வவுனியா – மன்னாருக்கு இடையில் சேவையில் ஈடுபடும் இலங்கை போக்குவரத்து சபையின் மன்னார் சாலைக்கு (டிப்போ) சொந்தமான பேருந்து தரமற்ற நிலையில் சேவையில் ஈடுபடுவதாக பயணிகள் விசனம் தெரிவித்துள்ளனர்.
குறித்த பேருந்து உரிய பராமரிப்புக்கள் இன்றி அதன் ஆசனங்கள் சேதமடைந்த நிலையில் காணப்படுகின்றது. அதனால் பயணிகள் ஆசனத்தில் அமரும் போது அசௌகரியங்களை எதிர்நோக்குக்கின்றனர். அத்துடன் ஆசனங்களின் கிழிந்து தொங்குவதனால் அருவருப்பான மனநிலையிலையே பேருந்தில் பயணத்தை தொடர்கின்றனர்.
குறித்த பேருந்து ஆசனங்களை சீர் செய்து , பேருந்தினை உரிய முறையில் பராமரித்து சேவையில் ஈடுபட உரிய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதேவேளை மன்னார் – யாழ்ப்பாணத்திற்கு இடையில் சேவையில் ஈடுபட்ட மன்னார் சாலைக்கு சொந்தமான பேருந்து ஒன்றும் உரிய பராமரிப்பு இன்றி , தரமற்ற நிலையில் சேவையில் ஈடுபடுவதாக பயணிகள் விசனம் தெரிவித்தமை தொடர்பில் இணையத்தளங்கள் புகைப்பட ஆதாரங்களுடன் செய்தி வெளியிட்டன.
அதனை அடுத்து கடந்த மாதம் 31ஆம் திகதி மன்னார் சாலைக்கு (டிப்போ) சென்ற மன்னார் மாவட்ட செயலர் அதிகாரிகளிடம் பேருந்துக்கள் தொடர்பிலும் அவற்றின் தரங்கள் மற்றும் சேவை என்பவை தொடர்பில் பேச்சு நடாத்தினார்.
அதன் போது மன்னார் சாலைக்கு பேருந்துக்கள் போதாமை இருந்தமையாலையே அந்த பேருந்தை சேவையில் ஈடுபடுத்தியதாகவும் , அதனால் பயணிகளுக்கு ஏற்பட்ட சிரமங்களுக்கு மன்னிப்பு கோருவதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.
அத்துடன் மன்னார் சாலைக்கு 2014ஆம் ஆண்டுக்கு பின்னர் பேருந்துகள் வழங்கப்படவில்லை எனவும் , பழுதடைந்த பேருந்துகளை திருத்துதல் , ஆசனங்களை சீர் செய்தல் போன்ற வேலைத்திட்டங்களுக்கான செலவீனங்களை பெற்றுக்கொள்ள தாமதமாவதால் ,அவற்றை சீர் செய்ய கால தாமதமாவதாக மாவட்ட செயலரிடம் சாலை (டிப்போ) அதிகாரிகள் தெரிவித்திருந்தனர். அது தொடர்பில் மன்னார் மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டத்திலும் பேசப்பட்டது.
இந்நிலையிலையே நேற்று முன்தினம் 21ஆம் திகதி மன்னார் – வவுனியாவுக்கு இடையில் சேவையில் ஈடுபட்ட பேருந்து தொடர்பில் பயணிகள் விசனம் தெரிவித்துள்ளனர்.