Home இலங்கை “நீதியின் குரல்”இராஜப்பு ஜோசப்பு ஆண்டகை : நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் மரியாதை வணக்கம்!

“நீதியின் குரல்”இராஜப்பு ஜோசப்பு ஆண்டகை : நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் மரியாதை வணக்கம்!

by admin

இடர் வரினும் அஞ்சாமல் உண்மையும் நீதியும் தேடும் அர்ப்பணிப்புடன் தீரமிகு உன்னத வாழ்க்கை வாழ்ந்து, மறைந்த அதிவணக்கத்துக்குரிய இராஜப்பு ஜோசப் ஆண்டகைக்கு ‘நீதியின் குரல்’ என நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் அரசவை புகழ்வணக்கம் செலுத்திக் கொண்டது.

2009ம் ஆண்டு தமிழர்களுக்கு எதிராக சிறிலங்காவின் இனஅழிப்புப் போர்,பெருந்திரளான வன்கொடுமைக் குற்றங்களாகும் என்பதை நிறுவுவதில் இராஜப்பு ஆண்டகை முக்கியப் பங்கு வகித்தவர் என்று நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர் வி.உருத்திரகுமாரன் அவர்கள் அரசவையில் குறிப்பிட்டிருந்தார்.

அனைத்துலக சமூகத்தின் சாட்சிகளின்றி நிகழ்த்தப்பட்ட இனவழிப்பின் வலுமிக்க சாட்சியாக ஆண்டகை இருந்வர் என்பதோடு, 146,678 பேர் கொல்லப்பட்டனர் என்ற புள்ளிவிவரக் கணக்கீடுகளின் அடிப்படையில் அவர் தெரிவித்த முடிவை யாராலும் மறுத்துப் பேச முடியவில்லை எனவும் பிரதமர் வி.உருத்திரகுமாரன் குறித்துரைத்திருந்தார்.

மேலும் அவர் தனதுரையில், 2011ம் ஆண்டு சிறிலங்கா அரசாங்கம் அமைத்திருந்த கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவிடம், இறுதிப்போரின் நிகழ்ந்த பாரிய குற்றங்கள், மனித உரிமைமீறல்கள் தொடர்பில், ஆணைக்குழுவினை அமைத்திருந்த அரசுக்கு எதிராக, ஏனைய உயர்நிலை கத்தோலிக்கக் குருமார்களுடன் சேர்ந்து ஆண்டகை அவர்கள் வாக்குமூலம் அளித்திருந்தமையானது பெருந்துணிச்சலான செயலாக அமைந்தது.

வாழ்நாள் முழுக்க அவர் அதிகாரத்தில் இருந்தவர்களிடம் பகிரங்கமாகவும் ஒளிவுமறைவின்றியும் உண்மை உரைத்திருந்தார்.

முள்ளிவாய்க்கால் இனவழிப்புக்கு நீதி கோரும் தமிழர் குரலின் ஆளுருவமாகத் திகழ்ந்தவர் ஆயர் இராஜப்பு.

விடுதலைக்கும், அரசியல் இறைமைக்குமான தமிழர் அரசியல் பெருவிருப்பு கோரிக்கையின் உருவமாகத் இராஜப்பு ஆண்டகை திகழ்ந்தவர் என்பதோடு, ஈழத்தமிழர் விடுதலைஅரசியலில் முக்கியப் பங்கு வகித்தவர்.

முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு சிறிலங்காவை அனைத்துலகக் குற்றவியல் நீதிமன்றத்தில் நிறுத்த வேண்டும் என்ற நமது கோரிக்கையில், உலகெங்கும் தமிழர்கள் இன்று ஒன்றுபட்டிருக்கும் இந்த நேரத்தில், ஆயரின் குரலை நாம் இழந்து விட்ட போதிலும் அவரது தொலைநோக்கும் பெரும்பணியும் நம்முள் உயிர்ப்புடன் இருக்கும்.

எந்தக் குற்றங்களை அம்பலமாக்கவும் கண்டிக்கவும் ஆயர் தம்முயிரைப் பணயம் வைத்துப் பாடுபட்டாரோ, அந்தக் குற்றங்களுக்கான பொறுப்புக்கூறலை உறுதி செய்ய நம்மை அர்ப்பணித்துக் கொள்வதே இராயப்பு ஆண்டகை நமக்கு விட்டுச்சென்ற மரபுக்கு நாம் செலுத்தக் கூடிய, செலுத்த வேண்டிய மதிப்பின் ஆகச் சிறந்த அடையாளமாகும் என பிரதமர் வி.உருத்திரகுமாரன் தெரிவித்திருந்தார்.
நீதியின் ஒரு குரலிலிருந்து பல குரல்கள் எழும்.

இராஜப்பு ஆண்டகையின் மறைவு ஈழத்தமிழர்களுக்கு மட்டுமல்லாமல் உலகெங்கும் வாழும் தமிழர்களுக்கும் இழப்பாகும் எனத் தெரிவித்திருந்த நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் அரசவை துணைத்தலைவர் ரஜினிதேவி செல்லத்துரை அவர்கள், போரின் இறுதிக் கட்டங்களில் 146,679 தமிழர்கள் கொல்லப்பட்டார்கள் என்ற அவர் சாட்சியத்தை எவராலும் நிராகரிக்க முடியவில்லை என தனது இரங்கல் உரையில் தெரிவித்திருந்தார்.

ஆயர் இராஜப்பு ஆண்டகை அவர்கள், தமிழீழத் தேசியத் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் நிழலாக விளங்கினார் எனத் தெரிவித்த தாயக தொடர்பாடலுக்கான அமைச்சர் விஜிதரன் அவர்கள், தமிழர் போராட்டத்தின் நியாயத்தைப் பன்னாட்டுச் சமுதாயத்துக்கு எடுத்டுரைப்பவராகவும், தமிழினவழிப்பின் சாட்சியாகவும் இருந்தார் என்றார். இறுதி வரை தமிழர் போராட்டத்தின் வழிகாட்டியாக இருந்து தமிழ்த் தேசியத்துக்கு உரமூட்டியிருந்ததோடு, என்றார். இறுதிப்போரின் போது தமிழர்க்கு ஏற்பட்ட இழப்புகளைத் துல்லியமாகக் கணக்கிட்டுச் சொல்லி உலகின் மனசாட்சியை ஓங்கி அறைந்தார் என தனது இரங்கலில் தெரிவித்திருந்தார்.

போர்க் காலத்தில் சிறிலங்கா அரசு திட்டமிட்ட முறையில் சில ஆயிரம் மக்கள் மட்டுமே இருப்பதாகச் சொல்லி தமிழ்மக்களுக்கான உணவையும் ,மருந்தையும் குறைத்து நேரடியாகத் தமிழர்களை அழிக்க முயன்ற போது, சிறிலங்கா அரச திணைக்களங்களின் அறிக்கைகளைக் எடுத்க்காட்டி, சிறிலங்கா அரசாங்கத்தினை உண்மை முகத்தினை உலகின் முன் ஆண்டகை அவர்கள் அம்பலமாக்கினார் என பிரதமர் பணிமனை பணிப்பாளர் நாயகம் கலாநிதி தவேந்திர ராஜா அவர்கள் தெரிவித்திருந்தார்.

தாயகத்திலுள்ள மக்கள் ஆயர் இராயப்பு ஆண்டகைக்கு ‘புனிதர்’ என்ற சிறப்பை வழங்கும்படி பொப்பாண்டகையினை வேண்டிக் கொள்ள வேண்டுமென துணை அமைச்சர் கலையழகன் தனது இரங்கலுரையில் தெரிவித்திருக்க, நாடுகடந்த தமிழீழ அரசங்கமும் இக்கோரிக்கையினை பொப்பாண்டகைக்கு விடுக்க வேண்டுமென கோரிய அரசவை உறுப்பினர் லிங்க ஜோதி அவர்கள்,தமிழர் ஆன்மிகத்திற்கும் சான்றாக ஆண்டகை அவர்கள் திகழ்ந்திருந்தார் என குறித்துரைத்திருந்தார்.

நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் ஊடக அறிக்கை – அப்படியே பிரசுரிக்கப்படுகிறது.

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More