திமுகவுடன் காங்கிரஸ் கட்சி ஒப்பந்தம் கையெழுத்திட்டுள்ள நிலையில் காங்கிரஸ் கட்சிக்கு 25 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதுவரை 5 கட்சிகளுடன் தொகுதி உடன்பாடு எட்டப்பட்டுள்ள நிலையில் கூட்டணி கட்சிகளுக்கு தி.மு.க. தொகுதிகளை ஒதுக்கீடு செய்து வருகிறது.
ம.தி.மு.க., விடுதலை சிறுத்தைகள், இந்திய கம்யூனிஸ்டு ஆகிய 3 கட்சிகளுக்கும் தலா 6 இடங்களை தி.மு.க. ஒதுக்கியுள்ளது. இந்திய யூனியன் முஸ்லிம் லீம் கட்சிக்கு 3 தொகுதிகளும், மனிதநேய மக்கள் கட்சிக்கு 2 தொகுதிகளும் ஒதுக்கப்பட்டுள்ளன.
ஆனால் தி.மு.க. கூட்டணியில் முக்கிய அங்கம் வகிக்கும் காங்கிரஸ் கட்சிக்கு தொகுதிகளை ஒதுக்கீடு செய்வதில் கடந்த சில தினங்களாக இழுபறி ஏற்பட்டிருந்தது.
காங்கிரஸ் தரப்பில் 30 முதல் 35 தொகுதிகள் வரை எதிர்பார்த்தனர். ஆனால் தி.மு.க. தலைவர்கள் அதை ஏற்க திட்டவட்டமாக மறுத்ததால் உடன்பாடு ஏற்படுவதில் தாமதம் ஏற்பட்டது. இதையடுத்து இரு கட்சி தலைவர்களும் திரை மறைவு பேச்சுவார்த்தையை மேற்கொண்டனர்.
அத்துடன் கமல்ஹாசன் கட்சியில் இருந்து காங்கிரசுக்கு அழைப்பு விடுக்கப்பட்டதனால் காங்கிரஸ் கட்சி தி.மு.க. கூட்டணியில் இருக்குமா? என்ற கேள்வி எழுந்திருந்தது.
இந்த சிக்கலுக்கு தீர்வு காண முடிவெடுத்த மு.க.ஸ்டாலின் காங்கிரஸ் தலைவர்களுடன் நேற்று இரவு 11 மணியளவில் பேச்சுவாா்ததையில் ஈடுபட்டாா்.
இதைத்தொடர்ந்து காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தியுடன் மு.க.ஸ்டாலின் தொலைபேசியில் கலந்துரையாடி தி.மு.க., காங்கிரஸ் இடையே தொகுதி பங்கீடு உறுதி செய்யப்பட்டது.
இதனையடுத்து இன்று (ஞாயிற்றுக்கிழமை) காலை அதிகாரப்பூர்வமாக ஒப்பந்தத்தில் கையெழுத்து இடலாம் என்றும் இரு கட்சி தலைவர்களும் தீர்மானித்தனர்.
அந்தவகையில் இன்று காலை தி.மு.க.வுடன் காங்கிரஸ் தொகுதி பங்கீடு ஒப்பந்தம் செய்து கொண்டது. ஒப்பந்தத்தில் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலினும், காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரியும் கையெழுத்திட்டனர்.
காங்கிரஸ் கட்சிக்கு தி.மு.க. கூட்டணியில் 25 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. கன்னியாகுமரி நாடாராளுமன்ற இடைத்தேர்தலில் காங்கிரஸ் போட்டியிடவும் தி.மு.க. ஒப்புதல் அளித்துள்ளது.
இதன் காரணமாக கடந்த சில தினங்களாக நிலவி வந்த தி.மு.க., காங்கிரஸ் தொகுதி பங்கீடு சலசலப்பு முடிவுக்கு வந்துள்ளது. #திமுக #காங்கிரஸ் #ஒப்பந்தம் #கமல்ஹாசன்