அறிமுகம்
இப்பூமியில் தமிழ் மொழியின் இருப்பிலும் வளர்ச்சியிலும் காத்திரமான தாக்கத்தைச் செலுத்தி வரும் கலை வடிவமாக இசை விளங்குகின்றது. காலனித்துவம் அறிமுகப்படுத்திய வசனநடை ஆதிக்கம் பெறுவதற்கு பல நூற்றாண்டுகள் முன்பிருந்தே வாய்மொழி வழக்காறுகள் ஊடாகவும் செவிவழி அறிகையூடாகவும் தமிழின் அறிவியல் பாரம்பரியம் செழுமையாகத் தொடரப்பட்டு வந்துள்ளமையினை நாட்டார் வழக்காற்றியல் ஆய்வுகள் வெளிப்படுத்தி நிற்கின்றன. இந்த வாய்மொழி மரபிற்கு அடிப்படையான மொழிப் பொறிமுறையாக சந்தம் ஒன்றிவரப் பாடுகின்ற, கதைக்கின்ற, உரைக்கின்ற இசை நுட்பம் செல்வாக்குச் செலுத்தி வருவதனைக் காணலாம். நமது பாரம்பரியமான அறிவுப் பொக்கிசங்களில் பெரும்பாலானவை இலகுவில் மனதில் பதியும் வகையிலான இசை வடிவத்திலேயே ஆக்கப்பட்டுள்ளமையினைக் கண்டு வருகின்றோம். இதன் காரணமாகவே எழுத்தறிவு அற்றவர்கள் பலர் நமது பாரம்பரியத்தில் துறைசார் விற்பன்னர்களாகத் திகழ்ந்தார்கள். வித்தைகளையும், வித்துவங்களையும், விஞ்ஞானத்தையும், வைத்தியத்தையும், வானசாஸ்திரத்தையும் இன்னுமின்னும் துறைசார் அறிவியல்கள் பலவற்றையும் இசை மொழியாக்கி செவிவழியாகக் கேட்டு மனதில் பதிவாக்கி சந்தர்ப்பத்திற்கும், தேவைக்குமேற்ப அவற்றை ஞாபகத்திற் கொணர்ந்து சாதிக்கும் வல்லமை கொண்டவர்களாக நமது பாரம்பரிய அறிஞர் பெருமக்கள் திகழ்ந்து வருகிறார்கள்.
பெரும்பாலும் இசைமொழி வழியாகக் கடத்தப்பட்டு வரும் பாரம்பரியமான அறிவுமுறைமைகள் தனியாள், குடும்பம், சமூகம் என்பவற்றின் நினைவுகளில் இருப்பதாகவும் அவை தேவைக்கேற்ப செயற்பாடுகள், ஆற்றுகைகள் ஊடாக புதுப்பிக்கப்பட்டவண்ணமாக இயக்கம் கொள்வதையும் அவதானிக்கலாம்.
காலனித்துவம் நம்மை ஆக்கிரமித்து புதிய வசன நடையினை அறிமுகப்படுத்தி அதனை வளர்த்தெடுத்த போதிலும் நமது பாரம்பரியமான இசைமொழி செயலிழந்து விடவில்லை மாறாக வசனநடைக்குச் சமதையாக இசைமொழியும் தனது பயணத்தைத் தொடர்ந்து வந்துள்ளது. குறிப்பாக வெகுமக்களிடம் இலகுவாகச் செய்திகளையும், சிந்தனைகளையும் கொண்டு சேர்க்கும் வல்லமை கொண்டவையாக இசைமொழியே விளங்கி வருகின்றது.
நவீன காலத்தில் சாதாரண பொது மக்களிடம் கருத்துக்களைக் கொண்டு செல்வதற்கும், சவால்களை எதிர்கொண்டு புரட்சி செய்வதற்கும் நாட்டார் இசை மொழியும் அதன் நுட்பங்களும் பொறி முறைகளும் மிகப் பிரதானமான பங்கினை வகித்துவருகின்றமையினை வரலாற்றில் கண்டு வருகின்றோம். தமிழில் அறிவியலை மக்கள் மயப்படுத்தவும், ஆதிக்கத்திற்கு எதிராக மக்களை அணி திரட்டல் செய்வதற்கும் இசை மொழியே கையாளப்பட்டுள்ளது.
சங்ககாலத்தில் பாடினியாக இயங்கிய ஒளவையாள், கபிலர், கணியன்பூங்குன்றன், காரைக்காலம்மையார், நாயன்மார்கள்;, ஆண்டாள், ஆழ்வார்கள், பாரதி, ஈழத்தில் மீனாட்சியம்பாளும் இன்னும் பலரும் என நீண்டு செல்லும் சிந்தனையாளர்களும் கலைஞர்களும் செயற்பாட்டாளர்களும் தத்தமது கருத்தியல்களை சாதாரண பொது மக்களிடையே கொண்டு செல்ல இசை மொழியினை பிரதான ஊடகமாகத் தெரிவு செய்துள்ளமையினை வரலாற்றில் கண்டு வருகின்றோம். சமகாலத்தில் செயல்வாத முன்னெடுப்புக்களில் இசை முக்கியத்துவம் பெற்றிருப்பதும் நடைமுறையாக இருக்கிறது.
காலனித்துவமும், நவீனமயமாக்கமும் வசனநடையில் கைதேர்ந்தாரை செம்மையாக்கி வலுப்படுத்தி சலுகைகள் வழங்கித் தமது அதிகார பீடங்களில் கொலுவிருத்தி அவர்களினூடாக மிகப்பெரும்பாலும் உள்ளுர் அறிவு முறைமைகளையும் உள்ளுர் ஆளுமைகளையும் படிப்பறிவற்றவர்களாகவும், பாமரர்களாகவும் கருத்துருவாக்கஞ் செய்து பண்பாட்டுப் படுகொலை புரிந்துவந்த சூழலில் உள்ளுர்ப் பண்பாடுகளையும், அவற்றின் அறிவு முறைமைகளையும் மக்கள் மயப்படுத்தி அவற்றின் உயிர்ப்புக் கெடாமல் பாதுகாத்து வந்ததில் உள்ளுர் இசைமொழியாளரின் பங்கு போற்றுதற்குரியது.
எழுத்தறிவற்றவர் பாமரர் என்ற நவீன காலனியக் கருத்தாக்கத்தின் மூலமாக நூற்றாண்டுகால, ஆயிரமாண்டுகால அறிவுப் பாரம்பரியங்களை அகற்றிவிட முடிந்திருக்கிறது. ஆனால் முற்றிலுமாக அழித்துவிட முடியவில்லை. நாம் விரும்பி ஏற்கும், கொண்டாடும் நவீன காலனியக் கல்வி மூலம் இது வலுவாகவும், நாகரிகமாகவும், வக்கிரமாகவும் அதிகாரமுறையில் முன்னெடுக்கப்பட்டு வருகின்ற பொழுதும், மக்கள் மைய சமூக மைய அறிவுருவாக்கத்தின் தேவை அவர்களது மொழியில் அவர்களிடம் நிகழ்ந்து கொண்டே வருகிறது. நவீன காலனிய அறிவின் போதாமை, இயலாமை, புரியாமை, அறியாமை எனப்பல காரணங்கள் விரும்பியும், விரும்பாமலும் வெளிப்படையாகவும், மறைவாகவும் உள்ளுர் அறிவு முறைகளுள் தஞ்சமடைய வேண்டிய தேவை வலுவாக இருந்துகொண்டேயிருக்கிறது. இது அதிகாரபூர்வமாக அல்லது அறிவு பூர்வமாக உரையாட விரும்பப்படாத, ஏற்றுக்கொள்ள முடியாத விடயமாகவே நவீன, காலனிய அறிவுலகில் காணப்படுகிறது.
எந்தவிதப் பதவியும், பட்டங்களும், சலுகைகளும், வாய்ப்புக்களும் இன்றித் தத்தமது சுயஉழைப்பின் மூலம் இசைமொழியால் மக்களிடம் செல்வாக்குப்பெற்ற கலைஞர்களாக இசைமொழியாளர்கள் திகழ்ந்துள்ளார்கள். இவர்களுடைய இசைமொழியால் புதிய பல விடயங்களைச் சாதாரண மக்களிடம் இவர்கள் கொண்டு சென்றார்கள். துன்பங்களும், சோகங்களும் சூழ்ந்த போதிலும் அவற்றுள் மூழ்கிடாமல் எதிர்நீச்சல் போடும் உளநல வலுவாக்கத்தை பெரும்பாலான மக்களுக்கு இத்தகைய இசைமொழியாளர் உண்டுபண்ணினார்கள்.
விசேடமாக சவால்கள் வரும்போது அந்தச் சவால்களை எதிர்கொள்ளும் மனப்பாங்கின் வலுவாக்கத்திற்கும், எதிர்வினைகளைப் பதிவாக்குவதற்கும் உள்ளுர் இசைமொழியாளர் உழைத்தனர். இத்தகைய உள்ளுர் இசைமொழியும் இதனைப் பிரயோகித்த செயற்பாட்டாளர்களும் கவனத்திற்குரியவர்களாகத் தெரிகின்றார்கள்.
இந்தவகையில் ஈழத்தில் தமிழிசையால் தமிழ் மொழியையும் தமிழ் பேசும் பண்பாடுகளையும் வலுப்படுத்தி வளப்படுத்தி இலைமறை காய்களாகவும் கனிகளாகவும் வாழ்ந்த, வாழ்ந்து வருகின்ற ஆளுமைகளையும் கலைஞர்களையும் இந்த 2021 ஆம் ஆண்டின் உலகத் தாய் மொழித் தினத்தில் கொண்டாடி மகிழ்வதற்கு மூன்றாவதுகண் நண்பர்கள் குழுவினர் விரும்புகின்றார்கள்.
இந்தவகையில் இத்தினத்தையொட்டி இத்தகு கலைஞர்களின் வரலாறுகளையும் வல்லமைகளையும் வெகுசன வெளியில் உரையாடலுக்குக் கொணரும் முயற்சிகள் முடிக்கிவிடப்பட்டுள்ளன.
இலங்கை வானொலியும் உள்ளுர் இசை மொழியும்
இலங்கையில் வாழுகின்ற தமிழ் பேசும் மக்களின் பல்வகைத்தன்மை கொண்ட இசை மொழியினை வலுப்படுத்தி வளப்படுத்துவதில் இலங்கை வானொலியின் பங்கு குறிப்பிடத்தக்கது. முற்றத்து மல்லிகை, நாடக மேடைப் பாடல்கள், இசை நாடகப்பாடல்கள், மெல்லிசைப் பாடல்கள், பொப் இசைப்பாடல்கள், நாட்டார் இசைப்பாடல்கள், பண்ணிசைப்பாடல்கள், களத்துமேட்டுப் பாடல்கள் எனத்தமிழின் பல்வகை இசை வகைகள் ஒலிபரப்பப்படுவதற்கான வாய்ப்பு வசதிகளை இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் தமிழ்ச்சேவை ஒலிபரப்புக்கள் வழங்கி வந்தன. இன்றைய சூழலில் தேசிய சேவையில் இத்தகைய ஒலிபரப்புக்கள் ஓரளவாகவேனும் நடைபெறுகின்றன.
இவ்வாறு தேசிய வானொலியில் உள்நாட்டுத் தமிழ் இசைக்கும் இசைக்கலைஞர்களுக்கும் வாய்ப்புக்கள் கிடைத்ததால் உள்ளுர் இசைக்கலைஞர்கள் வளம்பெறுவதற்கும் ஈழத்துத்தமிழிசை மரபுகள் தழைப்பதற்கும் ஏதுவாக இருந்தது. இதன்காரணமாகவே பெயர்பெற்ற உள்ளுர் இசைக் கலைஞர்களை இலங்கை வானொலி புகழ் என விளிக்கும் போக்கு நம்மிடையே பெருமைக்குரியதாக இருந்து வருகின்றது.
மூன்று தசாப்தப் போர்ச் சூழல் மற்றும் வெகுசன ஊடகங்களின் தனியார்மயப்படுகை என்பன இலங்கை வானொலியூடாக வளம்பெற்றுவந்த ஈழத்துத் தமிழிசையினைத் தேக்கமடையச் செய்துள்ளது. வணிகத்தை மையப்படுத்திய வானொலி கலாசாரம் தென்னிந்திய சினிமா இசையினைப் பரவலாக்கஞ் செய்து வருகின்றது. பொழுதுபோக்கு என்பதை கேளிக்கைக்குரியதாகவும், குத்துப்பாட்டுக் கேளிக்கையாகவும் வெகுசன இலத்திரனியல் ஊடகங்கள் கற்பிதஞ் செய்து வருகின்றன. இந்த உலகத்தை மீட்கமுடியாது என்று கருதப்படுமளவிற்கு இத்தகைய விடயங்கள் நமது வானலைகளை ஆக்கிரமித்து நிற்கின்றன. இந்த நிலையிலும் உள்ளுர் இசைக்கலைஞர்கள் சோர்ந்து போனாரில்லை சந்தர்ப்பங்கள் வாய்க்கும் போதும் வாய்ப்புக்கள் கிடைக்கும் போதும் ஈழத்து தமிழிசைப் பாடல்களைப் பாடும் தம் பயணத்தைத் தொடர்ந்து வருகின்றார்கள். அத்துடன் சந்தர்ப்பங்களையும், வாய்ப்புக்களையும் எதிர்பார்த்துக் காத்துக் கிடப்பவர்களாகவன்றி வாய்ப்புக்களை உருவாக்குனர்களாகவும் இத்தகைய இசைக்கலைஞர்கள் இயங்கி வருகின்றனர். உள்ளுர் இசைக்கலைஞர்களின் இசை மீதான அர்ப்பணிப்பும், ஆத்மார்த்த ஈடுபாடும், சுயமுயற்சியும், உள்ளுர் இசை இரசிகர்களின் ஆதரவும் இதற்கு ஆதாரமாக இருந்து வருவதனைக் காண முடிகின்றது.
கோவில் விழாக்களும், கொண்டாட்டங்களும் உள்ளுர் இசையும்
இலங்கையில் உள்ளுர்த் தமிழிசையினை வளர்ப்பதில் கோவில் விழாக்களும், பருவகாலக் கொண்டாட்டங்களும் காத்திரமான பங்களிப்புக்களை வழங்கி வருவதனைக் காண முடிகின்றது. பண்ணிசை, பாரம்பரிய இசை, சடங்கிசை, மெல்லிசை எனத்தமிழின் பல்வகை இசை வடிவங்கள் கோவில் விழாக்களிலும், கலை விழாக்களிலும் முக்கியத்துவம் பெற்று வருகின்றன. தாலாட்டு முதல் ஒப்பாரி வரையிலான வாழ்வியல் பாடல்களும் இங்கு செல்வாக்குச் செலுத்துகின்றன. இத்தகைய விழாக்களின் ஊடாக உள்ளுர் இசைக் கலைஞர்களை அடையாளங்காண முடிகின்றது.
இன்றைய இணையவழித் தொடர்பாடல் தொழில் நுட்பத்தினூடாக இத்தகைய உள்ளுர் இசைக்கலைஞர்கள் தமது வித்துவங்களை மேலும் வெளிப்படுத்திப் பகிர்வதற்கான வாய்ப்புக்கள் பெருகியுள்ளமையினை நாங்கள் கண்டு வருகின்றோம்.
குறிப்பாக உள்ளுர் வரலாறுகள், பெருமைகள், தனித்துவங்கள் எனப் பல்வேறு பாடுபொருள்கள் உள்ளுர்ப் புலவர்களால் ஆக்கப்பட்டுள்ள பின்புலத்தில் அவை பெரும்பாலும் எழுத்து வடிவத்தில் உறங்கிக் கொண்டிருந்த நிலையினை இன்றைய இலத்திரனியல் தொடர்பாடல்; தொழில் நுட்பத்தில் ஆர்வஞ்செலுத்திவரும் உள்ளுர் இசைக்கஞைர்களும், உள்ளுர் இசை ஆர்வலர்களும் மாற்றியமைத்துள்ளார்கள். அதாவது உள்ளுர்ப் புலவர்கள் பாடிய ஊரின் பெருமைகள், வரலாறுகள் கூறும் பாடல் வரிகளை இத்தகைய கலைஞர்களும், ஆர்வலர்களும் இசைப்பேழைகளாக்கி பொதுவெளியில் ஒலிபரப்பி வருவதையும், இணையத்தில் உலவவிட்டுள்ளமையினையும் காண்கின்றோம்.
இத்தகைய இசைக்கலைஞர்தம் பணிகள் பாராட்டுதலுக்குரியவை.
இத்தோடு நமது பாரம்பரிய இசை வடிவங்களையும், மெல்லிசை, பொப்பிசை வடிவங்களையும் அவற்றின் மெட்டுக்களையும், இசை நுட்பங்களையும் பயன்படுத்தி சமகாலச் சவால்களை எதிர்கொள்வதற்கான செயல்வாதங்களில் ஈடுபடும் செயற்பாட்டாளர்கள் செயல்வாதப் பாடல்களை உருவாக்கி அவற்றைத்தம் செயல்வாதங்களின் போது ஆடிப்பாடி ஆற்றுகை செய்து வருவதனையும் அவதானிக்க முடிகின்றது. உதாரணமாக பால்நிலைப்பாகுபாடுகளை இல்லாதொழிக்கும் நோக்குடன் ஆக்கப்பட்டுள்ள செயல்வாதப் பாடல்கள், இயற்கையின் சமநிலையினைக் கடைப்பிடிக்கக் கோரும் பாடல்கள், தெருவெளி அரங்கப் பாடல்கள், சிறுவர்களுக்கான பாடல்கள் என்று இவற்றின் வகைகள் பலவுள்ளன. இத்தகைய பாடல்கள் சமூகப்பங்குபற்றலையும், பாடலாக்கத்தையும் சாதாரணர்களாலும் மேற்கொள்ளக்கூடிய படைப்பாக்கமாக வலியுறுத்தி வருவதுடன், சமூகத் தொடர்பாடலில் இசையினை எளிமையானதாகவும் வலிமையுள்ளதாகவும் நிலைநிறுத்தியும் வருகின்றமை கவனத்திற்குரியது.
இவற்றுடன் ஈழத்துச் சினிமா இசை, பொப்பிசைப் பாடல்களை பொதுவெளிக்குக் கொண்டு வருகின்ற நிகழ்ச்சிகளும் நடந்து வருகின்றன.
சமகால உலகில் சமூக அரசியல் இயக்கங்களின் செயற்பாடுகளில் இசைமொழியின் பங்கு குறிப்பிடத்தக்கதாக இருந்து வருகின்றது. சிறு சிறு குழுக்களாக பல்வேறு வெளிகளில் ஆடிப்பாடி மக்கள் மையமாக நின்று ஒடுக்கு முறைகளுக்கு எதிராக ஆக்கபூர்வமான கருமங்களை முன்னெடுக்கும் செயல்வாதச் சாதனங்களுள் மிகமுக்கியமானதாக உள்ளுர் இசைமொழியும் அவற்றின் ஆற்றுகைகளும் விளங்கி வருகின்றன. இவை வலிமையான தாக்கத்தை ஏற்படுத்தி வருவதனையும் அவதானிக்க முடிகின்றது. ஆனால் அதிகாரம் செலுத்தும் பிரதான இலத்திரனியல் ஊடகங்களில் இத்தகைய இசைமொழிகளை விட்டு கேளிக்கை இசையும், குத்துப்பாட்டுக்களும் பிரதானப்படுத்தப்பட்டு புதிய தலைமுறைகளை அவற்றுள் கட்டுண்டு கிடக்கச்செய்யும் தந்திரோபாயம் தொடரப்பட்டு வருகின்றது. இத்தகைய ஆபத்தான சூழலில் உள்ளுர் இசைமொழியினையும் அவற்றின் பல்பரிமாணங்களையும் ஆக்கபூர்வமாக முன்னெடுக்கும் வகையில் சமூக வானொலிகளை இயங்கச்செய்தல், ஊர்வெளிகளில் சிறு சிறு குழுக்களாகப் பாடலாக்கங்கள் செய்தல், அத்தகைய பாடல்களை ஆற்றுகை செய்தல் முதலிய செயற்பாடுகளும், இத்தகைய இசைகளை ஒலிப்பேழைகளாக்கி பொதுவெளியில் பகிருதல் முதலிய நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
ஆகவே தமிழிசையால் தமிழின் பல்பரிமாணங்களை ஓங்கி உயர்த்தி வரும் உள்ளுர் இசைக்கலைஞர்களையும் அவர்தம் பணிகளையும் கவனத்திற்கொண்டு உலகதாய் மொழிகள் தினத்தில் அத்தகைய கலைஞர்களை வாழ்த்துவோம் மாண்பு செய்வோம். இது தொடர்பில் ஆக்கபூர்வமான கருமங்களை நடைமுறைப்படுத்துவோம்.
எங்கள் முற்றங்களில் எங்களின் பாடல்களை
அயலவர்களுடனும் உறவினர்களுடனும்
பாடிக்கொண்டேயிருப்போம் – நாங்கள்
பாடிக்கொண்டேயிருப்போம்
எங்களுக்காகவும் எல்லோருக்காகவும்
எங்களின் பாடல்களை எல்லோரதும் பாடல்களை – நாங்கள்
பாடிக்கொண்டேயிருப்போம்
எல்லோரும் எல்லாமும் வாழ்வாங்கு வாழ – நாங்கள்
பாடிக்கொண்டேயிருப்போம்
பாடுகின்ற எல்லோருடனும் சேர்ந்து – நாங்கள்
பாடிக்கொண்டேயிருப்போம்
கலாநிதி சி.ஜெயசங்கர், து.கௌரீஸ்வரன்