நினைவேந்தலை இம்முறையும் எமது மக்கள் நினைவுகூருவார்கள்.அதில் விட்டுக்கொடுப்பென்ற பேச்சிற்கே இடமில்லை. நாம் நினைவேந்தலை அமைதியாக முன்னெடுக்கவே விரும்புகின்றோம்.ஆனால் அரசு தான் தடைகளை விதித்து குழப்பங்களை ஏற்படுத்துகின்றது என முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் பொதுக்கட்டமைப்பு அறிவித்துள்ளது.
யாழ்.ஊடக அமையத்தில் இன்றைய தினம் வியாழக்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது , பொதுக்கட்டமைப்பு சார்பில் , தவத்திரு வேலன் சுவாமிகள் , யாழ்.குருமுதல்வர் அருட்பணி ஜெபரட்ணம் அடிகளார் மற்றும் சிவில் சமூக அமைப்புக்களின் பிரதிநிதி அருட்பணி செல்வன் அடிகளார் உள்ளிட்டோர் கலந்து கொண்டு அவ்வாறு தெரிவித்தனர்.
மேலும் தெரிவிக்கையில் ,
இனஅழிப்பின் உச்சமான முள்ளிவாய்க்கால் நினைவேந்தலை இம்முறையும் எமது மக்கள் நினைவுகூருவார்கள்.அதில் விட்டுக்கொடுப்பென்ற பேச்சிற்கே இடமில்லை.நாம் நினைவேந்தலை அமைதியாக முன்னெடுக்கவே விரும்புகின்றோம்.ஆனால் அரசு தான் தடைகளை விதித்து குழப்பங்களை ஏற்படுத்துகின்றது.
மக்களை இரவில் நடமாட தடைவிதித்து விட்டு இரவோடிரவாக முள்ளிவாய்க்காலில் உள்ள நினைவு தூபியை அடித்து சேதப்படுத்தியுள்ளனர்.நடுகல்லை களவாடி எடுத்து சென்றிருக்கின்றார்கள். நடுகல்லை நாட்டுவதற்காக எடுத்து வந்தவர்களை இலங்கை படைகளும் காவல்துறையும் தடுத்ததால் அவர்களிடமே அதனை கைவிட்டு சென்றிருந்தனர்.
இந்நிலையில் நடுகல் களவாடப்பட்டுள்ளதென்றால் பதிலளிக்கவேண்டியவர்கள் படையினரும் அங்கு நின்றிருந்த காவல்துறை அதிகாரிகளுமே. அவர்களிற்கு எதிராக முள்ளிவாய்க்கால் நினைவேந்தலிற்கான வடகிழக்கு பொது கட்டமைப்பு நிச்சயமாக சட்டநடவடிக்கைகளை எடுக்கும்.
ஈஸ்டர் தாக்குதலில் கொல்லப்பட்டவர்களை நினைவுகூர, அவர்களிற்கு நினைவுதூபி அமைக்க அனுமதித்துள்ள இலங்கை அரசு மறுபுறம் இனஅழிப்பிற்குள்ளான எமது மக்களினை நினைவுகூர அனுமதி மறுக்கின்றது.நினைவுதூபிகளை அடித்து நொருக்குகின்றது.
நினைவு நடுகல்லை களவாடி செல்கின்றது. இம்முறை முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் தரவைக்கு கொரோனா தொற்றினை முன்னிட்டு குறைவானவர்களை மட்டுமே பங்குபற்ற அழைக்கின்றோம்.
ஏனையோர் தமது வீடுகளில், ஆலயங்களில், தேவாலயங்களில் பொது இடங்களிலும் மாலை மணி ஒலித்து சுடரேற்றி அஞ்சலிக்கவும் முள்ளிவாய்க்கால் நினைவேந்தலிற்கான வடகிழக்கு பொது கட்டமைப்பு அழைப்புவிடுகின்றோம் என தெரிவித்தனர்.