உலகம் பிரதான செய்திகள்

சஹாரா பாலைவனப் புளுதியில் கதிரியக்கத் துகள்களும் கலப்பு !

கடந்த சில நாட்களாக பெரும்பாலான பகுதிகளில் வானம் வழமைக்கு மாறான வண்ணத்தில் தோன்றியது. செம்மஞ்சள் மற்றும் சிவப்பு நிறமாகக் காட்சி தந்தது. வானத்தின் நடந்த அதிசய மாற்றங் களைப் பலரும் ஆவலுடன் படம் பிடித்துப் பகிர்ந்திருந்தனர். ஆனால் அந்த அழகிய காட்சிகளோடு அணு ஆபத்தும் கலந்திருந்தது என்னும் செய்தி இப்போதுதான் வெளிவந்திருக்கிறது.

சில பல தசாப்தங்களுக்கு முன்னர் வல்லரசுகளால் நடத்தப்பட்ட அணுப் பரிசோதனைகளின் தாக்கங்கள் இன்னமும் சூழலைவிட்டு முற்றாக விலகிச் சென்றுவிடவில்லை.பிரான்ஸ் 1960 ஆம் ஆண்டுவாக்கில் ஆபிரிக்காவின் சஹாராவில் நடத்திய அணுகுண்டுப் பரிசோதனைகளின் விளைவாக மணலில் கலந்த கதிரியக்கம்அண்மையில் அங்கிருந்து அடித்த மணல் புயலுடன் (Sable du Sahara) சேர்ந்து பிரான்ஸை நோக்கித் திரும்பி வந்திருக்கிறது. அறுபது ஆண்டுகளுக்கு முந்திய அணு வெடிப்பு “பூமராங்” போன்று திருப்பித் தாக்கி இருக்கிறது. ஜரோப்பாவின் பெரும் பகுதிகள் மீது குறிப்பாக பிரான்ஸின் வான் மண்டலத்தில் கடந்த சில நாட்களாகப் பரந்து பரவிய சஹாரா மணல் புளுதியில் மிகக் குறைந்த அளவிலான கதிரியக்கத் துகள்கள் (Radioactive particles) கலந்திருந்தமை ஆய்வு மூலம் கண்டறியப்பட்டுள்ளது.

தனது கட்டுப்பாட்டில் இருந்த அல்ஜீரியா வின் தெற்குப் பாலைவனப் பகுதியில் பிரான்ஸ் தனது முதலாவது அணு குண்டுப் பரிசோதனையை பெப்ரவரி 13,1960 இல் நடத்தியது.சுமார் எழுபது தொன் கிலோ கொண்ட அந்த அணுகுண்டு 1945 இல் அமெரிக்கா ஜப்பான் மீது வீசிய அணுகுண்டுகளை விட மூன்று நான்கு மடங்கு பெரியது.பின்னர் 1960-1966 காலப்பகுதிக்கு இடையில் தொடர்ந்து மொத்தம் 17 அணுச் சோதனைகளை பிரான்ஸ் அங்கு மேற்கொண்டதாகத் தகவல் உண்டு. அல்ஜீரிய யுத்தத்தைத் தொடர்ந்து செய்யப்பட்ட உடன்படிக்கை ஒன்றின் படி 1967 இலேயே பிரான்ஸ் சஹாராவில் தனது அணுச் சோதனைகளை நிறுத்தியது.

பின்னர் அதனுடைய சோதனைக்களம் பசுபிக் தீவுகளான பொலினேசியாவுக்கு (Polynesia) இடம்மாற்றப்பட்டது.தொடர்ச்சியான அணு சோதனைகளின் விளைவாக சஹாராவில் கதிரியக்கம் கலந்து சூழலுக்குப் பெரும் பாதிப்பை உண்டாக்கியது. சுமார் 60 ஆண்டுகள் கடந்து இப்போதும் பாலைவன மணலில் மிகக் குறைந்த அளவில் கதிரியக்கம் கலந்தே உள்ளது.அண்மையில் மணல் மேகமாக வந்து பிரான்ஸின் வானம் எங்கும் பரவிய புளுதியில் அணுக் கதிரியக்கத் துகள்கள் கலந்திருப்பதை அணு ஆராய்ச்சியாளர்கள் உறுதிப்படுத்தி உள்ளனர்.

“சீஸியம் 137” (Cesium 137)எனப்படும் ஆபத்து விளைவிக்காத – வலுக்குறைந்த கதிரியக்கத் துகள்களே சஹாரா மணலில் காணப்படுவதாக அணுக் கதிரியக்கப் பாதுகாப்பு ஆராய்ச்சி நிபுணர் Pierre Barbey “பிரான்ஸ்இன்போ” ஊடகத்துக்குத் தெரிவித்திருக்கிறார்.சஹாரா மணல் மேகம் காரணமாக சில நகரங்களில் சுவாசப் பாதிப்பை ஏற்படுத்தும் அளவுக்கு வளிமண்டலம் மாசடைந்து காணப்பட்டதால் வளி மாசு எச்சரிக்கைகள் விடுக்கப்பட்டிருந்தன. வாகனப் போக்குவரத்து வேகங்களும் குறைக்கப்பட்டிருந்தன. தற்போது அது படிப்படியாக விலகிவருகிறது.

குமாரதாஸன். பாரிஸ்.

27-02-2021.

Spread the love

Add Comment

Click here to post a comment

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Share via
Copy link