மேற்கு வங்காளத்தில் மம்தா பானர்ஜி 3வது முறையாக முதல் மந்திரியாக பதவி ஏற்றுள்ளாா். மேற்கு வங்காள சட்டசபைக்கு நடந்த தேர்தலில் மொத்தம் உள்ள 294 தொகுதிகளில் 292 தொகுதிகளுக்கு நடைபெற்ற வாக்குப்பதிவில் 213 தொகுதிகளில் வெற்றி பெற்று மம்தா பானர்ஜி 3-வது முறையாக ஆட்சியை பிடித்தார்.
மம்தாவின் திரிணாமுல் காங்கிரசுக்கு அடுத்தபடியாக பாரதிய ஜனதா கட்சி 77 இடங்களில் வெற்றி பெற்றது. இந்தநிலையில் மேற்கு வங்காளத்தில் பல்வேறு பகுதிகளிலும் கடந்த 2 தினங்களாக திரிணாமுல் காங்கிரஸ், பா.ஜனதா தொண்டர்கள் இடையே ஏற்பட்ட கடும் மோதல்களில் 11 பேர் கொல்லப்பட்டதுடன். 4 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீடுகள் சூறையாடப்பட்டுள்ளன.
மேற்கு வங்காளத்தில் ஜனாதிபதி ஆட்சியை அமுல்படுத்துவதற்கு சதி செய்து இத்தகைய வன்முறைகளைத் தூண்டி விடப்பட்டிருப்பதாக மம்தா பானர்ஜி குற்றம் சுமத்தியுள்ளாா்.
இந்தநிலையில் ஏற்கனவே வகித்து வந்த முதல்வர் பதவியிலிருந்து விலகுவதாக கடிதம் கொடுத்திருந்த அவா் கடந்த திங்கட்கிழமை ஆளுனரை சந்தித்து ஆட்சி அமைக்க உரிமை கோரினார்.
அதை ஏற்றுக்கொண்ட ஆளுனர் தற்காலிகமாக முதல்வர் பதவியை ஏற்குமாறும் ஆட்சி அமைக்க வருமாறும் அழைப்பு விடுத்தார்.
இதை ஏற்றுக்கொண்ட மம்தா பானர்ஜி இன்று காலை 10.45 மணிக்கு முதல்-மந்திரியாக பதவி ஏற்றுக்கொண்டார்
மம்தா பானர்ஜி பதவி ஏற்கும் விழா கொல்கத்தாவில் உள்ள ஆளுன மாளிகையில் மிக எளிமையாக நடைபெற்றது. கொரோனா அச்சுறுத்தல் காரணமாக மிக குறைந்த அளவில் அழைப்பாளர்கள் அனுமதிக்கப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது