ஜக்கிய நாடுகள் மனித உரிமைகள் சபையில் இலங்கை விவகாரத்தை கனடா பொறுப்பெடுத்து வழிநடத்த வேண்டும். இலங்கையில் நிலைமைகள் மோசமடைந்து வருவதால் அங்கு நீதியையும் நல்லிணக்கத்தையும் உறுதிப்படுத்துவதற்கான கனடாவின் ராஜதந்திர முயற்சிகள் மீண்டும் ஒரு முறை மிக முக்கியமாகத் தேவைப்படுகின்றன என சர்வதேச மனித உரிமைகள் கண்காணிப்பகத்தின்(Human Rights Watch) கனடாவுக் கான பணிப்பாளர் பரீதா டெய்ப் (Farida Deif) வேண்டுகோள் விடுத் திருக்கிறார்.
ஆறு ஆண்டுகளுக்கு முன்னர் ஐ. நா. மனித உரிமைகள் சபையில் இலங்கை தொடர்பான தீர்மானத்தை ஏற்றுக் கொண்ட முக்கிய நாடுகளின் குழுவில் கனடாவும் ஒன்று. மனித உரிமைகள் ஆணையாளரின் இலங்கை தொடர்பான சமீபத்திய அறிக்கையின் அடிப்படையில் தீர்மானம் ஒன்றை எடுக்கவேண்டிய தருணம் நெருங்கி வருகிறது.
எனவே இது விடயத்தில் தீர்க்கமான முன்னேற்ற முயற்சி ஒன்றை முன்னெடுப்பதற்கு வாய்ப்பான கட்டத்தில் கனடா உள்ளது.சர்வதேச குற்றங்களுக்குப் பொறுப்புக் கூறுவதை உறுதி செய்ய்கின்ற இந்தச் செயலில் முன்னேறும் அடி ஒன்றை எடுத்து வைப்பது எதிர்காலத்தில் அது போன்ற குற்றங்கள் தொடராமல் இருப்பதை உறுதி செய்ய உதவும்.-இவ்வாறு மனித உரிமைகள் கண்காணிப்பகத்தின் கனடா பணிப்பாளர் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்திருக்கிறார். #ஐநா #இலங்கை #கனடா #கோரிக்கை #Farida_Deif #HumanRightsWatch
——————————————————————-
குமாரதாஸன். பாரிஸ்.07-02-2021