உலக தாய் மொழிகள் தினம் வருடா வருடம் பெப்ரவரி 21 அன்று உலகம் முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது. வங்காள தேசத்தின் வங்காள மொழிப் போராட்டத்தின் அடையாளமாக யுனஸ்கோவால் ஏற்றுக் கொள்ளப்பட்டு இத்தினம் தாய்மொழிகளின் இருப்பிற்கும், வளர்ச்சிக்குமான விழிப்புணர்வை ஏற்படுத்து வதற்கான தினமாக உலகம் முழுவதும் கொண்டாடப்பட்டு வருகின்றது.
முதல் மொழியில் அல்லது தாய்மொழியில் கற்றல் – கற்பித்தலின் கல்வி உளவியல் மற்றும் சிறுவர் உளவியல் முக்கியத்துவத்தை அறியச் செய்யும் விழாவாகவும் உலக தாய்மொழிகள் தினம் வடிவம் பெற்றிருக்கின்றது.
மூன்றாவதுகண் நண்பர்கள் குழுவானது தொடக்கம் முதல் பல் வகைப்பட்ட வழிகளிலும் பல்வேறு துறைகளுடன் தொடர்புபடுத்தியும் இத்தினத்தை செயற்பாடுகளின் தொடக்கமாகவும், தொடர்ச்சியாகவும் முன்னெடுத்து வருகின்றது.
இந்த வகையில் சிறுவர்களது மொழி வளர்ச்சி, அறிவியல் தமிழ் வளர்ச்சி, பால்நிலை சமத்துவத்துக்கான மொழி வளர்ச்சி, உணவின் மொழி, வாய்மொழியும், அறிவியலும் எனப் பல்வகைப்பட்ட தொனிப் பொருட்களில் முன்னெடுக்கப்பட்டுவரும் செயற்பாடுகளை முன்னிறுத்தி உலக தாய் மொழி தினங்களை முன்னெடுத்து வந்திருக்கின்றது. இந்தப் பின்னணியில் ‘தமிழிசையால் எழுவோம்’ என்ற தொனிப் பொருளில் பெப்ரவரி 21, 2021 உலக தாய்மொழிகள் தினம் முன்னெடுக்கப்படுவதற்கு மூன்றாவதுகண் நண்பர்களால் திட்டமிடப்பட்டுள்ளது.
தமிழிசையின் வளர்ச்சிக்குப் பங்களிப்புச் செய்திருக்கின்ற ஈழத்துப் பேராளுமைகள் மாண்பு செய்யப்பட வேண்டியவர்கள், இவர்களது உழைப்பும், படைப்பாக்கத் திறமும் உரிய வகையில் மதிப்பீடு செய்யப்படாத விடயமாகவே இருந்து வருகிறது. அவர்களது தன்னார்வமும் அதற்கான கடின உழைப்பும் ஈழத்தின் தமிழிசை மரபுகளாக அடையாளங் கொள்ளக் கூடிய வகையில் உருவாக்கம் பெற்றிருக்கிறது. ஈழத்தவர்களுக்கு அறிவியல் வலுச்சேர்க்கும் விடயமாகவும், கலைத்துவப் பெருமை சேர்க்கும் விடயமாகவும் அண்மைக் காலங்களில் உணரப்பட்டு, வெளிப்படுத்தப்பட்டு வருவதைக் காணமுடிகிறது. குறிப்பாக முகநூல்களில் இதன் வெளிப்பாட்டைத் தெளிவாகக் கண்டு கொள்ள முடியும்.
ஈழத்தின் இசை மரபுகள் மீதான விருப்பும், விழிப்புணர்வும் இதற்குக் காரணமாக இருப்பதைக் கண்டு கொள்ள முடியும். ஈழத்தின் பல்வகைப்பட்ட இசை மரபுகளுக்கும் களமாக அமைந்த இலங்கை வானொலியின் பங்கு ஆராய்ந்து எழுதப்பட வேண்டியது. மெல்லிசை, பொப் இசை, நாடக மேடைப் பாடல்கள், கிராமியப் பாடல்கள், தமிழிசை உருப்படிகள் என இந்தப் பல்வகைமை விரிந்து செல்லும். 2
பாடகர்கள், இசையமைப்பாளர்கள், பாடலாசிரியர்கள், புலவர்கள், கவிஞர்கள், அண்ணாவிமார், வாத்திய இசைக் கலைஞர்கள், தொழில் நுட்பக் கலைஞர்கள் மற்றும் இம்மரபுகளினால் அறிவார்ந்த வகையிலும், ஈர்க்கக் கூடிய வகையிலும் ஒலிபரப்புச் செய்யும் தயாரிப்பாளர்கள், அறிவிப்பாளர்கள், விமர்சகர்கள், விளம்பரதாரர்கள் என இக்கலைச் செயற்பாட்டின் வட்டம் ஆழ்ந்தகன்று செல்லும்.
இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் 95ஆவது ஆண்டு நிகழ்வுகளின் மத்தியில் மேற்குறிப்பிடப்பட்ட பெரும் பணிக்காக வாழ்த்துத் தெரிவிப்பதில் மூன்றாவதுகண் நண்பர்கள் பெருமை கொள்கிறார்கள். இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் 100 ஆவது ஆண்டு நிகழ்வுகளில் ஈழத்து இசை மரபுகளின் எழுச்சிக் கொண்டாட்டமாக அமையும் வகை செய்தல் எல்லோரதும் பொறுப்பாகும்.
ஈழத்தின் பல்வகைப்பட்ட இசை மரபுகளுக்கும் பெருமை சேர்த்த, சேர்த்துக் கொண்டிருக்கும் மூத்த கலைஞர்களை மாண்பு செய்தலும், அவர்களது ஆற்றல்களை நினைவுக்குக் கொண்டு வருதலும், அவர்களது சவால்களையும், சாதனைகளையும் அறிந்து கொள்வதும், அறிந்து அறிவிப்பதன் கொண்டாட்டத் தினமாக பெப்ரவரி 21, 2021 ஐ எல்லா இடங்களிலும் ஆக்கிக் கொள்வோம்.
குறித்த தினத்தன்று இருக்கின்ற வாய்ப்பு, வசதிகளுக்கேற்ப ஈழத்துத் தமிழ் இசையின் வளர்ச்சியில் பங்காற்றியவர்களாக வாழ்ந்து வரும் இசைக்கலைஞர்களை மாண்பு செய்வதுடன், இப்பணியில் ஈடுபட்டு மறைந்த இசைக்கலைஞர்களை நினைவுகூருவதும் பொருத்தமானதாக அமைந்திருக்கும். ஆர்வமானோர் தமது வாழும் இடங்களில் உள்ளுர் இசைக்கலைஞர்களின் பங்குபற்றுகையிலோ அல்லது அத்தகையோரின் இசை வடிவங்களைத் தம்மிடமுள்ள வளங்களைக்கொண்டு ஒலிபரப்பியோ அல்லது ஆற்றுகை செய்தோ கொண்டாடுவது ஆக்கபூர்வமான காரியமாக அமைந்திருக்கும்.
நாங்கள் அறிந்த, எங்களுக்கு அருகிலுள்ள மூத்த கலைஞர்களை பெப்ரவரி 21 உலக தாய்மொழி தினத்தில் வாழ்த்துவோம். ஆவர்களை அவர்களது ஆற்றல்களை உலகறியச் செய்வோம்.
கலையும் தொழிலுமாக, அறவாழ்வு மேலோங்கும், உலகம் தளைக்கும் தமிழிசையால் உலக தாய்மொழிகள் தினம் பெப்ரவரி 21, 2021 இல் எழுவோம்.
மூத்த இசைக் கலைஞர்களைக் கொண்டாடுவோம், அவர்களை அறிவோம், அவர்களைக் கற்போம், அவர்களிடமிருந்து கற்போம். உலகங்களின் அறிவியலை, அரசியலை, அழகியலை அறிவோம்.
மேன்மை கொள் அறவாழ்வு
உலகெலாம் விளங்கும்
நல்வாழ்வு செய்யும்
தமிழிசையால் எழுவோம்.
கலாநிதி சி.ஜெயசங்கர்