மஹர சிறைச்சாலையில் இடம்பெற்றதைப் போன்று, ஒரு படுகொலையை பூசா சிறைச்சாலையிலும் மேற்கொள்ள முயற்சிகள் முன்னெடுக்கப்படுகின்றதா என, கைதிகளின் உரிமைகளுக்காக குரல் கொடுக்கும் நாட்டின் முன்னணி குழு கேள்வி எழுப்பியுள்ளது.
பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்படுபவர்களை தடுத்து வைக்கப் பயன்படுத்தப்படும், பூசா சிறைச்சாலையை பாரதூரமான குற்றங்களை இழைத்தவர்களை தடுத்து வைப்பதற்கு பயன்படுத்துவதன் மூலமாக இந்த சந்தேகம் உருவாகியுள்ளது.
“மஹர சிறைச்சாலையைப் போன்று கைதிகளைத் தூண்டிவிட்டு ஏராளமான கைதிகளைக் கொல்லும் முயற்சியா இது என்ற சந்தேகம் எங்களுக்கு எழுந்துள்ளது.”
சிறைச்சாலைகளில் இடம்பெறும் படுகொலைகள் தொடர்பாக பல முன்னுதாரணங்கள் காணப்படுவதை, கடந்த வாரம் கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கைதிகளின் உரிமைகளைப் பாதுகாக்கும் குழுவின் பொதுச் செயலாளர் சுதேஷ் நந்திமல் சில்வா நினைவூட்டினார்.
பாரதூரமான குற்றங்களை இழைத்தவர்களாக கருதப்படும் குற்றவாளிகள், பூசா சிறைச்சாலையில் கைதிகள் தடுத்து வைக்கப்பட்டுள்ள விடயத்தை சுட்டிக்காட்டிய சுதேஷ் நந்திமால், அவர்களை கடுமையான குற்றவாளிகள் என பெயரிட்டு, சிறைச்சாலையில் இதுவரை அவர்களுக்கு முறையான உணவேனும் வழங்கப்படவில்லை என வலியுறுத்தியுள்ளார்.
“கைதிகளுக்கு சரியான உணவுகளை கொடுக்காமலும், அவர்களுக்குத் தேவையான மருந்துகளை கொடுக்காமலும் இருப்பதன் ஊடாகவும், அவர்களுக்கு அதிக அழுத்தம் கொடுக்கிறார்கள்.”
பூசா சிறைச்சாலையின் கைதிகள் மீது இத்தகைய அழுத்தம் கொடுக்கும் முயற்சியானது, கைதிகளைத் தூண்டி விடுவதற்கும், மஹர சிறைச்சாலையைப் போல ஏராளமான கைதிகளைக் கொலை செய்யும் முயற்சியா இதுவென சுதேஷ் நந்திமால் கேள்வி எழுப்பியுள்ளார்.
கைதிகளின் உரிமைகளைப் பாதுகாக்கும் குழுவின் பொதுச் செயலாளர் பூசா சிறைச்சாலைக்குள் இதுபோன்ற கொலைகள் இடம்பெற அனுமதிக்கக் கூடாது என அதிகாரிகளை வலியுறுத்தியதோடு, மஹர சிறைச்சாலையின் கைதிகளை கொலை செய்த கொலையாளிகளை உடனடியாக கைது செய்ய வேண்டும் எனவும் அழைப்பு விடுத்தார்.
பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட சந்தேகநபர்களுக்கான தடுப்பு மையமாக பூசா சிறைச்சாலையை, பயங்கரவாத விசாரணை பிரிவு பயன்படுத்தியதோடு, மைத்திரி- ரணில் ஆட்சியின் பிற்பகுதியில் பூசா சிறைச்சாலையில் இருந்து சந்தேகநபர்களை அகற்ற பயங்கரவாத விசாரணை பிரிவு நடவடிக்கை எடுத்திருந்தது.
பயங்கரவாத எதிர்ப்பு மற்றும் பயங்கரவாத புலனாய்வு பிரிவு தற்போது தங்காலையில் அமைந்துள்ள ஒரு தடுப்பு நிலையத்தை பயன்படுத்தி வருவதோடு, கொழும்பு மற்றும் வவுனியாவில் இந்தப் பிரிவின் ஏனைய இரு தடுப்பு நிலையங்களும் அமைந்துள்ளன.
மஹர சிறைச்சாலையில் நடந்த படுகொலையில் பதினொரு கைதிகள் கொலை செய்யப்பட்டதோடு, 100ற்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். உயிரிழந்த அனைவரும் துப்பாக்கிச் சூட்டில் கொல்லப்பட்டதாக நீதிமன்றத்தால் உறுதிப்படுத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது. #பூசா_சிறைச்சாலை #எச்சரிக்கை #மஹர_சிறைச்சாலை #படுகொலை #சுதேஷ்_நந்திமல்சில்வா #பயங்கரவாததடைச்சட்டம்