இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்று நோயின் தாக்கத்துக்குள்ளாகின்றவா்களின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே செல்கினற் நிலையில் மும்பையைத் தொடர்ந்து தலைநகர் டெல்லியிலும் இரவு 10 மணி முதல் காலை 5 மணி வரை ஊரடங்கு அமுல்ப்படுத்தப்பட்டுள்ளது.
குறிப்பாக மராட்டியம், பஞ்சாப், கர்நாடகம், தமிழகம், டெல்லி உட்பட எட்டு மாநிலங்களில் தொற்று பரவல் அதிகமாகக் காணப்படுவதன் காரணமாக மராட்டியத்தில் இரவு நேர ஊரடங்கு மற்றும் கடுமையான கட்டுப்பாடுகள் கொண்டு வரப்பட்டன. தொற்று பரவலைக் கட்டுப்படுத்த பொருளாதாரத்தை பாதிக்காத வகையில் கட்டுப்பாடுகளைக் கொண்டு வர மாநில அரசுகள் யோசித்து வருகின்றன.
இந்த நிலையில் டெல்லியில் வரும் ஏப்ரல் 30ஆம் திகதி வரை இரவு ஊரடங்கு அமுல்படுத்தப்படுமென டெல்லி அரசு அறிவித்துள்ளது. இரவு 10 மணி முதல் காலை 5 மணி வரை ஊரடங்கு அமலில் இருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
டெல்லியில் நேற்று 3,000-க்கு மேற்பட்டோருக்கு தொற்று உறுதியானது. இதையடுத்து, தடுப்பு நடவடிக்கைகளை டெல்லி அரசு தீவிரப்படுத்தியுள்ளது.
தலைநகர் டெல்லியைத் தொடர்ந்து இன்னும் பல மாநிலங்களின் தலைநகரங்களிலும் இரவு ஊரடங்கு அமுல்படுத்தப்படும் என்று தெரிகிறது.