Home இலங்கை உலக தாய்மொழி தினம், சில சிந்தனைகள்! பேராசிரியர். சி. மௌனகுரு.

உலக தாய்மொழி தினம், சில சிந்தனைகள்! பேராசிரியர். சி. மௌனகுரு.

by admin

உலகதாய் மொழிதினத்தை தமிழ் மொழிதினமாக கொண்டாடி மகிழ்ந்து போயிருக்கிறார்கள். தமிழ்மக்கள். தமிழுணர்ச்சியை இளம் சிறார் மத்தியிலும் பொதுமக்கள் மத்தியிலும் கொண்டு செல்வதாகவும் தமிழ் இசையை முன்னெடுப்பதாகவும், தமிழுக்குத் தொண்டுசெய்வோரை பாராட்டுவதாகவும் சில முன்னெடுப்புகள் நடந்துமுள்ளன.

வெளியில் கொண்டாட முடியாதவர்கள் வீட்டில் கொண்டாடி மகிழ்ந்து அவற்றை தமது முகநூலில் பதிந்துமுள்ளனர்.
மகிழ்ச்சிகரமாகவும் உணர்ச்சிகரமாகவும் ஒருநாள் கழிந்துள்ளது. அதுமிகவும் நல்லதே.


தமிழ் மொழியின் பெருமையை மேலும் மேலும் உரக்க சொல்வதாகவும் ஆரவாரமாகவும் முடிந்திருக்கிறது உலக தாய்மொழி தினம். உலக தாய் மொழி தினத்தை முன்னிட்டு உணர்ச்சிகரமான எழுத்துகளும், கொண்டாட்டங்களும், முக்கியமாகத் தமிழர் மத்தியிலிருந்து வந்தன என முகநூல் பதிவுகள் காட்டிநிற்கின்றன. அதற்கான ஒரு சமகாலத் தேவையுமுண்டு. அதனை நாம்புரிந்து கொள்ளலாம். ஏனைய மொழியினரும் முக்கியமாக அடக்கப்படும் சிறுபான்மை மொழி பேசுவோரும் கூட இத்தினத்தைக் கொண்டாடியிருபார்கள்
முதலில் இந்த உலக தாய்மொழிதினம் என்ன என்பதனையும்
அது ஏன் ஐக்கியநாடுகள் சபையினால் ஒருதினமாகப் பிரகடனப்படுத்தப்பட்டது என்பதையும் அதன்நோக்கம் என்ன என்பதனையும் பார்போம்

உலகதாய்மொழிதினம்தோன்றியவரலாறு
-பாகிஸ்தான் 1947 ஆம்ஆண்டில் உருவாக்கப்பட்டது. கிழக்கில் இஸ்லாமியர் அதிகமாக வாழ்ந்த கிழக்கு வங்காளமும் இந்தியாவின், மேற்கில் இஸ்லாமியர் வாழ்ந்த பாக்கிஸ்தானும் இணைக்கப்பட்டன. இவ்வண்ணம் மத, ( இஸ்லாம்) இன (முஸ்லிம்கள்) அடிப்படையில் இரு வெவ்வேறு பகுதிகள் ஓன்றாக இணைக்கப்பட்டு பாக்கிஸ்தான் எனும் ஒருநாடு உருவாக்கப்பட்டது.


மேற்கு பாகிஸ்தான் மக்கள் மொழி உருது கிழக்கு பாகிஸ்தான் மக்கள் மொழி வங்காளம் 1948 ஆம் ஆண்டின் அப்போதைய பாக்கிஸ்தான் அரசு உருது மொழியை பாக்கிஸ்தானின் ஒரே தேசிய மொழியாக அறிவித்தது.


இதற்கு கிழக்கு பாக்கிஸ் தான்மக்களால் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது வங்காள மொழி வளர்ச்சி பெற்ற மொழியாகவும் இலக்கிய வெளிப்பாட்டு மொழியாகவும் இருந்தமையினால் வங்காள மொழி பற்றிய பெருமித உணர்வு வங்காள முஸ்லிம் மக்களிடம் இருந்தமையுமொரு காரணமாகும்.


வங்காள மொழி பேசிய இந்த கிழக்கு பாக்கிஸ்தான் மக்கள் அவர்களது தாய் மொழியான வங்காள மொழியைக் குறைந்த பட்சம் தேசிய மொழிகளில் ஒன்றாக அறிவிக்க வேண்டுமென்று கோரினார்கள்.


பாகிஸ்தான் உருது மொழி அரசு அதனைக் காதில் போட்டுக் கொள்ளவில்லை பிறகென்ன? மொழிப் போராட்டம் வெடித்தது
டக்கா பல்கலைக்கழக மாணவர்கள் பொதுமக்களின் ஆதரவுடன், பாரிய பேரணிகளையும் கூட்டங்களையும் ஏற்பாடு செய்தனர்.
போராட்டத்தை முடக்குவதற்காக பாக்கிஸ்தான் அரசாங்கம் பொதுக் கூட்டத்தையும் பேரணிகளையும் தடைசெய்தது
தடையை மீறி மாணவர் ஊர்வலம் நடத்தினர். அடக்கு முறை அரசு மாண்வர் மீது துப்பாக்கிப் பிரயோகம் செய்தது இது நடந்தது 1952 ஆம்ஆண்டுபிப்ரவரி 21 ஆம்திகதி காவல்துறை நடத்திய துப்பாக்கிச் சூட்டினால் சலாம் பர்கட், ரபீக், ஜபார் மற்றும் ஷபியூர்
ஆகிய மாணவர்கள் கொல்லப்பட்டனர்.


மேலும் நூற்றுக்கணக்கானோர் காயமடைந்தனர். தாய் மொழிக்காக தங்கள் உயிரைத் தியாகம் செய்த இந்த சம்பவம் வரலாற்றில் பதியப்பட்ட அரியசம்பவங்களில் ஒன்றாகும்.
அவர்கள் இஸ்லாம் மதத்தினராயினும் தமது தாய் மொழியாக வங்காள மொழியையே வரித்திருந்தனர்.


அன்றிலிருந்து வங்காள தேசத்தினர் பன்னாட்டு தாய்மொழி தினத்தை துக்கநாளாக அனுஷ்டிக்கின்றனர். உயிர்நீத்த தியாகிகளை கௌரவிப்பதற்காக ஷாஹித்மினார் நினைவு சின்னத்திற்கு சென்று தியாகிகளுக்கு தங்கள் ஆழ்ந்த துக்கத்தையும் நன்றியையும் தெரிவிக்கின்றனர். வங்காள தேசத்தில் பன்னாட்டு தாய்மொழிதினம் தேசியவிடு முறைதினமாகும்.


1998 ஆம் ஆணடில் கனடாவில் வசிக்கும் வங்காளதேசத்தினரான
ரபீகுல் இஸ்லாம் என்பவர் அன்றைய ஐ.நாபொதுச் செயலாளரான கோபி அன்னானுக்கு உலக மொழிகளை அழிவிலிருந்து காப்பாற்ற பன்னாட்டு தாய்மொழி தினத்தை அறிவிக்குமாறு கடிதம் மூலம் வேண்டுகோள் விடுத்தார்.


டக்கா படுகொலைகளை நினைவுகூரும் வகையில் பிப்ரவரி 21 ஆம் திகதியை பன்னாட்டு தாய்மொழி தினமாக அறிவிக்க வேண்டுமென முன்மொழிந்தார். இப்படி, தமது தாய்மொழிக்காகத் தம் முயிர்ஈந்த அந்த இஸ்லாமிய மாணவரே இதன் விதைகளாவர். அந்தவிதைகளே இன்று விருட்சங்களாக முளைத்துள்ளன, உலமெங்கணும் தாய் மொழிதினம் கொண்டாடப்படுகின்றது

பிரகடனமும் நோக்கமும்

1999 ஆம் ஆண்டு ஐக்கிய நாடுகள் பண்பாட்டு நிறுவனம் இந்நாளை அனைத்து உலக தாய்மொழிதினமாக அறிவித்தது. அப்படி அறிவித்த போது அந்நாளின் நோக்கையும் தெளிவாகக் கூறியிருந்தது.

தனித்துவம் பேணுதலும் மற்றவரைப் புரிந்து கொள்ளலும்

பல்வேறு சமூகங்களின் மொழிபண்பாட்டுத் தனித்துவங்களைப் பேணுதலுடன் அவற்றிற்கிடையே ஒற்றுமையையும் உருவாக்குதலுமே அந்ததினத்தின் நோக்கம் ஆகும். இந்தவிழா 2000 ஆம் ஆண்டு முதல் கொண்டு கொண்டாடப்பட்டு வருகின்றது
2013 இல் யுனெஸ்கோ தாய்மொழி நூல்களும் எண்ணிம பாடநூல்களும் என்றவோர்கருத்தரங்கையும் நடத்தியது
இந்தப் பெரு நோக்கம் அதாவது பல்வேறு சமூகங்களின் மொழிப் பண்பாட்டுக்கிடையே ஒற்றுமையை உருவாக்குதல் எனும் உயரிய நோக்கம் இந்த தாய்மொழிநாளில் நிறைவேற்றப்படுகிறதா? என்பது கேள்விக்குரியது. ஓவ்வொரு மொழியும் அது செம்மொழியாயினும் செம்மையற்ற மொழி ஆயினும் அது அது அதனளவில் சிறப்புடையதே தன்னளவில் பலம் உடையதே. மனிதரில் ஏற்றத்தாழ்வு இல்லை என்பது போல மொழிகளிலும் ஏற்றத்தாழ்வுஇல்லை இந்த மொழிச் சமத்துவ மனோபாங்கை உலகமக்கள் அனைவரிடமும் கொண்டுவருவதே இந்தநாளின் உயிர்நாடியாகும்.

தாய் மொழிக் கல்வி கற்பிக்கும் நாடுகள் சில

பின்வரும் நாடுகளிலே அவ்வந் நாட்டின் தாய்மொழியில் கல்வி கற்பிக்கப்படுகின்றது
அமரிக்கா – ஆங்கிலமொழி
ஐக்கியராச்சியம்- ஆங்கிலமொழி
ஜேர்மனி– ஜேர்மானியமொழி
பிரான்ஸ் –பிரான்சியமொழி
சீனா- சீனமொழி
ஜப்பான்- ஜப்பானியமொழி
நோர்வே — நோர்வீஜியன்மொழி
தென்கொரியா—கொரியமொழி
ஐக்கியஅரபுஎமிரேட்- அரபுமொழி
குவைத்— அரபுமொழி
பின்லாந்து- சுவீடிஸ்மொழி
கியூபா –கியூபன்ஸ்பானிஷ்

மொழி பேசுவதற்கான ஊடகம் மாத்திரமல்ல அது பண்பாட்டின் குறியீடுமாகும்.

தாய் மொழியில் கல்விபயிலுதல் மிக அவசியமாகும். மொழி என்பது பேசுவதற்கு தொடர்பு கொள்வதற்கான கருவி மாத்திரமன்று அது ஒரு பண்பாட்டின் குறியீடு என்பதுடன் அது அச்சமூகத்தின் சிந்தனையின் குறியீடுமாகும். தாய்மொழியில் பயின்றதனால் ஒவ்வொரு நாடுகளும் கண்டு பிடித்த கண்டு பிடிப்புகளின் தன்மையினை கீழ்வரும் அட்டவணை விளக்கும்
அமெரிக்கர்—447 கண்டுபிடிப்புகள்
சீனர்201 கண்டுபிடிப்புகள்
ஜேர்மானியர்- 201கண்டுபிடிப்புகள்
ரஸ்யர் – 276 கண்டுபிடிப்புகள்
இந்தியர் – 57 கண்டு பிடிப்புகள் (அதுவும் ஆங்கிலேயர் வருமுன்)
ஆங்கிலம் கல்வி மொழியாக இந்தியாவுக்கு வராதகாலதில் தான் இந்திய தாய்மொழிகள் பெரும் சாதனைகள் புரிந்திருந்தன,
மேற்கு புகுத்திய நவீனம் வருவதற்கு முன்தான் இந்தியாவில் தத்தம் மொழி பேசிய இந்திய மக்கள் தத்தம் மொழியில் சிந்தித்து உலகம் வியக்கும் கட்டிடங்கள் கட்டினர். விஞ்ஞானம் கண்டு பிடித்தனர், போர்க்கலை, வைத்தியம், வானசாஸ்திரம், ஆட்சிக்கலை(அரசியல்,)
சிற்பம், ஓவியம், இசை, இலக்கணம், இலக்கியம், தத்துவ உரையாடல், இன்பம், நடனம் ஆகியவற்றில் பெரும் அறிஞர்களாக வலம்வந்தனர். தத்தம் தாய் மொழியில் சிந்தித்தமியினாலேயே இது அவர்களுக்குச் சித்தியாயிற்று, தமிழர்களும் அவ்வகையில் பெருமொழியும் பெரும் பாரம்பரியமும் கொண்டஓர்இனம்ஆகும்
உலகில்செம்மொழிகளாக 6 மொழிகளைக்குறிப்பிடுவர்,
அவையாவன தமிழ், சீனம், சமஸ்கிருதம், கிரேக்கம், லத்தீன், ஹீப்ரு
இவற்றுள் முன்னைய இரு மொழிகளான தமிழும் சீனமும் பண்டுதொட்டு இன்றுவரை வழக்கிலிருந்து வருபவை
அதனால்அவை வழக்கொழியாச் செம்மொழிகளாயின. சீன தமிழ் உறவு பண்டு தொட்ட உறவு என்பதனை பலரும்அறியார்
சீனமும்தமிழும்தவிரஏனையவைவழகொழிந்தவை.
ஹீப்ருவை யூதர்வாழும் மொழியாக்க உழைக்கின்றனர்.
இந்தப் பின்னணியில் நாம் உலகத் தாய் மொழிதினத்தை அணுகுதலும் புரிதலும் செயற்படலும் பயனுள்ள செயற்பாடாக அமையும். தமிழ் மொழி என்றவுடன் அதன் இலக்கண இலக்கியங்கள் அதுகூறும் சமயம் பண்பாடு என்ற கருத்துருவே நம்முன் எழுகின்றது.


மொழி ஒரு சமூகத்தின் வெளிப்பாடு சமூகம் இன்றி மொழியில்லை சமூகத்தின் தேவைகள் அச்சமூகத்தின் பண்பாட்டை நிணயிக்கின்றன, அவற்றின் கூட்டுமொத்த குறியீடாக மொழி மேற்கிளம்புகிறது. ஏன் மொழி வழக்கு காலம் தோறும் மாறுகிறதெனில் சமூகம் மாறுகிறது எனவே மொழியும் மாறுகிறது என நாம் விடை கூறலாம் பிற பண்பாட்டுக் கலப்பும் மொழியில் மாற்றங்களை கொணரும். மிக வலிமையான பண்பாட்டில் கட்டி எழுப்பப்படும் ஒருமொழி பிற பண்பாடுகளோடு கரைந்துவிடாது. அவற்றைத் தன்வயமாக்கி வலிமை பெற்று மேலெழுந்து நிற்கும் தமிழ் மொழிக்கும் சீன மொழிக்கும் இப்பண்பு இருந்தமையினாலே தான் இவை இரண்டும் அறாது தொடர்ந்தும் நிலைத்து நிற்கின்றன

தமிழ் மொழி சந்தித்த முப்பெரும் மொழிகளும் பல பண்பாடும்

மூன்று பெரும் மொழிகளையும் பலபண்பாடுகளையும் சந்தித்த மொழி தமிழ் மொழி ஒன்று கி,பி இருந்து வேகமாக ஊடுருவிய ஆரியப் பண்பாடும் சமஸ்கிருத மொழியும் இரண்டுகி,பி 13 ஆம்நூற்றாண்டில் தமிழகம் வந்த அராபிய மொழியும் இஸ்லாம்
இன்னொன்று கி, பி 18 ஆம் நூற்றாண்டுக்கு பின் ஊடுருவிய ஐரோப்பியப் பண்பாடும் ஆங்கில மொழியும் இப்போது அம் மொழி பல மொழிகளையும் பலபண்பாடுகளையும் அத்தோடு மிக நவீன தொழில் நுட்பபண்பாட்டையும் சந்திக்கிறது சமஸ்கிருத மொழியையும் அப்பண்பாட்டையும் தன்வயமாக்கிகொண்டும்
ஐரோப்பியபண்பாட்டையும்ஆங்கிலமொழியையும்தன்வயமாக்கிகொண்டும்குன்றாதஇளமையுடன்இன்றும்உள்ளஇம்மொழி
நவீனசவாலையும்எதிர்கொண்டுமேலும்செல்லும்என்பதுநமதுஎதிர்பார்ப்பு

திராவிட மொழிக் குடும்பமும் தமிழும்

திராவிட மொழிகளில் கால்ட்வெல் ஆராய்ந்த போதுதான் தமிழ் மொழியின் தனித்துவம் உலக அரங்கில் தெரியவந்தது.

அதுவரை அது சம்ஸ்கிருதத்திலிருந்து வந்த மொழி என்ற கருத்துருவே பெரும்பாலும் நிலவியது. கால்டுவெல்லின் ஒப்பிலக்கணமும் 19ஆம்நூற்றாண்டில் அச்சில் ஏறிய தமிழின் இலக்கண இலக்கிய சமயநூல்களும் இக்கூற்றைப் பொய்யாக்கின
திராவிட மொழிகளுள் திருந்திய மொழிகளாக தமிழ் தெலுங்கு மலையாளம் கன்னடம் ஆகியவற்றையும் திருந்தாத மொழிகளுள் சிலமொழிகளையும் எடுத்துக் காட்டினார் கால்டுவெல்
இவற்றுள்
தெலுங்கு 7 கோடி 50லடசம்மக்களாலும்
தமிழ் 7 கோடி 80லட்சம்மக்களாலும்
கன்னடம் 3 கோடி 80 லட்சம்மக்களாலும்
மலையாளம் 3 கோடி 80 லட்சம்மக்களாலும்
பேசப்படுகிறதுஎனஅறிகிறோம்.
தமிழ் மொழி எழுத்து கண்டு இலக்கியம் கண்டு வளர்ந்த மொழி ஆனால் தமிழ்நாட்டில் எழுத்து காணாது பேச்சில் இருக்கும் தமிழ் மொழியும் உள்ளது. இதனை நாம் புராதன தமிழ்மொழி என அழைப்பதில் தவறில்லை இதில் தமிழ்நாட்டில் படுகமொழி 4 லட்சம் பேராலும் குறும்பர்மொழி 2 லட்சத்து 20ஆயிரம்பேராலும்
காணிக்காரர்மொழி 19000 பேராலும்
இருளர் மொழி 14500 பேராலும்
தோடர் மொழி 1100 பேராலும்
கோத்தர் மொழி 900பேராலும்
பேசப்படுகிறது என ஒரு புள்ளிவிபரம் காட்டுகிறது
இதிலிருந்து நாம் அறிவதுயாதெனில் தமிழ் மொழியின் கிளை மொழிகள் பேசும் குழுவினர் தமிழர் மத்தியில் உள்ளனர் என்பதே
அம் மொழிகள் அவர்களின் தாய்மொழிகளே. அவர்கள் அம் மொழியிலேயே சிந்திப்பர். அம்மொழி அவர்களின் பண்பாட்டு மொழியுமாகும் தாய் மொழிதினம் கொண்டாடும் நாம் இவர்களின் மொழியையும் புரிந்து கொள்ள வேண்டும் கொண்டாடவும் வேண்டும் அதுவே தாய்மொழிதின கொண்டாட்டமுமாகும். இலங்கையிலும் புராதன குடிகளிடமும் தமிழ்பேசும் வழக்கமுண்டு, கிழக்கு மாகாணத்தில் தமிழ்பேசும்வோரிடம் இதனைக் காணுகின்றோம். அவ்ர்கள் பேசும் மொழியும் ஒருவகையில் இலங்கைத் தமிழ்மொழியே

தமிழ்நாட்டிலும்இலங்கையிலும்தமிழ்மொழி

தமிழ்நாட்டின் அரசியலிலும் இலங்கை அரசியலிலும் மொழியுணர்வு பிரதான பங்கு வகித்து வந்துள்ளது. தமிழ்நாட்டில் இந்தித் திணிப்பை எதிர்த்தும் இலங்கையில் சிங்கள மொழித் திணிப்பை எதிர்த்தும் நடத்தப்பட்ட போராட்டங்களில் தமிழ் இளைஞர்கள் தம் உயிர் இழந்தனர் உடமை இழந்தனர் இரு நாடுகளிலும்அவர்கள் தமிழுணர்ச்சி பெற்றனர். தமிழ் உணர்ச்சியினடியாக தமிழை அணுகினர் பல மொழிப் போராட்டங்களை இரண்டு நாட்டுத் தமிழர்களும் எதிர்கொண்டனர்.

இதனால் அறிவுரீதியாக மொழியை அணுகும் நிலைமாறி உணர்ச்சிபூர்வமாக மொழியை அணுகும் போக்கும் உருவானது. தமிழுணர்ச்சி அரசியலும் தமிழ் உணர்ச்சி எழுத்துகளும் அதிகமாக வரத் தொடங்கின தமிழை உணர்வுரீதியாக அணுகும் போக்கே அதிகமானது.


அதுகாலத்தின் தேவை போலவும் இருந்தது. படிமன்றங்களும் பேச்சு மேடைகளும்தமிழ்விழாக்களும்எரியும்தமிழுணர்ச்சிக்குமேலும்எண்ணைவார்த்தன, உரமூட்டின. மனிதர் அறிவுஜீவியா உணர்வுஜீவியா? என ஓர்வினா எழுப்பினால் அதற்கான பதில் முதலில் அவர்கள் உணர்வுஜீவிகள். பின்னரே அறிவுஜீவிகள் என்பதுவேயாகும் உணர்ச்சி ஜீவித்தனம் பலவற்றை மறைத்துவிடும், நம்மொழியே சிறந்த மொழி ஏனையவை எம்மிலும் தாழ்ந்த மொழி எனும் மனோபாங்கைக் கொண்டு வந்துவிடும். மொழிவெறியும் தோன்றிவிடும்.


அறிவுஜீவித்தனம் உண்மையை வெளிகொணரும். மொழிகளை அறியவும் தமிழ்மொழியை ஏனைய மொழிகளோடு ஒப்பிட்டு பார்க்கவுமான பக்குவத்தைக் கொடுக்கும் தாய்மொழிதினத்தில் நம் மொழியின் தனித்துவம் பேசுவோம். பிறமொழிகளின் தனித்துவத்தையும் போற்றுவோம். எழுத்து மொழியின்றி பேச்சு மொழியில் மாத்திரம் இருக்கும் மொழிகளுக்கும் சமத்துவமளிப்போம் அம்மொழி பேசுவோரின் பண்பாட்டையும் பேணுவதற்கு உதவுவோம் சர்வதேச தாய்மொழிதினத்தை உருவாகியோரின் நோக்கமும் இதுவேயாகும்
நமது நோக்கமும் அதுவே ஆகுக

Spread the love
 
 
      
pCloud Premium

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More