இயற்கை எழில் கொஞ்சும் வடமாகாணத்தில் உள்ள முல்லைத்தீவு மாவட்டத்திலுள்ள இசைக்கலைஞர்களாக முல்லைச் சகோதரிகளும் மிளிர்கின்றனர். முல்லைச் சகோதரிகள் இசை நிகழ்ச்சிகளையும், நடன நிகழ்ச்சிகளையும், நாடகங்களையும் நிகழ்த்தி பல ரசிகர்களின் ஆதரவையும் பாராட்டுக்களையும் பெற்றனர். சிறுவயதிலிருந்தே இசை, ஆர்மோனியம் என்பவற்றை தந்தையிடம் கற்றுக் கொண்டனர். இசையில் தேர்ந்த புவனேஸ்வரிக்கும், பார்வதிதேவிக்கும் 1962ம் ஆண்டு ‘முல்லைச் சகோதரிகள்’ எனும் பட்டம் கிடைத்தது. அத்துடன் 1970ம் ஆண்டு இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தில் கர்நாடக இசைப் பாடல்களைப் பாடியும் வந்தனர்.இவ்வானொலியில் இடம்பெற்ற போட்டியில் அகில இலங்கை ரீதியாக இரண்டாம் இடத்தைப் பெற்றுக் கொண்டு இசையில் தடம் பதித்தனர். இவர்கள் கோயில்களிலும் மற்றும் திருவிழாக்களிலும், நிகழ்வுகளிலும் பாடி வந்தனர். ஆயிரத்திற்கும் மேற்பட்ட மேடைகளில் தங்களுடைய திறமைகளை வெளிக்காட்டி ஈழமெங்கும் தங்களுடைய புகழை நிலை நாட்டினார்கள்.
இவர்கள் கர்நாடக இசைப் பாடல்களில் கையாண்டுள்ள இசை நுட்பங்கள் அனைவரின் மனங்களையும் ஈர்த்தது. பாடும் திறனும் உச்சரிக்கும் அழகும் ஓங்கி ஒலிக்கும் வளமான குரலும் இவர்களுக்குள்ள சிறப்பம்சமாகும். இசையை முறையாகப் பயின்று அதனை மாணவர்களுக்கும் புகட்டி வந்தனர். அத்தோடு மேடைக்கச்சேரிகள் செய்வதிலும் திறன் படைத்தவர்களாகக் காணப்பட்டனர். ஒரே வீச்சில் மூன்று ஸ்தாயிகளையும் அப்படியே பாடும் வல்லமை படைத்தவர்கள். சிலருக்கு கீழ் ஸ்தாயியில் பாடுவது கடினமாக இருக்கும். ஆனால் இவர்களுக்கு எல்லா ஸ்தாயியிலும் பாடும் வல்லமையுண்டு.
கர்நாடக சங்கீதப் பாடல்களில் சொல் உச்சரிப்பு, சொற்பொழிவு, பூரணத்துவப்பொழிவு, கம்பீரம் போன்ற நுட்பங்களையும் பயன்படுத்தியுள்ளனர். பாடிக் கொண்டிருக்கும் பொழுது குரலின் தெளிவும் கம்பீரமும் கூடிக்கொண்டே செல்லும். தனியாகவே பாடி சபையை அலங்கரிக்கும் ஆற்றலும் உண்டு. கர்நாடக சங்கீத பாடல்களில் பல இசை நுட்பங்களையும் பிரயோகித்துள்ளனர், அத்துடன் வாய்ப்பாட்டு இசையினை மேம்படுத்தி இசைக் கச்சேரிகள் செய்தனர். இவர்களின் கச்சேரிகளுக்கு தந்தையார் ஆர்மோனியமும், அண்ணன் பாலசுப்பிரமணியம் மிருதங்கமும், தங்கை இந்திராணி வயலினும், மற்றைய சகோதரி புஷ்பராணி அண்ணனான பாலசுப்பிரமணியத்துடன் சேர்ந்து மிருதங்கமும் வாசித்தனர். இவர்களுடன் இன்னொரு கலைஞரானசிவப்பிரகாசமும் இணைந்து முகர்சிங் வாத்தியமும் வாசித்தார். இவர்கள் ஒரு குடும்பமாக இசை குழுமத்துடன் கச்சேரிகள் செய்து கொண்டிருந்தனர்.
முல்லைச் சகோதரிகள் இசைக்கருவிகள் வாசிப்பதில் மிகத் திறமை உடையவர்களாக இருந்தனர். ஸ்வரங்களினுடைய ஸ்தானங்களை வெளிப்படுத்தக்கூடிய வாத்தியமாக ஆர்மோனியம் கருதப்படுகின்றது. இவ் வாத்தியத்தினை ஒரு இசை வித்துவான் முக்கியமாகத் தெரிந்திருக்க வேண்டும் என்பது அவசியமாகின்றது. முல்லைச் சகோதரிகளும் இவ் ஆர்மோனிய வாத்தியத்தினை வாசிப்பதில் திறமை உடையவர்களாக இருந்தனர். அத்துடன் வயலினும் கற்றுத் தேர்ச்சி பெற்றிருந்தனர். கர்நாடக இசை உருப்படிகளை ஒவ்வொரு இராகத்திலும் பலபல உருப்படிகளைக் கற்றனர். ஆலயங்களில் திருவிழா காலங்களில், குருபூசை தினங்களில், நவராத்திரி காலங்களில் என மிக முக்கியமான தினங்களில் கச்சேரிகள், பஜனைகள் செய்வது என இவர்களின் வாழ்க்கை நகர்ந்த வண்ணம் இருந்தது. கிராமத்தில் உள்ள ஆயலங்களில் மட்டுமன்றி ஒவ்வோர் ஊர் ஆலயங்களுக்கும் சென்று இசைக்கச்சேரிகள் செய்வது இவர்களது வழக்கம். இதனால் முல்லைச் சகோதரிகளின் பெயரும் புகழும் ஈழமெங்கும் பரவியது. கொழும்பு வெள்ளவத்தை சம்மாங்கோட்டுப் பிள்ளையார் கோயிலில் ஆடிவேல் விழாவை முன்னிட்டு இரு நாட்கள் தொடர்ந்து கச்சேரிகள் செய்தனர்.
முல்லைச் சகோதரிகளில் இளைய சகோதரியான பார்வதிதேவிக்கு 1984 இல் திருமணம் நடைபெற்றது. அதன் பிறகு இவரால் இசையை தொடர முடியவில்லை. அதன்பிற்பாடு முல்லைச் சகோதரிகள் என்ற பெயரோடு தனி ஒருவராக புவனேஸ்வரி இரத்தினசிங்கம் கச்சேரிகள் செய்து கொண்டு வருகிறார்.தொடர்ந்து விருதுகள், பட்டங்கள் என்பனவும் கிடைக்கப்பெற்றுள்ளன.’முல்லைச் சகோதரிகள்’,’மெல்லிசை சுகந்தம்’,’புராண இசையரசி’,’மதுர இசைக்கோகிலம்’,’மங்கையர் குலதிலக சங்கீத சானவித்தகி’, ‘முதலமைச்சர் விருது’,’இசைப்பேரொளி’,’கலாபூஷண விருது’,’பக்தி இசைமாணி’,’முல்லைப்பேரொளி’ போன்றனவாகும்.
கடவுள் மற்றும் இவரது குருவான தந்தையார் மற்றும் இவரது கணவர் கொடுத்த ஆதரவினால் இந்த உயர் நிலையில் இருக்கக் கூடியதாக உள்ளது என்பது இவரது கருத்தாகும்.’உனக்கு இயலக்கூடிய வரையிலும் நீ இருக்கக்கூடிய காலம் வரையிலும் பாடு’ என்று கணவர் கூறிய சொல்லை உயர்வாகக் கருதி கலையை மேம்படுத்தி கலைப்பயணத்தை இன்று வரையும் தொடர்கின்றார். இசைப்பாதையில் பல மாணவர்களையும் உருவாக்கிக் கொண்டிருக்கின்றார்.
புவனா இரத்தினசிங்கம் அவர்களின் கற்பித்தல் முறை அழகானது. கற்பித்தலைநுணுக்கமாக்கி இலகுவான படிமுறைகளைக் கையாள்வார். முதல் நாள் சொல்லிக்கொடுக்கும் பாடங்களை மறுநாள் மீட்டல் செய்து சரிபார்த்து விட்டுத்தான் அடுத்த நாள் பாடங்களை கற்றுக் கொடுப்பார். இது இவருடைய கற்பித்தலின் சிறப்பு என்று கூறலாம். அதிகமான புதிய பாடல்களை மாணவர்களுக்குச் சொல்லிக் கொடுக்க வேண்டும் என்று நினைத்து பொறுப்புடனும், தீவிர கவனத்துடனும் அவரது விருப்பத்திற்கு ஏற்ப கற்றுக் கொடுப்பார், தனது அனுபவங்களுக்கு ஏற்ப பல்வேறு விடயங்களையும் உலக விஷயங்களையும் நிறைவாகவே சொல்லிக் கொடுத்து மாணவர்களை சிறந்த முறையில் நன்நிலைப்படுத்த வேண்டும் என்ற நோக்குடன் பணியாற்றி வருகின்றார்.
2015ம் ஆண்டு சீர்காழி கோவிந்தராஜன் அவர்களின் மகன் சிவசிதம்பரம் அவர்கள் வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலயத்துக்கு இசைக்கச்சேரி வழங்க வந்திருந்தார்கள். மூன்று மணித்தியாலயமாக இவர்களினுடைய இசைக்கச்சேரி நடைபெற்றது. அந்த இசைக்கச்சேரியில் வாழ்த்துப் பாடல் பாடும்படி ஆலய நிர்வாகத்தினர் முல்லைச் சகோதரியைக் கேட்டுக் கொண்டார்கள். அவரும் உடனே சம்மதித்து பாடலை தயார்ப்படுத்தினார். அந்தப் பாடலை கணபதிப்பிள்ளை ஐயா எழுதினார். ஆதற்கு முல்லைச் சகோதரியே மெட்டமைத்து இயன்றவரை தனது குரலின் வல்லமையைப் பயன்படுத்தி பாடி முடித்தார். கச்சேரி நிறைவு பெற்ற பின்னர் பாடகர் சிவசிதம்பரம் அவர்கள்அம்மா உங்களது இசை மென்மேலும் வளர வேண்டும் என்று வாழ்த்தினார்.
இறுதியாக புவனா இரத்தினசிங்கம் கூறியது யாதெனில், இசைக்காகவே இன்றும் பாடிக்கொண்டிருக்கிறேன். என்றும் பாடிக்கொண்டிருப்பேன். இசையில் முழுமையாக மனம் வைத்து ஈடுபட வேண்டும். இசையை முறைப்படி கற்க வேண்டும். கேள்வி ஞானம் இருந்தாலும் கற்றாலும் இசை தொடர்பான பூரண விளக்கங்களைக் கொடுக்க முடியும். அத்தோடுஇசை நுணுக்கங்களையும் கண்டு துலங்க வேண்டும். அப்படித் துலங்கினால் இசையின் சரியான இன்பத்தை அனுபவிக்கலாம் என்றார்.
ரதிகலா புவனேந்திரன்
கிழக்குப் பல்கலைக்கழகம்.