உள்ளக ரீதியில் காணப்படும் பலவீனமே சர்வதேச தலையீடுகளுக்குக் காரணம் எனத் தெரிவித்த எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ, இனிவரும் ஜெனீவா அமர்வில், இலங்கைக்கு எதிராகத் தீர்மானங்கள் கொண்டுவரப்பட்டால், அவை நிறைவேற்றப்படாமல் முறியடிப்பதற்குத் தாமும் ஒத்துழைப்பு வழங்க தயார் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன், அரசியலமைப்பின் 13ஆவது திருத்தத்துக்கு மைனஸ் காட்டுபவர்கள், சர்வதேசத்திடம் 13 ப்ளஸ் எனக் கூறுகின்றனர் என்றும் 13ஆவது திருத்தத்தை உள்ளவாறே நடைமுறைப்படுத்தி, ஜனநாயகத்தை நிலைநாட்ட வேண்டும் என்பதே தமது நிலைப்பாடு எனவும் கூறினார்.
உயிர்த்த ஞாயிறுதினத் தாக்குதல் மீதான ஒத்திவைப்புவேளை விவாதம், நாடாளுமன்றத்தில் நேற்று (25.03.21) நடைபெற்ற போது கலந்துகொண்டு உரையாற்றிய அவர்,
இலங்கைக்கு எதிராகக் கொண்டுவரப்பட்ட பிரேரணைக்கு, 22 நாடுகள் ஆதரவாகவும் 11 நாடுகள் எதிராகவும் வாக்களித்துள்ளதுடன், 14 நாடுகள் வாக்களிப்பில் இருந்து விலகிக்கொண்டுள்ள நிலையில், எதிராக வாக்களித்த நாடுகளையும் விலகிகொண்ட நாடுகளையும் இணைத்து, மொத்தமாக 25 நாடுகள் இலங்கைக்குச் சார்பாக வாக்களித்துள்ளன என்று, அமைச்சர் தினேஷ் குணவர்தன தெரிவித்துள்ளார் எனவும் இந்தக் கணக்கு, சிறுபிள்ளைத்தனமாக உள்ளதெனவும் கூறினார்.
“தினேஷின் இந்தக் கணக்குபடி பார்த்தால், கடந்த ஜனாதிபதித் தேர்லில் வாக்களிக்காத மக்களையும் இணைத்து கணக்கிட்டுப் பார்த்தால், நான் தான் இன்று ஜனாதிபதியாக வந்திருப்பேன். விரும்பியோ விரும்பாமலோ, பிரேரணைக்குப் பெரும்பான்மையான ஆதரவு வாக்குகளே கிடைத்துள்ளன என்பதை ஏற்றுக்கொள்ள வேண்டும். இலங்கையில் காணப்படும் சர்வதேசக் கொள்கை காரணமாகவே, எமக்குச் சார்பாக இருந்த நாடுகள் இந்தப் பிரேரணைக்கு ஆதரவாகச் செயற்பட்டதுடன், விலகியும் கொண்டன.”
“இந்தப் பிரேரணை உள்ளடக்கத்தில் 85 சதவீதமானவை, கோட்டாபய அரசாங்கத்தின் ஆட்சிக் காலத்தில் இடம்பெற்ற ஜனநாயக விரோத செயற்பாடுகளாகவே காணப்படுகின்றன. அத்துடன், இந்தப் பிரேரணை தோல்வியடைவதற்கு, இலங்கையில் காணப்படும் இனவாத, மதவாத, தீவிரவாதச் செயற்பாடுகளும் நாட்டு மக்களிடையே அமைதியின்மையும் நல்லிணக்கமின்மையும் ஆகியவையே காரணங்களாகும்.”
“மஹிந்த ராஜபக்ஷ கொண்டுவந்த எல்எல்ஆர்சி, பரணகம விதப்புரைகளை நடைமுறைப்படுத்தி இருந்தால், இன்று இலங்கை இந்த நிலைமைக்குத் தள்ளப்பட்டிருக்காது. உண்மையில், உள்நாட்டு விவகாரங்களில சர்வதேசத் தலையீடு இருப்பதில் எமக்கு விருப்பம் இல்லை. உள்ளக ரீதியில் உங்களில் காணப்படும் பலவீனம் காரணமாகவே, சர்வதேச தலையீடு காணப்படுகிறது. இதை நாம் முறியடிக்க வேண்டும். உள்நாட்டு விடயங்களை உள்நாட்டுக்கு உள்ளேயே தீர்த்துக்கொள்வதாக இருந்தால், இதற்கான ஒத்துழைப்பை நாம் வழங்குவோம். ஆனால், அதில் எவ்வித அரசியல் தலையீடும் இன்றி, நியாயமான முறையில் அதன் செயற்பாடுகள் அமைய வேண்டும் எனவும் வலியுறுத்தி உள்ளார்..”