இலங்கை பிரதான செய்திகள்

நிமலராஜன் கொலை சந்தேகநபர்களை விடுவிக்க பணிப்பு

ஊடகவியலாளர் மயில்வாகனம் நிமலராஜன் படுகொலை வழக்கின் சந்தேக நபர்கள் 6 பேருக்கு எதிராக குற்றவியல் நடவடிக்கைகளை முன்னெடுத்துச் செல்ல முடியாது என சட்ட மா அதிபர் திணைக்களம் யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றுக்கு பரிந்துரைத்துள்ளது.

அதனால் 6 சந்தேக நபர்களையும் விடுவிக்க யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கடந்த 2000ஆம் ஆண்டு, ஒக்ரோபர் 19ஆம் திகதி இரவு 10 மணியளவில் யாழ்ப்பாண நகரின் உயர் பாதுகாப்பு வலயப்  பகுதியாக இருந்த கச்சேரியடிப் பகுதியில் உள்ள அவரது   வீட்டுக்குள் நுழைந்த ஆயுததாரிகள் அவரைச் சுட்டுப்படுகொலை செய்தனர். அவர் எழுதிக்கொண்டிருந்த கட்டுரையின் மீது சரிந்து விழுந்தே உயிரிழந்தார். 

அவர் மீது துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்ட பின்னர்,  அவரது வீட்டுக்குள் கைக்குண்டை வீசிவிட்டுச் சென்றதில், நிமலராஜனின் தந்தை, தாய், மருமகன் உள்ளிட்டோர் படுகாயமடைந்தனர்.

நிமலராஜன் கொலை தொடர்பாக யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றில்  பி 423/2000 என்ற வழக்கு விசாரணை இடம்பெற்று வந்த நிலையில் கடந்த 15 ஆண்டுகளுக்கு மேலாக கிடப்பில் போடப்பட்டது.


பின்னர் சட்ட மா அதிபரின் ஆலோசனைக்காக கடந்த பல ஆண்டுகளாக வழக்கு விசாரணை நிலுவையில் இருந்தது.

இந்நிலையில் நிமலராஜன் கொலை வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டுள்ள 6 பேருக்கும் எதிரான குற்றவியல் நடவடிக்கையை தொடர்ந்து முன்னேடுக்க முடியாது என பரிந்துரை வழங்கியுள்ளார்.


அத்துடன், வழக்கின் சந்தேக நபர்களை விடுவித்து 14 நாள்களுக்குள் அறிக்கையிடுமாறும் காவல்துறை திணைக்களத்தின்
சட்டப் பிரிவு பணிப்பாளருக்கு சட்ட மா அதிபர் பணித்துள்ளார்.

 ஈழமக்கள் ஜனநாயக கட்சியை சேர்ந்த  நெப்போலியன் என அழைக்கப்படும் செபஸ்டியன் ரமேஸ் உள்ளிட்டவர்களே நிமலராஜன் கொலை வழக்கில் சந்தேக நபர்களாக கைது செய்யப்பட்டு வழக்கு தொடரப்பட்டது.

அதேவேளை கடந்த 2001ஆம் ஆண்டு ஊர்காவற்துறை நாரந்தனை பகுதியில் தேர்தல் பிரச்சாரம் மேற்கொள்ள சென்ற தமிழ் தேசிய கூட்டமைப்பினர் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதலில் இருவர் படுகொலை செய்யப்பட்டனர்.


அது தொடர்பிலான வழக்கு விசாரணையில் நெப்போலியன் என அழைக்கப்படும் செபஸ்டியன் ரமேஸ் உள்ளிட்ட மூவருக்கு யாழ்.மேல் நீதிமன்றம் கடந்த 2016ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் இரட்டை தூக்கு தண்டனை விதித்து தீர்ப்பளித்தது.


குற்றவாளிகளாக காணப்பட்ட நெப்போலியன் மற்றும்  மதன் என அழைக்கப்படும் நடராஜா மதனராஜா  ஆகிய இருவரும் வெளிநாட்டில் வசித்து வரும் நிலையில் இருவருக்கு பிடியாணை பிறப்பிக்கப்பட்டு உள்ளமை குறிப்பிடத்தக்கது.

Spread the love
  •   
  •   
  •   
  •   
  •  
  •  
  •  
  •  

Add Comment

Click here to post a comment

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.