உலகம் பிரதான செய்திகள்

அல்ஜீரிய சுதந்திரப் போராளியை பிரெஞ்சுப் படைகளே கொன்றன!ஒப்புக்கொண்டது எலிஸே மாளிகை

அல்ஜீரிய விடுதலைப்போரின் போது தற்கொலை செய்து கொண்டார் என்று கூறப்பட்ட புரட்சிப்படைப் போராளி அலி பூமென்ட்ஜலை (Ali Boumendjel) பிரெஞ்சு இராணுவம் சித்திரவதை செய்தே கொன்றது என்பதை அதிபர் எமானுவல் மக்ரோன் ஒப்புக்கொண்டுள்ளார்.

பிரபல சட்டத்தரணியும் அல்ஜீரிய விடுதலை இயக்கத்தின் முன்னணி செயற்பாட்டாளருமாகிய அலி பூமென்ட்ஜலின் பேரப் பிள்ளைகளை மக்ரோன் நேற்று செவ்வாய்க்கிழமை எலிஸே மாளிகைக்கு அழைத்துச் சந்தித்தார். அச்சமயம் “அலி தற்கொலை செய்து கொள்ளவில்லை. பிரெஞ்சுப் படையினரால் சித்திரவதை செய்தே கொல்லப்பட்டார்” என்பதை குடும்பத்த வர்களிடம் நேரில் தெரிவித்தார் என்று எலிஸேயின் செய்திக் குறிப்பு ஒன்றில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

“அல்ஜியர்ஸ் போரின் நடுவே அலி பிரெஞ்சுப் படைகளால் கைது செய்யப் பட்டார். தனிமைச் சிறையில் அடைக்கப் பட்டார். சித்திரவதை செய்யப்பட்டார். பின்னர் மார்ச் 23, 1957 அன்று படு கொலை செய்யப்பட்டார்” – என்று எலிஸே மாளிகையின் செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இரண்டு நாடுகளுக்கும் இடையே பதற்றத்தையும் யுத்த வடுக்களையும் அகற்றும் முயற்சியாக உண்மைகளை வெளிக்கொணர்தல், ஒப்புக்கொள்ளல் போன்ற இருதரப்பு நல்லிணக்கச் செயற்பாடுகளை அல்ஜீரிய அரசுடன் இணைந்து அதிபர் மக்ரோன் மேற்கொண்டு வருகிறார்.

அதற்காக உண்மை அறியும் ஆணைக்குழு ஒன்றை அவர் அமைத்திருந்தார். அல்ஜீரிய சுதந்திரப் போர் தொடர்பான வரலாற்றை இரு தரப்புகளும் முகத்துக்கு நேரே பார்த்து உண்மைகளை வெளிக் கொண்டு வருவது என்ற மக்ரோனின் வாக்குறுதிகளில் ஒன்றாகவே அலி பூமென்ட்ஜலின் படுகொலையை பிரான்ஸ் பகிரங்கமாக ஏற்றுக் கொண்டுள்ளது.

அலி பூமென்ட்ஜலின் அல்ஜீரிய மக்களால் மிகவும் மதிக்கப்படுகின்ற சுதந்திரப் போராட்ட வீரர்களில் முக்கியமானவர் ஆவார். 1957 இல் அங்கு புரட்சியை ஒடுக்க முற்பட்ட பிரெஞ்சுப் படைகள் கிளர்ச்சியைத் தூண்டினார் என்ற குற்றச்சாட்டில் அவரைக் கைது செய்தன. கடுமையான சித்திரதைக்குப் பின்னர் அவர் தடுத்துவைக்கப்பட்டிருந்த கட்டடத்தின் ஆறாவது மாடியின் ஜன்னல் வழியே வீசப்பட்டுப் படுகொலை செய்யப்பட்டார்.

ஆனால் அவர் தற்கொலை செய்து கொண்டதாகவே பிரான்ஸ் படை அறிவித்தது. பிரான்ஸின் காலனித்துவ நாடான அல்ஜீரியாவில் கிளர்ச்சியை ஒடுக்கிய படை நடவடிக்கைக்குத் தலைமை வகித்த முக்கிய பிரெஞ்சுப்படைத் தளபதியான ஜெனரல் போல் ஆஸ்ஸாரெஸ் (Paul Aussaresses) 2001 இல் எழுதி வெளியிட்ட நினைவு நூல் ஒன்றில் அலி தற்கொலை செய்யவில்லை. சித்திரவதை செய்தே கொல்லப்பட்டார் என்ற தகவலைப் பதிவு செய்திருந்தார்.அலியின் படுகொலையை பிரான்ஸ் வெளிப்படையாக ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று அவரது குடும்பத்தினர் பல தசாப்தங்களாகக் கோரி வந்தனர்.

அல்ஜீரியா பிரான்ஸின் காலனித்து வத்தில் இருந்து போராடி விடுபட்டு சுதந்திர நாடாக மாறியதன் அறுபதாவது ஆண்டுக் கொண்டாட்டங்கள் அடுத்த ஆண்டில் நடைபெறவுள்ளன.பிரான்ஸின் அல்ஜீரிய காலனித்துவ ஆக்கிரமிப்பை “மானுடத்துக்கு எதிரான குற்றம்” (crime against humanity) என்று அதிபர் மக்ரோன் தனது தேர்தல் பிரசாரத்தின் போது அறுவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது. (படம் : அலி பூமென்ட்ஜலின் நிழல் படம் அருகே அவரது மனைவியான மலிகா பூமென்ஜலின்) #அல்ஜீரிய_சுதந்திரப்போராளி #பிரெஞ்சுப்படை #எலிஸே_மாளிகை #தற்கொலை #Ali_Boumendjel #மக்ரோன்

——————————————————————–

குமாரதாஸன். பாரிஸ்.03-03-2021

Spread the love

Add Comment

Click here to post a comment

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Share via
Copy link