இணையுமாறு இந்த நாட்டின் அனைத்து குடிமக்களுக்கும் நான் மீண்டும் அழைப்பு விடுக்கிறேன்.
நீங்கள் கேட்ட தலைவர் நான். நீங்கள் என்னிடம் ஒப்படைத்த பொறுப்பை நான் குறைவின்றி நிறைவேற்றுவேன். #சிங்களபௌத்த #தலைவன் #கோட்டாபய_ராஜபக்ஸ #இனவாத #பயங்கரவாத