Home இலங்கை இலக்கியங்கள்வழித் தெரியவரும் ஆதித் தமிழிசை பண்பாடு.

இலக்கியங்கள்வழித் தெரியவரும் ஆதித் தமிழிசை பண்பாடு.

by admin

அவரவர் மொழிப் பண்பாட்டினை கொண்டாடும் முகமாக, வருடம் தோறும் மாசி 21 ஆம் நாள், உலக தாய்மொழிகள் தினம் கொண்டாடப்படுகின்றது. தொடர்பாடல் செயன்முறையின் இன்றியமையாத கூறாக மொழி குறிப்பிடப்படுகின்றது. ஒலி மொழியின் அடிப்படை வடிவமாவது போல, மொழி எல்லாவகையான, உலகவாழ் உயிரனங்களுக்கும் இன்றியமையாததாகின்றது. விளக்கமாகச் சொல்லப்போனால், உலகத்தில் வாழுகின்ற, நீர்வாழ், நில வாழ் உயிரினங்களாக இருக்கட்டும், பகிர்ந்துண்டு பல்லுயிர் ஓம்பும்மனிதர்களாக இருக்கட்டும் தொடர்பினை அல்லது இணைப்பினை ஏற்படுத்திக் கொள்வதிலும், கருத்து பரிமாறிக் கொள்வதிலும் மொழி பிரதான இடத்தினை பெறுகின்றது. இவ்விடத்தில்,உயிரினங்களுக்கு எல்லாம் மொழி உண்டா என்ற கேள்வி எழக்கூடும்.


உலகத்தில் வாழுகின்ற எல்லாவகையான உயிரினங்களும், ஏதோவொரு வகையில் அவற்றுக்கிடையிலும், சக உயிரினங்களுக்கிடையிலும் தொடர்பாடலை பெரும்பாலும் ஒலிகளுக்கூடாக வெளிப்படுத்துவதை அவதானிக்கின்ற போது, அவற்றுக்கிடையில் மொழி ஒலி வடிவாக இயக்கம்பெறுகின்றது என்பது தெளிவாகின்றது. இவ்வகையில், உலகவாழ் உயிரினங்கள் எல்லாவற்றுக்கும் மொழி என்பது இருப்பதும், இன்றியமையாததொன்றாக இருப்பதும் தெளிவாகின்றது. அஃது ஒலி வடிவமாக இருக்கலாம், வரி வடிவில் எழுதப்பட்டவையாக இருக்கலாம், சைகைகளாக இருக்கலாம், குறியீடுகளாக இருக்கலாம், கீறப்பட்ட சித்திர எழுத்துக்களாக இருக்கலாம், ஏன் உடல் மொழியாகக் கூட இருக்கலாம்.


மொழியின் பரிணாம வளர்ச்சியாக சொல்லப்படுகின்ற, சைகை, குறியீடு, உடல் மொழி, சித்திர எழுத்து, ஒலி வடிவம், வரி வடிவம் என்பன மொழியோடு சேர்த்து மனிதர்களின் நாகரீக வளர்ச்சியையும் வெளிப்படுத்தி நிற்கின்றது. உலகளவில், பேசப்படுகின்ற மொழிகள் என்று பார்க்கின்றபோது, ஏரதாள 6500க்கும் மேற்பட்ட மொழிகள் குறிப்பிடப்படுகின்றன. வரிவடிவம் என்று சொல்லப்படுகின்ற எழுத்து வடிவமும், ஒலி வடிவம் என்று சொல்லப்படுகின்ற உச்சரிப்பு அல்லது பேச்சுவடிவமும் ஆகிய இரண்டும் கொண்ட மொழிகளும், ஒலி வடிவினை மாத்திரம் கொண்ட மொழிகளும் உலகில் நின்று நிலவிக்கொண்டிருந்தமையை, நிலவிக்கொண்டிருப்பதை அறியமுடிகின்றது.


உலகளவில் பேசப்படுகின்ற மொழிகளில், முதல் அதிகபடியானோர் பேசுகின்ற மொழியாக, மெண்டலின் மொழி காணப்படுகின்றது: தொன்மையான மொழிகளில்,பாபிலோனிய மொழி, தமிழ்மொழி ஆகியவை குறிப்பிட்டுக் கூறத்தக்கவை. தாய் மொழி என்று பேசுகின்ற போது, பிறப்பில் எந்தமொழிக்கூடாக குழந்தைகள் வளர்க்கப்படுகின்றார்களோ அல்லது எதனை தமது முதல்மொழியாகக் கொண்டு வளர்கின்றார்களோ அதனை தாய்மொழி என்று அடையாளப்படுத்தலாம். அழவாநச டயபெரயபந றாiஉh அநயளெஇ வாந டயபெரயபந றாiஉh ய pநசளழn hயள பசழறnரி ளிநயமiபெ கசழஅ நயசடல உhடைனாழழன எனப் பொருள் தருகிறது ஆங்கில அகராதி. உலகளவில் தாய்மொழிகளாக, கிரேக்கமொழி, சீன மெண்டலின் மொழி, அரபுமொழி, ஆங்கிலமொழி, ஸ்பானியமொழி, வங்காளமொழி, ஹிந்திமொழி, போர்த்துக்கீசமொழி, ரஷ்யமொழி,ஜப்பானியமொழி,ஜேர்மன்மொழி, பிரெஞ்சுமொழி, தமிழ்மொழி, வூமொழி, ஜாவாமொழி, கொரியமொழி,வியட்நாமியமொழி,தெலுங்குமொழி, யூவேமொழி, மராட்டிமொழி, துருக்கிமொழி, உருதுமொழி, சிங்களமொழி, ஆதிக்குடியினர்மொழிகள் ஆகிய இன்னப்பிறவற்றைக் குறிப்பிடமுடியும்.


தொன்மையான மொழியாகவும், செம்மொழியாகவும் கொண்டாடப்படும் தமிழ் மொழி, இயல் இசை, நாடகம் என்னும் முத்தமிழ்ச்சிறப்புடையது. மூவேந்தர் நிலமாண்ட ஆட்சிமொழி பெருமையுடையது. தமிழ்மொழியானது ஆட்சிமொழியாக, இந்தியா, இலங்கை ( அரசகரும மொழி), சிங்கப்பூர் ஆகியநாடுகளிலும், மலேசியா (ஆசியா), மொரிசியஸ்தீவுகள், சீசெல்சு, இறீயூனியன் ( ஆபிரிக்கா),கனடா ( வடஅமெரிக்கா) ஆகியநாடுகளில் பண்பாட்டுமொழியாகவும் காணப்படுகின்றது. இவ்வாறு தமிழ்மொழியை தாய்மொழியாகக் கொண்ட மக்கள் பண்பாட்டில், முத்தமிழ்ச்சிறப்பினை உடைய தமிழின், தமிழிசை சிறப்பை பேசுகின்ற இலக்கியங்களில் சங்கஇலக்கியங்கள், தொல்காப்பியம், சிலப்பதிகாரம் ஆகியவற்றை முன்னிறுத்தி, அவற்றுக்கூடாக வெளிக்கொணரப்படுகின்ற தமிழர்இசைமரபு குறித்து, இக்கட்டுரை இயலுகிறது.


இசை என்பது, உலகின் பல்வேறு பண்பாடுகளின் முக்கிய அடையாளமாகவே இருந்துவருகின்றது. பழங்காலத்திலிருந்தே ஓர் அறிவுத்துறையாக இசை வளர்ந்துவந்திருப்பதை அவதானிக்கமுடிகிறது. கீழைத்தேய பண்பாட்டை பொறுத்தவரை, இசையாயினும் வேறுஎந்த கலையாயினும் தெய்வீகத்தோடு தொடர்புருத்தி கட்டமைக்கப்படுகின்ற போக்கு, வேத, புராண, இதிகாசங்களின் வழி நிகழ்த்தப்படுவதை அவதானிக்க முடிகின்றது. இவ்வாறு கட்டமைக்கப்படுகின்ற போதுதான் சமஸ்கிருதம் தமிழிசையின் தனித்தப்பங்கை தனதாக்கிக் கொள்வதை அவதானிக்க முடிகின்றது. குறிப்பாக, தமிழகத்தை மையப்படுத்தி நடைபெற்ற பல்வேறு ஆய்வுகளின் வழி, தமிழிசையின் தனியிடத்தை, வேற்றுநிலத்தார் ஆட்சியில், அவர்தம் மொழி, நுட்பமாக வளைத்து பிடித்திருப்பதை அறியமுடிகின்றது.


தமிழ் நாடு கி.பி 14 ஆம் நூற்றாண்டில் தொடங்கி, கிட்டத்தட்ட 500 ஆண்டுகள்; பிறமொழி ஆட்சியாளர்களால் ஆளப்படுகின்றது. இக்காலக்கட்டத்தில் கர்னாடக இசை இங்கே வளர்ச்சியடைகின்றது. கர்னாடக இசையின் கலைச்சொற்கள் சமஸ்கிருதத்தில் அமைந்தவை. மேலும் தெலுங்கும் சமஸ்கிருதமுமே அதன் முதன்மையான இசைமொழியாக அமைகின்றன. இத்தகைய 500 ஆண்டுகால வேற்றுமொழியாளர்களின் ஆட்சியினால், நேர்ந்த தேக்க நிலையிலிருந்து தமிழ் மொழியினை மீட்ட காலமாக, 19ஆம் நூற்றாண்டின் இறுதியில் ஆரம்பிக்கும் தமிழின் மறுமலர்ச்சி காலம் விளங்குகின்றது. என்ற குறிப்பினை ‘தமிழ் எனும் இசைமொழியும் ஆதித் தமிழிசை வரலாறும்’ என்ற கட்டுரை தருகின்றது.
இதனடிப்படையில் பார்க்கின்ற போது, சமஸ்கிருத மொழியின் செல்வாக்கின் காரணமாக, கர்னாடக சங்கீதத்தை தமிழிசை என கருதுகின்ற போக்கும்,தமிழர்இசை மரபு என்று பேசுகின்றபோது,பொதுவாக தமிழிலே இசை தொடர்பாக பேசுகின்ற இலக்கியங்களே இல்லை என்ற குற்றச்சாட்டும் பரவலாக முன்வைக்கப்படுவதை காணலாம். எனினும், தமிழரின் தனித்துவமான இசைமரபினை வெளிப்படுத்துகின்ற இலக்கியச்சான்றாதாரங்களும், தொல்பொருள் மூலாதாரங்களும் வரலாற்றிலே நலிவடையாமல் இருப்பதை அவதானிக்க முடிகின்றது.


இந்தவகையில், உ.வே சா வின் பதிப்பு பணிகள் தமிழ் இசைவரலாற்றின் மைல்கல்லாக அமைகின்றமை குறிப்பிடத்தக்கது. குறிப்பாக அவர் சிலப்பதிகாரத்தினை பதிப்பித்து வெளியிட்டமை என்பது தமிழர் இசைத் தொடர்பாக அறிந்துக் கொள்ள வழிதுணை செய்தது. அவரைத் தொடரந்து, தமிழரின் இசையை ஆய்வு செய்து, அதன் பெருமிதத்தை வெளிக்கொணரும் வகையில் கி.பி 1917 ஆம் ஆண்டு கருணாமிர்தசாகரம் எனும் நூலை ஆபிரகாம் பண்டிதர் எழுதி வெளியிட்டமை குறிப்பிடத்தக்கது. இதனை அடியொட்டி விபுலானந்தரின் யாழ் நூல் தோற்றம் பெறுகிறது. இவற்றைவிட எஸ். ராமனாதனின் சிலப்பதிகாரத்து இசை நுணுக்கம் எனும் நூல், வி.ப.கா சுந்தரம் அவர்களின் தமிழிசைக் களஞ்சியம் எனும் நூலும் இன்னப்பிறவும் குறிப்பிட்டுக் கூறதக்கவை.


தமிழிசைத் தொடர்பாக முதன்முதலாக சங்கஇலக்கியங்கள் தகவல்களை வழங்குகின்றன. சங்க அகத்திணை, புறத்திணை இலக்கியப்பாடல்கள், இசைத் தொடர்பாகவும், இசைக் கலைஞர்கள் தொடர்பாகவும், இசைக் கருவிகள் தொடர்பாகவும் ஏராளமானத் தகவல்களை தருகின்றன. பாணர், பாடினி, கிணைவர், பறையர் போன்ற இன்னோரன்ன இன்னிசைக் கலைஞர்கள் தொடர்பாக செய்திகளைத் தரும், சங்க இலக்கியங்களில், அவர்கள் பரிசில் பெற்றதாகச் சொல்லப்படுமிடத்தும், பிறவிடங்களிலும் தமிழ்இசையின் தொன்மம் குறித்து அறிந்துக் கொள்ள முடிகின்றது.
புறநானூற்றின் 109 வது பாடலாக அமையும், பாரியின் கொடைத்திறனை சிறப்பிக்கும் பாடலில் வரும்,
‘…விரையொலி கூத்தனும் விறலியும் பின்வர
ஆடினிர் பாடினிர் செலினே
நாடும் குன்றும் ஒருங்கே ஈயுமே.’
என்ற அடிகள் ஆடுதல் பாடுதல் என்ற செய்கைகளின்வழி, நடனம்,இசை ஆகிய கலைகளின் தொன்மையை வெளிப்படுத்தி நிற்கின்றன. குறுந்தொகையில் ஓளவை பாடியதாக அமையும்,
அகவன் மகளே அகவன் மகளே
மனவுக்கோப் பன்ன நன்னெடுங்கூந்தல்
அகவன் மகளே பாடுக பாட்டே
இன்னும் பாடுக பாட்டேஅவர்
நன்னெடுங் குன்றம் பாடிய பாட்டே.
(பாடல் 23)
என்ற பாடல், குறிசொல்லும் குறமகள் பாடிய பாடல் தொடர்பான செய்தியை வெளிப்படுத்தி நிற்கின்றது.


இவ்வாறே சங்க இலக்கியங்கள்வழி இசைக்கு மயங்கிய உயிர்கள் தொடர்பாகவும் குறிப்புகளையும் அறிந்துக்கொள்ள முடிகின்றமை குறிப்பிடத்தக்கது. பாகனின் கட்டுபாடுகளுக்குகூட அடங்காத யானை, யாழ்இசைக் கேட்டு மயங்கி, கட்டுபட்டு நின்றதை கலித்தொகையில் வரும், காழ்வரை நில்லாக் கடுங்களிற்று ஒருத்தல் யாழ்வரைத் தாங்கியாங்கு … ( பாலைக்கலி 1: 36 -37) என்ற அடிகள் எடுத்துக்காட்டுகின்றன. முல்லை நிலத்தில் ஆயர்கள் தம் குழலிசையால், ஆநிரைகளை தம்மோடு அழைத்துச் சென்ற செய்திகளும் காணப்படுகின்றன. ( ஒழுகிய கொன்றைக் தீங்குழல் முரற்சியர் வழுஉச் சொற் கோவலர் தத்தம் இனங்கரை பொழுதொடு தோன்றிய கார்நனை வியன்புலத்தார் – முல்லைக்கலி 106 :3.5)
சங்கஇலக்கியங்களில் மிகமுக்கியமாக, அகத்திணைப்பாடல்கள், முதல், கரு, உரி ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு அமையபெற்றிருக்கின்றமையை அறியலாம். ‘முதலெனப்படுவ நிலம்பொழுதிரண்டின் இயல்பென மொழிப’ என தொல்காப்பியர் முதல் என்பதை தெளிவுப்படுத்துகின்றார். இவ்வாறு,ஐவகை நிலங்களையும், அவற்றுக்கானத் தனித்தனி பெரும்பொழுதுகளையும், சிறுபொழுதுகளையும் அடிப்படையாகக் கொண்டு, சங்கப்புலவர்கள் செய்யுள் யாத்துள்ளமையையும் அறியலாம். அத்தகைய செய்யுள்களில், அந்த அந்த நிலங்களுக்குரிய கருப்பொருளையும் அறிந்துக் கொள்ளமுடிகின்றது. கருப்பொருள் என்பது,
‘ தெய்வ முணாவே மாமரம் புட்பறை
செய்தியாழின் பகுதியொடு தொகையீ
அவ்வகை பிறவும் கருவென மொழிப’
என்பதாகத் தொல்;காப்பியம் அகத்திணையியல் குறிப்பிடுகின்றது. இந்தவகையில், கருப்பொருளி;ல், தெய்வம், உணவு, விலங்கு, மரங்கள், பறவைகள், பறை, தொழில், யாழ் போன்றவற்றோடு பல்வேறு அம்சங்களும் அந்த அந்த நிலங்களுக்குரிய கருப்பொருளாக விளங்குகின்றமை எடுத்துக்காட்டப்படுகின்றது. இங்கு மிக முக்கியமாக, பறை, யாழ் போன்ற இசைக்கருவிகள் குறித்துக் கூறப்பட்டுள்ளதைக் காணலாம்.


இதனை அடிப்படையாகக் கொண்டு, சங்க அகத்திணைப்பாடல்களை பார்க்கின்ற போது, ஏராளமான இசைக்கருவிகளின் பயன்பாடு அக்காலத்தில் இருந்திருப்பதை அவதானிக்க முடிகின்றது. எடுத்துக்காட்டாக, சங்க அகத்திணைப்பாடலாக அமையும், நற்றிணை 380வது பாடல், பரத்தை சேரியிலிருந்து மீளும் தலைவன் தன் வீட்டிற்குள் நுழைய முனைகிறான். பாணன் தூதுவனாக நின்று ஒப்புதல் வேண்டுகிறான். தலைவி நிலை நின்று ஒப்புதல் தரமறுத்து தோழி பாடுவதாக அமைகின்றது. தோழிக்கூற்றாக வரும் பாடலில், பாணன் யாழ் வாசிப்பதில் வல்லவன் என்பதை சொல்லுவதாக வருகின்ற,’…பொன் புரை நரம்பின் இன் குரல் சீறியாழ் எழாஅல் வல்லை ஆயினும், தொழாஅல்…’ என்ற அடிகள், யாழ் தொடர்பான செய்திகளைத் தருவதாக அமைகின்றது.


சங்க புறத்திணைப் பாடல்களிலும், இசைகருவிகளின் பயன்பாடுத் தொடர்பாக ஏராளமானத் தகவல்களை பெற்றுக் கொள்ள முடிகின்றது. போர்க்களத்திலே தடாரிப்பறைக் கொட்டிய செய்திகளும், பறையோசைக் கேட்டு தன்மகனை போர்க்களம் நோக்கி அனுப்பிய செய்திகளும் புறநானூற்றில் காணப்படுகின்றன. இவைத்தவிர, கொட்டு, முழவு, குழல் போன்ற இன்னப்பிற இசைக்கருவிகளின் பயன்பாடுகள் சங்ககாலத்திலே, செல்வாக்குப் பெற்றிருந்ததை, சங்க அகத்திணைப்புறத்திணை பாடல்களை ஆய்ந்தறிந்து அணுகுகின்ற போது அறிந்துக் கொள்ள முடிகின்றது. சங்க இலக்கியங்களில், ஆம்பல்பண், காஞ்சிப்பண், குறிஞ்சிப் பண், நைவளம் போன்ற பண்பக் தொடர்பான குறிப்புகளும் காணப்படுகி;ன்றன.


ஆம்பல் பண் தொடர்பானச் செய்திகள், நற்றிண, ஜங்குறுறூறு, குறிஞ்சிப்பாட்டு, ஆகிய இலக்கியங்களில் காணப்படுகின்றன. காஞ்சிப்பண் என்பது, துயரும் மக்களின் துயறாற்றப் பயன்படுத்தப்பட்டதாக அறியமுடிகின்றது. புறநானூறு 296 வது பாடலில் இதற்கான சான்றாதாரங்களைக் காண முடியும். குறிஞ்சிப்பண் மலையிற்கண் உறையும் தெய்வங்களை பாடப்பயன்பட்டதாக மலைப்படுகடாம் சான்றுபகருகின்றது. நைவளம் எனும் பண் குறித்து, குறிஞ்சிப்பாட்டு, சிறுபாணாற்றுப்படை, பரிபாடல் போன்ற இலக்கியங்களில் சான்றாதாரங்கள் காணப்படுகின்றன. இவைத்தவிர, குறிஞ்சி, செவ்வழி, பஞ்சுரம், படுமலை, பாலை, மருதம், விளரி போன்ற பண்கள் தொடர்பான குறிப்புகளும் சங்கஇலக்கியங்களில் காணப்படுவதாகக் குறிப்பிடப்படுகின்றது.


தமிழிலிலே பழம்பெரும் இலக்கணநூலாகக் கொள்ளப்படுகின்ற, தொல்காப்பியத்திலும் இசைத் தொடர்பான ஏராளமான செய்திகளை அறிந்துக் கொள்ள முடிகின்றது. தொல்காப்பியம் அகத்திணையில் தொடர்பாகக் குறிப்பிடுகின்ற போது இத்தகைய இசைக்கருவிகள் தொடர்பான செய்திகள் கிடைக்கப்பெறுகின்றன.
முத்தமிழ் காப்பியமாகவும், குடிமக்கள் காப்பியமாகவும் குறிப்பிடப்படுகின்ற சிலப்பதிகாரத்தில், இசைத் தொடர்பானக் குறிப்புகள் என்று பார்க்கின்றபோது,ஆய்ச்சியர்குரவையில் வருகின்ற
‘ஆங்கு
தொழுவிடைஏறு குறித்து
வளர்த்தார்
எழுவர் இளங் கோதையார்
என்று தன் மகளை நோக்கி
தொன்று படு முறையான்
நிறுத்தி,
இடைமுதுமகள் இவர்க்குப்
படைத்துக்கோள் பெயர்
இடுவாள்
குடமுதல் இடமுறையா, குரல்,
துத்தம்,
கைக்கிளை, உழை, இளி,
விளரி, தாரம், என…’
என்ற பாடல் குரல், துத்தம், கைக்கிளை, உழை, இளி, விளரி, தாரம் எனும் ஏழுசுரஇசைத்தொடர்பானச் செய்திகளைத் தருவதாக அமைகின்றது. அரங்கேற்றுக்காதையில், மாதவி அரங்கேற்றம் தொடர்பாகக் குறிப்பிடுகின்ற போது, இசைஆசான் இலக்கணம் தொடர்பாக விளக்கப்படுகின்றது.
‘யாழும் குழலும் சீறும் மிடறும்
தாழ் குரல் தண்ணுமை, ஆடலொடு…’
என்ற அடிகளின் ஊடாக, இசையோன் யாழ், குழல் ஆகிய இசைகளை அறிந்திருக்க வேண்டும் என்ற செய்தி வெளிப்படுத்தப்படுகின்றது.

மாதவியின் அரங்கேற்றத்தில், தண்ணுமை இசை, முழவின் இசை ஆகியவற்றின் இசையோடு பொருந்தி வருமாறு குழலிசை வாசிக்கப்பட்டச் செய்திகளும் காணப்படுகின்றன. ‘…பண் அமை முழவின் கண் எறி அறிந்து,ஃ தண்ணுமை முதல்வன் – தன்னொடும் பொருந்தி…’ என்ற அடிகள் இதனை வெளிப்படுத்தி நிற்கின்றன.
தலைக்கோல் ஊர்வலமாக எடுத்துவரப்பட்ட செய்தியினை சிலப்பதிகாரம் அரங்கேற்றுக்காதை வெளிப்படுத்தி நிற்கின்றது. இவ்விடத்திலும், இசைகருவிகள் தொடர்பான செய்திகள் இடம்பெறுவதை அவதானிக்க முடிகின்றது. ‘…முரசு எழுந்து இயம்ப, பல் இயம்ப ஆர்ப்ப, அரைசொடு பட்டஐம் பெருங்குழுவும்…’ என்ற அடிகளில் முரசுகள் முழங்கிய செய்தியும், பல்வேறு இசைக்கருவிகள் இசைக்கப்பட்ட செய்திகளும் இடம்பெறுவதை அவதானிக்கலாம்.


மாதவி அரங்கில் இசைக்கருவிகள், இசைக்கப்பட்ட முறையினை ‘குரல்வழி நின்றது யாழே; யாழ் வழித் தண்ணுமை நின்றது தகவே; தண்ணுமைப் பின்வழி நின்றது முழவே; முழவொடு கூடி நின்று இசைத்தது ஆழந்திரிகை..’என்ற அடிகளின்வழி மிகதுள்ளியமாக அறிந்துக் கொள்ள முடியும். இவ்வாறு சிலப்பதிகார அரங்கேற்றுக்காதை வழி மாத்திரம் தெரியவருகின்ற இசைத் தொடர்பான குறிப்புகள் எண்ணிலடங்காதவையாக அமைகின்றன.
இசை என்பது, பொதுவெளியில், உணர்வுகளின் வெளிப்பாடாகக் கொள்ளப்பட்டாலும்,இசை அறிவியக்கமாக தொழிற்பட்ட, தொழிற்படுகின்ற நிலையையும் அவதானிக்க முடிகின்றது.

இவ்வகையில், சங்க இலக்கியங்கள் வழியும், தொல்காப்பியம், சிலப்பதிகாரம் முதலிய இலக்கண,இலக்கியங்கள்வழியும் தமிழர் இசைத் தொடர்பாக குறிப்பாக, ஆதித்தமிழர் இசைத் தொடர்பாக ஏராளமானத் தகவல்களை அறிந்துக் கொள்ளமுடிகின்றதுடன், அறிவியக்கமாகச் செயற்பட்டமையையும் நன்கு உணர்ந்துக் கொள்ள முடியும். முத்தமிழ் சிறப்பினை உடைய தமிழிலே, இசைத்தமிழ்வழி தெரியவருகின்ற, தமிழர்த் தொன்மம் என்பது, தமிழ்மொழியினதும், தமிழரினதும் ஆதிப்பண்பாட்டின் அடையாளமாக நின்று வெளிப்படுவதை அறியக்கூடியதாக இருக்கின்றது.


இரா.சுலக்ஷனா,
நுண்கலைத்துறை,
கிழக்குப்பல்கலைக்கழகம்.

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More