வலி.வடக்கு பிரதேச சபையினால் வழங்கப்பட்ட நீர் தங்கியில் இருந்து பெறப்பட்ட குடிநீர் அசுத்தமாக உள்ளதாக தவிசாளரிடம் முறையிட்டுள்ளனர்.
வலி.வடக்கில் இருந்து நீண்டகாலமாக இடம்பெயர்ந்து தற்காலிக இடங்களில் வசித்தவர்கள் தற்போது தமது சொந்த இடங்களில் மீள் குடியேறி வருகின்றனர்.
கடந்த 30 வருடங்களுக்கு மேலாக இடம்பெயர்ந்து இருந்தமையால் , அப்பகுதி கிணறுகள் உரிய முறையில் பராமரிப்பின்றி காணப்பட்டமையினால் அப்பகுதி மக்களுக்கு வலி.வடக்கு பிரதேச சபையினால் குடிநீர் வழங்கப்பட்டு வருகின்றன.
அந்நிலையில் நேற்றைய தினம் வலி.வடக்கு பிரதேச சபையின் எல்லைக்குள் உள்ள காங்கேசன்துறை பகுதியில் பிரதேச சபையினால் வழங்கப்பட்ட நீர் தாங்கியில் இருந்து நீரினை பெற்ற போது அவற்றுள் குடம்பிகள் காணப்பட்டுள்ளன.
அதனால் அந்நீரினை பயன்படுத்த முடியாத நிலையில் அது தொடர்பில் பாதிக்கப்பட்ட மக்களால் வலி.வடக்கு பிரதேச சபை தவிசாளருக்கு முறையிடப்பட்டுள்ளது. அதன் போது , நீர் தாங்கி உரிய முறையில் சுத்திகரிக்காதமையால் தான் நீர் மாசடைந்து இருக்கும் எனவும், அது தொடர்பில் தான் நடவடிக்கை எடுப்பதாகவும் உறுதி அளித்துள்ளார்.
அதேவேளை அப்பகுதியில் மீள் குடியேறிய மக்களின் கிணறுகளை சுத்தம் செய்து புனரமைப்பு செய்வதற்கு நிதி வழங்கப்படும் கூறப்பட்ட போதிலும் , பல மாதங்களாக கிணறு புனரமைப்பு செய்வதற்கான நிதி இன்னமும் வழங்கப்படவில்லை.
அதனால் அப்பகுதி மக்கள் குடிநீருக்கு அல்லல் பட்டு வருகின்றனர். தமது கிணறுகளை சுத்தம் செய்து புனரமைத்து தர விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரியுள்ளனர். #குடிநீர் #அசுத்தமாகி #வலி_வடக்கு #முறையீடு