தமது காணிகளில் அரைநிரந்தர வீடுகள் அமைத்து தங்கி இருப்போருக்கே வீட்டுத்திட்டம் வழங்கப்பட வேண்டும் என அரச சுற்று நிரூபத்தில் குறிப்பிடப்படவில்லை என தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் கேட்கப்பட்ட கேள்விக்கு பதில் வழங்கப்பட்டுள்ளது.
யாழ்.மாவட்டத்தில் உள்ள சில பிரதேச செயலர்கள் அரை நிரந்தர வீடுகள் அமைத்து தங்குமாறு மக்களை வற்புறுத்தியுள்ளனர். அவ்வாறு தமது சொந்த காணிகளில் வீடுகளை அமைத்து தங்கியுள்ளோருக்கே வீட்டு திட்டங்கள் வழங்கப்படும் என அறிவித்து இருக்கின்றார்கள்.
அதேவேளை அவ்வாறு தமது காணிகளில் தங்காதவர்களுக்கு வீட்டு திட்டங்களும் புறக்கணிக்கப்பட்டுள்ளது என பல குற்றசாட்டுகள் எழுந்தன.
அது தொடர்பில் அறியும் நோக்குடன் கோப்பாய் பிரதேச செயலகத்திடம் தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் , அரை நிரந்தர வீடுகளை அமைத்து தங்கி உள்ளவர்களுக்கு மாத்திரம் வீட்டு திட்டங்களுக்கு கீழ் வீடுகள் வழங்க வேண்டும் என சுற்று நிரூபம் ஏதாவதில் குறிப்பிடப்பட்டு உள்ளதா ? என கேட்கப்பட்டது.
அதற்கு பிரதேச செயலகம் அவ்வாறான சுற்று நிரூபங்கள் எதுவும் வெளியிடப்படவில்லை என பதிலளித்துள்ளனர். மீள் குடியேற்றம் செய்யப்படும் மக்களில் பெரும்பாலானவர்கள் சொந்த இடங்களுக்கு திரும்புவதில்லை என பொதுவான குற்ற சாட்டுக்கள் முன் வைக்கப்படுகிறது.
ஆனால் மீள் குடியேற அனுமதிக்கப்பட்ட பகுதிகளில் அடிப்படை வசதிகள் எதுவும் செய்து கொடுக்க படாததால் பலரும் மீள் குடியேற பின்னடிக்கின்றார்கள்.
30 வருடங்களுக்கு பின்னர் காணிகளுக்கு சென்று காணிகளை துப்பரவு செய்து அடிப்படை வசதிகள் அற்ற நிலையில் மீள் குடியேற பின்னடிக்கிறார்கள்.அவர்களுக்கான அடிப்படை வசதிகள், வீட்டு திட்டங்கள் வழங்கப்பட்டால் தாம் மீள் குடியேற தயாராக உள்ளதாக தெரிவிக்கின்றனர்.
பற்றை காடுகளாக இருக்கும் பகுதிகளில் வயதானவர்கள் , நோயால் பாதிக்கப்பட்டவர்கள் , பெண்கள் உள்ளிட்டவர்களுடன் எவ்வாறு அரை நிரந்தர வீடுகளில் வந்து தங்கி இருந்து வீட்டு திட்டத்தை பெற்று வீட்டினை கட்ட முடியும் என கேள்வி எழுப்புகின்றார்.
அதேவேளை , அப்பகுதிகளில் உள்ள கிணறுகள் 30 வருட காலமாக பாவனைகள் இன்றி காணப்பட்டதால் பாழடைந்துள்ளது. அக்கிணற்று நீரினை பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளது. அதேவேளை மலசல கூட வசதிகள் கூட இல்லாத நிலைமை காணப்படுகிறது.
குடிநீர் வசதிகள் , மலசல கூட வசதிகள் என எந்த அடிப்படை வசதிகளும் அற்ற நிலையில் பற்றை காடுகளாக உள்ள தமது காணிகளை துப்பரவு செய்து அதனை அறிக்கையிட்டு (வேலி அடைத்து) அங்கு அரை நிரந்தர வீடமைந்து தங்குவது என்பது எல்லோராலும் சாத்தியமற்ற விடயம். அதற்கான பொருளாதார வசதிகள் அற்ற நிலையிலையே பெரும்பாலானவர்கள் வாழ்ந்து வருகின்றார்கள்.
இவ்வாறான நிலையில் எவ்வித அடிப்படை வசதிகளுக்கும் உதவாது , காணிகளில் மீள குடியேறி அரை நிரந்தர வீடுகளை அமைந்து அங்கு தங்கி இருப்போருக்கே வீட்டு திட்டங்கள் வழங்கப்படும் என சுற்று நிரூபத்தில் இல்லாத விடயத்தை அதிகாரிகள் மக்கள் மத்தியில் திணித்து வருகின்றார்கள்.
அவ்வாறு தங்கவில்லை என்பதற்காகவே பலருக்கு வீட்டு திட்டங்கள் வழங்கப்படவில்லை என குற்றம் சாட்டப்படுகிறது.
இதேவேளை , சிலர் தமது காணிகளில் அரை நிரந்தர வீடுகள் அமைத்து தங்கி உள்ள போதிலும் பல மாதங்கள் கடந்தும் வீட்டு திட்டங்கள் கிடைக்க பெறவில்லை என கவலை தெரிவிக்கின்றனர்.
அடிப்படை வசதிகள் இன்றி பொருளாதார நெருக்கடிகளுக்கு மத்தியில் காணிகளில் அரை நிரந்தர வீடுகள் அமைத்து தங்கியுள்ள போதிலும் , வீட்டு திட்டங்கள் இன்னமும் கிடைக்க பெறவில்லை என தெரிவிக்கின்றனர்.
அதேவேளை சிலர் இரவு நேரங்களில் அரை நிரந்தர வீடுகளில் தங்குவது பாதுகாப்பு இல்லை என்பதனால் அங்கு தாங்காமல் , வேறு இடங்களில் தங்குகின்றார்கள்.
இரவு நேரங்களில் வீடுகளில் தாங்காமல் வேறு இடங்களில் தங்குகின்றார்களா ? என்பதனையும் சில கிராம சேவையாளர்கள் கண்காணிக்கின்றார்கள் எனவும் , வீடுகளில் தங்காதவர்களுக்கு வீட்டு திட்டம் இல்லை எனவும் கூறியதாகவும் சிலர் குற்றம் சாட்டு கின்றார்கள்.
சுற்று நிரூபங்கள் எதிலும் குறிப்பிடப்படாத விடயங்களை பாதிக்கப்பட்ட மக்கள் மத்தியில் திணித்து அந்த மக்களை துன்பங்களுக்கு உள்ளாக்கும் அதிகாரிகள் தொடர்பில் உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் எனவும் வீட்டு திட்டங்களை விரைந்து பயனாளிகளுக்கு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் பாதிக்கப்பட்டவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.