Home இலங்கை புலவர் கணபதிப்பிள்ளை திருநாவுக்கரசு: கூத்துப் புலமைத்துவமும் பரவலாக்கமும்! சு.சந்திரகுமார்.

புலவர் கணபதிப்பிள்ளை திருநாவுக்கரசு: கூத்துப் புலமைத்துவமும் பரவலாக்கமும்! சு.சந்திரகுமார்.

by admin


புலவர் க.திருநாவுக்கரசு இறந்த செய்தியை அறிந்ததும், நான் மிகவும் ஆழ்ந்த கவலையடைந்தேன். சமகாலத்தில் வாழ்ந்த பிரபல்லியமான ‘பா’ விலக்கணங்கள் கைதேர்ந்த கூத்துப் புலமையாளரே க.திருநாவுக்கரசு ஆவார்.


மட்டக்களப்பு ஈச்சந்தீவில் பிறந்து, வளர்ந்து அங்கேயே கூத்தாடி மகிழ்ந்து பிற்காலத்தில், பாவக்கொடிச்சேனை – கண்ணகி நகரில் வாழ்ந்தவர். ஈழத்துக் கூத்துப் பனுவலாக்கத்தின் புலமைத்துவ வெளியில் பேசப்படவேண்டிய, கருத்தில் எடுக்கவேண்டிய கூத்து எழுத்தாக்க நிபுணத்துவமுள்ள ஆளுமைகளில் இவரும் குறிப்பிடத்தக்கவர். நான் கள ஆய்வை மேற்கொள்ளும்போது, அவரது வீட்டிற்குச் சென்று அவருடன் உரையாடியிருக்கின்றேன். அன்பாகப் பேசும், பழகும், கருத்துத் தெரிவிக்கும் பண்பான பெரும் மனிதர். இவர் எவ்.எக்ஸ்.சி. நடராஜா அவர்களிடம் தனது விருப்பத்தினாலும், ஆர்வத்தினாலும்; ‘பா’ வடிவங்களைக் கற்றவர்.


அவரது புலமைத்துவத்தினைக் கூத்தர்கள் குறிப்பிடும்போது ‘இலகுவில் அனைவருக்கும் விளக்கும் வகையில் பாடல்களைச் சேர்ந்து கூத்து எழுதுவதால் பயிற்சி எடுத்து ஆடுவதற்கு துணைபுரிகின்றது’ என்பதனூடாக புலவரின் இசைப் பாக்களின் புலமைத்துவம் மக்கள் மயப்படுத்தப்படுவதன் பொறியை உணர்த்துவது கவனத்திற்குரியது. புலவர்கள் இவ்வாறான மூலோபாயத்தை வைத்திருப்பதும் அதனூடாகத் தம் திறனை பரவலாக்குவதும் இயல்பு.


கூத்துப் பனுவலாக்க வெளியின் புலமைத்துவம் என்பது, கதை ஒன்றை எடுத்து கூத்து முறைமைக்கு அமைய அதன் சுவையுடனும், அரங்கக் கட்டமைப்புடனும் முரண், அதன் வளர்ச்சி, உச்சத்தின் கோர்வையுடனும் இணைத்துப் பொருத்தமான இடத்தில் கூத்து மொழிக்கமைய „பா‟ வடிவங்களை உள்ளீர்த்து சொற்கள் ஊடாக பெருங்காட்சித் தன்மையை எழுத்தாக்குவது. இவ்வாறான முறைமையுடன், இப்புலவரின் எழுத்துப் பனுவல்களில் எதுகை, மோனைப் புரிதல் இலகுவாக வெளிப்படுவது சிறப்பு. அதனை, மக்கள் வாழ்வியலுக்குரியதாக மேனிலையடைய வைக்கும் முறைமையும் கவனத்திற்குரியது.


யாப்பிலக்கணத்திலுள்ள செய்யுள் உறுப்புக்களின் வகையான „தொடை‟ என்பது அச்செய்யுள்களின் சீர்களும், அடிகளும் தொகுத்துச் சொல்லப்படும் முறைமையுடன் சம்மந்தப்பட்டது. இந்தத் தொடையில் வழங்கப்படும் செய்யுள் உறுப்புக்களின் „எதுகை‟ முக்கியமானது. கூத்துப் பாட்டுச் சீர்களின் முதலெழுத்துக்கள் ஒத்துவருவது „மோனை‟. இரண்டாவது எழுத்துக்கள் ஒத்துவருவது „எதுகை‟. இதனைத் தனது கூத்துப் பனுவலாக்கத்தில் பொருத்தமாகப் பயன்படுத்திய பெரும் ஆளுமை இவராவார். காலனியநீக்க அறிவுருவாக்க வெளியில் வௌ;வேறு மனிதர்களின் பண்பாட்டுக் கூறுகளின் சேர்கையும் அதனை மேனிலையாக்குவதும் சமகாலத் தேவை.


இப்பின்புலத்தில் நோக்கும் பொழுது, முழுநீள வடமோடி, தென்மோடிக் கூத்துக்களையும், நகைச்சுவைக் கூத்துக்களையும் எழுதி இவ்வுலகத்திற்குத் தந்த பெரும் கூத்தாளுமை
இவராவார். அத்துடன் காவடி, கும்மி, கரகம், காவியம் முதலான கலை வடிவங்களையும் பாடியுள்ளார். அவர் பாடிய கூத்துக்களில் தென்மோடிக் கூத்துக்களான சிலம்பில் செல்வி, பாஞ்சாலி சபதம், சன்னியாசியாகம், கந்தன் கருணை போன்றனவும், வடமோடிக் கூத்துக்களில் வானரயுத்தம், மகாபாரதப் பகலிரவுப் போர், பரசுராமர் சண்டை, வெடியரசன் போர், கஜமுகன் வதை, சுபத்திரை கலியாணம், கங்கையின் மைந்தன் போன்றனவும் குறிப்பிடத்தக்கன.


நகைச் சுவைக் கூத்தானது, அங்கதக் கூத்து, டிஸ்கோக் கூத்து, சமூகக் கூத்து, நவீன கூத்து என ஊருக்குள் அழைக்கப்படுவது வழமை. க.திருநாவுக்கரசு கண்ணகி நகரில் வசிக்கும் பொழுது, தம் கூத்துக் கட்டும் புலவமைத்துவத்தின் விரிவாக்கத்தினூடாக படுவான்கரையில் இடம்பெயர்ந்து சென்றமையை வைத்து அம்மக்களை ஆற்றுப்படுத்தும் நோக்கில் உள நெருக்கடியைச் சமப்படுத்துவதற்கு ‘போர் இடர்களைக்’ கதையாக்கிக் கூத்தெழுதியவர். குறிப்பாக, இது 2007 ஆம் ஆண்டில் இடம்பெற்ற „உள்நாட்டு இடம்பெயர்வை’ மையப்படுத்தி எழுதப்பட்டு, கிராமங்கள்தோறும் ஆடப்பட்டு மக்கள் மனதில் வரவேற்பைப் பெற்றுள்ளது.


இடம்பெயர்வுக்கு முன்னர் ஊரில் சந்தோஷமாக வாழ்ந்த முறைமை போரினால் நலன்புரி முகாம்களுக்கு அனுப்பியபோது முகாமில் ஏற்பட்ட துயர்கள், சவால்கள் போன்றவற்றையும் மீளக்குடியேற்றப்பட்டபோது ஏற்பட்ட துயரங்கள், சிக்கல்கள் போன்றவற்றையும் உள்ளடக்கி மூன்று கூத்துக்களாக எழுதி ஆடப்பட்டமை குறிப்பிடத்தக்கது. இப்புலவரிடம் கள ஆய்வில் இதுபற்றி உரையாடிய பொழுது, ‘இது எமது ஊர் மக்கள் தாம் இழந்ததை மீளப் பெறுவதற்கும், அதனை நினைவுபடுத்துவதற்கும் மனக்கிடக்கைகளைப் பேசி, ஏசி கொட்டித் தீர்ப்பதற்கும் ஆறுதலடைவதற்கும் கூத்தாக எழுதி ஆடப்பட்டது’ எனக் கூறியமை மனங்கொள்ளத்தக்கது (நேர்காணல்;: க.திருநாவுக்கரசு: 02.03.2013). இவ்வாறு சமூக அக்கறையுடன் பாரத இராமாயனக் கதைகள் கடந்து கூத்துப் பனுவல்களை எழுதிக் கூத்து வெளிக்குத் தந்த பெரும் ஆளுமை இவர். இவர் 1972 ஆம் ஆண்டு தொடக்கம் 2021 ஆம் ஆண்டு வரை கூத்து எழுத்துப் பணியில் தம்மை ஈடுபடுத்தியவர் என்பதும் அறிதலுக்குரியது.

அவரது இழப்பு கூத்துப் பனுவலாக்க வெளியில் பெரும் தாக்கதை ஏற்படுத்தும் என்பதும் கவனத்திற்குரியது.

இக்கட்டுரை புலவருடைய புலமைத்துவத்தை ஒட்டியும், 21.02.2021 உலக தாய்மொழிகள் தினத்தில் „தமிழ் இசையால் எழுவோம்‟ எனும் செயற்பாட்டின் பின்னணியிலும் பிரசுரிக்கப்படுகின்றது.

சு.சந்திரகுமார், முதுநிலை விரிவுரையாளர், கிழக்குப்பல்கலைக்கழம்.

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More