இலக்கியம் இலங்கை கட்டுரைகள் பிரதான செய்திகள்

பரதேசம் போனவர்கள் – க.நவம் – தேவஅபிரா!

திரு க நவம் அவர்கள் 1960களில் ஈழத்துக் கலை இலக்கியப்பரப்புள் வந்த முக்கியமான, அறியப்பட்ட படைப்பாளி ஆவார். அவரின் பரதேசம் போனவர்கள் என்ற சிறுகதைத் தொகுப்புமீதான என்பார்வையை இங்கு உங்களுடன் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.


பரதேசம் போனவர்கள் என்பது இங்குப் புலம் பெயர்ந்தவர்களைக் குறிக்கிறது. பரதேசம் போனவர்கள் எல்லோரும் புலம் பெயர்ந்தவர்கள் ஆவதில்லை என்கிற போதும் இக்கதைகளின் உள்ளடக்கங்கள் புலம் பெயர்வாழ்வின் அனுபவங்களின் விளைவுகள் ஆக இருக்கின்றன.

இத்தொகுப்பில் பதினொரு கதைகள் உள்ளன. இவற்றை ஒவ்வொன்றாகப்பார்ப்போம்

கத்தரிக்குழம்பும் கருத்து முரண்பாடும்

கனடாவுக்குப்புலம் பெயர்கிற ஒருவர் அங்கு ஏற்கனவே வாழ்ந்து கொண்டிருக்கிற இன்னொருவருடன் ஒர் அறையிற் சேர்ந்து வாழ நேரும்போது ஏற்படும் அனுபவத்தை இக்கதை சொல்கிறது. இக்கதையில் வரும், கதை கூறியின் நண்பர் தன்னை அனுபவ அறிவு கொண்டவராக எல்லாம் தெரிந்தவராகக் காட்டிக் கொள்கிறார். எந்த விடையம் பற்றிய உரையாடல் நிகழ்ந்தாலும் அங்கே அவரது கருத்தே சரியானது என எண்ணுபவராக இருக்கிறார். தனைக்குரு நிலையில் வைத்துக் கொள்பவராக இருக்கிறார். கதை கூறியும் பெருமளவுக்கு அவருடன் அறிதுயில் கொள்வது போல இசைந்தும் போவதால் கதை கூறியை அவருக்குப்பிடித்துப்போய்த் தோழமை நிறைந்த கூட்டு வாழ்வு ஒன்று உருவாகிறது.


ஆனால் ஓர் முறை கதைகூறி நண்பர் கூறியதைக்கேட்காமல் அவர் சொல்லை மீறி வேறு முறையில் நடந்து விடுகிறார். கத்தரிக்காய்க் குழம்பு வைப்பதற்கு கத்தரிக்காயையை இப்படித்தான் வெட்ட வேண்டும் என நண்பர் கூறுகிறார். அதனையும் மீறிக் கதை கூறி தனது முறையிற் சமையல் செய்து விடுகிறார். அதனைச் சகிக்க முடியாமல் கூட்டு வாழ்வை முறித்துக் கொள்ளுகிறார் நண்பர். நகைச் சுவை இழையோடும் இக்கதை, தான் நினைத்தபடி மற்றவர்கள் நடக்கும் வரைதான் பொதுவுடைமை நிலவும் என்கிற மனிதர்களைப் பற்றியது.

இக்கதையில் சில இடங்களில் செயற்பாட்டு வினையில் மொழி பாவிக்கப்பட்டுள்ளது. உதாரணமாக “ அவரது ஆலோசனைகளும் புத்திமதிகளும் -ஏன் குயுக்திகளும் கூட- எனது காதுக்குள் வேதமாய் ஓதப்பட்டன”. செயற்பாட்டு வினையில் இருக்கும் வசனங்கள் செய்தி அறிக்கைகளிலே அதிகம் பாவிக்கப்படும் ஒன்றாகும். உணர்வு நிலைக்கு உட்படாது செய்தியை மட்டும் தருவதற்குச் செயற்பாட்டு வினை பாவிக்கப்படும். இங்கே கதை கூறி தனது நண்பருக்கும் தனக்கும் இடையில் இந்த அன்னியப்பாட்டைப் புலப் படுத்த இதைக் கையாண்டிருக்கக்கூடும் என நினைக்கிறேன்.

வெள்ளைப்புறா ஒன்று

இக்கதையில் இரண்டு முக்கியமான விடையங்கள் இருக்கின்றன.
ஒன்று, ஒரு பெண்-வெள்ளைக்காரப் பெண் தன்னைப் பார்க்கிறார் என்றவுடனேயே கிளுகிளுப்பு மனநிலையடைந்து அதிலிருந்து மேற்கொண்டு முற்றிலும் ஆண் நிலைப்பட்ட கவர்ச்சி வளையத்துக்குள் போய்விடுகிற ஆண்பாத்திரம் வெளிப்படுத்துகிற மனநிலைகள்.
மற்றையது வெள்ளைத் தோல் அல்லாதவர்கள்மீது வியாபார நிலையங்களில் இருக்கிற கண்காணிப்புக்குக் காரணமாக இருப்பது வெறும் களவுத்தடுப்பு மட்டுமல்ல என்பது.

இக்கதையில் வரும் தமிழ் ஆண் ஓரிடத்தில் தனது நண்பன் கூறிய அறிவுரை ஒன்றை நினைவு கூருகிறான். அது கீழ்வருமாறு உள்ளது.

“ இந்த நாட்டில ஓராளை இன்னொராளுக்குப் பிடிச்சுக்கொண்டுதெண்டால் நேரடியாகப் பேசி ஒரு டேட்டிங்கை ஒழுங்கு செய்து ஒரு பார் அல்லது ஒரு கிளப்புக்குப் போய்த் தண்ணியில ஆளையாள் குளிப்பாட்டி பின் ஆடிப்பாடி விரும்பின மாதிரி அனுபவிச்சுப் போட்டு அடுத்த நாளே விட்டுவிடலாம் விருப்பம் என்றால் தொடரலாம் ஊரில வரிசக் கணக்காக வேர்க்க விறுவிறுக்கச் சைக்கிளில் சீற்றில உளுந்தரைச்சு அலைஞ்சு திரிஞ்சு சரக்குச் சுழட்டின மாதிரி இங்கே செய்யத் தேவையில்லையடாப்பா.”

இத்தகைய மனப்பதிவு எங்களைப்போன்றவர்களுக்கு வருவதற்குக் காரணமாக இருப்பது நாங்கள் வளர்ந்த கலாசாரம் தான்.

மேற்குலகில் காதலுக்கும் காமத்துக்கும் இருக்கிற சுதந்திரமான தளத்தை அதற்குள் சடுதியாக வருகிற எல்லோராலும் சுதந்திரமாகப் பயன்படுத்த முடியும் என்ற நினைப்பு தவறானது. மேலும் பெண்களின் நிலையில் நின்று பார்க்கும்போது இச்சுதந்திரம் மேற்குறிப்பிட்ட மாதிரி மலினமானதும் அல்ல.


தானே உருவாக்கிக் கொண்ட கற்பனைக்குள் விழுந்துவிட்ட ஒருவனால் அவனை அவதானித்துக்கொண்டிருந்த இளம்பெண்ணின் பார்வையைப் தன்மீது ஈர்ப்புக்கொண்ட பார்வையாக மட்டுமே உணரமுடிகிறது. அவளோ அவனை ‘அவன் களவு செய்கிறானா’ என அவதானித்துக் கொண்டிருக்கிறாள். அவன் கடையை விட்டு வெளியேறும்போது அவனைப் பரிசோதிக்கும் அவள், அவன் களவு செய்திருக்கவில்லை என்று கண்டுகொண்டபோதும் அவனிடம் மன்னிப்பு எதுவும் கேட்பதில்லை. மன்னிப்புக் கேட்காத அவளின் நிலைபாட்டில் நிறவெறி அல்லது அந்நியர்கள், அகதிகள்மீதான வெறுப்பும் ஒழிந்திருக்கிறது. அவள் மன்னிப்பு கேட்கவில்லையே என்று கவலை கொள்கிறவன் தான் அவள்மீது ஏற்றிய மலினமான எண்ணங்கள்குறித்துக் குற்றவுணர்வும் அடைவதில்லை.

மேற்குலகில் வியாபாரநிலையங்களில் களவுத் தடுப்பு அதிகாரிகள் கண் கொத்திப் பாம்பாக இருப்பதும் அவர்கள் வெள்ளைத் தோல் அல்லாதவர்களையே அதிகம் கண்காணிப்பதும் நிறவெறியின் ஒரு பரிமாணம்தான். மறுபுறத்தில் பல்வேறு சமூகக் காரணங்களால் விளிம்பு நிலையில் இருக்கிறவர்கள் களவு செய்வதும் நிகழவே செய்கிறது. இவற்றுக்கு நுகர்வுக்கலாசாரம் ஏற்படுத்தும் அளவு கடந்த ஆசை மற்றும் வறுமை போன்றவை முக்கிய காரணங்களாக இருக்கின்றன.

இக்கதை கீழ்வருமாறு முடிகிறது எனது பழைய க்ளவுஸை என் கைக்குள் திணித்துவிட்டுத் தொடர்ந்தும் இன்னொரு நிறத்தோலைத் தேடி வலைவிரிப்பதற்குப் போலும் உள்ளே நடக்கத் தொடங்கியது அந்த வெள்ளைப்புறா

என் மனசின் கீழ் மாடியிலிருந்து யாரோ இனமாய் அழுதபடி…! கூடி நின்று வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த அத்தனை பேர் கண்களிலும் ஓர் அற்ப ஜந்து வாய்க் கூனிக்குறுகிச் சமைந்து போய் நிற்கிறேன் நான். அவமானப்பட்ட இறுதிக்கணத்திலும் அவனுக்கு அவள் வெள்ளைப்புறாவாகத்தான் தெரிகிறாள்.நிறப்பாகுபாட்டையும் பெண்கள் தொடர்பான தமிழ் ஆண் மனநிலையையும் எங்கள் முன் எதிர் எதிராக நிறுத்தும் கதை இது.

எல்லாப்பிறப்பும் பிறந்திழைத்தேன்

பண்டிகை நாள் ஒன்றில் புலம் பெயர்வாழ்விற்கே பொதுவான தனிமை, நிச்சயமின்மை, வெறுமை போன்றவற்றாற் சோர்வுற்றிருக்கும் ஒருவர் கடந்த கால நினைவுகளுக்குள் மூழ்கி உழன்று கொண்டிருக்கும் பொது புதிய உறவொன்று கதவைத் தட்டுகிறது.


நிறவெறி பிடித்தவள் திமிர்பிடித்தவள் என அவரும் அவர் நண்பர் ஒருவரும் நினைத்திருந்த எதிர் வீட்டைச் சேர்ந்த முதிய கனேடியப் பெண்மணி அவருக்கு நத்தார் வாழ்த்துகளைச் சொல்லி ஒரு கடித உறையையும் கொடுக்கிறாள் அதற்குள் வாழ்த்து மடலும் 50 டொலர் அன்பளிப்பும் இருக்கிறது. அந்த வாழ்த்து மடலில் அன்பும் இரக்கமும் மிக்கவர்கள் ஒருபோதும் அனாதை ஆவதில்லையென எழுதப்பட்டும் இருக்கிறது அவள்பற்றித் தான் கொண்டிருந்த எண்ணங்கள் தவறானவையென அவர் உணர்கிறார். மனிதரை நெருங்காமலேயே அவர்கள்பற்றிய முற்கற்பிதங்களை நாங்கள் ஏற்படுத்திக் கொள்கிறோம். அந்தாளைக் கண்டாலே எனக்குப் பிடிக்காது என்று சொல்லும் பலரைப் பார்த்திருக்கிறோம். அக்கனேடிய பெண்மணிபற்றிய அவர் எண்ணச் சிதறில் வரும் ஒரு பகுதியைக் கீழே தருகிறேன்

“அது மட்டும் இல்லை 70 வயது கிழவி மாதிரியாகவா இவள் இருக்கிறாள் ஆடம்பர ஆடை அணிகலன்கள் தலையில் ஒய்யாரமாய் குந்தியிருக்கும் இறகு குத்திய வெள்ளைத் தொப்பி வயதுக்குப் பொருந்தாத குதியுயர்ந்த காலணி கையில் எப்போதும் அநாயாசமாகத் தொங்கிக் கொண்டிருக்கும் அந்த டம்பப் பை அவளது சருமத்தை இளம் சிவப்பு நிறமாகக் காட் வல்ல ஒரு சென்னிறக் குடை என்பன சகிதம் அவள் வெளியே வரும் போதெல்லாம் விலை உயர்ந்த பெர்ஃபியும் வாசனை வீதியை நிறைத்து வியாபித்திருக்கும்!

இந்தக் கிழட்டு வயதில் தான் ஒரு கிளியோபாத்ரா என்ற நினைப்பாக்கும் இவளுக்கென்று ஒருநாள் கேப்ரியல் இவளைப் பார்த்துக் கறுவிக் கொண்டதன் பின்னர் எங்கள் இருவருக்கும் இவள் நிரந்தர கிளியோபாட்ராவானாள் ”

மாறுபட்ட கலாசாரத்தின் அடிப்படையில் உருவாகிய மேற்குறித்த எண்ணம் முக்கியமாகக் கவனிக்கப்பட வேண்டியது.

முதுமையிலும் வாழ்வை அனுபவிப்பது என்பது இன்னும் எங்கள் கலாசாரத்துக்குள் வரவில்லை. முதியவர்களை ஆடியடங்கியவர்களாகவே நினக்கிறோம். முதியவர்கள் தங்களுக்காக அல்லாமல் தங்கள் பிள்ளைகளுக்காகவே வாழ்வை அர்ப்பணித்தவர்களாக இருக்கிறார்கள் அவர்களுக்கு இருக்கக்கூடிய முனைப்புகள் ஆசாபாசங்கள் குறித்த விழிப்புணர்வு கீழைத்தேச கலாசாரத்தில் இன்னும் உருவாகவில்லை.

இக்கதை கீழ்வருமாறு முடிகிறது:

“நான் எனது வீட்டுக் கதவை மூடுகிறேன். கதவின் உட்புறமாக உடல் சாய்ந்து முதுகுவழுக்கிக் கீழே இறங்க நிலத்தில் அப்படியே உட்கார்ந்து கொள்கிறேன். அவள் தந்த பணத்தையும் வாழ்த்து மடலையும் மாறி மாறிப் பார்த்துக் கொண்டிருக்கிறேன்.(கதை இங்கே முடிந்து விடுகிறது. கடைசி இரண்டு வரிகளும் தேவையற்றவை,)
இதயம் கனத்துப் பலமாக அழுத்துகிறது நானோ எனக்குள் புல்லாகி பூடாகி புழுவாய் மரமாகி” ”.மேலேவருகிற கடைசி இரண்டு வரிகளும். வாசகன் மீது நம்பிக்கையற்ற தன்மையினால் வருபவை என்று நினைக்கிறேன். அவ்வரிகள் சொல்பவை கதையினால் ஏலவே எங்களுக்கு உணர்த்தப்பட்டவைதானே!

நிற மொழி மற்றும் பண்பாட்டு வேறுபாடுகளைத் தாண்டி மனிதர்களைப்பிணைக்கும் அன்பும் நட்பும் உலகம் முழுவதும் உள்ளன. அவற்றைக் காண வேண்டுமென்றால் முற்கற்பிதங்களை விட்டு விட வேண்டும், என்கிறது கதை.

ஜீவித சங்கற்பம்

இக்கதை மிகவும் முக்கியமானது. பால்மாற்றமடையும் ஒருவர் பற்றிய கதையிது. தமிழ்ப் பெண்ணாக வளர்க்கப்பட்ட ஒருத்தி(சுதாகரி) ஆணாகப்பால் மாற்றம் அடைவதையும் அதனை அவளது தாய் புரிந்து ஏற்றுகொள்வதையும் கூறும் கதை.
இக்கதையில் வரும் பெண் தன்னை ஆணாக உணர்கிற படிநிலை வளர்ச்சியைச் சொல்கிற போக்கிலேயே பெண்ணின் மீது படிந்திருக்கிற கலாசாரச் சுமைகளையும் சொல்லிச்செல்கிறாள்.
தோடணிதல், சேலையணிதல், பரதம் பாட்டு போன்ற கலைகளைப் பழக்குதல், பூப்புனித நீராட்டு விழா செய்தல், பெற்றோரால் நிச்சயிக்கப்படும் கணவர்களை ஏற்றுக்கொள்ளும்படி நிர்ப்பந்தித்தல் போன்ற பண்பாட்டின் அடியாக வருகிற பல விடையங்களை அவள் சுட்டுகிறாள். மேற்கூறிய விடையங்களைத் தமது பெண் பிள்ளைகளின் மேற் சுமத்த விரும்புகிற அப்பாக்களுக்கும் அம்மாக்களுக்கும் தமது பிள்ளையின் உள்ளத்திலும் உடலிலும் ஏற்படும் மாற்றங்களை அறிய முடிவதில்லை.


அறுவை மருத்துவத்தின் மூலம் தன் மார்புகளை அகற்றிக்கொண்டு வீட்டுக்கு வருகிற சுதாகரியை நோக்கி அம்மா “ஏன் இப்படித் தன்னன் தனியனாக … ஒருவார்த்தை எனக்குச் சொல்லியிருக்கலாமே” என்கிறாள்.


பிள்ளைகள் பல விடையங்களைச் சொல்லாமற் சொல்பவர்களாகவே இருக்கிறார்கள். பிள்ளைகளும் தங்களைப் பெற்றோருக்கு ஒழிக்கிறார்கள்தான். ஆனால் அவ்வாறு செய்வதற்கு அவர்களுக்கு நியாயமான காரணங்களும் இருக்கும் என்பதை நாங்கள் உணர்வதில்லை.


பெற்றோரான எங்களுக்கு எங்கள் மகளில் அல்லது மகனில் ஏற்பட்டு வரும் உள உடல் மாற்றங்களையும் அவர்கள் எதிர் கொள்ளும் பிரச்சனைகளையும் கண்டு கொள்ளமுடியாமற் போவதற்குக் காரணங்கள் பல உள்ளன.
● எங்கள் அகத்தை மூடியிருக்கும் சனாதன எண்ணங்கள்
● பிள்ளைகளின் உளவியல் தொடர்பான அறிவின்மை
● பொருளாதார நெருக்கடிகளில் உழல்தல்
● அதிகார மனப்பான்மை கொண்ட குடும்பச்சூழல்
போன்றவை அவற்றுட் சிலவாகும்.

இக்கதை சொல்லப்பட்ட முறைமையில் பால் நிலை மாற்றம்பற்றிய தகவல் விபரிப்பே மேலோங்கி நின்றாலும் பால் மாற்றம் அடைபவர்கள் பற்றி மிகவும் சனாதனமான பார்வை கொண்ட தமிழ் கூறும் நல்லுலகத்தில் இக்கதை பேசாப்பொருளைப்பேசும் கதையாகும்.

பசிக்கு நிறமில்லை

வளர்ச்சியடைந்த நாடுகளில், பிச்சை எடுக்கும் மனிதர்கள்பற்றிய கதை இது. புலம்பெயர்ந்து கனடாவில் வாழ்கிற ஒருவருக்கும் இலங்கையிலிருந்து கனடாவுக்கு விடுமுறையில் வருகிற அவருடைய சிறு வயது கால நண்பருக்கும் இடையில் நிகழும் ஊடாட்டத்தினூடாக இக்கதை நகர்கிறது. உண்ணுதல் என்பது உயிர் வாழ்தலுக்கு அவசியமான ஒன்று என்பதிலிருந்து ஆசை தீர உண்ணுதல், வயிறார உண்ணுதல், இரசித்து உண்ணுதல், சேர்ந்து உண்ணுதல், எனப் பரிமாணம் அடைந்திருக்கிறது. பொருளாதர வசதி மிகும்போது ஏற்படும் மாறுதல்கள் இவை. எங்கள் மூளை வாழ்வின் பலகணங்களை உணவுகளை உண்ட நினைவுடன் தான் சேர்த்துப் பதிந்து வைத்திருக்கிறது. இவ்வாறான பழைய நினைவுகளுடனும் நிரை வரிசையில் உள்ள வகைவகையான உணவுகளைத் தெரிவு (buffet) செய்யும் முறையில் ஆசை தீரும் மட்டும் சாப்பிட்ட புதிய நினவுகளுடனும் வருகிற இரு நண்பர்களும் பசிக்குப் பிச்சை கேட்கிற கனேடியன் ஒருவனைக் காண்கிறார்கள். இலங்கையிலிருந்து வந்த நண்பர் அதனைப்பார்த்து அதிர்ச்சி அடைகிறார்.வளர்ச்சியடைந்த நாடுகளில் பசிக்காகப் பிச்சை எடுப்பவர்கள் எப்படி உருவாகிறர்கள் என்பது முந்தைய கதையைப் போலவே தகவற் பகிர்வாகவே வருகிறது.இது கதையின் உணர்வோட்டத்திலிருந்து எங்களை விலத்திவிடுகிறது.

தினவு

புலம் பெயர்ந்த வாழ்வில் தங்களை நிலைப்படுத்திக் கொள்ளக் கடன் பெறுகிற ஒரு குடும்பத்தின் பெண்ணைச் சுற்றி வளைத்துப் பேசிப் பாலியல் உறவுக்கு அழைக்கிறான் கடன் கொடுத்தவன். அவனை வலிமையாகக் கோபமுடன் நிராகரிக்கும் பெண்ணின் மனக்குமுறல்களைப் பற்றிப்பேசும் கதை இது. புலம் பெயர் வாழ்வென்பது நாங்கள் நினைத்த படி இல்லை என்பதைப் புலம் பெயர்ந்த பின்பே நாங்கள் உணர்கிறோம். ஈழத்தில் தமக்கிருந்த வாழ்வு மேலானது என எண்ணி வருந்தி ஏன் கனடாவுக்கு வந்தாயெனத் தனக்குத் தானே கேள்வி கேட்கும் நிலையில் இருப்பவளை நீ என்னோடு உறவு கொள்ள வா என மறைமுகமாகக் கேட்கும் அயோக்கியன் பற்றிய கதை இது இப்படியான அயோக்கியர்கள் கனடாவில் மட்டுமல்ல உலகம் முழுவது இருக்கிறார்கள்.


கணவன் இல்லாதபோது வீட்டுக்கு அழைப்பு எடுத்து “உம்மடை கையால சூடாக் குடிக்கிறாப்போல வருமே” எனக் குழைகிறவனைப்பார்த்து “வையடா போனை” எனக் கோபமுடன் கத்த இக்கதையில் வரும் பெண்ணுக்கு முடிகிறது. இலங்கையில் வறுமையில் வாடும் பெண்களிடம் பாலியற் கையூட்டுக் கேட்கிற அரச அதிகாரிகளையும் கடன் கொடுத்த ஆண்களையும் பார்த்துப் பெண்கள் “அறுத்துப் போடுவன்” என்று சொல்லக் கூடிய நிலை என்று வரும்? அப்பெண்களின் கையறு நிலையும் மனக்கண்ணில் வந்து போகிறது.

பிச்சைக் காசு.

கனடாவில் இருக்கிற சமூக நல உதவிமுறையையைத் துஸ்பிரயோகம் செய்து ஏமாற்றுபவர்கள் பற்றிய கதை இது. உண்மையிலும் உழைக்க முடியாமல் இருப்பவர்களுக்கும் வேலை இழந்தவர்கள் வேலை ஒன்றைப்பெற்றுகொள்ளும் வரையில் வாழ்வதற்கும் உருவாக்கப்பட்ட சமூக நலத் திட்டங்களைப் பொய் சொல்லிப்பயன்படுத்துபவர்கள் எல்லாச் சமூகங்களிலும் இருக்கிறார்கள். இக்கதையில் வருகிற பெண் தன் கணவனின் கொடுமை தாங்காமல் வீட்டை விட்டு வெளியேறித் தன் பிள்ளையுடன் தனித்து வாழ உதவி கேட்டுச் சமூக நல அதிகாரியிடம் வருகிறாள். அவளுக்கான மொழி பெயர்ப்பாளராக வருபவர் அவளின் வேண்டுகோள் போலியானதென்பதை அறிந்து கொள்கிறார். அவளுடன் வருகிற பிள்ளைகள் கீழே போய் அப்பாவுடன் காரில் இருக்கப் போகிறோம் என்று தமிழிற் சொல்கிறார்கள். பிறகொருசந்தர்ப்பத்தில் அவளும் கொடுமைக்காரன் எனச் சொல்லப்பட்ட கணவனும் ஆடம்பரமான வீட்டில் வாழ்வதைக் காண்கிறார் மொழி பெயர்ப்பாளர். இவ்வாறான ஏமாற்றுகைகள் காரணமாகவும் காலப்போக்கிற் சமூக நலத்திட்டங்கள் மீதான கட்டுப்பாடுகள் மிக இறுக்கமாக்கப்பட்டன என்பதும் உண்மை. ஆயினும் மக்களைச் சுரண்டிக்கொழுக்கிற முதலாளித்துவத்துக்கு இவ்வாறு சிறு ஊழல் செய்பவர்களைக் குற்றம் சொல்வதற்கு எந்தத் தார்மீக உரிமையும்இல்லை என்பது உண்மை.

விருந்தாளி

இக்கதை சாதிய முரண்பாட்டைப் பற்றிப் பேசுகிறது.
கனடாவில் வாழ்கிற சசிதரனுக்கும் அங்கு வாழ்கிற ஈஸ்வரம்பிள்ளை என்பவருக்கும் இடையில் ஏற்படுகிற நட்பு எக்கணத்தில் சிதைவடைகிறது என்பதைச் சொல்லும் கதை இது. அவர்கள் இருவரும் பெருமளவுக்கு ஒத்த கருத்துடையவர்களாகவும் சந்திக்கும்போது இலக்கியம், அரசியல், பொருளாதாரம் எனப் பலவற்றையும் பற்றி உரையாடக்கூடிய விசாலமான சிந்தனைப்பரப்புக் கொண்டவர்களாகவும் இருக்கின்றனர். சசிதரன் கலை இலக்கியச் செயற்பாட்டாளனாகவும் அரசியற் பிரக்ஞை கொண்டவனாகவும் இருக்கிறான்.


தமிழர்களிடையே பிரிவினை வேண்டாமென நினைக்கிற ஈஸ்வரம் பிள்ளைக்குச் சசிதரணைப் பிடித்துப்போகிறது. அவனைத் தேடி நட்புக் கொள்கிறார். அவனைப்பிடிப்பதற்கு இன்னுமொரு குறிப்பான காரணமும் இருக்கிறது. அவன் யாழ்பாணத்தான் அதிலும் வடமராச்சியான். இந்த முரண் நிலையையும் கவனிக்க வேண்டும்.
வாழ்க்கையின் தேவை காரணமாக வேறு இடத்துக்குக் குடிபெயர்ந்து போகிற ஈஸ்வரம்பிள்ளை 18 வருடங்களின் பின் மீண்டும் சசிதரனைச் சந்திக்கும்போது அவரை உணவுண்ண வீட்டுக்கு அழைக்கிறான்.


பெரும் உணவுப்பிரியர்களான அவர்களுக்கிடையில் உணவுக்கு முந்திய மதுவுரையாடல் நிகழ்கிறது. அவ்வுரையாடலின் ஓரிடத்தில் ஈஸ்வரம் பிள்ளை கிறிஸ்ரி ஞானரட்ணம் என்கிற வங்கி முகாமையாளர் ஒருவருடன் தனக்கு ஏற்பட்ட நட்பைச் சொல்லி அவர் தன்னைக் கிறிஸ்மஸ் பண்டிகையின்போது தனது வீட்டுக்கு விருந்துண்ண அழைத்தமையைச் சொல்லி அதை மறுத்ததற்கான காரணத்தை ஈஸ்வரனுக்குப் பின்வருமாறு சொல்கிறார்.

“அவை மற்றாக்கள் அவை வீடுகளுக்கு விருந்தெண்டு போய்ப் புளங்கி வாய் வைக்க மனம் வரேல்லை என்ன தான் சொன்னாலும் அந்த மன அருவருப்பும் அருகளிப்பும் பாரும் இப்பவும் எங்களுக்கு இஞ்சையும்தானே இருக்கு.”

தமிழரிடையே பிரிவினை வேண்டாம் என்று சொல்கிற ஈஸ்வரம் பிள்ளையின் உள் மனக்கிடக்கை வொட்கா உள்ளுக்குப் போனதும் வெளிவருகிறது. மதுவைச் சொல்விளம்பியெனச் சொல்வார்கள்.
இவ்வாறு சொன்னபிறகும் அங்கு உரையாடல் நீள்கிறது. (அந்த இடத்திலேயே ஈஸ்வரம்பிள்ளையை எழும்புமோய் என்று சசிதரன் கலைத்திருக்க வேண்டாமோ ?) உரையாடலை வளர்த்துச் சென்று உணவுப்பிரியரான ஈஸ்வரம் பிள்ளையைச் சாப்பாடு கொடுக்காமலேயே திருப்பி அனுப்புகிறான் சசிதரன். அனுப்பும்போது சசிதரன் ஈஸ்வரம்பிள்ளைக்கு, கிற்ஸ்ரி எனக்குத் தூரத்துச் சொந்தம் எனச் சொல்கிறான். (அதென்ன தூரத்துச் சொந்தம் மச்சான் என்றே சொல்லியிருக்கலாமே? அல்லது சாப்பாட்டைக் கொடுத்து விட்டுப் போகும்போது நான் கிறிஸ்ரி ஞானத்தின்ரை மச்சான் இப்ப ஓங்காளிக்குதோ என்று கேட்டிருக்கலாமே)

ஈழத்தில் சாதியப் பிரச்சனையின் முக்கியமான பரிமாணங்கள் சிலவற்றை இங்குப் பார்க்கலாம். உயர் சாதியினரால் சாதியிற் குறைந்தவர்கள் எனச் சொல்லப்பட்டவர்களின் சமூக பொருளாதார வளர்ச்சியைத் தடுக்க முடியவில்லை. இதற்கு முக்கியமான காரணங்களாக இருந்தவை

 1. வலிமையான சாதியெதிர்ப்புப் போராட்டங்கள்(இடது சாரிகளின் வளர்ச்சி)
 2. இலவசக் கல்வி முறைமை
 3. ஈழவிடுதலைப் போராட்டம்
 4. புலம் பெயர்வு

ஆனாற் சாதியத்தை பேணும் முக்கியமான இரண்டு அம்சங்கள் இன்றும் வலிமையாக உள்ளன. அவையாவன:
● திருமணக்கலப்புகளுக்கு இருக்கும் கடும் எதிர்ப்பு
● சாதியிற்குறைந்தவர்கள் எனச் சொல்லப்படுபவர்களின் வீடுகளில் உணவுண்ணாமை

ஆசாரசீலம்

இக்கதை தமிழ்ப்பெண் ஒருத்தி வெள்ளைகாரப்பெண்ணை வாழ்க்கைத் துணையாகத் தெரிவு செய்வது குறித்துப் பேசுவது.

திரா என்னும் திரிபுர சுந்தரியை அவளது அப்பாவான சேவையர் சிற்றம்பலம் பொத்திப் பொத்தி வளர்க்கிறார். திராவை அவர் ஆண்களுடன் பழகவே விடுவதில்லை. பிற்போக்கான கடைந்தெடுத்த, ஆணாதிக்க வாதியான சிற்றம்பலத்துக்கும் அவருக்கடங்கிய அவரது மனைவிக்கும் திரா தேர்ந்தெடுத்த வாழ்க்கை வழமையானஆண்-பெண் என்னும் உறவுக்குள் அடங்கவில்லை என்பது அதிர்ச்சி அளிக்கிறது ஆனால் அவர்களால் அதனை எதிர்க்க முடியவில்லை. திரா தான் தனது வாழ்க்கைத் துணையுடன் மகிழ்வான வாழ்வை கொண்டிருப்பதைப் பெற்றோருக்குப் புலப்படுத்துகிறாள். அப்பாவுக்கும் அம்மாவுக்கும் ஊடாகத் தனக்கு மேல் திணிக்கப்பட்டிருக்கக்கூடிய ‘வழமையான திருமணம்’ என்னும் மோசமான அடக்குமுறையிலிருந்து திரா அவளது பொருளாதார உயர் நிலைக்கூடாகத் தப்பித்து விடுகிறாள். மேலும் கனடாவென்றபடியால் அவளால் இன்னொரு பெண்ணுடன் வெளிப்படையாகச் சேர்ந்து வாழ்வதும் சாத்தியமாக இருக்கிறது. கனடாவிற் கூடச் சில மாநிலங்களில் ஒரு பாலுறவுக்காரருக்குச் சட்ட ரீதியான அங்கீகாரம் இல்லை என்பதும் தெரிகிறது.


ஒரு பெண்ணோ ஆணோ தம்மை ஒரு பாலுறவாளர்களாக உணர்வது முற்றிலும் அவர்களது உடலியல் சார்ந்தது. ஆண்களுடன் பழக அனுமதிக்கப்படாத காரணத்தினால் ஒரு பெண் தனக்கான வாழ்க்கைத்துணையாக இன்னொரு பெண்ணைத் தேடுவதில்லை. ஆணுடனும் பெண்ணுடனும் பால் நிலை உறவுகளை ஏற்படுத்தக்கூடிய ஈரக மூளை உந்துதலைக் கொண்டிருப்பவர்களும் உள்ளனர். எதுவாக இருப்பினும் திரா சிறு வயதில் இருந்தே ஒருபால் நாட்டம் கொண்டவளாக இருந்திருக்க வேண்டும். இக்கதையில் அதற்கான குறியீடுகளைக் காணவில்லை என்பதையும் குறிப்பிட வேண்டும்.


மேலும் இக்கதையில் வரும் ஆண் நிலைப்பட்ட அதிகாரத்திற்கு ஒரு உதாரணத்தையும் தர விரும்புகிறேன். கதையின் இறுதியில் சேவையர் சிற்றம்பலமும் அவரது மனைவியும் அன்றிரவு தமது மகள் ஒருபாலுறவுக்காரி என்பதை அறிகிறார்கள். அவர்களது மகள் தனது துணையுடன் வீட்டுக்கு வந்து அவளைத் துணிகரமாக அறிமுகப்படுத்துகிறாள். பின் அவர்கள் இருவரும் படுக்கப் போகிறார்கள். இந்த அதிர்ச்சிக்குள்ளும் (அவர்கள் பார்வையில்) சிற்றம்பலத்தின் மனைவி வீட்டு விளக்குகளை அணைக்க எழுந்து போகிறாள். ஏனெனில் இரவு பத்து மணிக்குப் பிறகு தேவை இல்லாமல் வீட்டு விளக்குகள் எரியக் கூடாது என்பது சிற்றம்பலத்தின் உத்தரவு.

இக்கதையில் தமிழ்ப் பெண் ஒருத்தி தனது பாலியல் அடையாளத்தைச் சுதந்திரமாக அறிவிக்கிறாள் என்பது மிக மிக முக்கியமானது.

சீருடை

இக்கதையில் வருகிற எஞ்சினியர் செந்தில் நாதன் இலங்கையிற் பொறியியலாளராக வேலை செய்த ஒருவர். அதன் மூலம் கிடைத்த சமூக அந்தஸ்து அதிகாரம் பொருளாதாரபலம் போன்றவற்றிற் திளைத்த ஒருவர். இலங்கையில் அவர் இட்ட பிச்சையில் அவருக்குக் கீழ் வேலை செய்த ஒருவரின் மகன் கனடாவில் புலம்பெயர்ந்து வசிக்கிறான். அவன் கனடாவில் தொழி முனைவோருக்கு இருக்கும் சாத்தியங்களைப் புரிந்து கொண்டு அதனைப்பயன்படுத்திப் பொருளாதார மேன்நிலையை அடைந்திருக்கிறான். அவன் ஒரு நாள் பேருந்துத் தரிப்பிடத்தில் காத்திருக்கும் செந்தில் நாதனைத் தன் காரில் ஏற்றிச் செல்கிறான். அவ்வாறு செல்லும்போது வரும் உரையாடலில் கல்வியால் வரும் உயர்பதவிகளினால் மட்டுமே மேன் நிலையை அடைய முடியும் என்ற யாழ்பாண மன நிலையை மறை முகமாக அவரையே உதாரணமாக்கி உடைக்கிறான். இதனாற் செந்தில் நாதன் கோபமடைகிறார்.


இலங்கையில் அவர் வேலை செய்த இடத்தில் அவரை விடவும் சேவை அனுபவம் குறைந்த சிங்கள அதிகாரி ஒருவரால் அவமதிக்கப்படுகிறார். வேலைத்திறன், கடைமையுணர்வு, நேர்மை, இன பேதமற்ற நடத்தை என்பனவறைக் கொண்டிருந்த போதும் அவர் தமிழன் என்பதால் அவமதிக்கப்படுகிறார். தன்மானத் தமிழனாக அவர் கனடாவுக்கு வந்தபோது இலங்கையில் இருந்த எஞ்சினியர் பதவியினூடாக அவர் பெற்றிருந்த மாதிரியான ஒரு சமூக உயர் நிலையை அடைய முடியாமற் காப்பாளானாக வேலை செய்ய வேண்டி வருகிறது. வேலையில் நிறவெறிகொண்ட சக வேலையாளுடன் வருகிற முரண்பாட்டினாலும் ஆன்மா சிதைகிற ஒருவராகச் செந்தில் நாதன் இருக்கிறார். தாழ்வுணர்வு காரணமாகத் தனது மகளுக்குத் தான் என்ன வேலை செய்கிறேன் என்பதை அவர் சொன்னதும் இல்லை.


ஆனால் மகளுக்கு அவர் என்ன வேலை செய்கிறார் என்பது தெரிந்தே இருக்கிறது. அவளுக்கு அப்பா வேலை செய்தே வாழ்கிறார் என்பதே பெருமையானது. பாடசாலைக்குப்போகு முன்பு அவள் அப்பாவின் சீருடையை மின்னழுத்திச் சீராக்கி மடித்து வைத்து விட்டுப்போகிறாள்.


மனிதர்கள் என்ன வேலை செய்கிறார்கள் என்பது இரண்டாம் பட்சம்தான். வேலை செய்யக்கூடியவர்கள் வேலை செய்கிறார்கள் என்பதே கௌரவமானது.


இலங்கையில் செந்தில் நாதன் வாழ்ந்த வாழ்வை விபரிக்கும் பகுதிகளில் செந்தில் நாதன் கொண்டிருந்த பெருமிதத்தில் இருக்கும் தமிழ் மேட்டுக்குடி மனப்பான்மையானது அதிகம் கேள்விக்குட்படுத்தப்படாத முறையிலேயே கதை சொல்லப்பட்டிருப்பட்டிருப்பதாகவும் உணர்கிறேன்.

இத்தொகுப்பில் உள்ள கதைகள் சிறுகதை என்னும் வடிவத்துக்கு இருக்கக்கூடிய அடிப்படையான கட்டமைப்பைக் கொண்டவையாக இருக்கின்றன; ஒரே நேர்கோட்டிற் செல்கிற சம்பவங்களை இணைத்து நகர்கின்றன. இந்தச்சம்பவங்களில் வரும் பாத்திரங்களினூடாக யாழ்ப்பாணத்தமிழியத்தின் அனேகமான எல்லாக் குணாம்சங்களும் சிந்தனைகளும் விரித்து வைகப்பட்டுள்ளன. மரபான ஆண்மைமையக் குடும்பஅமைப்பு, பெண்பிள்ளைகள் மீது சுமத்தப்படும் பண்பாட்டு அடையாளங்கள், பெண்கள்பற்றிய மலினமான பார்வை, கல்விக்குரிய வேலை, உயர் தொழில் அடையாளத்தைக் காவித் திரிதல், சாதிய மிதப்புநிலையென இங்கு வரும் பாத்திரங்கள் வெளிப்படுத்தும் குணங்கள் எமது கலாசாரத்தின் உள்ளடுக்குகளாகும். இவ்வுள்ளடுக்குகளை இக்கதைகள் வெளிப்படையாகவும் மறை முகமாகவும் கேள்விக்குட்படுத்துகின்றன.


பலரும் எடுத்தாளத் தயங்கும் விடையங்களான பாலின மாற்றம் ஒருபாலுறவு போன்றவற்றை புரிந்து கொள்கின்ற தொனியை இக்கதைகள் வெளிப்படுத்துகின்றன. இங்கு வருகிற பாத்திரங்கள் தாம் புலம் பெயர்ந்து வாழ்கின்ற இடத்தில் எதிர்கொள்கிற பிரச்சனைகளைப்பேசுபவையாக இருக்கின்றன. தாம் விட்டுவந்த நிலத்தினதும் வாழ்வினதும் நினைவுகளை மட்டுமே பேசுபவையாக இல்லாமல் புதிய வாழ்வு கொண்டு வரும் பண்புகளை அவற்றுக்கெதிராக முன் வைப்பவையாக இருக்கின்றன. தமிழ்ப்பண்பாட்டுக்கும் மேற்கத்தைய பண்பாட்டுக்கும் இடையிலான மோதுகையை இளைய தலை முறை வேறு முறையிற் கடந்து செல்வதையும் இக்கதைகள் புலப்படுத்துகின்றன. இக்கதைகள் தனித்த கதைகள்போலத் தோன்றினாலும் இவற்றுக்குள் தொடர்புகளை இட்டுக்கொள்ள முடியும். புலம் பெயர்ந்தவர்கள் என்ற வகையில் எங்களைப்பல இடங்களில் இக்கதைகளில் நாங்களே சந்திக்க முடியும்.

எந்தவொரு சமூகத்திலும் அது தனது அடுத்த தலைமுறைக்குக் கையளிக்க வேண்டிய விடையங்களும் உண்டு கையளிக்கக்கூடாத விடையங்களும் உண்டு. இக்கதைகள் எந்த விழுமியங்களை ஏற்க வேண்டும் என்பதையும் எவற்றைக் கை விட்டு விட வேண்டும் என்பதையும் தெளிவாகச் சுட்டி நிற்கின்றன. இத்தொகுப்பின் பெறுமதியைச் சுட்டி நிற்பது மேற் குறித்த விடையங்கள் தான்.

நன்றி: பைந்தமிட்சாரல் அமைப்பு நிகழ்த்திய இணைய வழிச் சந்திப்பில் வாசிக்கப்பட்ட கட்டுரைதேவஅபிரா.

Spread the love
 •   
 •   
 •   
 •   
 •  
 •  
 •  
 •  

Add Comment

Click here to post a comment

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.