வடக்கு மாகாணக் கல்வி நிர்வாகம் பெரும் இடர்கள், குழப்பத்தின் மத்தியில் செல்வதோடு க.பொ.த உயர்தர பெறுபேறும் தொடர் பின்னடைவாகவே காணப்பட்டாளும் கிராம்ப்புறங்கள் வளர்ச்சி காண்பது மட்டுமே மகிழ்ச்சி தரும் ஒரு செய்தியாகவுள்ளது.
க.பொ.த உயர்தரத்தில் கடந்த ஆண்டும் 6ஆம் இடத்தில் இருந்த வடக்கு மாகாணம் 2020ஆம் ஆண்டிலும் 6ஆம் இடத்தினையே எட்டியுள்ளனர். இவ்வாறு எட்டியவற்றில் இம் முறை பல சாதணைகளும் வேதனைகளையும் கடந்து அதிர்ச்சிகளும் கூடவே உள்ளது.
இலங்கையிலேயே முதலாவது மாகாணமாக வட மேல் மாகாணமும் முதலாவது மாவட்டமாக புத்தளம் மாவட்டமும் உள்ளது. வடக்கு மாகாணத்தில் இருந்து 13 ஆயிரத்து 702 மாணவர்கள் பரீட்சைக்கு தோற்றிய நிலையில் இம்முறை 8 ஆயிரத்து 851 மாணவர்கள் பல்கலைக் கழகம் நுழைய தகுதி பெற்றுள்ளனர்.
மாகாணத்தில் யாழில் இருந்து அதிக வீதமான மாணவர்கள் பல்கலைக் கழகம் புக தகுதி.
——-+———
யாழ்ப்பாணம் மாவட்டத்திலே 7 ஆயிரத்து 925 மாணவர்கள் உயர்தரப் பரீட்சைக்கு தோற்றினர். இவர்களில் 5 ஆயிரத்து 148 மாணவர்கள் பல்கலைக் கழகத்திற்கு தகுதி பெற்றுள்ளனர். அடுத்ததாக மன்னார் மாவட்டத்திலே ஆயிரத்து 570 மாணவர்கள் பரீட்சைக்கு தோற்றியதில் 985 மாணவர்கள் பல்கலைக் கழகத்திற்கு தகுதி பெற்றுள்ளனர். இதேபோன்று மாகாணத்தின் மூன்றாவது அதிகப்படியாக முல்லைத்தீவு மாவட்டத்தில் இருந்து ஆயிரத்து 379 மாணவர்கள் தோற்றியதில் 859 மாணவர்கள் தகுதி பெற்றுள்ளனர்.
இதேபோன்று நான்காவதாக கிளிநொச்சி மாவட்டத்தில் இருந்து ஆயிரத்து 662 மாணவர்கள் தோற்றியதில் ஆயிரத்து 26 மாணவர்கள் பல்கலைக் கழகத்திற்கு தகுதி பெற்றுள்ள அதே நேரம் வவுனியா மாவட்டத்தில் இருந்து 2 ஆயிரத்து 92 மாணவர்கள் தோற்றியபோதும் ஆயிரத்து 211 மாணவர்கள் மட்டுமே பல்கலைக் கழகத்திற்கு தகுதி பெற்றுள்ளனர்.
இவற்றின் அடிப்படையில் யாழில் இருந்து 64.94 வீதமும், மன்னார் 62.74 வீதம், முல்லைத்தீவு 62.29 வீதம், கிளிநொச்சியில் 61.73 வீத மாணவர்களும் வவுனியாவில் இருந்து 57.89 வீதமான மாணவர்களும் பல்கலைக் கழகத்திற்கு தகுதி பெற்றுள்ளனர்.
தேசிய பாடசாலைகள் நகரப் பாடசாலைகளை வீழ்த்திய கிராம்ப் பாடசாலைகள்.
தரம் 5 புலமைப் பரிசில் பரிட்சை என்னும் பெயரில் இடம்பெறும் கொலை சிப் மன்னிக்க வேண்டும் ஸ்கொலசிப் பரீட்சையில் அதிகூடிய புள்ளிகளை பெறும் மாணவர்களை வடிகட்டி எடுத்து கல்வி கற்பிக்கும் எந்த தேசிய பாடசாலையும் இந்த ஆண்டு பரீட்சையில் பிரகாசிக்கவே இல்லை என்றே கூறலாம். 30 பேர் 40 பேர் 3பாடங்களிலும் ஏ சித்தி என்றோ அல்லது 100, 200 பேர் பல்கலைக்கு தகுதி என்றும் கூறலாம் ஆனால் இதே பாடசாலைகளில் எத்தனைபேர் 3 பாடங்களிலும் சித்தி எய்தவில்லை என்பதனையோ அல்லது எத்தனைபேர் பல்கலைக் கழகத்திற்கு தகுதி பெறவில்லை என்ற புள்ளிவிபரமும் உண்டு.
இதேபோன்றே வடக்கு மாகாணத்தில் உள்ள 22 தேசிய பாடசாலைகளில் 3 பாடசாலைகளைத் தவிர ஏனையவற்றின் பெறுபேறுகள் பெரிதாக கூறும் அளவிற்கு பிரகாசிக்கவில்லை. மாறாக வழமையாக சாதாரணமான பெறுபேற்றைப் பெற்றுக்கொள்ளும் பாடசாலைகள் மாவட்ட ரீதியிலும் தேசிய ரீதியிலும் சாதனை படைத்துள்ளனர்.
மாகாணத்தில் சிறந்த பெறுபேற்றை பெற்றவர்களின் எண்ணிக்கையைவிட சித்தி எய்த தவறியவர்களே அதிகம்.
—-+————
வடக்கு மாகாணத்தில் இருந்து உயர் தரப் பரீட்சைக்குத் தோற்றிய 13 ஆயிரத்து 702 மாணவர்களில் 245 மாணவர்கள் மட்டுமே மூன்று பாடங்களிலும் 3 பாடங்களிலும் ஏத் தர சித்தியை பெற்றுள்ளனர். அதேநேரம் ஆயிரத்து 362 மாணவர்கள் மூன்று பாடங்களிலும் எவ் பெறுபேற்றினையே பெற்றுள்ளமையும் குறிப்பிட வேண்டிய நிலமையிலேயே கல்வி நிலவரம் உள்ளது.
இந்த நிலமை தேசிய ரீதியில் பார்க்கும் பட்சத்தில் 7 ஆயிரத்து 278 மாணவர்கள் 3 பாடங்களிலும் ஏத் தர சித்தியை எய்தினாலும் 21 ஆயிரத்து 697 மாணவர்கள் 3 பாடங்களிலும் எவ் பெறுபேற்றினையே பெற்றுள்ளனர்.
வடக்கின் இருப்பை காத்த தென்மராட்சி மற்றும் வலிகாமம் வலயங்கள்.
வடக்கு மாகாணத்தில் உள்ள கல்வி வலயங்களில் அதிக பாடசாலை, அதிக மாணவர்கள், அதிக ஆசிரியர்கள் என அதிக வளம் கொண்டதாக காணப்படும் யாழ்ப்பாணம் கல்வி வலயம் 2020 பெறுபேற்றின் விகிதாசார நிலமையில் பின்னடைவை கண்டதனை ஏற்க வேண்டிய நிலமையே காணப்படுகின்றது. ஏனெனில் வடக்கின் 12 வலயங்களில் பல்கலைக் கழக அனுமதியின் அடிப்படையில் யாழ்ப்பாணம் கல்வி வலயம் 9வது இடத்தில் உள்ளது. வலிகாமம் கல்வி வலயம் முதலாவது இடத்திலும் வவுனியா வடக்கு கல்வி வலயம் இரண்டாம் இடத்திலும் உள்ளது. மூன்றாம் இடத்தை மன்னார் வலயம் பிடித்துள்ளது. இதில் மற்றுமோர் விசேசமாக எண்ணிக்கையின் வித அடிப்படையில் தீவக வலயம் நான்காம் இடத்தை பிடித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
இதேநேரம் முறையே துணுக்காய் 5, மடு 6, தென்மராட்சி வலயம் 7, வடமராட்சி 8, யாழ்ப்பாணம் 9வது இடம், முல்லைத்தீவு 10, கிளிநொச்சி 11வது இடமும் வவுனியா தெற்கு வலயமே 12வது இடத்தில் உள்ளமையும் நகர்ப்புற பாடசாலைகளை நாடியவர்கள் நெஞ்சில் இடி விழுந்த செய்தியாகவே உள்ளது.
இந்த வகையில் வடக்கு மாகாண சித்தி வீதமானது 2017ஆம் ஆண்டு 68.37 ஆகவும் 2018இல் 65.28 ஆகவும், 2019இல் 65.25 ஆகவும் காணப்பட்டபோதும் 2020இல் 64.61 ஆகியுள்ளது.
நகர்ப்புற பாடசாலைகளிலே தேசிய பாடசாலைகளான வெட்டுப் புள்ளியை தாண்டும் மாணவர்களை இணைக்கும் பாடசாலைகளான வேம்படி மகளிர் உயர்தரப் பாடசாலையில் 479 மாணவிகள் பரீட்சைக்கு தோற்றியபோதும் 336 மாணவர்கள் பல்கலைக் கழக அனுமதியை பெற்றதோடு 113 மாணவர்கள் பல்கலைக் கழக அனுமதியை பெற முடியவில்லை. இதேபோன்று யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியில் இருந்து 474 மாணவர்கள் பரீட்சைக்கு தோற்றி இங்கிருந்தும் 336 மாணவர்கள் பல்கலைக் கழகத்திற்குள் நுழைவதற்கான தகமையை பெற்ற அதேநேரம் 138 மாணவர்கள் பல்கலைக் கழக அனுமதியை பெற முடியவில்லை. யாழ். இந்து மகளிர் கல்லூரியில் இருந்து 403 மாணவிகள் தோற்றியதில் 258 மாணவிகள் பல்கலைக் கழக அனுமதியை தொட்டனர். கொக்குவில் இந்துக் கல்லூரியிலே 383 மாணவர்கள் தோற்றி 227 மாணவர்கள் பல்கலைக் கழகத்திற்கான தகமையை பெற்றுள்ளனர்.