1,500 ரூபாய்க்கு தத்துக் கொடுக்கப்பட்ட சிறார்கள்!
- சரோஜ் பத்திரனா
- பிபிசி உலக சேவை
13 மார்ச் 2021
இலங்கையில் 1960-1980களுக்கு இடைப்பட்ட காலத்தில் ஆயிரக்கணக்கான குழந்தைகள் தத்துக் கொடுப்பதற்காக அளிக்கப்பட்டன. அதில் சிலர், ‘குழந்தை சந்தைகள்’ மூலம் ஐரோப்பாவிற்கு அனுப்பப்பட்டதாக குற்றசாட்டுகளும் உள்ளன. இதில் பல குழந்தைகளை நெதர்லாந்தில் தத்துக் கொடுக்கப்பட்டன.
ஆனால், இது தொடர்பான கட்டமைப்பில் வற்புறுத்தல் மற்றும் லஞ்சம் கொடுக்கப்பட்டதற்கான குற்றச்சாட்டுகள் எழுந்ததால், சர்வதேச அளவிலான தத்தெடுப்பு திட்டத்திற்கு அந்நாடு சமீபத்தில் தடை விதித்தது. இது குறித்த விசாரணை தொடரும் நேரத்தில், தங்களிடமிருந்து பிரிந்து சென்ற குழந்தைகள் மீண்டும் இணைவார்கள் என்ற நம்பிக்கையுடன் பல குடும்பங்கள் உள்ளன.
தன் சகோதரி நிலந்தி மற்றும் தாயை அழைத்துச் சென்ற சிவப்பு நிற கார், இன்னும் இண்டிகா வடுகேவின் நினைவில் அழியாமல் உள்ளது. அவர்கள் திரும்பி வருவார்கள் என்று தனது மற்றொரு சகோதரியான தமயந்தியுடன் காத்திருந்தார். ஆனால், அடுத்த நாள் காலை தனியாக திரும்பி வந்தார் அவரின் தாயார்.
“அவர்களை வழி அனுப்பி வைத்தபோது, “நிலந்தி வெளிநாட்டிற்கு சென்றுவிடுவார், இதுவே நான் அவரை பார்க்கும் கடைசி முறையாக இருக்கும் என்று நினைத்துக்கூட பார்க்கவில்லை.” என்கிறார் அவர்.
இந்த சம்பவம் 1985 அல்லது 1986இல் நடந்தது. அப்போது, மூன்று குழந்தைகளையும் வளர்க்கும் பொறுப்பை பனிகர்கே சோமவாதேயிடம் விட்டுவிட்டு, அவரின் கணவர் அங்கிருந்து விலகியிருந்தார். வாழ்வதற்கே அந்த குடும்பம் போராடி வந்த வேளையில்தான், நான்கு அல்லது ஐந்து வயதாக இருந்த நிலந்தியை தத்து கொடுக்குமாறு, தனது தாயிடம் ஒருவர் கூறியைதை நினைவுகோர்கிறார் இண்டிகா.
கொழும்புவின் கோட்டேஹெனா பகுதியில் உள்ள ‘குழந்தைகள் பண்ணையின்’ இடைத்தரகர் அந்த நபர்தான் என்று கூறும் இண்டிகா, நீதிமன்றத்தில் பணியாற்றி வந்த ஒரு பெண் அதிகாரியும், அவரின் கணவரும் இந்த பண்ணையை நடத்தி வந்தபோதிலும், தத்து கொடுக்கப்படும் குழந்தைகளை ஏற்பாடு செய்தது இந்த ஆள்தான் என்றும், பெரும்பாலும், டச் தம்பதிகளுக்கு அவர் ஏற்பாடு செய்துகொடுத்தார் என்றும் இண்டிகா தெரிவித்தார்.
அந்த அமைப்பு, குழந்தைகள் தத்து எடுப்பதை ஒரு தொழிலாக செய்து வந்தது என்று தனது தாயாருக்கு தெரியும் என்கிறார் இண்டிகா. ஆனால், அப்போது இருந்த சூழலில், அவருக்கு வேறு வழி தெரியவில்லை என்பதால், வெறும் 1,500 இலங்கை ரூபாய்க்கு குழந்தை கொடுத்துவிட்டார்.
“என் அம்மாவிற்கு தெரியும். ஆனாலும், அவர் கையறு நிலையில் இருந்தார். எங்கள் மூன்று பேருக்கும் உணவளிக்க முடியாமல் கஷ்டப்பட்டதாலேயே அவர் இவ்வாறு செய்தார் என்று எனக்கு தெரியும். அதனால்தான் அவர் இப்படி ஒரு முடிவு எடுத்தார். நான் அவர்மீது குற்றம் சொல்ல மாட்டேன்.”
நிலந்தியை தத்து கொடுக்கும் முன்பு, தனது பெற்றோருடன் அந்த அமைப்பிற்கு சென்றது நினைவுள்ளது என்கிறார் இண்டிகா. ஆனால், எதற்காக சென்றார்கள் என்பது நினைவில்லை என்று தெரிவிக்கிறார். இரண்டு அடுக்கு மாடியுள்ள ஒரு வீட்டில், பல தாய்மார்கள் குழந்தைகளுட தரையில் பாய்போட்டு படுத்திருந்தது நினைவில் உள்ளது என்கிறார் அவர்.
“அந்த இடம் மிகவும் அசுத்தமாக இருந்தது. ஒரு மருத்துவமனை போல காட்சியளித்தது. அது ஒரு குழந்தைகள் பண்ணை என்பது எனக்கு இப்போது புரிகிறது. கர்பிணிப்பெண்களை அவர்கள் கவனித்துக்கொள்வார்கள்; குழந்தை பிறந்தவுடன் அதை விற்று விடுவார்கள். அவர்கள் மிகவும் லாபகரமான ஒரு தொழிலை செய்து வந்தார்கள்.” என்கிறார்.
வேறு ஒரு சூழலில், தனது தாயின் தோழி ஒருவர், அவரின் குழந்தையை இந்த பண்ணையில் கொடுத்த பிறகு, தாயை வந்து சந்தித்தது குறித்தும் நினைவுகூர்கிறார் இண்டிகா.
“அம்மாவிடம் பேசும்போது, அவர் அழுதுகொண்டே இருந்தது நினைவிருக்கிறது.”
அதற்கு சில ஆண்டுகளுக்குப்பின், மக்கள் விடுதலை முன்னணியின் எழுச்சியின்போது, சுமார் 60,000பேர் கொல்லப்பட்டனர். இந்த சம்பவத்தின்போது, அந்த குழந்தைப்பண்ணையின் இடைத்தரகர் காரோடு எரித்து கொல்லப்பட்டதாகவும், அதுகுறித்து ஊடகங்கள் அனைத்திலும் செய்தி வந்ததாக கூறும் இண்டிகா, ஊடகத்தில் அந்த காரை பார்த்ததும், தனது சகோதரியை அழைத்துச்சென்ற கார் இதுவே என்று தன்னால் அடையாளம் காண முடிந்தது என்றும் கூறுகிறார்.
இண்டிகாவிற்கு இப்போது 42 வயதாகிறது. தனது தங்கை நிலந்தியை தேடிவரும் அவர், நெதர்லாந்து அல்லது ஆஸ்திரியாவில் அவர் வாழ்வதாக தான் நம்புவதாகவும் ஆனால், அவரின் ஒரு புகைப்படம்கூட தன்னிடம் இல்லை என்றும் தெரிவிக்கிறார்.
” என் அம்மாவிற்கு 63 வயதாகிறது. இறப்பதற்குள் எப்படியாவது என் சகோதரியை ஒருமுறை பார்க்க வேண்டும் என்று அவர் விரும்புகிறார். அவரின் ஆசையை பூர்த்தி செய்ய நான் முயல்கிறேன்.” என்றார்.
தனது குழந்தையை இவ்வாறு தத்துக்கொடுத்த பல தாய்மார்கள் இதே ஆசையுடனேயே உள்ளனர்.
தனது குழந்தையை “விற்கும்” எண்ணம் ஒருபோதும் இருந்தது இல்லை என்றும், ஒரு திருமணம் ஆகாத பெண், ஆண் துணையில்லாமல் தனியாக இருக்கும் பெண் என சமூகத்தால் தடுக்கப்பட்டிருந்த விஷயங்கள் தன்னைச்சுற்றி இருந்ததே, குழந்தையை தத்துகொடுக்க ஒப்புக்கொள்ள வைத்தது என்கிறார் ரணவீரா அரச்சலகே யசவதி.
“மிகவும் வலிதரக்கூடிய முடிவு என்றாலும், அப்போது என்னால் எடுக்க முடிந்த சிறந்த முடிவு அதுவாகவே இருந்தது. என்னைப்பற்றி நான் யோசிக்கவில்லை; குழந்தையைப்பற்றி மட்டுமே சிந்தித்தேன். அவனை பார்த்துக்கொள்ளும் நிலையில் நான் இல்லை. சமூகம் இதை எப்படிப் பார்க்கும் என்ற அச்சத்தில் இருந்தேன்.” என்கிறார்.
சிங்களம் மற்றும் பௌத்த மக்கள் பெரும்பான்மையாக வாழும், பழமைவாத சமூகத்தைச்சேர்ந்த நாடு இலங்கை. திருமணத்திற்கு முன்பு உறவுகொள்ளுதல் என்பது, அந்த காலம், தற்காலம் என எல்லா சூழலிலும் தடை செய்யப்பட்ட ஒன்று; அதுபோல, கருகலைப்பு சட்டத்திற்கு எதிரானதாகும்.
1983ஆம் ஆண்டு, தனக்கு 17வயதாக இருக்கும்போது, யசவதி பள்ளி நடந்துசென்றபோது, அங்கு பார்த்து காதலில் விழுந்த பெரிய வயது ஆணால் கர்ப்பம் அடைந்தார். அண்ணனின் எதிர்ப்பையும் மீறி, தனது காதலரின் வீட்டிற்கு சென்று தங்கினார் அவர், “எனக்கு அங்கு சென்றாகவேண்டும் என்ற எண்ணம் இல்லை. நாம் மிகவும் இளம்வயதில் இருந்தேன், பலவீனமாக இருந்தேன்.” என்கிறார்.
ஆரம்பத்தில், யசவதியிடம் அன்பாக இருந்த அவர், நாட்கள் போகப்போக மாறினார். அவருடம், அவரின் தங்கையும், யசவதியை அதிகமாக குறைகூறியதோடு திட்டினார்கள். அப்போது யசவதி, தன் காதலருக்கு பிறருடன் தொடர்பு இருப்பதை அறிந்தார். ஆறு ஏழு மாதங்கள் கழித்து, யசவதியை மீண்டும் தாய்விட்டில் கொண்டுவந்து விட்டுவிட்டு காணாமல் போனார் காதலர். யசவதி அப்போது இரண்டு மாதங்கள் கர்ப்பமாக இருப்பதை அறிந்த அவரின் சகோதர-சகோதரிகள், அவரை வீட்டைவிட்டு அனுப்பிவிட்டனர்.
கஷ்டத்தில் இருந்த யசவதி, ஒரு பெண் திருமண பதிவாளரிடம் உதவி கேட்டுப்போனார். அவருக்கு குழந்தை பிறக்கவுள்ள நேரத்தில் அந்த பதிவாளர், ரத்னபுராவில் இருந்த ஒரு மருத்துவமனை ஊழியருக்கு யசவதியை அறிமுகம் செய்து வைத்தார். அந்த நபர்தான், யசவதியின் மகனான ஜகத் ரத்னயகவை தத்துகொடுக்க ஏற்பாடு செய்துகொடுத்தவர். ஜகத் ரத்னயக டிசம்பர் 24, 1984இல் பிறந்தார்.
“எனக்கு குழந்தை பிறந்தபோது கவனித்துக்கொள்ள யாருமே இல்லை. நான் இரண்டு வாரகாலம் மருத்துவமனையில் இருந்தேன். பிறகு, கொழும்புவில் உள்ள ஒரு ஆதரவற்றோர் இல்லம் போன்ற இடத்திற்கு அழைத்துச்சென்றார்கள். அது என்ன இடம் என்பது குறித்த தெளிவான தகவல் எனக்கு தெரியவில்லை. ஆனால், அங்கு என்னப்போலவே 4-5பேர் இருந்தனர்.”
“அங்கு ஒரு வெள்ளைக்கார தம்பதி என் குழந்தையை தத்து எடுத்துக்கொண்டார்கள். அவர்கள் எந்த நாட்டை சேர்ந்தவர்கள் என்பதுகூட எனக்கு தெரியாது. எனக்கு 2000 இலங்கை ரூபாய்(அப்போது தோராயமாக 85 டாலர்கள்) பணமும், ஒரு பையில் துணியும் கொடுத்து வீட்டிற்கு அனுப்பினார்கள். அவ்வளவுதான் நான் வாங்கினேன். நான் நிறைய கஷ்டப்பட்டேன். சில நேரங்களில் என் உயிரை விட்டுவிடலாமா என்றுகூட யோசித்தேன்.”
சில மாதங்களுக்குப்பின், ஆம்ஸ்டர்டாமில் இருக்கும் ஒரு தம்பதி, யசவதியின் மகனின் புகைப்படத்தை அடங்கிய கடிதத்தை அனுப்பியிருந்தனர்.
” எனக்கு ஆங்கிலம் படிக்கவோ, பேசவோ தெரியாது. மொழி தெரிந்த ஒருவர்தான் அதை படித்துவிட்டு, இது என்னுடைய மகன் என்றும், அவர் அங்கு நன்றாக இருப்பதாகவும் தெரிவித்தார். அதோடு, குழந்தை தத்து கொடுத்ததற்காக அந்த தம்பதி எனக்கு நன்றி தெரிவித்து இருந்தனர். அதன்பிறகு, என் மகன் குறித்த எந்த தகவலும் எனக்கு வரவில்லை.”
இலங்கையில் கொடகவெல் என்ற கிராமத்தில் வாழும் யசவதி, பிறகு மீண்டும் திருமணம் செய்து ஒரு மகன் மற்றும் இரண்டு மகளுக்கு தாயாக இருக்கிறார். தற்போது 56 வயதாகும் இவருக்கு, தனது மூத்த மகன் எங்கு இருக்கிறான் என்று தெரியாமல் இருப்பது மனதில் ஒரு வெறுமையை கொடுத்துள்ளதாக கூறுகிறார். ஆனால், அவர் எங்குள்ளார் என்பது தெரியவந்தால், இப்போதுகூட தான் சமூக புறக்கணிப்பிற்கு ஆளாகக்கூடும் என்று கவலைகொள்கிறார்.
“எந்த ஒரு வெள்ளையரை பார்த்தாலும், என் மகன் பற்றி எதாவது தெரியுமா என்று கேட்கவேண்டும் என தோன்றும். எந்த உதவியும் செய்யமுடியாத நிலையில் உள்ளேன். நான் பெற்ற அனுபவத்தை வேறு யாரும் பெறக்கூடாது என்று நினைக்கிறேன். மரணிப்பதற்கு முன்பு, ஒரே ஒருமுறை என் மகனை பார்க்க வேண்டும் என்பதே என் ஆசை.” என்று உடையும் குரலில் பேடுகிறார் யசவதி.
2017ஆம் ஆண்டு, டச்சில் நடந்த செம்பிலா என்ற நிகழ்ச்சியில் பேசிய அப்போதைய இலங்கை சுகாதாரத்துறை அமைச்சர், 1980களில் ஆயிரக்கணக்கான குழந்தைகள் சட்டவிரோதமாக வெளிநாடுகளுக்கு தத்து கொடுக்கப்பட்டதை ஒப்புக்கொண்டார்.
இரு தரப்பும் பொய்யாக ஆவணங்கள் சமர்பிக்கப்பட்டு, கிட்டத்தட்ட 11,000குழந்தைகள் வரை ஐரோப்பிய குடும்பங்களுக்கு தத்து கொடுக்கப்பட்டிருக்கிறது. 4,000 குழந்தைகள் நெதர்லாந்தில் தத்து கொடுக்க்கப்பட்டிருக்கின்றன. மற்ற குழந்தைகள் ஸ்வீடன், டென்மார்க், ஜெர்மனி மற்றும் ஐக்கிய ராஜ்ஜியம் ஆகிய நாடுகளுக்கு அனுப்பப்பட்டுள்ளன.
இதில் சில குழந்தைகள், ‘குழந்தைப்பண்ணையில்’ பிறந்து, மேற்கில் விற்கப்பட்டுள்ளது என்று சில அறிக்கைகள் கூறுகின்றன – இதனைத்தொடர்ந்தே, 1987ஆம் ஆண்டு, இலங்கை அதிகாரிகள், வெளிநாடுகளுக்கு குழந்தைகளை தத்துகொடுப்பதற்கு இடைக்கால தடை விதித்தனர்.
தரிடி பொன்சேகா தத்து கொடுக்கப்படுவது குறித்து 15 ஆண்டுகளுக்கு மேல் ஆய்வு செய்துள்ளார். பாதிக்கப்பட்ட பெண்களின் குழந்தைகளை தத்து கொடுத்ததன்மூலம், பல முக்கிய புள்ளிகள் லாபம் பார்த்திருக்கக்கூடும் என்பதற்கான குறிப்புகள் தெரிகிறது என்கிறார்.
இதுவரை 165 தத்து கொடுக்கப்பட்ட குழந்தைகளை பெற்ற தாயுடன் சேர உதவி செய்துள்ள சுற்றுலா வழிகாட்டியான ஆண்ட்ரூ சில்வா, இந்த செயலால் மருத்துவ ஊழியர், வழக்கறிஞர், தடுப்புப்பிரிவு அதிகாரிகள் என அனைவரும் லாபம் பார்த்துள்ளதாக கூறுகிறார்.
2000ஆம் ஆண்டு, இவர் விடையாடிய கால்பந்தாட்ட குழுவிற்கு ஒரு டச் நபர் நன்கொடை அளித்து உதவினார். அப்போது அந்த நபர், நெதர்லாந்தில் இருக்கும் தனது நண்பர்கள் சிலரின் இலங்கை தாயாரை கண்டுபிடித்துத்தர உதவ முடியுமா என்று கேட்க, அங்கிருந்து இவரின் பயணம் தொடங்கியது. அன்று முதல், பல இலங்கை தாயார்களும், இவரின் உதவியை நாடியுள்ளனர்.
“மருத்துவமனை ஊழியர்களும், குழந்தையை விற்கும் பணியில் ஈடுபட்டதாக சில தாய்மார்கள் கூறக்கேட்டேன். அவர்கள் சமூகத்தில் மிகவும் நலிவுற்ற, இளம் தாய்மார்களாக பார்த்து, ‘உதவி’ செய்கிறோம் எனக்கூறி, குழந்தைக்கும் சிறந்த வீட்டை கண்டு பிடித்து தருகிறோம் என தெரிவித்துள்ளனர்.
“சில நீதிமன்ற அதிகாரிகளும், வழக்கறிஞர்களும், அவர்கள் மாஜஸ்ட்ரேட்டாக இந்த தத்து கொடுக்கும் ஒப்பந்தத்தில் கையெழுத்து போடும் நிலை வரும் வரையில், குழந்தைகளை ஒரு குறிப்பிட்ட இடத்தில் வைத்திருந்ததாகவும் சில அம்மாக்கள் தெரிவித்தனர்.”
முக்கிய புள்ளிகள் இதில் ஈடுபட்டிருக்கக்கூடும் என்ற எண்ணம், இந்த பெண்களின் கதைகளில் பொதுவாகவே உள்ளது.
T1981ஆம் ஆண்டு, கரியப்பெரும அதுகொரலே டான் சுமித்ரா மூன்றாவது குழந்தைக்காக கர்ப்பமானபோது, தங்களால் அந்த குழந்தையை பார்த்துக்கொள்ள முடியாது என்று அந்த தம்பாதிக்கு புரிந்தது. அதனால், அவர்கள் கொழும்புவில் இருந்த ஒரு போதகரை அணுகினர்.
குழந்தையை தத்து கொடுக்க அவர் ஏற்பாடு செய்ததாக கூறும் சுமித்ரா, 50,000 இலங்கை ரூபாய் (அப்போது சுமார் 2600 அமெரிக்க டாலர்கள்) பணத்தை அவர்களுக்கு பெற்றுத்தந்தார். ஆனால், அதற்கான எந்த ஆவணமும் தங்களுக்கு கிடைக்கவில்லை என்கிறார் அவர்.
“எங்களுக்கு தங்க இடமில்லை. வருமானம் என்று எதுவும் இல்லை. இருவரும் சேர்ந்து மகளை தத்து கொடுக்கலாம் என்று முடிவு செய்தோம். அவள் பிறந்து 2-3வாரமே ஆகியிருக்கும். அவளைப்பற்றி போதகரிடம் கேட்டபோது, ‘உன் மகளைப்பற்றி கவலைப்படாதே, அவள் நலமாக உள்ளார்.’ என்றார் ஆனால், எனக்கு அவளைப்பற்றி ஒன்றுமே தெரியாது.”
அதன்பிறகு சுமித்ராவிற்கு ஒரு மகன் பிறந்தார். ஆனால், தனது மகள் குறித்த வலி தொடர்ந்து இருந்துகொண்டே இருப்பதாக அவர் தெரிவிக்கிறார்.
கடுவெல பகுதியில் வாழும் 65 வயதாகும் சுமித்ரா, தனது மகளை ஒருமுறையாவது பார்க்க வேண்டும் என்று விரும்புகிறார். மகளின் ஒரே புகைப்படத்தையும் வெள்ளத்தில் தொலைத்துவிட்ட அவர், தற்போது அந்த மதபோதகருடன் எந்த தொடர்பும் இல்லாமல் இருக்கிறார்.
“என் இரண்டாவது மகள், அம்மா நாம் சென்று அந்த போதகரைக் கண்டுபிடிப்போம் என்கிறாள். என் ஒரே கோரிக்கை என் மகளை கண்டுபிடிப்பது மட்டுமே.”
சுமித்ராவிற்கு உதவ ஆண்ட்ரூ சில்வா முயன்றுள்ளார், ஆனால் இதுவரை பலன் இல்லை. பொய்யான தகவல்கள் பெண்களிடம் கொடுக்கப்பட்டுள்ளதாலேயே பல நேரங்களில் தேடல் தடை படுவதாக அவர் கூறுகிறார். இதே நிலையில்தான், தத்து கொடுக்கப்பட்ட குழந்தைகளும் உள்ளனர் என்றும், அப்படி தேடி கண்டுபிடித்துவிட்டாலும், அதன் விளைவும் மனதிற்கு மிகவும் வருத்தத்தை உருவாக்குவதாக உள்ளது என்று அவர் கூறுகிறார்.
2001ஆம் ஆண்டு, நிமல் சமந்த வான் ஓரூட் இலங்கைக்கு வந்தபோது, 1984ஆம் ஆண்டு, தன்னையும், தனது இரட்டை சகோதரரையும் தத்து கொடுத்த தாயை தேடிக்கண்டு பிடிக்க அவருக்கு ஒரு சுற்றுலா வழிகாட்டி உதவுவதாக முன்வந்தார். இவர்கள், தத்து கொடுக்கப்பட்ட போது, பிறந்து வெறும் ஆறு வாரம் மட்டுமே இருக்கும்.
2003ஆம் ஆண்டு, அந்த நபர் இவருக்கு போன் செய்து, தாயை கண்டுபிடித்துவிட்டதாக தெரிவித்தார். ஆனால், அது முழுவதும் நல்ல செய்தியாக இல்லை. ஏனெனில், 1986ஆம் ஆண்டு, இவரின் தாயார் அடுத்த குழந்தை பிறந்த மூன்றே மாதத்தில் மரணமடைந்தார்.
“எனக்கும், என் சகோதரருக்கும், வாழ்வின் மிகவும் இருண்ட நாள் அதுதான். எப்போதுமே, அவரி கண்டுபிடிக்க வேண்டும், எங்களை ஏன் தத்துகொடுத்தார் என்று கேட்க வேண்டும் என்ற எண்ணம் இருந்தது. ஏனென்றால், அவர்தானே எங்களுக்கு இந்த வாழ்க்கையைக் கொடுத்தார். அவர் நன்றாக இருக்கிறாரா என்பதை அறிந்துகொள்ள வேண்டும் என்பதே எனக்கு மிக முக்கிய விஷயமாக இருந்தது.”
பிறகு, இலங்கையிலிருந்து தத்து கொடுக்கப்பட்ட குழந்தைகளுடன் இணைந்து, தனது தாயாரின் பெயரில் நோனா அமைப்பு என்ற ஒரு தொண்டு நிறுவனத்தை அவர் உருவாக்கினார். இதுவரை இலங்கையில் பாலியல் துன்புறுத்தல் மற்றும் ஆட்கடத்தடத்தலுக்கு உட்படுத்தப்பட்ட 1600 பெண்களுக்கு, ஆதரவற்றோர் இல்லங்களில் தங்க உதவுதல், கல்வி, பாயிற்சி உள்ளிட்டவற்றிற்கு உதவி செய்து வருகிறார்.
செப்டம்பர் மாதம், இந்த அமைப்பின் கூட்டத்திற்கு, திடீரென வந்த நெதர்லாந்து மன்னர், இவருக்கு வீரதிருமகன்(Knight) பட்டம் அளித்தார்.
“அது பெரிய அதிர்ச்சி என்றாலும், எனக்கு கிடைத்த மிகப்பெரிய மரியாதை, மிகவும் சிறந்த அங்கீகாரம்.” என்கிறார் அவர்.
டச் அரசு, அனைத்து தத்து எடுத்தல் திட்டங்களுக்கும் தடை போட்டது, “சிறந்த வழியாக இருக்காது” என்று நிமல் நம்புகிறார்.
இருப்பினும், நெதர்லாந்தின் தத்து எடுத்தல் முரை இன்னும்கூட பல சட்டவிரோத விடயங்கள் கொண்டதாக, சந்தேகத்திற்குரியதாக இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 1967 முதல் 1997ஆம் ஆண்டு வரை, இலங்கை, இந்தோனீஷியா, வங்காளம், பிரேசில் மற்றும் கொலம்பியாவிலிருந்து தத்தெடுத்து வரப்பட்ட குழந்தைகளின் தத்தெடுப்பு முறையில் சட்டமீறல்கள் நடந்துள்ளதை கண்டறிந்த இரண்டு ஆண்டுகால விசாரணையை மேற்கோளிட்டு காட்டியுள்ளனர்.
இத்தகைய சட்டவிரோத செயல்களால், உறவினர்களை கண்டறிவது பெரும்பாலும் சிரமமாக இருந்தாலும், சில நல்ல முடிவுகள் கிடைத்துள்ளன.
1984ஆம் ஆண்டு கொழும்புவில் பிறந்தவர் சனுல் வில்மர். பிறந்து 10 வார காலமானபோது இவர் தத்து எடுக்கப்பட்டார். அதற்கு முன்பு வரையில் தெஹிவலையில் உள்ள ஒரு ஆதரவற்றோர் இல்லத்தில் தனது தாயுடன் அவர் இருந்தார்.
“நான் தத்து எடுக்கப்பட்டு வளர்க்கப்படுவது எனக்கு குழந்தைமுதலே தெரியும். அதனால் என் பெற்றோரை சந்திக்க வேண்டும் என்ற எண்ணம் எனக்கு எப்போதுமே இருந்தது.” என்கிறார் சனுல்.
“நான் யார்? என்ற அடையாளம் காணும் போராட்டம் எனக்குள் எப்போதும் இருந்தது. நான் பார்க்க இலங்கையை சேர்ந்தவர் போல இருந்தாலும், வளர்ப்பால் டச்சுக்காரர். என் பிறப்பு குறித்த ஆர்வம் எப்போதுமே இருந்தது.”
எட்டு வயது முதலே, தன் குடும்பத்தினர் குறித்த விவரங்களைக்கேட்டு, இவர் நெதர்லாந்தில் உள்ள தத்துகொடுக்கும் அமைப்பிற்கு கடிதங்கள் எழுதியுள்ளார். அவருக்கு 15 வயது இருக்கும்போது, பதில் கிடைத்தது. அதற்கு அடுத்த ஆண்டு, அவரின் தாயை அந்த அமைப்பு தேடிக்கண்டு பிடித்தது.
“எனக்கு ஒரு சகோதரன், சகோதரி இருப்பதும், என் தந்தை இன்னும் என் தாயுடனேயே இருக்கிறார் என்பதை அறிந்தேன். ஹொரனாவில் உள்ள குடும்பத்தைக்காண நாங்களை அனைவரும் சென்றோம். அது மிகவும் உருக்கமான, அதே நேரம் வருத்தமான சூழலாக இருந்தது.” என்கிறார் அவர்.
“எனக்கு அவர்களைப் பார்த்ததில் பெரும் மகிழ்ச்சி. ஆனால், அவர்களால் ஆங்கிலம் புரிந்துகொள்ள முடியவில்லை. எனக்கு சிங்கள்ம் பேசத்தெரியாது. அதனால் எங்களால் பேசிக்கொள்ள முடியாமல் போனது வருத்தம் அளிக்கிறது. அவர்களைவிட வித்தியாசமான வாழ்க்கை எனக்கு இருப்பதைப் பார்த்து வருந்தினேன்.”
ஆம்ஸ்டர்டாமில் உள்ள உட்ரெச் பல்கலைக்கழகத்தில் பணியாற்றும் 37 வயதான அவர், தற்போது தன்னைப்போலவே தத்து எடுக்கப்பட்ட குழந்தைகளுக்காக சிங்களம் கற்றுத்தரும் ஆசிரியராகியுள்ளார்.
தன்னை ஏன் தத்துக்கொடுத்தார் என்ற விவரத்தை தாய் கூறியதாக அவர் தெரிவிக்கிறார். ஆனால், அந்த காரணத்தை கூறினால், அம்மா வருத்தப்படுவார் என்பதால், கூற முடியாது என தெரிவித்துவிட்டார். தனக்கு அம்மாமீது எந்த வருத்தமும் இல்லை என்றும், அடிக்கடி இலங்கைக்கு சென்று வருவதாகவும் அவர் கூறுகிறார். 2019ஆம் ஆண்டு, ஆம்ஸ்டர்டாமில் நடந்த சனுலின் திருமணத்திற்கு அவரின் தாயும், தம்பியும் வந்திருந்தனர்.
“எனக்கு ஒரு சகோதரன், சகோதரி இருப்பது அறிந்துள்ளேன். நான் மிகவும் மகிழ்ச்சியாக உள்ளேன்.”
பல ஆண்டுகளாக நடக்கும் தவறுகள் குறித்து அதிகாரிகளுக்கு தெரியும் என்றும், ஆனால், இதுகுறித்து அவர்கள் எதுவும் செய்யவில்லை என்றும், கடந்த பிப்ரவரி மாதம் டச் அரசு தெரிவித்தது. இனி அமையவிருக்கும் அமைச்சர்கள் குழுதான், வெளிநாடுகளிலிருந்து தத்து எடுப்பது குறித்த சட்டத்தை எவ்வாறு முன்னெடுத்து செல்வது என்று முடிவு செய்யும் என தெரிவித்தது.
1980களில் நாட்டில், “சுற்றுலாவுடன் சேர்ந்தது போலவே” சட்டவிரோதமான தத்து எடுப்பும் நடந்ததாக பிபிசியிடம் தெரிவித்தார் இலங்கையின் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல.
டச் அரசின் முடிவு குறித்து அடுத்த கேபினட் கூட்டத்தில் கேள்வி எழுப்புவேன் என்று தெரிவித்த அவர், “தற்போது இந்த விவகாரம் அவ்வளவு மோசமான நிலையில் இல்லை. ஆனால், தற்போது அது நடக்கவில்லை என்று சொல்லமாட்டேன்.” என்றார்.
லாரன் பாட்ஸால் எடிட் செய்யப்பட்டது.