லண்டனில் நடைபெறுகின்ற ‘ஜி-7’ நாடுகளின் மாநாட்டில் கலந்துகொள்வதற்காக வந்த இந்திய வெளிவிவகாரஅமைச்சர் தலைமையிலான குழுவினர் தங்களைத் தாங்களே சுயதனிமைப் படுத்திக்கொண்டுள்ளனர்.
இந்தியக் குழுவினரில் இருவருக்கு வைரஸ் தொற்றியமை தெரியவந்ததைஅடுத்தே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
பிரித்தானியாவின் நடைமுறைகளின்படி இந்தியக் குழுவினர் பத்து தினங்கள் தனிமைப்படுத்தப்படுவர். பிரதான மாநாடு நடைபெறுகின்ற Lancaster House பகுதிக்கு இந்திய அமைச்சர் குழுவினர் செல்ல மாட்டார்கள் என்று அறிவிக்கப் படுகிறது.
தனது குழுவில் இருவருக்குத் தொற்றுஇருப்பதை வெளிவிவகார அமைச்சர் சுப்ரமணியம் ஜெய்ஷங்கர் தனது ருவீற்றரில் உறுதிப்படுத்தியுள்ளார். தான் காணொலி வழியாக மாநாட்டு உறுப்பினர்களுடன் உரையாடவுள்ளார் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
லண்டன் கடந்த இரண்டு ஆண்டுகளில் முதல் தடவையாகக் கூட்டுகின்ற – பிரதிநிதிகள் நேரடியாகப் பங்குபற்றும்- முதலாவது ஜி7 மாநாடு இதுவாகும்.
இந்தியா ஜி 7 நாடுகளில் இடம்பெறாத போதிலும் அவுஸ்திரேலியா, தென் ஆபிரிக்கா, தென் கொரியா போன்ற நாடுகளுடன் சேர்த்து விசேடமாக அழைக்கப்பட்ட பிரதிநிதியாக மாநாட்டில் கலந்துகொள்கிறது.
சீனா, ரஷ்யாவுக்கு எதிராகத் தங்களை ஓர் ஐக்கியப்பட்ட அமைப்பாகக் காட்டுவதற்காகவே மேற்கு நாடுகள் இந்த மாநாட்டை நடத்துகின்றன.
ஜி 7நாடுகளின் அரசுத் தலைவர்கள் பங்குபற்றும் பிரதான மாநாடு எதிர்வரும் ஜூன் மாதம் பிரித்தானியாவில் நடைபெற வுள்ளது. அதற்கு முன்பாக வெளிவி வகார அமைச்சர்கள் மட்டத்தில் நடத்தப் படுகின்ற மாநாடு இதுவாகும்.
—————————————————————-
குமாரதாஸன். பாரிஸ்.05-05-2021