Home இலங்கை அமைச்சர் சமல் ”சிங்கராஜ குளம்” இடத்தை மாற்றுகின்றார்

அமைச்சர் சமல் ”சிங்கராஜ குளம்” இடத்தை மாற்றுகின்றார்

by admin

உலக பாரம்பரிய சிங்கராஜ வனத்தின் நடுவில் இரண்டு குளங்கள் அமைக்கப்படும் என பகிரங்கமாக அறிவிக்கப்பட்டு இரண்டு நாட்களுக்குள், ஜனாதிபதி, பிரதமரின் மூத்த சகோதரரான நீர்ப்பாசன அமைச்சர அதனை மாற்றிக்கொண்டுள்ளார்.

உலக நீர் தினத்தை முன்னிட்டு வீரகெட்டியவில் இடம்பெற்ற விழாவில் நீர்ப்பாசன அமைச்சர் சமல் ராஜபக்ச, ஹம்பாந்தோட்டைக்கு குடிநீரை கொண்டுச் செல்ல,  சிங்கராஜ வனத்தில் இரண்டு குளங்களை அமைக்க நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக குறிப்பிட்டிருந்தார்.  

“இப்போது அதை செயற்படுத்துவதற்கு தேவையான நடவடிக்கைகளை எடுத்துள்ளோம். எனினும் சில பிரச்சினைகள் காணப்படுகின்ற. நாங்கள் இரண்டு சிறிய குளங்களை அமைக்க வேண்டும். நீரை சேகரித்துக்கொள்ளவே இந்த நடவடிக்கை. அதனை சிங்கராஜ வனத்திலேயே அமைக்க வேண்டும். ஒரு குளம் சுமார் ஐந்து ஏக்கர் நிலத்தில் அமையும்.”

இதுபோன்ற இரண்டு குளங்களை நிர்மாணிக்கும் போது காடழிப்பு அபாயங்கள் குறித்து கருத்து தெரிவித்த முன்னாள் சபாநாயகர், அதை எவ்வாறு செய்வது என்பது குறித்து விவாதங்கள் நடைபெற்று வருவதாக தெரிவித்தார்.

“இது போன்ற இரண்டு குளங்கள் கட்டப்படும்போது, காடு நீரில் மூழ்கும். சிங்கராஜ வனம் உயர் பாதுகாப்பு வலையமாகும். ஒரு மரத்திலிருந்து ஒரு இலையை கூட நாம் எடுக்க முடியாது. எனவே இப்போது இந்த குளத்தை  அமைக்க அனுமதிக்குமாறு அவர்களிடம் கோருகின்றோம். ஐந்து ஏக்கருக்கு பதிலாக, மேலும் ஐம்பது, அறுபது, நூறு ஏக்கர் காடுகளை உருவாக்குவது குறித்து நாம் உறுதியளிக்கின்றோம்.”

அகற்றப்பட்ட மழைக்காடுகளை பொருளாதார நன்மைகளை வழங்கக்கூடிய இறப்பர் தோட்டங்களாக மாற்றுவது குறித்தும் அமைச்சர் பரிந்துரைத்தார்.

ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பின் புத்திக பதிரன மார்ச் 23 செவ்வாய்க்கிழமை  நாடாளுமன்றில்  எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த அமைச்சர் ராஜபக்ச,  சிங்கராஜ வனத்தின் நடுவில் அல்ல, தற்போது மக்கள் வசிக்கும் கின் கங்கையின் கீழ் பகுதியில் 5 ஏக்கர் பரப்பில் நீர்த்தேக்கத்தை அமைக்கும் திட்டம் காணப்படுவதாக தெரிவித்தார்.  

ஐக்கிய நாடுகளின் கல்வி, அறிவியல் மற்றும் கலாச்சார அமைப்பான யுனெஸ்கோ மற்றும் பிற தொடர்புடைய அதிகாரிகளிடமிருந்து தேவையான ஒப்புதல் பெற்றுக்கொள்ளப்படும் எனவும்,  இந்தத் திட்டத்தைத் ஆரம்பிப்பதற்கு முன்னர் சுற்றுச்சூழல் பாதிப்பு உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் குறித்து ஆராயப்படும் எனவும் குறிப்பிட்டார்.

“களு கங்கை, கிங் கங்கை மற்றும் நில்வல கங்கை ஆகியவற்றின் நீரை வடகிழக்கு திசைக்கு திருப்ப நீர்ப்பாசனத் திணைக்களம் திட்டமிட்டுள்ளது. இது 90 வருடங்களுக்கு முன்னர் திட்டமிடப்பட்ட விடயம். ஆனால் எந்த அரசாங்கமும் இதைச் செய்யவில்லை. இதன் விளைவாக, இன்று ஏராளமான மக்கள் தாகத்தால் பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே இதை ஒருநாள் செய்ய வேண்டும். கின் கங்கை திட்டம் பல வருடங்களுக்கு முன்னர் திட்டமிடப்பட்டது என நினைக்கிறேன். இது சிங்கராஜவுக்கு ஒரு பெரிய பிரச்சினை என்பது எனக்குத் தெரியும். ஆனால் இது பல வருடங்களாக இருந்த ஒரு திட்டம். “

கிங் கங்கையின் கீழ் பகுதியில் ஒரு நீர்த்தேக்கத்தை அமைக்கும் திட்டம் காணப்படுகின்றது என  அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

“அந்த திட்டங்களில் மக்கள் தற்போது வசிக்கும் கிங் கங்கையின் கீழ் பகுதிகளில் ஒரு பகுதியும் அடங்கும். 100ற்கும் குறைவான குடும்பங்கள் வசிக்கும் பகுதியில் சுமார் ஐந்து ஏக்கர் பரப்பளவில் ஒரு சிறிய நீர்த்தேக்க திட்டம் இருப்பதாக நான் நினைக்கிறேன், இது ஒரு திட்டமாகும், இதற்கு யுனெஸ்கோவின் அனுமதி தேவை இதன் மூலம் ஏதாவது பாரிய பாதிப்பு காணப்படுகின்றதா என அவர்களை ஆய்வு செய்யுமாறு கோரியுள்ளோம்”

இதை நடைமுறைப்படுத்த முடியாவிட்டால், வெள்ளத்தை தடுக்க முடியாது. தாகத்தில் இருக்கும் மக்களுக்கு தண்ணீரை வழங்க முடியாது எனக் கூறிய அமைச்சர், உண்மைக்கு புறம்பான தகவல்களை  ஊடகங்கள் அறிக்கையிடுவதாகவும் குற்றம் சாட்டியுள்ளார்.

“சிங்கராஜ வனத்தில் நீர்த்தேக்கம்  கட்டப்படுவதாகவே ஊடகங்களில் கூறப்பட்டது.
எனவே இவற்றைப் பற்றி கொஞ்சம் ஊடகங்களும், நாட்டு மக்கள் தூண்டிவிடாமல், என்ன சொன்னார்கள், என்ன செய்தார்கள்? என்பதை தேடிப் பார்க்க வேண்டும்.”

எவ்வாறெனினும், ஊடகங்கள் வெளியிட்ட காணொளிக் காட்சியில் “சிங்கராஜ வனத்திற்குள்” இரண்டு குளங்கள் அமைக்கப்படும் என அமைச்சர் அறிவித்ததைக் காண்பித்தது.

இதன் பின்னர், நேற்றைய தினம் (23) விசேட அறிக்கை ஒன்றை வெளியிட்ட, அமைச்சர் சமல் ராஜபக்ச, சிங்கராஜ வனத்திற்கு அருகே,  குளங்களை நிர்மாணிப்பது ஒரு திட்ட முன்மொழிவு மாத்திரமே எனவும்,  மக்களின் அடிப்படை உரிமையாக இருக்கும் குடிநீர் பிரச்சினை மற்றும் நாட்டின் நீர்வளத்துடன் தொடர்புடைய மழைக்காடுகளின் பாதுகாப்பு ஆகிய விடயங்களில் அரசாங்கம் செயற்பட்டு வருவதாகவும், தெரிவித்துள்ளார்.

கிங்-நில்வலா திட்டம் ஊடாக ஹம்பாந்தோட்டைக்கு தண்ணீரை கொண்டு செல்வதற்காக சிங்கராஜ காட்டில் இரண்டு குளங்களை நிர்மாணிப்பது தொடர்பாக சுற்றுச்சூழல் ஆர்வலர்கள், சமூக ஊடகங்கள் மற்றும் பல்வேறு தரப்பினரின் கடும் எதிர்ப்பு இருந்தபோதிலும் அமைச்சர் இந்த அறிக்கையை வெளியிட்டிருந்தார்.

உலகின் அபூர்வ மழைக்காடுகள் மற்றும் உயிர்க்கோள இருப்புக்களில் ஒன்றான 11,187 ஹெக்டேயர், சிங்கராஜ வனத்தை உள்ளூர் சுற்றுச்சூழல் அமைப்புகளின் பரிந்துரைகள் மற்றும் யுனெஸ்கோ அமைப்பின் விதிமுறைகளை மீறாமல் பாதுகாக்க வேண்டிய அவசியம் குறித்து நீர்ப்பாசனத் திணைக்களம் மற்றும் அமைச்சும் தெளிவான புரிதலைக் கொண்டுள்ளதாகவும் அமைச்சர் ராஜபக்ச வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

இயற்கைக்கு எதிரான குற்றம்

சிங்கராஜ உலக மரபுரிமை தளத்தை அழிக்க வேண்டாம் என இலங்கை அரசிடம் கோருவதாக, நேற்றைய தினம் (23) யுனெஸ்கோ உலக மரபுரிமை மையத்திற்கு எழுதிய கடிதத்தில், சுற்றுச்சூழல் மற்றும் இயற்கை ஆய்வுகள் மையம் தெரிவித்துள்ளது.

உலக மரபுரிமை தளமாக சிங்கராஜவில், இரண்டு குளங்களை நிர்மாணிப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது எனவும், இது இயற்கைக்கு எதிரான குற்றம் எனவும், சுற்றுச்சூழல் ஆர்வலர் ரவீந்திர கரியவாசம் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கையின் 60 சதவீதத்திற்கும் அதிகமான தாவரங்கள் மற்றும் விலங்கினங்கள் வசிக்கும் சிங்கராஜவின் வளமான பல்லுயிர் பெருக்கத்திற்கு இது கடுமையான அச்சுறுத்தலாக அமையும் என அவர் அந்த கடிதத்தில் வலியுறுத்தியுள்ளார்.

இலங்கையில் தற்போது 2.8 சதவீத மழைக்காடுகள் மாத்திரமே காணப்படுவதாக சுட்டிக்காட்டியுள்ள  சுற்றுச்சூழல் ஆர்வலர் சஜீவ சாமிகர, உலக மரபுரிமையான சிங்கராஜ வனம், உள்ளூர் பல்லுயிர் பெருக்கத்திற்கான இடமாகவும் அமைந்துள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.

அத்தகைய  ஈரநில வன அமைப்பின் அழிவானது, காடழிப்பிற்குள் மாத்திரம் மட்டுப்படுத்தப்பட முடியாது எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

உலக மரபுரிமையான சிங்கராஜ வனத்தின் நடுவில் குளத்தை அமைப்பதன் மூலம் தண்ணீர் கொள்ளையடிக்கப்படுவதாகவும் சுற்றுச்சூழல் ஆர்வலர் குற்றம் சாட்டுகிறார்.

சிங்கராஜவின் பல்லுயிர் பெருக்கத்திற்கு ஆபத்தை விளைவிக்கும் கட்டுமானம் குறித்து தொலைக்காட்சி நிகழ்ச்சியில் இறக்குவானையை சேர்ந்த யுவதி கருத்து வெளியிட்ட நிலையில்,  சுற்றுச்சூழலைப் பாதுகாப்பதற்கான ஆர்வம் நாட்டில் மேலோங்கியுள்ளது. எனினும், குறித்த யுவதியும், ஊடகங்களும் ஜனாதிபதி உள்ளிட்ட அதிகாரிகளிடமிருந்து துன்புறுத்தல்களை எதிர்கொள்கின்றன. #சிங்கராஜ_குளம் #சமல்ராஜபக்ச #காடழிப்பு #உயர்பாதுகாப்புவலையம் #யுனெஸ்கோ

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More