சிறுநீரக பாதிப்பு, குறைந்த ரத்த அழுத்தம் போன்றவற்றுக்கு சென்னை அரச மருத்துவமனையில் சிசிச்சை பெற்று வந்த இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மூத்த தலைவர் தா.பாண்டியன் இன்று சிகிச்சை பலனின்றி காலமானார்.
1989ல் மொஹித் சென், கல்யாணசுந்தரம், டாங்கே, சு. பழனிச்சாமி ஆகியோரோடு சேர்ந்து உருவாக்கிய ஐக்கிய கம்யூனிஸ்ட் கட்சியில் செயல்பட்ட தா. பாண்டியன் இந்த காலகட்டத்தில் காங்கிரசிற்கு நெருக்கமானவராக இருந்தார்.
ஐக்கிய கம்யூனிஸ்ட் கட்சியில் இருந்த போது அவா் 1989, 1991 என இரு முறை வடசென்னைத் தொகுதியில் காங்கிரஸ் கட்சியின் கைச் சின்னத்தில் போட்டியிட்டு நாடாளுமன்றத்திற்கு தொிவு வசெய்யப்பட்டார்.
ராஜீவ் காந்தி போன்ற மூத்த காங்கிரஸ் தலைவர்கள் தமிழ்நாடு வரும்போது அவர்களது பேச்சுகளை தா. பாண்டியனே மொழிபெயர்ப்பார். 1991 மே 21ஆம் திகதி ஸ்ரீ பெரும்புதூரில் ராஜீவ் காந்தி பேச வேண்டிய கூட்டத்திலும் இவரே மொழிபெயர்ப்பாளராக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிலையில் குண்டுவெடிப்பில் ராஜீவ் கொல்லப்பட, தா. பாண்டியனும் தூக்கி வீசப்பட்டு படுகாயமடைந்தார்.
2005ல் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலராகத் தேர்வுசெய்யப்பட்ட தா. பாண்டியன் மூன்று முறை தொடர்ச்சியாக அந்தப் பொறுப்பை வகித்ததுடன் கட்சியின் தேசியக் குழு உறுப்பினராகவும் இருந்தார். கட்சியின் இதழான ஜனசக்தியில் 16 ஆண்டு காலம் ஆசிரியராக இருந்தார் தா. பாண்டியன்.
ராஜீவ் காந்தி மரணத்திற்குப் பின்னா் கடுமையான விடுதலைப்புலிகள் எதிர்ப்பாளராக இருந்த தா. பாண்டியன், ஈழப் போரின் கடைசி நாட்களில் தன் நிலைப்பாட்டை மாற்றிக்கொண்டார் என்பதுடன் பெரும் எதிர்ப்புப் போராட்டத்தைச் சந்தித்த கூடங்குளம் அணு உலை திட்டத்திற்கும் ஆதரவளித்தாா் என்பது குறிப்பிடத்தக்கது. #பாண்டியன் #இந்தியகம்யூனிஸ்டுகட்சி #ராஜீவ்காந்தி #விடுதலைப்புலிகள்
.