Home இலங்கை பூச்சிய வரைபு தொடர்பில் பூச்சியமான தமிழ்த் தேசியக் கட்சிகள்! நிலாந்தன்…

பூச்சிய வரைபு தொடர்பில் பூச்சியமான தமிழ்த் தேசியக் கட்சிகள்! நிலாந்தன்…

by admin

கடந்த ஜனவரி மாதம் மூன்று தமிழ் தேசியக் கட்சிகளும் சிவில் சமூகங்களும் இணைந்து ஒரு பொதுக்கடிதத்தை தயாரித்து ஐநாவுக்கு அனுப்பிவைத்தன. அதில் கூட்டமைப்பு எதுவித எதிர்ப்புமின்றி பங்குபற்றியது.அக்கட்சியின் பேச்சாளர் மூன்று சந்திப்புகளிலும் மிகவும் “கூலாக” இருந்து கலந்துரையாடல்களில் ஈடுபட்டார். விக்னேஸ்வரனின் கூட்டமைப்பும் தமிழ் தேசிய
மக்கள் முன்னணியும் பல்வேறு விடயங்களில் ஆளுக்காள் மோதிக் கொண்ட பொழுது கூட்டமைப்பு ஒரு அப்பாவி போல தான் எல்லாவற்றுக்கும் தயார் என்பது போல ஒரு தோற்றத்தை காட்டிக்கொண்டு அமைதியாக காணப்பட்டது.இனப்படுகொலை என்பதை அந்தக் கடிதத்தில் இணைப்பதற்கும் அக்கட்சி தயாராகக் காணபட்டது. முடிவில் ஒரு பொதுக்கடிதம் தயாரிக்கப்பட்டு ஜெனிவாவுக்கு அனுப்பி வைக்கப்பட்டது.


இது தொடர்பில் லண்டனை மையமாகக் கொண்டியங்கும் ஓர் ஆவண செயற்பாட்டாளர் என்னிடம் பின்வருமாறு சொன்னார்…..” அப்படி ஒரு ஆவணத்தை தயாரிக்க ஒத்துழைக்குமாறு மேற்கத்திய நாடுகளே கூட்டமைப்பிடம் கேட்டிருக்கலாம். அந்த ஆவணத்தை தயாரிக்கும் பொறுப்பை கஜேந்திரகுமார் மற்றும் விக்னேஸ்வரனின் கட்சிகளிடம் ஒப்படைத்து விட்டு அமைதியாக இருக்குமாறு அவர்கள் கூட்டமைப்புக்கு ஆலோசனையும் கூறியிருக்கலாம்.


ஏனெனில் ராஜபக்ச அரசாங்கத்திற்கு எதிராக ஒரு அழுத்த பிரயோக உத்தியாக அந்த ஆவணத்தை அவர்கள் பயன்படுத்த யோசித்தி இருக்கலாம். அவர்கள் நிறைவேற்ற விரும்பும் ஒரு ஜெனிவா தீர்மானத்தை நோக்கி ராஜபக்சக்களை நிர்பந்திப்பதற்கு தமிழ்த் தரப்பிலிருந்து அவ்வாறான கோரிக்கைகள் வர வேண்டும் என்று அவர்கள் சிந்தித்திருக்கலாம். ராஜபக்ஷக்களுக்கு அழுத்தம் கொடுக்க கூடிய ஒரு பொதுக் கோரிக்கை வரவேண்டும் என்றால் அதை கஜேந்திரகுமாரை இணைத்துக் கொள்வதன் மூலம்தான் தயாரிக்கலாம் என்பதும் எல்லோருக்கும் தெரிந்த ஒரு பொது உண்மையாகும்” என்று கூறினார்.


இந்த உண்மை கடந்த ஆண்டும் பல்கலைக்கழக மாணவர்களால் முன்னெடுக்கப்பட்ட ஓர் ஐக்கிய முயற்சியின் போதும் வெளிப்பட்டது. அந்த பதின்மூன்று அம்ச ஆவணத்தில் தமிழ்த்தேசிய மக்கள் முன்னணி கையெழுத்திடவில்லை.ஆனால் தொடக்கத்திலிருந்து முடிவு வரையிலும் அக்கட்சியின் பங்களிப்பு இல்லை என்றால் அப்படி ஒரு சமரசத்திற்கு இடமற்ற ஆவணத்தைத் தயாரித்து இருந்திருக்க முடியாது என்று சம்பந்தப்பட்ட பல்கலைக்கழக மாணவர்கள் தெரிவித்தார்கள்.


இது ஜனவரி மாதம் தமிழ்க் கட்சிகள் ஜெனீவாவிற்கு அனுப்பிய ஆவணத்துக்கும் பொருந்தும்.அதில் முதலாவது சந்திப்பு கிளிநொச்சியில் நடந்த போது அதில் சுமந்திரன் தெரிவித்த
கருத்துக்கள் அதன் இறுதி வடிவத்துக்கு பெருமளவுக்கு முரணாக காணப்பட்டன.முதலாவது சந்திப்பில் கஜேந்திரகுமார் கலந்து கொள்ளவில்லை. இரண்டாவது சந்திப்பு வவுனியாவில் நடந்த
பொழுது அவர் பங்குபற்றினார். சந்திப்பில் அவர் தனது நிலைப்பாட்டை தெளிவாகவும்

தர்கபூர்வமாகவும் முன்வைத்தார்.அதன்படி பொறுப்புக்கூறலை ஜெனிவாவுக்கு வெளியே கொண்டு போக வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார். அவருடைய அந்தக் கோரிக்கையை கூட்டமைப்பு ஏற்றுக் கொண்டது. விக்னேஸ்வரனின் அணியும்
ஏற்றுக்கொண்டது. மேலதிகமான சில கோரிக்கைகளில்தான் விக்னேஸ்வரன் அணிக்கும் தமிழ்தேசிய மக்கள் முன்னணிக்கும் இடையே சில முரண்பாடுகள் ஏற்பட்டன.எனினும் பொதுக்
கோரிக்கையை இறுதியாக்கும் போது அந்த முரண்பாடுகளும் தீர்க்கப்பட்டன.


எனவே “கஜேந்திரகுமார் அந்தக் கூட்டுக்குள் இணைத்துக் கொண்டதால்தான் விட்டுக்கொடுப்பற்ற சமரசத்துக்கு இடமற்ற கோரிக்கைகளை அவர் முன்வைப்பார் என்பது மேற்கத்திய தூதரகங்களுக்கு நன்றி தெரியும். எனவே இது விடயத்தில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி மற்றும் தமிழ்மக்கள் தேசியக்கூட்டணி ஆகிய கட்சிகளோடு இணைந்து அவ்வாறு விட்டுக்கொடுப்பற்ற ஓர் அறிக்கையை தயாரிக்குமாறு மேற்கத்திய தூதரகங்கள் கூட்டமைப்பை ஊக்குவித்திருக்குமா?” என்றும் அந்த ஆவணச் செயற்பாட்டாளர் கேட்டார்.


அவர் மேலும் ஒரு விடயத்தை  சுட்டிக்காட்டினார். பொதுவாக யு.என்.பி ஆட்சிக்கு வரும் பொழுது தமிழரசுக் கட்சி ஒன்றில் அதன் பங்காளி ஆகிவிடும் அல்லது கள்ளக் காதலி ஆகிவிடும். அதே சமயம் எஸ்.எல்.எப்.பி ஆட்சிக்கு வரும்பொழுது தமிழரசுக் கட்சி பொதுவாக போராளி ஆகிவிடும்.2015 ஆட்சி மாற்றத்தின்பின் அதுதான் நடந்தது. அப்பொழுது கூட்டமைப்பு அதாவது தமிழரசுக் கட்சியை மையமாகக் கொண்ட கூட்டமைப்பு நல்லாட்சி அரசாங்கம் என்று அழைக்கப்பட்ட ரணில் விக்கிரமசிங்கவின் அரசாங்கத்தின் மறைமுகப் பங்காளியாக விளங்கியது. அப்பொழுது மேற்கு நாடுகளால் முன் மொழியப்பட்ட நிலை மாறு கால நீதிக்கான ஐ.நாத் தீர்மானத்தின் பங்காளியாகச் செயற்பட்டது.இப்பொழுது எஸ்.எல்.எஃப்.பி கட்சியின் காலத்தில் அதாவது ராஜபக்சவின் காலத்தில் அது போராளி வேடம் தரித்து விட்டது  என்றும் அவர் சொன்னார். அதனால்தான் நிலைமாறுகால நீதி என்ற ஒரு பரிசோதனையைச் செய்தோம். அது தொற்று விட்டது.எனவே இனி பொறுப்புக் கூறலை ஜெனீவாவிற்கு வெளியே கொண்டு போகலாம் என்று இப்பொழுது அக்கட்சி கூறுகிறதா?


நல்லாட்சி அரசாங்கத்தின் காலத்தில் சுமந்திரன் அதிரடிப்படையின் பாதுகாப்பைப் பெற்றிருந்தார். ஜெனீவாவிற்கு அனுப்பபட்ட கடிதத்தைத் தயாரிக்கும் சந்திப்புகளின்போதும் சந்திப்பு நடைபெற்ற மண்டபங்களுக்கு வெளியே அதிரடிப்படையும் நின்றது. ஆனால்
அண்மையில் P2P பேரணிக்குப்பின் அவருக்கு வழங்கப்பட்டிருந்த பாதுகாப்பு விலக்கப்பட்டுவிட்டது. அதன்மூலம் அவர் தமிழ்த்தேசிய அரசியலில் புனிதநீர் தெளிக்கப்பட்டவர்  போல தோன்றுகிறார். போராட்டக் களங்களில் அவர் காணப்படுகிறார். இது தேர்தல்
தோல்விகளில் இருந்து அவர் பெற்றுக்கொண்ட பாடங்களின் விளைவாகவும் இருக்கலாம். அதேசமயம் கட்சிக்குள் தனது தலைமைத்துவத்தை பலப்படுத்துவதற்காகவும் இருக்கலாம்.
இப்படிப்பட்டதோர் அரசியல் சூழலில் மூன்று கட்சிகளும் இணைந்து ஒரு பொதுக் கடிதத்தை தயாரிக்கும் முயற்சிகளை எடுத்தபோது கூட்டமைப்பு அதில் முழுமனதாக ஈடுபட்டது. அந்த முதற்கடிதத்தை குறித்து பல்வேறு வகைப்பட்ட விமர்சனங்கள் எழுந்தன. அந்த முதற் கடிதத்தில் உள்ளடக்கப்பட்ட விடயங்கள் குறித்து கேள்விகள் எழுந்தன. அக்கேள்விகளுக்கெல்லாம் பதிலாக அந்தக்கடிதத்தின் தொடர்ச்சியாக மேலும் சில கடிதங்கள்

அனுப்பப்படும் என்று அப்போது கூறப்பட்டது.ஆனால் அவ்வாறு கடிதங்கள் தொடர்ந்து அனுப்பப்படவில்லை. ஏன்? ஏனெனில் கூட்டமைப்பு அவ்வாறு ஏனைய கடிதங்களைத் தயாரிப்பதில் அதிகம் ஈடுபாடு காட்டவில்லை.அதற்கு அவர்கள் சொன்ன காரணம் ஜெனிவா கூட்டத்தொடர் தொடங்கவிருக்கும் ஒரு பின்னணியில் ஜெனிவா தீர்மானம் எவ்வாறு அமைகிறது என்பதை பார்த்து அடுத்தடுத்த கடிதங்களைத் தயாரிக்கலாம்.எனவே இப்பொழுது அவசரப்பட வேண்டாம் என்பதே.இதனால் முதலாவது கடிதத்தின் தொடர்ச்சியாக அடுத்தடுத்த கடிதங்களை சிவில் சமூகப் பிரதிநிதிகளால் தயாரிக்க முடியவில்லை.


இவ்வாறானதொரு பின்னணியில் கடந்த வாரம் ஜெனிவா தீர்மானத்தின் பூச்சிய வரைவு வெளிவந்தது. இது ஒரு முதல் வரைபல்ல என்றும் இதற்கு முன்னரே இரண்டு வரைபுகள்
உட்சுற்றுக்கு விடப்பட்டன என்றும் கூட்டமைப்பின் உயர் மட்டத்துக்கு நெருக்கமான வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.குறிப்பாக இதற்கு முந்திய வரைபுகளில் முஸ்லிம்களின் விவகாரம் உள்ளடக்கப் பட்டிருக்கவில்லை என்றும் அண்மையில் வெளிவந்த பூச்சிய வரைபில்தான் அது அழுத்தமாக சேர்க்கப்பட்டது என்றும் அந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இவ்வாறு முதற்கட்ட
வரைபு குறித்தும் அதில் ஏற்படும் மாற்றங்களைக் குறித்தும் கூட்டமைப்புக்கும் தெரிந்திருக்கிறது என்பது எதைக்காட்டுகிறது?கூட்டமைப்பு அந்த வரைபைத் தயாரிக்கும் நாடுகளோடு
நெருக்கமாகச் செயற்படுகிறது என்பதையா? இவ்வாறு ஜெநீவாத் தீர்மானத்தை உருவாக்கும் நாடுகளோடு அக்கட்சி நெருக்கமான
உறவைப் பேணுமாக இருந்தால் அத்தீர்மானத்தின் பூச்சிய வரைபைக் குறித்து ஏனைய இரண்டு கட்சிகளோடு சேர்ந்து ஒரு பொதுக் கடிதத்தை அனுப்புவது குறிப்பிட்ட நாடுகளுக்கு குழப்பமான
சமிக்ஞைகளை வழங்குவதாக அமையும் என்று அக்கட்சி கருதுகிறதா?.

ஒருபுறம் அவ்வரைபை உருவாக்கும் மேற்கு நாடுகளுடன் நெருக்கமாகக் காணப்படும் ஒரு கட்சி இன்னொருபுறம் ஏனைய இரண்டு கட்சிகளுடன் இணைந்து அந்த வரைபுக்கு எதிராக ஒரு பொதுக் கோரிக்கையை முன் வைப்பது என்பது இரட்டை நிலைப்பாடு தானே ?இது காரணமாகவே கூட்டமைப்பு பூச்சிய வரைபுக்கு எதிராக ஒரு பொது ஆவணத்தை உருவாக்குவதற்குப் பின்னடித்ததா? ஆனால் கடந்த ஜனவரி 15ஆம் திகதி ஒரு பொதுக் கோரிக்கையை ஐநாவுக்கு அனுப்பிய அக்கட்சிக்கு ஒரு கூட்டுப் பொறுப்பு உண்டு. அக்கோரிக்கையை சிறிதேனும் கவனத்தில் எடுக்காத ஒரு பூச்சிய வரைபு வெளிவந்திருக்கும் ஓர் அரசியல் சூழலில் அதைக் குறித்து அக்கட்சி கருத்து எதையும் இக்கட்டுரை எழுதப்படும் நாள் வரையிலும் தெரிவிக்கவில்லை. கடந்த செவ்வாய்க் கிழமை கருத்து தெரிவித்த கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தர் இது குறித்து தமது கட்சி விரைவில் தனது நிலைப்பாட்டை அறிவிக்கும் என்றும் தெரிவித்திருக்கிறார்.


ஆனால் ஏற்கனவே விக்னேஸ்வரன் தனது நிலைப்பாட்டை
தெரிவித்துவிட்டார்.கஜேந்திரகுமார் தனது நிலைப்பாட்டை அண்மையில் தெரிவித்திருக்கிறார். அதுதொடர்பாக அவர் வழங்கிய ஒரு நேர்காணலில் பூச்சிய வரைபுக்கு எதிராக மூன்று கட்சிகளையும் இணைப்பதற்கு தமிழ் சிவில் சமூக அமையம் எடுத்த முயற்சிகள்
வெற்றி பெறவில்லை என்பதையும் சுட்டிக்காட்டியிருக்கிறார்.

முன்னைய கடிதத்தின் தொடர்ச்சியாக பூச்சிய வரைபு குறித்த தமது நிலைப்பாட்டை வெளிப்படுத்தும் விதத்தில் மூன்று கட்சிகளையும் ஒருங்கிணைப்பதற்கு சிவில் சமூக செயற்பாட்டாளர்கள் கடந்த கிழமை முழுவதும் முயற்சித்தார்கள்.கூட்டமைப்பு இதுவிடயத்தில்
தொடக்கத்திலிருந்து பின்னடித்தது.எனவே ஏனைய இரண்டு கட்சிகளையும் ஒரு பொது உடன்படிக்கைக்கு கொண்டுவர முயற்சிக்கப்பட்டது.எனினும் அப்பொதுவரைபில் 13ஆவது
திருத்தம் தொடர்பில் அந்த இரண்டு கட்சிகளையும் உடன்படவைக்க முடியவில்லை.


இதுவிடயத்தில் இரண்டு தரப்பையும் ஒரு பொதுப் புள்ளியில் சந்திக்க வைப்பதற்கு சிவில் சமூகத்தவர்கள் முயற்சித்தார்கள். ஆனால் அது வெற்றி பெறவில்லை.எனவே அரசியல் கட்சித் தலைவர்களுடைய கையெழுத்துக்கள் இன்றி ஒரு அறிக்கையை தமிழ் சிவில் சமூக அமையம் தனது பெயரில் வெளியிட்டது. அந்த ஆவணம் வெளியிடப்பட்ட பின் கஜேந்திரகுமார் தன்னுடைய கட்சியின் அறிக்கையை வெளியிட்டார். கடந்த ஜனவரி மாதம் ஜெனிவாவை நோக்கி ஒரு பொதுக் கோரிக்கையை முன்வைத்த மூன்று கட்சிகளும் அதன்பின் பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரையிலுமான மக்கள் பேரணியில் ஒன்றாக பங்குபற்றிய மூன்று கட்சிகளும் பூச்சியவரைபு தொடர்பில் ஒரு பொது உடன்படிக்கைக்கு வர முடியவில்லை.இது ஒரு பின்னடைவே.தமிழ்க் கட்சிகளை கொள்கை அடிப்படையில் ஒன்றாகத் திரட்டுவது இப்போதைக்கு அம்புலிமாமாக் கதையே.குறைந்தபட்சம் விடயங்களை மையமாகக்கொண்டு தற்காலிகக் கூட்டுக்களையாவது உருவாக்கலாமா என்று சிவில்சமூகப் பிரதிநிதிகள் பாடுபட்டார்கள். அவ்வாறு உழைத்ததன் விளைவே ஜெனிவாவுக்கு அனுப்பப்பட்ட ஒரு பொதுக்கோரிக்கை ஆகும். அது கடந்த பத்தாண்டுகளில் எட்டப்பட்ட ஒரு முக்கிய அடைவும் ஆகும். ராஜதந்திர வட்டரங்களிலும் ஐநா. வட்டாரங்களிலும் அந்தக் கடிதம் உற்றுக் கவனிக்கப்பட்டது. ஆனால் அந்த வெற்றியை அதன் அடுத்தடுத்த கட்டங்களுக்கு வளர்த்துச் செல்ல முடியவில்லை என்பதைத்தான் பூச்சிய வரைபு தொடர்பான தமிழ்க்கட்சிகளின்
நிலைப்பாடு வெளிப்படுத்தியிருக்கிறதா ?

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More