யாழ்.தென்மராட்சி பகுதியில் நோயாளர் காவு வண்டியை (அம்புலன்ஸ்) கண்டதும் ஆலயத்தில் நின்ற பக்தர்கள் தலை தெறிக்க ஓட்டம் பிடித்துள்ளனர். இந்த சம்பவம் கடந்த சனிக்கிழமை இடம்பெற்றுள்ளது.
அது குறித்து மேலும் தெரியவருவதாவது ,
மீசாலை வேம்பிராய் கல்லடி விநாயகர் ஆலய வருடாந்திர மகோற்சவ தேர் திருவிழா கடந்த சனிக்கிழமை இடம்பெற்றது. அதன் போது கொரோனா சுகாதார விதிமுறைகள் கட்டுப்பாடுகளை மீறி பெருமளவான பக்தர்கள் கலந்து கொண்டிருந்தனர்.
அது தொடர்பில் அறிந்து ஆலயத்திற்கு சென்ற காவல்துறையினர் சுகாதார விதிமுறைகள் கட்டுப்பாடுகளை பேணி திருவிழாவை நடத்துமாறு அறிவுறுத்தி, 50 பக்தர்கள் மாத்திரம் திருவிழாவில் கலந்து கொள்ள முடியும் எனவும் ஏனையோரை அங்கிருந்து செல்லுமாறும் பணித்தனர்.
அதனை அடுத்து 50 பேருடன் தேர் திருவிழா நடைபெற்றது. ஏனையோர் அருகில் இருந்த வயல் வெளிகள் உள்ளிட்ட இடங்களில் சிதறி நின்றிருந்தனர்.
50 பேருடன் தேர் இழுத்து , தேர் இருப்புக்கு வந்ததும் , காவல்துறையினா் ஆலயத்திலிருந்து வெளியேறி சென்றனர். அதனை அடுத்து மீண்டும் பக்தர்கள் அதிகளவில் ஆலயத்தில் கூடினார்கள்.
அந்நேரம் அப்பகுதி வீதியில் நோயாளர் காவு வண்டி வந்துள்ளது. அதனை கண்ணுற்ற ஆலயத்தில் நின்ற பக்தர்கள் , பி.சி.ஆர் பரிசோதனைக்காக காவல்துறையினா் , சுகாதார பிரிவினரை அழைத்து வருவதாக நினைத்து அங்கிருந்து தலை தெறிக்க ஓட்டம் பிடித்தனர்.
ஆனால் நோயாளர் காவு வண்டி அப்பகுதி ஊடாக வேறொரு இடத்திற்கே சென்றது என்பதை அறிந்து மீண்டும் பக்தர்கள் ஆலயத்தில் கூடினார்கள்.