யாழ்.நகரில் கொரோனா தொற்று அடையாளம் காணப்படாத வர்த்தகர்கள் , பணியாளர்கள் தமது வர்த்தக நிலையங்களை நாளை வியாழக்கிழமை முதல் மீள திறக்க அனுமதிக்கப்படுவார்கள் என வடமாகாண சுகாதார பணிப்பாளர் மருத்துவர் , வைத்திய கலாநிதி ஆ. கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார்.
யாழின் தற்போதைய நிலைமைகள் தொடர்பில் இன்றைய தினம் புதன்கிழமை விளக்கமளிக்கும் போதே அவ்வாறு தெரிவித்தார்.
மேலும் தெரிவிக்கையில்,
யாழ். நகர் பகுதிகளில் இயங்கிய வர்த்தக நிலையங்களின் வர்த்தகர்கள் , பணியாளர்களுக்கு பி.சி.ஆர் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. அவற்றின் ஒரு தொகுதிக்கான முடிவுகள் இன்றைய தினம் காலை கிடைக்கப்பெற்றன அதில் 54 பேருக்கு தொற்று உள்ளமை கண்டறியப்பட்டுள்ளன. மற்றைய தொகுதிக்கான முடிவுகள் இன்றைய தினம் மாலை கிடைக்கப்பெறும்.
அதனை தொடர்ந்து தொற்று கண்டறியப்படாத வர்த்தகர்கள் , பணியாளர்கள் தமது வர்த்தக நிலையங்களை திறக்க அனுமதிக்கப்படுவார்கள்.
அதேவேளை , மண்டப நிகழ்வுகள், திருமணங்கள் , மரண சடங்குகள் பொது நிகழ்வுகள் உள்ளிட்டவற்றுக்கு உள்ள விதிமுறைகள் தொடர்ந்து அமுலில் இருக்கும். அத்துடன் யாழ். கல்வி வளையத்திற்கு உள்பட்ட பாடசாலைகள் எதிர்வரும் 19ஆம் திகதியே மீள திறக்கப்படும் என தெரிவித்தார்.