தடுப்பூசிக்கு டிஜிட்டல் அடையாள அட்டைகளை வழங்க அரசாங்கம் தயாராக இருப்பதாக அறிவித்துள்ள நிலையில், அதில் உள்ளடக்கப்படும் தனிநபர்களின் தனிப்பட்ட தகவல்களின் பாதுகாப்பிற்கு ஏற்படும் ஆபத்துக்கள் குறித்து தகவல் தொழில்நுட்ப சங்கம் சுட்டிக்காட்டியுள்ளது.
தனியுரிமை இலங்கையில் ஒரு அடிப்படை மனித உரிமையாக அங்கீகரிக்கப்படவில்லை என்பதன் மூலம் ஆபத்து அதிகரிப்பதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
தடுப்பூசி வழங்கும் செயற்பாட்டை மிகவும் திறமையாக செயற்படுத்தும் வகையில், அடுத்த சில நாட்களில் டிஜிட்டல் அடையாள அட்டை பொதுமக்களுக்கு வழங்கப்படும் என சுகாதார அமைச்சும் தகவல் தொடர்பாடல் தொழில்நுட்ப முகவர் நிறுவனமும் அறிவித்துள்ளன.
கொரோனாவைக் கட்டுப்படுத்த புதிய தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவதற்கான அரசாங்கத்தின் நடவடிக்கை சரியானது மற்றும் பாராட்டத்தக்கது என்றாலும், இலங்கை அரசின் டிஜிட்டல் மயமாக்கலுக்கான கொள்கைகளை வகுப்பதில் மிகவும் பின்தங்கியிருப்பதாக தகவல் தொழில்நுட்ப சங்கம் சுட்டிக்காட்டியுள்ளது.
இலங்கையில் சாரதி அனுமதிப்பத்திரம் வழங்கும் செயற்பாடுகளை இராணுவத்திற்கு ஒப்படைத்தன் ஊடாக சாரதி அனுமதிப்பத்திரம் பெற்றவர்களின் தனிப்பட்ட தரவுகளை இராணுவம் பெற்றுக்கொள்வதற்கு திட்டமிடப்பட்டுள்ளதாக, சிவில் செயற்பாட்டாளர்கள் முன்னர் குற்றஞ்சாட்டியிருந்தனர்.
கொரோனா நோயால் பாதிக்கப்பட்ட அனைவரின் தரவும் தனது கைத்தொலைபேசியில் ல் சேமிக்கப்பட்டுள்ளதாக பாதுகாப்பு செயலாளர் முன்னதாக கூறியிருந்தார்.
டிஜிட்டல் ஆரோக்கியத்தில் நோயாளிகள் அல்லது சுகாதாரப் சேவையை பெறுபவர்களின் தனியுரிமை மற்றும் தரவு பாதுகாப்பை உறுதி செய்வதற்காக பல நாடுகளில் பல்வேறு கொள்கைகள் மற்றும் சட்டங்கள் இயற்றப்பட்டுள்ளதாக, இலங்கையின் தகவல் தொழில்நுட்ப சங்கத்தின் தலைவர் ரஜீவ யசிரு குருவிட்ட அறிக்கை ஊடாக தெரிவித்துள்ளார்.
சுகாதார காப்பீட்டு பெயர்வுத்திறன் மற்றும் பொறுப்புக்கூறல் சட்டத்தின் ஊடாக (Health Insurance Portability and Accountability Act அமெரிக்க குடிமக்களின் சுகாதாரத் தரவைப் பாதுகாப்பதற்கான பொறுப்புக்கூறல் ஏற்பாடு காணப்படுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஐரோப்பிய ஒன்றிய பொது தரவு பாதுகாப்பு ஒழுங்குமுறை (General Data Protection Regulation) குடிமக்களின் சுகாதார தரவுகள் உள்ளிட்ட பிற தரவுகளுக்கு பொறுப்புக் கூற வேண்டும்.
இந்தியாவில் சுகாதாரத் தரவுகள் ‘உணர்ச்சிப்பூர்வமான தனிப்பட்ட தரவு’ என வகைப்படுத்தப்பட்டுள்ளதாக ரஜீவ யசிரு குருவிட்ட தெரிவித்துள்ளார்.
தரவு பாதுகாப்பு சட்டம் மற்றும் சைபர் பாதுகாப்பு சட்டம் ஆகியவை நாடாளுமன்றத்தில் அங்கீகரிக்கப்படாத நிலையில், தடுப்பூசிக்கான டிஜிட்டல் அடையாள அட்டைகளை வழங்குவது எதிர்காலத்தில் ஆபத்தான காரணியாக இருக்கலாம் என்பதால், டிஜிட்டல் அடையாள அட்டைகளை வழங்குவதற்கு முன்னர் பொதுமக்களின் தரவு மற்றும் தனியுரிமையைப் பாதுகாப்பதற்கு தேவையான கொள்கைகள் மற்றும் திட்டங்கள் வகுக்கப்பட வேண்டுமென இலங்கையின் தகவல் தொழில்நுட்ப சங்கம் அரசுக்கு தெரிவித்துள்ளது.
அடுத்த தலைமுறையின் எதிர்பார்ப்பு
விரைவாகத் தடுப்பூசி செலுத்தும் பணிகளை முன்னெடுக்கும் வகையில், சுகாதார அமைச்சு மற்றும் தகவல் தொடர்பாடல் தொழில்நுட்ப முகவர் நிறுவனத்துடனான கலந்துரையாடலின் விளைவாக, புதிய தொழில்நுட்பத்துடன் கூடிய புதிய டிஜிட்டல் அடையாள அட்டை பொதுமக்களுக்கு வழங்கப்படுமென இளைஞர் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்ச அண்மையில் தெரிவித்திருந்தார். கோவிட் தடுப்பூசி மிகவும் திறமையாக செய்ய அடுத்த சில நாட்கள்.
தடுப்பூசி வழங்கல் தொடர்பான தகவல்களை உள்ளடக்கிய இந்த புதிய டிஜிட்டல் அடையாள அட்டை ஊடாக ஒவ்வொரு நபருக்கும் அரசாங்கம் கொவிட் தடுப்பூசி வழங்கிய திகதி, இடம், நேரம் மற்றும் தடுப்பூசி வகை மற்றும் அது தொடர்பான தகவல்கள் மற்றும் இரண்டாவது தடுப்பூசி வழங்க வேண்டிய திகதி, இடம், நேரம் உள்ளிட்ட அத்தியவசிய தகவல்கள் பல நவீன தொழில்நுட்பத்தின் ஊடாக வெளிப்படுத்தப்படும் என அமைச்சர் சுட்டிக்காட்டினார்
சுபீட்சத்தின் நோக்கு கொள்கை திட்டத்தில் மக்களை மையமாகக் கொண்ட டிஜிட்டல் அரச அமைப்பு குறித்து தெளிவாக விடயங்கள் குறிப்பிடப்பட்டுள்ளதுடன், இது முதன்முறையாக நடைமுறைக்கு கொண்டு வந்து தடுப்பூசி தொடர்பான தகவல்களை உள்ளடக்கிய புதிய டிஜிட்டல் அடையாள அட்டை மூலம் தொழில்நுட்பம் மற்றும் இணைய பயன்பாட்டினூடாக தடுப்பூசி தொடர்பான சிக்கல்களை தவிர்க்க எதிர்பார்க்கப்படுகிறது.
“டிஜிட்டல்மயமாக்கல் என்பது அடுத்த தலைமுறையினர் பொது சேவைகளை திறம்பட பெற்றுக்கொள்ள வேண்டும் என்ற நம்பிக்கையாகும்.” அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.