இலங்கை பிரதான செய்திகள்

சவால்களை எதிர் கொண்டு சாதித்து வரும் ஈழத் தமிழரது நாடகச் செல்நெறி! து.கௌரீஸ்வரன்.


சர்வதேச நாடக தினம் மார்ச் 27 ஆந் திகதி உலகம் முழுவதும் நாடக அரங்கில் இயங்கும் கலைஞர்களால் கொண்டாடப்பட்டு வருகின்றது இதையொட்டி இக்கட்டுரை எழுதப்பட்டுள்ளது.


இந்த உலகத்தின் மனித குல வரலாற்றில் மனிதர்கள் சவால்களை எதிர்கொண்ட பெரும்பாலான தருணங்களின் போது அச்சவால்களை வெற்றிகரமாக எதிர்கொண்டு வாழ்வதற்கான உந்துசக்தியையும் உத்வேகத்தையும் வழங்கி உலகில் மனிதத்துவத்தின் இருப்பைத் தொடரச் செய்ததில் நாடகமும் அரங்கச் செயற்பாடுகளும் காத்திரமான பங்களிப்பினை வழங்கி வந்துள்ளமையினை நாங்கள் உலக நாடக வரலாற்றினைக் கற்பதினூடாகத் தெளிவாக விளங்கிக் கொள்ள முடியும்.

மனிதர்கள் சவால்களை எதிர்கொண்ட போது நாடக அரங்கும் புதிய புதிய கண்டுபிடிப்புக்களுடன் பல்பரிமாணங்களைப் பெற்று இயங்கி வருவதனை அறிகின்றோம். கிரேக்க கால துன்பியல், மகிழ்நெறி நாடகங்கள், நவீன காலத்தில் ஐரோப்பாவில் தோன்றிய நாடகங்கள் உதாரணமாக ஹென்றிக் இப்சனின் நாடகங்கள், பெட்டல்பிறஜ்டின் காவிய அரங்கு, பின்காலனித்துவ யுகத்தில் இலத்தீன் அமெரிக்காவில் தோன்றிய ஒகஸ்தாபோலினுடைய ஒடுக்கப்பட்டோருக்கான அரங்கு, ஆபிரிக்காவின் கென்யாவில் உருவாக்கப்பட்ட நுகுகிவாதியாங்கோவின் காலனீய நீக்க அரங்கு, இந்தியாவில் உருவான பாதல்சர்க்காரின் மூன்றாவது அரங்கு, ஈழத்தில் குழந்தை ம.சண்முகலிங்கத்தின் செயற்பாடுகளுடாக தோற்றம் பெற்ற கல்வியியல் அரங்கு, க.சிதம்பரநாதனால் முன்னெடுக்கப்பட்ட தளை நீக்கத்திற்கான அரங்கு, சி.ஜெயசங்கரால் முன்னெடுக்கப்படும் கூத்து மீளுருவாக்கச் செயற்பாடுகள் என்றவாறு இன்னும்பல செயற்பாடுகளுடாக உலகந்தழுவி நாடக அரங்கு காலத் தேவைகளுக்கேற்ப புதிய கோட்பாடுகளையும், எண்ணக் கருக்களையும் தோற்றுவித்துப் புதிய புதிய செல்நெறிகளுடன் முன்னோக்கிச் செல்வதனை நாங்கள் கண்டும் அறிந்தும் வருகின்றோம்.


இத்தகைய வரலாற்றுப் புரிதலுடன் ஈழத் தமிழர்களாகிய நாம் இந்த நாடக தினத்தில் நமது நாடக அரங்கின் சமகால வகிபங்குகளையிட்டு பிரக்ஞைபூர்வமாகச் சிந்திக்க வேண்டிய தருணத்தில் நிற்கின்றோம்.

ஏனெனில் சமகாலத்தில் ஈழத்தமிழர்களின் நாடகம் குறித்துக் கருத்துக்களைக் கூற முனையும் சிலர் கடந்த மூன்று தசாப்த காலங்களாக ஈழத்தமிழர்களின் நாடகம் நலிவுற்று விட்டதாகத் தம்முனைப்பில் கருத்துக்களைப் புனையும் ஆபத்தான நிலைமை உருவாகி வருவதனைக் காண்கின்றோம்.

இவ்வாறு போருக்குப் பின்னரான காலத்தில் ஈழத்தமிழர்களின் நாடக அரங்குகள் குறித்து பொதுப் புத்தியில் கருத்துக்களைப் பரவலாக்கி வருபவர்கள் நாடகம் என்பது படச்சட்ட மேடையில் நடக்கும் மகிழ்வூட்டலுக்கான அளிக்கை என்கின்ற வரையறைகளுக்குள் மட்டும் நின்றுகொண்டு கடந்த முப்பது ஆண்டு காலத்தில் ஈழத்தமிழர்களிடையே நாடகக்கலை நலிவுற்று விட்டதாக கருத்துக்களைக் கட்டமைத்து வருகிறார்கள். இதற்குத் துணையாக இலங்கையின் தலைநகர் கொழும்பிலே இடம்பெறும் சிங்கள நாடகங்களை உதாரணங்காட்டி சிங்களத்தைப் போல் தமிழில் நாடகம் வளரவில்லை என கருத்துக் கூறுவதனை பல இடங்களிலும் கேட்கக்கூடியதாகவுள்ளது. இக்கருத்துரைப்பில் தமிழ் நாடகம் வளரவில்லை அது நலிவுற்றுக் காணப்படுகின்றது என்ற எடுகோளே மையமாகவுள்ளமை கவனிக்கத்தக்கது.


கடந்த மூன்று தசாப்தத்திற்கும் மேலான இடர்மிகுந்த நெருக்கடியான காலகட்டத்தில் ஈழத்தமிழர்களாகிய நமது அரங்கப் பங்களிப்பு உலகந்தழுவிய முக்கியத்துவத்தினையுடையதாக உள்ளமை அறிதலுக்கும் ஆராய்ச்சிக்கும் உரியதாகும்.


போர் மேகம் நமது வானத்தை மூடியிருந்த காலத்தில் நமது அரங்கில் இடம்பெற்ற புதிய புதிய கண்டுபிடிப்புக்கள் இன்று உலக நாடக வரலாற்றில் கற்கைக்குரியவையாக கவனிக்கப்பட்டு வருகின்றன. உதாரணமாக வடபுலத்தில் 1980 களிலிருந்து முகிழ்த்த கலாநிதி குழந்தை ம.சண்முகலிங்கத்தினதும் அவரது மாணவர்களினதும் கல்வியியல் அரங்கச் செயற்பாடுகளும் அதைத் தொடர்ந்து கலாநிதி.க.சிதம்பரநாதனால் முன்னெடுக்கப்பட்ட தளை நீக்கத்திற்கான அரங்கச் செயற்பாடுகளும், கிழக்கில் கலாநிதி சி.ஜெயசங்கரால் முன்மொழியப்பட்ட கூத்து மீளுருவாக்கத்திற்கான பங்குகொள் ஆய்வுச் செயற்பாடுகளும் ஈழத்தமிழர்கள் உலக நாடக அரங்கிற்கு வழங்கிய புதிய எண்ணக்கருக்களாகவும் கோட்பாடுகளாகவும் உள்ளன.


கடந்த மூன்று தசாப்தங்களுக்கும் மேலான ஈழத்தமிழர்களின் நாடக அரங்க வரலாறானது போரும் அது தந்த கசப்பான சவால்களினதும் எதிர்கொள்ளலாகவே இடம்பெற்று வந்துள்ளது. இதன் காரணமாக நாடகம் தொழில்சார் துறையாகவன்றி சவால்களை எதிர்கொள்ளும் வாழ்க்கைப் போராட்டத்திற்கான வலுவான சாதனமாகவே ஈழத்தமிழர்களின் வரலாற்றில் அதன் செல்நெறியைச் செலுத்தி வந்துள்ளது.


படச்சட்ட மேடையில் ஏற்கெனவே எழுதித் திட்டமிடப்பட்ட நெறியாளர் மையப்பட்டு உருவாக்கப்படும் நுகர்வுப் பண்பாட்டிற்கே உரித்தான நவீன நாடக உருவாக்கப் போக்கிலிருந்து விலகி களப்பயிற்சிகளுடாக நாடக அரங்க ஆற்றுகைகளை உருவாக்கி அவற்றை பொதுவெளிகளில் ஆற்றுகை செய்யும் புதிய போக்குகள் ஈழத்தழிழர்களின் இடர்மிகுந்த காலத்தில் தோற்றம் பெற்று வளர்ந்துள்ளது. ஒடுக்குமுறைகளால் சவால்களை எதிர்கொண்டு குரலற்றவர்களாக வாழ்ந்த சாதாரண மக்களின் குரலை அம்மக்களின் பங்குபற்றுகையூடாக வெளிக்கொணரும் கலைவழிச் சாதனமாக நாடக அரங்கச் செயற்பாடுகள் நாடக அரங்கச் செயற்பாட்டாளர்களால் முன்னெடுக்கப்பட்டு வந்துள்ளன.


மில்லியன் கணக்கில் தூதுவராலங்களிலிருந்தும் நிதி அனுசரணையாளர்களிடம் இருந்தும் நிதி அனுசரணைகளைப் பெற்று பிற்போக்குத்தனமான கருத்துக்களைக்கொண்ட நாடகங்களைச் செய்யும் போக்கு ஈழத்தமிழர்களிடம் உருவாகியிருக்கவில்லை மாறாக தன்னார்வத்துடனும் சமூக அக்கறையுடனும் ஒன்றிணைந்த பலர் பல்வேறு அகப்புறச் சவால்களையெல்லாம் எதிர்கொண்டு தத்தமது சுய உழைப்பின் ஊடாகவும் உள்ள வளங்களைக் கொண்டு உச்ச பயனைப் பெறும் மகத்தான கூட்டுழைப்பின் பயனாகவும் உலகத் தரத்திலான நாடகங்களைத் தயாரித்து ஆற்றுகை செய்துள்ளனர்.

உதாரணமாக யாழ் குடா நாட்டில் உருவான ‘மண்சுமந்த மேனியர்’, ‘தீ சுமந்தோர்’, ‘அகதிகளின் கதை’, ‘யுத்தத்தின் நாட்கள்’இ ‘மாற்றம்’, ‘பொய்க்கால்’, ‘எந்தையும் தாயும்’, ‘உயிர்த்த மனிதர் கூத்து’ முதலிய நாடகங்களும், குடாநாட்டின் பாடசாலைகளில் உருவாக்கம் பெற்ற கல்வியியல் அரங்கச் செயற்பாடுகளும் அதன் விளைவாகத் தோன்றிய பாடசாலை நாடகங்களும், கிழக்கிலே மட்டக்களப்பில் உருவாக்கம் பெற்ற பெண்ணிலைவாத அரங்கச் செயற்பாடுகளும் (சூரியா பெண்கள் அபிவிருத்தி நிலையம் வெளியிட்டுள்ள இது எமது படைப்பு எனும் நாடகத் தொகுதியிலுள்ள நாடக எழுத்துருக்கள்) இங்கு குறிப்பிடத்தக்க சில முக்கியமான எடுத்துக் காட்டுக்களாக உள்ளன.


ஈழத்தமிழ் நாடக வரலாற்றில் போர்க்காலத்தில் பாரம்பரிய அரங்கின் ஆற்றுகைக் கூறுகளை உள்வாங்கித் தயாரிக்கப்பட்ட நவீன நாடகங்களும் நவீன காலத்தின் தேவைக்கேற்ற கருத்தியல்களுடன் தயாரிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது. உதாரணமாக நிலாந்தனால் எழுதப்பட்டு சி.ஜெயசங்கரால் நாடகமாக்கப்பட்ட ‘நவீன பஸ்மாசுரன்’ நாடகம் முல்லைத்தீவின் கோவலன் கூத்தின் ஆற்றுகைக் கூறுகளை உள்வாங்கி அணுவாயுத எதிர்ப்பினை வெளிப்படுத்திய ஆற்றுகையாக அமைந்திருந்தது.

இவ்வாறே 1960 களில் தயாரிக்கப்பட்ட ‘இராவணேசன்’ நாடகமும் காலத்தேவைக்கேற்ற கருத்தியல்களைப் பேசும் நாடகமாக பரிணாமம் பெற்றது. அதாவது பேராசிரியர் எதிர்வீர சரத்சந்திரா 1960 களில் தயாரித்த ‘சிங்கபாகு’வும், ‘மனமே’யும் அதே கருத்தியல்களுடன் பல தசாப்தங்களைக் கடந்தும் மீள மீளத் தயாரிக்கப்படுவதைப் போலல்லாமல் பேராசிரியர் சு.வித்தியானந்தன் தயாரித்த ‘இராவணேசன்’ நாடகம் இரண்டாயிரமாம் ஆண்டு பேராசிரியர் சி.மௌனகுருவால் மீளத் தயாரிக்கப்பட்ட போது அது போரின் நிர்ப்பந்தத்தினையும், போரின் கொடுமையினையும் பேசும் நாடகமாக மாற்றம் பெற்றது. பின்னர் 2010 இல் அது போரினால் பாதிக்கப்பட்ட பெண்களின் கதைகளை அழுத்தும் நாடகமாக மாறியது. திருமறைக் கலாமன்றத்தால் தயாரிக்கப்பட்ட ‘கொல்லீனும் கொற்றம்’ எனும் பாரம்பரிய அரங்கின் ஆற்றுகைக் கூறுகளை உள்வாங்கிய நாடகமும் போரின் கதையினையே பேசியது.


கடந்த இரண்டு தசாப்த காலமாக ஈழத்தின் கிழக்கிலே முன்னெடுக்கப்பட்டு வரும் கூத்து மீளுருவாக்கத்திற்கான முன்னெடுப்புக்களின் விளைவாக உள்ளூர் வரலாற்றுக் கதைகளைக் கூறும் புதிய கூத்துக்களின் உருவாக்கம் வலுவாகியுள்ளதனையும், சிறுவர்களுக்கான கூத்தரங்கச் செயற்பாடுகள் எண்ணக்கருவாக்கம் பெற்று முன்னெடுக்கப்படுவதனையும், பல்கலைக்கழகங்களில் பாரம்பரிய அரங்குகள் அவற்றின் சமகால முக்கியத்துவத்தைப் பிரதானப்படுத்திய வகையில் செயல்மையக் கற்றல் கற்பித்தலாக விரிவாக்கம் பெற்றுள்ளதனையும் காண முடிகின்றது. அதாவது பாரம்பரிய அரங்க ஆற்றுகைகளை அடையாள அரசியலுடன் குறுக்கி நோக்கும் காலனித்துவ அணுகுமுறையிலிருந்து விலகி அவற்றை எமது சமகால வாழ்வியலுடன் பொருத்திப்பார்த்து செயற்பாடுகளுடாகக் கற்கும் காலனீய நீக்க ஆய்வறிவு அணுகுமுறைகள் மேற்கிளம்பி வருகின்றன.


மட்டக்களப்பிலே சுவாமி விபுலானந்தர் அழகியற் கற்கைகள் நிறுவகத்தில் நாடகத்துறையில் பாரம்பரிய அரங்கு சார்ந்த காத்திரமான கற்கைகளும் தயாரிப்புக்களும் இடம்பெற்று வருகின்றன. பல்கலைக்கழக மாணவர்களும், உத்தியோகபூர்வமாக வருகைதரு கலைஞர்களாக பல்கலைக்கழகத்திற்குள் அழைக்கப்படும் பாரம்பரியக் கூத்துக் கலைஞர்களும் இணைந்து மேற்கொள்ளும் செயல்மையக் கற்றலினூடாக பல புதிய கூத்துக்கள் உருவாக்கப்பட்டுள்ளன. உதாரணமாக மட்டக்களப்பின் பெண் அரசியாகவிருந்த ஆடகசவுந்தரியின் கதையினை பெண்ணிலை நோக்கில் கூறும் ‘ஆடகசவுந்தரி’ எனும் வடமோடிக் கூத்தும், தமிழ் மரபில் வரும் ஒளவை எனும் பெண் ஆளுமையினை அடையாளங்காட்டும் ‘ஆளுமையான ஒளவையாள்’ எனும் வடமோடிக் கூத்தும், மற்றும் வள்ளிதிருமணம் எனும் பாரம்பரியக் கூத்தினை பெண்ணிலை நோக்கில் மீளுருவாக்கிய வடமோடிக் கூத்தும், சிறுவர்களுக்கான கூத்துக்களும் என இன்னும்பல புதிய கூத்துக்கள் உருவாக்கப்பட்டு கடந்த வருடங்களில் அழகியற் கற்கைகள் நிறுவகத்தால் தயாரிக்கப்பட்டு அரங்கேற்றப்பட்டுள்ளன. இக்கூத்துக்களின் எழுத்துருவாக்கத்திலும் ஆற்றுகையிலும் நாடகத்தில் சிறப்புக் கற்கையில் ஈடுபடும் மாணவர்கள் உள்ளுர் கலைஞர்களுடன் சேர்ந்து பங்குபற்றி வருவது ஆரோக்கியமான விளைவுகளைத் தரவல்லதாக இருக்கின்றது.


இதேநேரம் சர்வதேச நாடக விழாக்களில்; அளிக்கை செய்யப்படும் அளவிற்குத் தகுதியுள்ள புதிய நவீன நாடகங்களும் பல்கலைக்கழக விரிவுரையாளர்களாலும் மாணவர்களாலும் உருவாக்கப்பட்டு அளிக்கை செய்யப்பட்டு வருகின்றன. சுவாமி விபுலானந்த அழகியற் கற்கைகள் நிறுவகத்தால் 2016, 2017 களில் நடத்தப்பட்ட தேசிய, சர்வதேச நாடக விழாக்களில் உலகின் சமகால நாடகங்களுடன் உள்ளூர் தயாரிப்பான நாடகங்களும் நிறுவகத்தின் இராசதுரை கலையரங்கில் அரங்கேற்றப்பட்டிருந்தன.


பாரம்பரிய, நவீன ஆற்றுகைகளுடன் நாடகம் மற்றும் ஆற்றுகைக் கலைகள் சார்ந்த சர்வதேச ஆராய்ச்சி மகாநாடுகளும் கடந்த 2016 ஆம் வருடங்களில் இருந்து கிழக்குப்பல்கலைக்கழக சுவாமி விபுலானந்த அழகியற்கற்கைகள் நிறுவகத்தால் ஒழுங்கமைக்கப்பட்டு மட்டக்களப்பில் நடத்தப்பட்டு வருகின்றன. சர்வதேச அளவில் அறியப்பட்ட ஆய்வறிவாளர்கள் பலர் வருகைதந்து தத்தமது ஆய்வறிவு அனுபவங்களை இம்மகாநாட்டில் பகிர்ந்து கொண்டார்கள் விசேடமாக நாடகம் மற்றும் அரங்கக் கலைகள் சார்ந்த புதிய புதிய ஆய்வறிவு அனுபவங்கள் இம்மகாநாட்டில் உரையாடப்பட்டு வருகின்றன. நாடகத்துறை சார்ந்து புதிய இளம் ஆய்வறிவாளர்கள் பலர் உலக நாடகப் போக்குகளுடன் நம்மை ஒப்பிட்டுப் பார்த்து மேலும் ஆக்கபூர்வமாக வளர்ச்சி பெறுவதற்கு இத்தகைய மகாநாடுகளும் கருத்தரங்குகளும் களம் அமைத்து வருகின்றன.


இதேபோல் கிழக்குப் பல்கலைக்கழகத்தின் நுண்கலைத்துறையாலும் நாடக அரங்கச் செயற்பாடுகள் காத்திரமான வகையில் சமகாலத் தேவைகளுக்கு நாடக அரங்கினைப் பயன்படுத்தும் விதத்தில் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. நவீன நாடகங்கள், பாரம்பரிய கூத்துக்கள், சிறுவர் நாடகங்கள், தெருவெளி நாடகங்கள் எனப்பல்வேறு நாடக அரங்க ஆற்றுகை நடவடிக்கைகள் நுண்கலைத்துறையின் விரிவுரையாளர்கள், மாணவர்கள் மற்றும் துறைசார் உள்ளுர் கலைஞர்கள் ஆகியோரின் கூட்டிணைப்பில் உருவாக்கம்பெற்று அளிக்கை செய்யப்பட்டு வருகின்றன. இத்தோடு விசேடமாக நுண்கலைத்துறையால் வருடாந்தம் மட்டக்களப்பில் நடைபெறும் மாமாங்கேஸ்வரர் ஆலய விழாக்காலத்தில் பாரம்பரிய அரங்க விழா ஒழுங்கமைத்து நடத்தப்பட்டு வருகின்றது. இதனூடாக மட்டக்களப்பில் ஊர் ஊராகக் கூத்தாடி வரும் கூத்துக் கலைஞர்களுக்கான மற்றுமொரு களம் வழங்கப்பட்டு வருகின்றது.

இத்துடன் பல்கலைக்கழகத்தில் செயல்மையக் கற்றல் கற்பித்தல் நடவடிக்கைகளூடாக உருவாக்கப்படும் கூத்துக்களும் இப்பாரம்பரிய அரங்க விழாவில் அரங்கேற்றப்பட்டு வருகின்றன.


ஈழத்தின் சமகால நாடக அரங்கக் கலையின் வளர்ச்சியில் பாடசாலை நாடகங்களும் முக்கிய இடத்தைப் பெற்று வருகின்றன. நாடகம் சார்ந்து பிரக்ஞை பூர்வமாக இயங்கும் நாடகப்பாட ஆசிரியர்களால் ஈழத்தின் வடக்கு கிழக்கு மலையகம் எனப் பல இடங்களிலுமுள்ள பாடசாலைகளில் இந்நாடக முயற்சிகள் நடைபெற்று வருகின்றன. சிறுவர் நாடகங்கள், குறு நாடகங்கள் பல இதனூடாக உருவாக்கம் பெற்று பாடசாலை மட்டத்திலிருந்து தமிழ் நாடகம் வளருவதனைக் காண முடிகின்றது. அரச சிறுவர் நாடக விழா, குறுநாடக விழா என்பவற்றில் அளிக்கை செய்யப்பட்டு விருதுகள் பெறுவதாக இந்நாடகத் தயாரிப்புக்கள் செழுமையடைந்து வருகின்றன.

அடுத்து ஈழத்தில் நாடக அரங்கில் பிரக்ஞைபூர்வமாக இயங்கும் நபர்களினால் ஆரம்பிக்கப்பட்டு முன்னெடுக்கப்படும் நாடகக் குழுக்களின் நாடகத் தயாரிப்புக்களும் இங்கு குறிப்பிடத் தக்கதாகவுள்ளன. இத்தகைய நாடகக் குழுக்களின் தயாரிப்புக்கள் அரச நாடக விழாக்களில் பங்குபற்றி விருதுகளைப் பெற்று வருவதனையும் அவதானிக்க முடிகின்றது. வடக்கு கிழக்கு மலையகம் எனப் பல்வேறு இடங்களிலும் நாடகக் குழுக்கள் ஆக்கபூர்வமாக நாடக அரங்கச் செயற்பாடுகளில் ஈடுபட்டு வருவதனை நாங்கள் காண்கின்றோம். நவீன மேடை நாடகங்களுடன் தெருவெளி அரங்க ஆற்றுகைகளிலும் இந்நாடகக் குழுக்கள் ஈடுபட்டு வருகின்றன.


இவற்றோடு ஈழத்தில் பாரம்பரியமான உள்ளுர் அரங்க ஆற்றுகைகள் வலுவான நிலையில் இடம்பெற்று வருவதனைக் காண்கின்றோம். தகவல் ஊடகத் தொடர்பாடல் ஒவ்வொரு தனிமனிதரையும் ஆட்கொண்டுள்ள நிலையிலும் வௌ;வேறு இலத்திரனியல் தொழில்நுட்பக் கலையாக்கங்கள் ஆதிக்கம் பெற்றுள்ள சூழலிலும் உள்ளுர்க் கலைகளின் ஆக்கமும் ஆற்றுகைகளும் வலுவாக ஈடுகொடுத்துச் செல்வதனைக் காண்கிறோம். பருவகாலங்களில் ஒரு மாதத்தில் ஒரு பிரதேசத்தில் இருபதிற்கும் மேற்பட்ட கூத்து ஆற்றுகைகள் இடம்பெறுவதனை உறுதிப்படுத்தும் புள்ளி விபரங்கள் நமக்குக் கிடைக்கின்றன. புதிய இளந்தலைமுறையினர் மிகப்பெரும்பாலும் இத்தகைய ஆற்றுகைகளில் பங்கெடுத்து வருகின்றார்கள். ஒப்பீட்டளவில் நகர்ப்புற நாடக அரங்க ஆற்றுகைகளை விடவும் அதிக விழுக்காட்டில் உள்ளுர் அரங்க ஆற்றுகைகள் நடைபெற்று வருகின்றன. இத்தகைய உள்ளுர் ஆற்றுகைகள் சமூகப்பங்குபற்றலில் சமுதாய அரங்கச் செயற்பாடாகவே மிகப்பெரும்பாலும் இயக்கம்பெற்று வருகின்றது. இதில் உள்ளுர் அண்ணாவிமார்களினதும், கலைஞர்களினதும், ஆர்வலர்களினதும் உழைப்பு விதந்து போற்றத்தக்கதாக இருந்து வருகின்றது.


இவ்விதமாக ஈழத்தில் தமிழ்ச் சூழலில் நாடக அரங்கச் செயற்பாடுகள் பல்வகைப் பரிமாணங்களுடன் ஈழத்துத் தமிழ் நாடகத்திற்கேயுரிய சிறப்புப் பண்புகளுடன் காத்திரமான வகையில் புதிய செல்நெறிகளைப் பெற்று வளருவதனை அவதானிக்க முடிகின்றது. இவ்வாறு காத்திரமான பணிகள் புரியும் கலைஞர்கள் பல்வேறு அகப் புறச் சவால்களை எதிர்கொண்டே இத்தகைய பணிகளை முன்னெடுக்கின்றார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த வகையில் ஈழத்தமிழ் நாடகம் பல்பரிமாணங்களுடன் வளரப் பணிகள் புரியும் கலைஞர்களையும் மக்களையும் இந்நாடக தினத்தில் வாழ்த்துவதும் அவர்தம் பணிகளுக்கு ஒத்துழைப்பதும் மானுடத்தை நேசிப்பவரின் கடமையாகும்.

Spread the love

Add Comment

Click here to post a comment

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Share via
Copy link