தமிழ் சிவில் சமூகஅமையம்
Tamil Civil Society Forum
26 மார்ச் 2021
ஐக்கிய நாடுகள் மனிதஉரிமைப் பேரவையின்46 வதுஅமர்வில் இலங்கை குறித்து நிறைவேற்றப்பட்ட தீர்மானம் பற்றிய செய்திக் குறிப்பு
இலங்கையில் பொறுப்புக்கூறல் மற்றும் நல்லிணக்கத்தை மேம்படுத்துவது தொடர்பாக ஐ.நா மனிதஉரிமைகள் பேரவை நிறைவேற்றிய தீர்மானம் 46/1 ஐ தமிழ் சிவில் சமூக அமையம் கவனத்தில் கொள்கிறது. கடந்த 12 ஆண்டுகளில் ஐ.நா மனித உரிமைகள் பேரவைநிறைவேற்றிய இலங்கை குறித்த எட்டாவது தீர்மானம் இதுவாகும். இத் தீர்மானமானது பொறுப்புக் கூறலை மேம்படுத்துவதில் குறிப்பிடத்தக்களவில்; பங்களிக்காது எனநாம் கருதுகிறோம்.
தீர்மானத்தைக் கொண்டு வந்த ஐக்கிய இராச்சியம் தலைமையிலான மையக் குழுவிற்கு 2021 மார்ச் 01 ஆந்திகதிய எமதுகடிதத்தில் விளக்கப்பட்டுள்ளது போல், நீதிக்கான தமிழ் மக்களதுபோராட்டத்தை தாமதிப்பதற்கானதும் இருட்டடிப்புச் செய்வதற்கு ஆன இன்னொரு முயற்சியே இத்தீர்மானம் ஆகும். மேலும் இதுதமிழ் மக்களுக்கு எதிராகதற் போதும் இடம்பெறுகின்ற அத்து மீறல்களை,தடுப்பதில் அல்லது கட்டுப்படுத்துவதில் எவ்வித கரிசனையையும் காட்ட வில்லை. தற்போதைய அரசாங்கமானது தமிழ் மற்றும் முஸ்லிம் மக்கள் மீதான வலிந்த கூட்டு அடையாள அழிப்புச் செயற்பாட்டை அதிகரித்து வருகின்றது. அடுத்தடுத்துவரும் இலங்கை அரசாங்கங்களின் கொள்கையானதுகட்டமைக்கப்பட்ட இனப் படுகொலையேயன்றி வேறல்ல என்று தமிழ் மக்கள் கருதுகின்றனர். இத் தீர்மானமானதுநிலைமையின் பாரதூரமான தன்மையை புரிந்து கொள்ளவுமில்லை. இனப் படுகொலையைத் தடுப்பதற்கான வழிவகைகளை முன் வைக்கவுமில்லை.
இத் தீர்மானமானது, சான்றுகளை சேகரிப்பதற்கான ஆணையை மனித உரிமைஆணையாளருக்கு வழங்குவதன் மூலம் வெளித் தோற்றத்தில் வலுவான பிரேரணை போன்று தோற்ற மளிக்கப்பட்டுள்ளது. எமது முன்னைய கடிதத்தில் நாம் சுட்டிக் காட்டியது போல், எத்தகைய நீதிப் பொறி முறைக்கு அத்தகைய சாட்சித் திரட்டல் பங்களிப்புச் செய்யப் போகின்றது என்பது தொடர்பிலான விளக்கம் இல்லாத போது சான்றுகளை சேகரித்தல், ஒன்று சேர்த்தல் மற்றும் பாதுகாத்தல் என்பவற்றிற்கானநோக்கம் பொருளற்றுப் போய்விடும். பொறுப்புக் கூறலை சாத்தியப்படுத்த சர்வதேச நியாயாதிக்க வழிமுறையைப் பயன்படுத்துவதை மையக்குழு உட்பட உறுப்பு நாடுகள் விரும்புகின்றனவா என்பது கூட தெளிவாக இல்லை. இலங்கை விடயத்தை ஐநாபாதுகாப்புச் சபையில் எடுப்பதற்கான கோரிக்கை தொடர்பில் மையக்குழு தொடர்நது மௌனமாக உள்ளது. ஆணையாளரின் அறிக்கையில் கோடிட்டுக் காட்டப்பட்டுள்ள அனைத்துப் பரிமாணங்களையும் மையக் குழுவில் அங்கம் வகிக்கும் அரசுகள் ஏற்றுக் கொள்கின்றதா என்ற கேள்வி எழுகின்றது. உண்மையான அர்ப்பணிப்பு மற்றும் நீதியைப் பெற்றுக் கொள்வதற்கான அரசியல் விருப்புமையக் குழுவில் அங்கம் வகிக்கும் அரசுகளுக்கு இல்லை என்றேநாம் கருதுகின்றோம்.
ஆரசியல் தீர்வுதொடர்பில் குறிப்பிடுகையில் தீர்மானத்தில் ’13ஆம் திருத்தத்தை நிறைவேற்றல் ‘மற்றும் ‘உள்ளுராட்சி’ என்று மட்டுப்படுத்தப்பட்டு உள்ளயால் நாம்பெரிதும் விசனமடைகின்றோம். தீர்மானத்தின் இப்பந்தியானது இந்திய அரசாங்கத்தினால் முன்வைக்கப்பட்ட வேண்டுகோளின் பேரில் சேர்க்கப்பட்டது எனநாம் அறிகின்றோம். இலங்கை தொடர்பாகத் தனது நலன்களைப் பாதுகாப்பதற்கும் தக்கவைப்பதற்கும் 13ம் திருத்தமும் அதனோடு தொடர்புபட்ட இந்திய இலங்கை ஒப்பந்தமும் முக்கியமானது என்ற விளங்கிக்கொள்ளலில் இந்தியா வெறுமனே தன் சுயநலனால் உந்தப்பட்டு இதனை சேர்ப்பித்துள்ளது. ஆனால், சுய நிர்ணய உரிமைக்கான எமதுகோரிக்கையை ‘உள்ளுராட்சி’ என்பதாக உரைத்தல் தமிழ் மக்களின் அரசியல் நிலைப்பாடல்ல என்பதைத் தெளிவாகப் அனைத்துத் தரப்புக்களும் புரிந்து கொள்ளவேண்டும்.நாம் மறுபடி, மறுபடி குறிப்பிட்டு வந்திருப்பதுபோல், இறுக்கமான ஒற்றையாட்சி சட்டகத்தினுள் உள்ளடங்கியிருக்கும் 13ஆம் திருத்தச் சட்டமானதுஅரசியல் தீர்வொன்றின் ஆரம்பப் புள்ளியாகக்கூட அமையாது. மையக்குழுவும் இந்தியாவும் தமிழ் மக்களும் அவர்களது பிரதிநிதிகளும் கடந்த 35 வருடங்களாக நிராகரித்து வந்துள்ள ஒருஅரசியல் தீர்வைத் திணிப்பதில் முனைப்புக் காட்டகின்றன.
இத் தீர்மானமானது,வரலாற்றில் பொறுப்புக்கூறலைக் கையாள்வதில் அரைமனதுடன் செய்யப்பட்டமற்றுமொருமுயற்சியெனபதியப்படும். உண்மையில் இது தமிழ் மக்களுக்குநீதிதொடர்பானபொய்யானநம்பிக்கையையும் எதிர்பார்ப்புகளையும் வழங்குவதில் மற்றொருமுயற்சிஎனநாம் அஞ்சுகின்றோம்.
இத்தீர்மானமானது சரியான திசையிலான ஒரு அடி என்பதாகவும் அது இலங்கையை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திற்கு பாரப்படுத்துவதற்கான கோரிக்கையை மறைமுகமாக ஆதரிக்கின்றது என்பதாகவும் பரிந்துரைக்கின்ற தமிழ் செயற்பாட்டாளர்களால் நாம் ஏமாற்றம் அடைந்துள்ளோம். நாம் அனைத்து தமிழ் செயற்பாட்டாளர்களையும் தமிழ் மக்களுடனான தமது தொடர்பாடல்களில் வெளிப்படைத் தன்மையுடனும் நேர்மையுடனும் உண்மையாகவும் இருக்குமாறும் எம்மை நிரந்தரமான விரக்திக்குள்ளும் நம்பிக்கை இன்மைக்குள்ளும் தள்ளவேண்டாம் எனவும் கேட்டுக்கொள்கின்றோம்.
தமிழ் மக்கள் தற்போதாவது ஜெனிவாவுக்காகக் காத்திருப்பது பயனற்றது என்பதை அறிந்திருப்பர். எமது கூட்டுவலியைக் கருவியாக்குகின்ற நிகழ்ச்சி நிரல்களை நாம் மறுதலிக்கவேண்டும். முன்னால் உள்ளஒரே வழி புதியசிந்தனைகளுக்கானதும் புதியபோராட்டமுறைகளுக்கானதும் ஆகும்.
(ஒப்பம்)
அருட்பணிவீ.யோகேஸ்வரன்
இணைப் பேச்சாளர்
தமிழ் சிவில் சமூகஅமையம்
(ஒப்பம்)
பொ. ந. சிங்கம்
இணைப் பேச்சாளர்
தமிழ் சிவில் சமூகஅமையம்