தடுப்பூசியில் என்ன இருக்கிறது, நல்லா இருந்த விவேக் ஏன் செத்துப் போனார் என்று கேள்வி எழுப்பிய நடிகர் மன்சூர் அலிகானின் முன் பிணை மனு நிராகரிக்கப்பட்டுள்ளது.
ஏப்ரல் 15ஆம் திகதி கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்ட நடிகர் விவேக், மறுநாள் 16ஆம் திகதிகடுமையான மாரடைப்பு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் மறுநாள் அவர் சிகிச்சை பலனின்றி உயிாிழந்திருந்தாா்
இந்த நிலையில் நடிகர் மன்சூர் அலிகான், “தடுப்பூசி போடுமாறு மக்களை ஏன் கட்டாயப்படுத்துகிறார்கள்? அப்படி அந்தத் தடுப்பூசியில் என்ன இருக்கிறது? அதில் என்ன கன்டென்ட் இருக்கிறது? நல்லா இருந்த மனுஷன் விவேக் ஏன் செத்துப் போனார்? நான் தெருக்களில் தூங்கினேன், பிச்சைக்காரர்களுடன் உணவைப் பகிர்ந்து கொண்டேன். நான் வைரஸால் பாதிக்கப்படவில்லை. முகக்கவசங்களைக் கட்டாயமாக்க வேண்டாம்” என்றெல்லாம் கடுமையான வினாக்களை எழுப்பினார். அவர் பேட்டி கொடுத்த வீடியோ சமூக தளங்களில் வைரலானது.
இந்த நிலையில்தான் மன்சூர் அலிகானின் பேட்டி அரசின் சுகாதாரப் பணிகளை இழிவுசெய்யும் விதமாகவும், மக்களிடம் பதற்றத்தை ஏற்படுத்தும் விதமாகவும் உள்ளதாக தொிவித்து எனவே அவர் மீது காவல்துறையினா் வழக்கு பதிவு செய்தனர் .
இதையடுத்து தனக்கு முன் பிணைகேட்டு மன்சூர் அலிகான் சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.
அந்த மனு மீதான விசாரணை நேற்றையதினம் நடைபெற்ற போது பொதுமக்கள் மத்தியில் தேவையற்ற பீதியையும் பதற்றத்தையும் தனது பேட்டியின் மூலம் ஏற்படுத்தியிருக்கிறார் மன்சூர் அலிகான். அதனால் அவருக்கு முன் பிணைவழங்கக் கூடாது என காவல்துறைதரப்பு வழக்கறிஞர் வாதிட்டார்.
இதனையடுத்து மன்சூர் அலிகானின் மனுவில் அவர் மீது தாக்கல் செய்யப்பட்டுள்ள முதல் தகவல் அறிக்கை பற்றிய விவரங்கள் போதுமானதாக இல்லை. எனவே புதிய முன் பிணை மனு தாக்கல் செய்ய வேண்டும் எனத் தொிவித்து நீதிபதி செல்வகுமார் குறித்த மனுவைத் தள்ளுபடி செய்தார்.
மன்சூர் அலிகான் புதிய முன் பிணை மனு தாக்கல் செய்து, அது தள்ளுபடியானால்தான் அவரை கைது செய்ய முடியும் என்பது குறிப்பிடத்தக்கது