நாம் வாழும் பூமியானது நாளுக்கு நாள் மாசடைகின்றது. அதற்கான அதிக காரணங்களாக மனித நடவடிக்கைகளே காணப்படுகின்றன. இச் செயற்பாடுகள் மூலமாக இப் பூமியானது சூழல் சமநிலையினை இழந்து இயற்கை அழிவுகள் பலவற்றை சந்தித்து வருகின்றமை யதார்த்தமே. இவ்வாறான நிலைமையில் நாம் சூழல் பற்றி சிந்திக்காதவர்களாகவும், சூழலுடன் நேயம் இல்லாதவர்கள் போன்றும் நடந்து கொள்ளலானது முழு உலகினையும் உயிரினங்கள் வாழ்வதற்கு உகந்த இடமா என்ற கேள்வியினை எழுப்புகின்ற விடயமாகவே அமையும் என்பது உண்மை.
உலகை அழகாக்குகின்ற விடயமாக விவசாயம் அமைகின்றது, கண்களை பறிக்கும் பச்சை நிறம், மழையை பெய்ய வைக்கும் கருவி, பறவைளின் உணவு பெறும் இடம் மற்றும் பூச்சிகளின் வாழிடம் என உயிர் பல்வகமைக்கு இன்றியமையாதது விவசாய பெரு நிலங்களே ஆகும். இருந்தும் இன்றைய சூழலின் இயற்கைப் பல்வகமையைக் குழப்புகின்ற பிரதான கருவியாக இந்த விவசாய நடவடிக்கைகளே அமைகின்றதானது கவலைக்குரிய விடயமே.
அதிகரித்த செயற்கை உரம், வளமாக்கி எண்ணெய் என பல்வேறு இரசாயனங்களை தன்னகத்தே கொண்டதாகவே உற்பத்திகள் இன்று எம் கைகளுக்கு கிடைக்கின்றன, இவ்வாறாக முற்றிலும் நஞ்சினை வாங்கியே உண்டு வருகின்றோம். அவ் இரசாயனங்களை பல்தேசிய கம்பனிகளானது பல்வேறு தளங்களினூடாக விற்றலும் அதனை வாங்கி உண்கின்ற நாம் பல்வேறு நோய்களுக்கு ஆளாகுதல் பிற்பாடாக அதற்குரிய மருந்துகள் என எம் பணங்களை எம்மை அறியாதவறே அவர்கள் முழுவதுமாய் சுரண்டும் அரசியல் பற்றி ஆழமாக சிந்திக்க வேண்டியதும் கலந்துரையாடப்பட வேண்டியதுமே.
இவ்வாறன சூழலில் கெலசுவய முன்னெடுத்த மரபு நெல் அறுவடை விழா இன்றைய கால கட்டத்தில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாகும். அவர்களது கருப்பொருளானது நஞ்சற்ற உணவு என்பதாகவே அமைந்திருந்தது. முழு இலங்கையிலும் பல்வேறு ஏக்கர் காணியில் இவ் விவசாயம் மேற்கொள்ளப்பட்டு 05.02.2021 அன்று அம்பாறையில் ஐந்து ஏக்கருக்கு செய்யப்பட்ட இலங்கையின் மரபு நெல் அறுவடை தொடக்க விழாவானது எமது வழக்காறுகளின் படி தொடங்கப்பட்டது. இங்கே விதைக்கப்பட்ட நெல் இனங்களும் மரபணு மாற்றப்படாத, எம் நாட்டின் மரபு நெல் வகைகளான சீனட்டி, வட்டபல போன்றனவாகும்.
கெலசுவய அமைப்பானது இயற்கை விவசாயம், நஞ்சற்ற உணவு போன்ற விடயத்தில் நீண்ட காலமாக பல நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றது. அதன் படி இன்றைய விவசாய நடவடிக்கை மூலமாக ஒரு நஞ்சற்ற பயிர் அறுவடையை முன்னெடுக்க முடிந்திருகின்றது. இவ் விவசாய நடவடிக்கைக்கென எந்த வித செயற்கை இரசாயனங்களும் பயன் படுத்தப்படவில்லை. அதற்கு மாற்றாக அவர்களினால் தயாரிக்கப்பட்ட ஐந்து வகையான எண்ணெய்களே பயன் படுத்தப்பட்டன, அவ் எண்ணெய்களானது யானை போன்ற மிருகங்களின் கழிவுகள் மற்றும் பல்வேறு தாவர குப்பைகள் மூலமாகவே தயாரிக்கப்பட்டன. இவை பல்துறை சார்ந்த நிபுனர்களின் முறையான ஆய்வின் அடிப்படையின் தயாரிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
இவ் நிகழ்வில் மூன்றாவது கண் உள்ளூர் அறிவு திறன் செயற்பாடுகளுக்கான நண்பர்கள் குழுவும் இணைந்து கொண்டிருந்தது குறிப்பிடத்தக்கது. மூன்றாவது கண் நண்பர்கள் குழுவானது 2000 ம் ஆண்டு முதல் உள்ளூர் உற்பத்திகள், இயற்கை விவசாயம், பெண்ணிலை வாதம், பாரம்பரிய கலைகள் போன்ற பல்வேறு விடயங்களின் ஈடுபட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கதே. அதன் தொடர்ச்சியாக 2021 ஆம் ஆண்டுக்கான நூறு கோடி மக்களின் எழுச்சி நிகழ்வையொட்டி அதன் இவ்வருட கருப்பொருளான பூமிக்கும் இயற்கைத் தாய்க்கும் வன்முறை அற்ற எனும் கருப்பொருளில் பல்வேறு விடயங்களை முன்னெடுத்து வருகின்றது. அவையாவன மரபணு மாற்றப்படாத விதைகளைச் சேகரித்தல், நடல், பிறருக்கும் பகிர்தல் மற்றும் இக் கருத்தியல் சார்ந்த பூமிக்கு வன்முறை செய்யமாட்டோம் என்கின்ற அடிப்படையிலான ஆக்கங்கள், அளிக்கைகள் செய்தல் என பல்வேறு சமூக மாற்றம் சார்ந்த செயற்பாடுகளில் ஈடுபட்டு வருகின்றது.
அன்றைய நிகழ்வில் மூன்றாவது கண் குழுவினால் இயற்கை சார்ந்து எழுதப்பட்ட பாடல்கள் மரபு ரீதியான இசை கருவிகளுடன் இசைக்கப்பட்டன. இப் பாடல்களானது இயற்கைக்கு வன்முறை செய்யாமை, எம் உள்ளூர் உற்பத்திகளின் முக்கியத்துவம், சூழல் பல்வகைமை போன்ற விடயங்களை அடிப்படையாகக் கொண்டு அமைந்திருந்தன. மூன்றாவது கண்ணிற்கும், கெலசுவய அமைப்பிற்கும் நீண்டகால நட்புறவு உண்டு என்பதுடன் அதன் அடிப்படையிலே அங்கே அழைக்கப்படிருந்தமை என்பதும் குறிப்பிடத்தக்க விடயமாகும்.
நாம் பல உணவுகளை வாங்கி உண்கின்றோம், உற்பத்தி செய்தும் உண்கின்றோம் அவ் உற்பத்திகளை கேள்வி கேட்க வேண்டிய கட்டாயத்தில் இன்று உள்ளோம். ஆரோக்கியத்திற்கான உணவுகள் என்று வாங்கி உண்கின்ற உணவுகளே ஆரோக்கியத்தை குறைகின்ற அளவு இரசாயனங்களால் இன்று விளைவிக்கப்படுகின்றன. விளைச்சலுக்கான விதைகள் இன்று எவர் கையிலோ இருக்க வாங்கி நடுபர்களாகவே நாம், எம் நிலங்களின் பெரும் பகுதிகள் தரிசாகி விட்டன. இவ்வாறான சூழலில் இயற்கை விவசாயங்கள் பற்றி பல தரப்பினர்களிடமும் எழுகின்ற ஆர்வமானது மிக அவசியமானதும் அவை சார்ந்து அனைவரும் செயற்படலும் முக்கியமாகும்.
சி.ஜெயபிரதாப்