யாழ்.பல்கலைக்கழக கிளிநொச்சி வளாகத்தில் கல்வி கற்கும் மூன்று பீடங்களை சேர்ந்த மாணவர்களை கடந்த மூன்று மாத காலத்திற்க்கு மேலாக மாணவர்கள் தங்கு விடுதிகளில் தடுத்து வைத்து கல்வி செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக மாணவர்களால் குற்றம் சாட்டப்படுகிறது.
சுமார் 2000 மாணவர்கள் கடந்த மூன்று மாத காலத்திற்கு மேலாக விடுதிகளில் தடுத்து வைக்கப்பட்டு உள்ளதாக மாணவர்கள் தெரிவித்தனர். அது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
இந்த ஆண்டு ஆரம்பத்தில், மாணவர்கள் பல்கலைக்கழகத்திற்கு வருகை தந்துள்ளனர். அவர்களை மாணவர்கள் தங்குமிடங்களில் நிர்வாகத்தினர் தங்க வைத்துள்ளனர். மாணவர்களை தனிமைப்படுத்தி மாணவர் தங்குமிடங்களில் தங்க வைத்து இணைய வழி (சூம்) கல்வி செயற்பாடுகளை ஆரம்பித்துள்ளனர்.
கொரோனா தொற்று காரணமாக பல்கலைக்கழகங்கள் மூடப்பட்டுள்ள நிலையில் , கிளிநொச்சி வளாகம் மூடப்படாது , அங்கிருந்த மாணவர்கள் , விடுதிகளில் வலு கட்டாயமாக தங்க வைக்கப்பட்டு சூம் ஊடாக கல்வி செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
புதுவருடத்திற்கு கூட மாணவர்களை வீடுகளுக்கு செல்ல அனுமதிக்கவில்லை. அதற்கு மாணவர்கள் தரப்பில் நிர்வாகத்திடம் கேள்வி எழுப்பிய போது , பல மாவட்டங்களை சேர்ந்தவர்கள் கல்வி கற்பதனால் வீடுகளுக்கு சென்று மீண்டும் வருவது ஆபத்து என கூறியுள்ளனர்.
அதேவேளை அனைத்து மாணவர்களும் விடுதிகளுக்குள் உள்வாங்கப்பட்டு தங்க வைக்கப்பட்டுள்ளதால் , மாணவர்கள் விடுதிகளில் இட நெருக்கடிகளையும் எதிர்கொண்டுள்ளனர். அத்துடன் வழங்கப்படும் உணவும் தரமற்ற நிலையில் காணப்படுவதாக மாணவர்கள் தெரிவித்தனர்.
இதேவேளை மாணவர்கள் மூன்று மாத காலத்திற்கு மேலாக வீடுகளுக்கு செல்ல முடியாத நிலையிலும் , ஒழுங்கான உணவுகள் இன்றியும் , தங்குமிட வசதி குறைபாடுகளுக்கு மத்தியில் உள்ளமையால் பெரும்பாலான மாணவர்கள் மனவுளைச்சலுக்கு உள்ளாகி உள்ளனர்.
தமக்கு இணைய வழி (சூம்)ஊடாகவே கல்வி செயற்பாடுகள் நடைபெறுவதனால் , வீடுகளில் இருந்தும் கூட நாம் எமது கல்வி செயற்பாடுகளை தொடர முடியும். அனைத்து பல்கலை கழகங்களும் மூடப்பட்டு உள்ள நிலையில் , எமது வளாகத்தில் மாத்திரம் எம்மை வலு கட்டாயமாக தடுத்து வைத்துள்ளனர். இதனால் நாம் விரக்தி நிலையில் உள்ளோம் எனவே எம்மை வீடுகளுக்கு செல்ல அனுமதிக்குமாறு மாணவர்கள் கோரியுள்ளனர்.
இதேவேளை தமது வளாகத்தில் பணியாற்றும் கல்வி சாரா ஊழியர்கள் சிற்றுண்டி சாலை ஊழியர்கள் என அனைவரும் வீடுகளில் இருந்தே வந்து செல்கின்றனர். அத்துடன் எமது விடுதி பொறுப்பாளர் கூட வார இறுதி நாட்களில் வீட்டிற்கு சென்றே வருகின்றார். எம்மை மாத்திரம் மூன்று மாத காலத்திற்கு மேலாக வளாகத்தை விட்டு வெளியேற அனுமதிக்காது இராணுவ முகாம் போன்ற கட்டுப்பாட்டுடன் வலு கட்டாயமாக தடுத்து வைத்துள்ளனர் என மாணவர்கள் கவலையுடன் தெரிவித்தனர்.