கொழும்பு மாநகர சபையை முன்மாதிரியாக கொண்டே ஐந்து ஊழியர்களை கொண்ட குழுவை அமைத்து , மாநகர சபையின் தூய்மையையும் , ஒழுங்கையும் பேண நடவடிக்கை எடுத்தோம் என யாழ்.மாநகர முதல்வர் சட்டத்தரணி வி.மணிவண்ணன் தெரிவித்துள்ளார்.
யாழ்.மாநகர சபையின் காவல் படை தொடர்பில் காவல்துறையினா் ர் மேற்கொண்டு வரும் விசாரணைகள் தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவ்வாறு தெரிவித்தார்.
மேலும் தெரிவிக்கையில் ,
யாழ்.மாநகரத்தின் தூய்மையை பேணுவதற்காக நாம் எமது மாநகர சபை ஊழியர்களை பணிக்காக அமர்த்தி இருந்தோம்.அது தொடர்பில் ஊடக சந்திப்பு ஊடாக மக்களுக்கும் தெரியப்படுத்தி இருந்தோம்.
யாழ்.மாநகரத்தை அசுத்த படுத்துவோர் , குப்பைகளை வீதிகளில் வீசி எறிவோர் , கண்ட இடங்களில் வெற்றிலையை உமிழ்வோரை கண்டறிந்து நடவடிக்கை எடுப்பதற்கு மாநகர சபையால் தீர்மானிக்கப்பட்டு தண்டப்பணம் தொடர்ப்பில் வர்த்தமானி ஊடாக அறிவித்து அறவிடுவதற்கு தீர்மானித்து உள்ளோம் அதற்காக எங்களுடைய வழமையான செயற்பாட்டில் ஒன்றாக விசேடமாக சிலரை பணிக்கு அமர்த்தியிருந்தோம்.
அதிலும் குறிப்பாக இந்த ஐந்து ஊழியர்களும் சபையில் ஊழியர்களாக செயற்பட்டவர்களே. அவர்களையே இந்த விசேட பணிக்கு நாங்கள் நியமித்திருந்தோம்.
அவர்கள் இவ்வாறான செயற்பாடுகளில் ஈடுபடும் போது மக்கள் அவர்களை இலகுவாக அடையாளம் காணவேண்டிய தேவை இருந்ததாலும், அவர்களுக்கு வேண்டத்தகாத பிரச்சினைகள் ஏற்படக்கூடாது என்பதற்காக சீருடை ஒன்றையும் அறிமுகப்படுத்தி வழங்கியிருந்தோம்.
கொழும்பு மாநகர சபையில் இருக்கும் நடைமுறைகளை பின்பற்றித்தான். கொழும்பு மாநகர சபை பின்பற்றுகின்ற, பாவிக்கின்ற சீருடையையே நாங்களும் இந்த ஊழியர்களுக்கு வழங்குவதென யோசித்து அதே மாதிரியான சீருடையை வழங்கியிருந்தோம். இதில் வேறு எந்த உள்நோக்கமோ, திட்டமோ எங்களுக்கு இருக்கவில்லை.
சிலர் இதனை சொல்லுகின்றார்கள் தமிழீழ விடுதலைப் புலிகளின் காவல்துறையின் சீருடை போன்று இருப்பதாக என்னை பொறுத்தவரை சில இடங்களில் அது பொருந்தியிருக்கலாம் ஆனால் நாங்கள் கொழும்பு மாநகர சபையை முன்மாதிரியாக கொண்டே இதனை செய்திருந்தோம்.
காவல்துறையினரின் விசாரணைகளின் போது சில முக புத்தக கணக்குகளை காட்டி இவ்வாறாக எழுதப்பட்டு உள்ளது என விளக்கம் கேட்டனர். அதற்கு எமது ஆணையாளரும் , ஊழியர்களும் எமது நிலைப்பாட்டை தெளிவாக கூறி இருக்கின்றனர்.
காவல்துறையினா் , தமது மேல் அதிகாரிகள் கேட்கின்றனர், அவர்களுக்கு காண்பிப்பதற்காக சீருடைகளை தர முடியுமா ? என கேட்டனர். நாம் அதற்கு சம்மதித்து அவற்றை வழங்கி இருக்கிறோம். நாங்கள் நம்புகிறோம். இரண்டொரு நாட்களில் காவல்துறையினா் எமது பணியை செய்ய அனுமதிப்பார்கள் என. அதன் பின்னர் எமது பணிகளை நாம் முன்னெடுப்போம்
நாங்கள் முன்னெடுக்கவுள்ள பணியானது , மாநகர சபையை தூய்மைக்காகவும் அழகாகவும் வைத்திருக்கும் பணியே அதுவே எமது இலட்சியம். அதனை நடைமுறைப்படுத்த இந்த திட்டத்தை செய்தோம் துரதிஸ்ட்ட வசமாக காவல்துறையினரின் தடைகள் , காவல்துறையினருக்கு பல்வேறு பட்டவர்கள் கொடுக்கும் அழுத்தம் என்பன எமது பணிக்கு குந்தகம் விளைவிக்கும் செயற்பாடு. இத்தகையானவர்களின் செயற்பாடு எமக்கு கவலை அளிக்கின்றன என தெரிவித்தார்.
அதேவேளை யாழ்.மாநகர சபையின் காவல் படை தொடர்பில் நேற்றைய தினம் புதன்கிழமை இரவு யாழ்ப்பாண காவல்துறையினா் ஆணையாளர் உள்ளிட்டவர்களிடம் நீண்ட விசாரணைகளை முன்னெடுத்து சுமார் 3 மணி நேரம் வாக்கு மூலம் பதிவு செய்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.